புதுப்பிறவி!
‘நான் பட்டதெல்லாம் போதும், திரும்ப கணவனோட போனா அது எனக்கு வாழ்வா இருக்காது. நரகமாதான் இருக்கும், தயவு செய்து அந்த ஆளு கூட சேர்த்து வச்சு என்ன நரகத்தில தள்ளிடாதீங்க. காதலனோடு நிம்மதியா வாழ விடுங்க…’
பஞ்சாயத்தார், கூடி நின்ற ஊரார் முன்னிலையில் அழுதுப் புலம்பி மணிகண்டனோடு செர்ந்து வாழ முடியாது என்று ஆணித் தரமாகக் கூறிவிட்டாள் காஞ்சனா. குடும்ப மானத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு வேற்றானுடன் ஓடிவந்து, கற்பிழந்த நிலையிலும், தான் செய்த தப்பை எல்லாம் உணர்ந்து, தவறுக்கு வருந்தி, இனிமேலாவது அவள் மனம் கோணாதவாறு வைத்து வாழ வேண்டுமென்று, திருந்தி வாழ வந்தவனைத் துணிந்து எதிர்த்து அசிங்கப்படுத்தியவளோடு, செர்ந்து வாழ்வது என்பது பகல் கனவென்று எண்ணிய மணிகண்டன், ‘அவளாவது சந்தோசமா வாழட்டுமே’ என்று தனக்குள் வாழ்த்தியவனாய் நெஞ்சை கல்லாக்கிக் கொண்டு வந்து ஆறு மாதங்கள் கூட முடியவில்லை. இப்பொழுது திடீரென்று காஞ்சனாவைக் கண்டதும் மணிகண்டன் வியர்த்து செய்வதறியாமல் திகைத்து நின்றான். இப்ப எதுக்கு வந்திருக்கா? ஆம்பிளையா, ஒரு பொம்பளய வச்சிவாழ வக்கில்லாத பொட்டைனு அவமானப்படுத்தவா? இல்ல… சட்டப்படி விவாகரத்து கேட்கவா வந்திருக்கா?… உள்மனம் புரியாமல் யோசித்து தவித்தது. மணிகண்டனின் கண்கள் இமைக்க மறந்தது போல காஞ்சனா மீது பார்வை நிலைத்து நின்றது.
மணிகண்டனின் சொந்த ஊரான குன்றத்தூருக்கு வழக்கே பத்துப் பதினைந்து மைல்கல் தொலைவிலுள்ள ஊரான சந்தவாசலில் காஞ்சனாவும் இவளின் காதலனான முரளியும் இருப்பதாகவும், பஞ்சாயத்து கூட்டத்திற்கு வரும்படியும் நாட்டாண்மை மூலமாக ஊர் தலயாறி என்ற கிராம சேவகர் வந்து செய்தி சொன்னதால், மகிட்ச்சியுடன் தன் மனைவி கிடைத்து விட்டாள், இனி தனிக்குடித்தனம் வைத்து வாழலாம் என்றெண்ணி மணிகண்டன் புறப்பட்டுச் சென்றான்.
ஊரின் மேற்கே மாரியம்மன் கோவில் அங்கே அரச மரத்தடியில் உள்ள வட்டமான திண்டில் பஞ்சாயத்தார் நான்கைந்து பேர் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து அமர்ந்திருந்தனர். எதிர்ல் இரண்டு பித்தளைச் சொம்பில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. பஞ்சாயத்து வழக்கப்படி பதினொன்று ரூபாயும் வெற்றிலை பாக்குடன் தட்சணையாக வழக்குச் சம்பந்தப்பட்ட இருவரும் வைத்தனர். ஊரே கூடி சுற்றி நின்றிருக்க மணிகண்டன் ஒருபுறமும் எதிர்புறத்தில் காஞ்சனாவும் காதலன் முரளியும் நின்றிருந்தனர்.
‘சம்பந்தப்பட்டவங்க வந்திட்டதால பஞ்சாயத்தத் தொடங்கிடலாம்முன்னு நெனக்கிறேன். அதுக்கு முன்னாடி இந்த சபைக்கு ஒரு விசயத்த நான் சொல்லியாகணும்…’
சொல்லி நிறுத்தி எல்லோரையும் நாட்டாண்மை நடேசன் பார்த்தார். ‘என்ன சொல்லப் போறாரோ?’ என்று அறிந்து கொள்ள ஆவலுடன் அனைவருமே விழிப்புடன் எதிர்பார்த்தனர். ஒரு நிமிடம் அங்கு அமைதி நிலவியது. நாட்டாண்மை மீண்டும் பேசத் தொடங்கினார்.
ஒரு இருபது வயசு பையன் தன்ன விட பத்து வயசு மூத்தவள அதுவும் இன்னொருத்தர் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு ஊர விட்டு ஓடி வந்திருக்கான். இங்க ஒரு கார்மெண்டு கம்பனில வேலக்கிச் செர்ந்திருக்காங்க. இந்த ஊர பொருத்த வரையில தப்பானவங்க பஞ்சாயத்த மீறி வாழ முடியாதுன்னு ஊர்க்காரங்களுக்குத் தெரியும். அதனாலதான் இப்ப இந்த சபை கூடியிருக்கு. பாதிக்கப்பட்டவரையும் வரவச்சிருக்கோம்.’
நாட்டாண்மை நடேசன் ஊர் மக்களைப் பார்த்து தன்னிலை விளக்கம் கொடுத்தவர், காஞ்சனாவைப் பார்த்துக் கேட்டார்.
‘ஏம்மா ஒனக்கு புருசன் இருக்கும்போது வேற ஒரு சின்னப் பையனோட ஓடிவரலாமா?’
‘தப்புன்னு எனக்குத் தெரியுதுங்க. என் மேல அன்பு காட்டர ஒருத்தரு தேவைன்னு ஆசைப்பட்டதால வேறவழி தெரியாம…’ தொடர்ந்து பேச முடியாமல் காஞ்சனா அழுதாள்.
‘ஏன் உன் புருசன் அன்பு காட்டலையா?’
‘இல்லிங்களே. அதனால தான் அவர எனக்கு பிடிக்கலிங்க.’ கண்ணீரை துடைத்துக் கொண்டு சொன்னாள்.
‘பிடிச்சாலும் பிடிக்கலன்னாலும் தாலி கட்டின கணவன மதிச்சி வாழறதுதான் நம்ம கலாச்சாரம். ஒருத்திக்கு ஒருத்தன்னு கற்போட வாழறதுதான் காலங்காலமா நடந்து வர மரபு’
‘அப்படி வாழணும்னு பல கனவுகளோட ஆசைகள நெஞ்சுல சுமந்துகிட்டு பொறந்த வீட்ட விட்டு புகுந்த வீடுதான் கோயில்ன்னு நெனச்சிவ ந்தவதாங்க நான். ஆனா நம்பி வந்த என்னெ அந்த ஆளு என்னப் பண்ணாரு தெரியுங்களா?’ பஞ்சாயத்தாரைப் பார்த்து கேள்விக் கணை தொடுத்த காஞ்சனா கடந்த காலத்திற்குச் சென்றாள்.
குன்றத்தூர் பக்கத்தில் உள்ள போளூர் நகரில் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம அதிகாரியாக மணிகண்டன் பணியாற்றினான். அதே அலுவலகத்தில் காஞ்சனா உதவி கணக்கராகப் பணியாற்றினாள். இருவரும் பணி நிமித்தமாகப் பஞ்சாயத்து ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களுக்கு வரி வசூலிக்கவும். பிறப்பு-இறப்பு, நிலங்களின் அளவு, எல்லை கணக்கு குறிப்பு உட்பட பல்வேறு பணிகளை இருவரும் இணைந்தே செய்யவேண்டிய சூழ்நிலை இருந்ததால் சேர்ந்தே இருப்பர். காஞ்சனாவுக்கு ஏற்படும் ஐயங்களுக்கு மணிகண்டனிடம் விளக்கம் கேட்பாள். மணிகண்டனும் அரசாங்க கணக்கு வழக்குகளில் தப்பு வந்துவிடக்கூடாது என்பதால் சளைக்காமல் விளக்கங்களை எடுத்துரைப்பான். அதையும் மீறி காஞ்சனா தவறிழைத்தால் கோபமாகப் பேசிவிடுவான். ஒருநாள் இப்படித்தான் கடுமையாகக் கண்டித்துப் பேசினான். அவளின் முகம் மலரைப்போல் வாடியபோதும் எப்பொழுதும்போல் சிரித்தவாறு அவனைப் பார்த்துக் கேட்டாள்.
‘உங்க மேல எவ்வளவு அன்பா இருக்கேன். நீங்க இப்படி எரிஞ்சி விழுறீங்களே…’
‘அப்படியா? சரி… அன்புக்கு ஆங்கிலத்தில் என்ன அர்த்தம்?’
‘லவ்வு’
‘அப்படின்னா நீ என்ன லவ் பண்றியா?’
‘நீங்க சொல்ற லவ்வுக்கும் நான் சொல்ற லவ்வுக்கும் அர்த்தம் வேற வேற, ரெண்டையும் போட்டு குழப்பிக்காதீங்க…’
‘நான் தெளிவாத்தான் இருக்கேன், நீ குழம்பாம பதிலச் சொல்லு…’
‘என்னத்த சொல்லச் சொல்றீங்க?’
‘நீ என்ன காதலிக்கிறீயா இல்லையா?’
‘காதலிக்கிற நிலையில நான் இல்ல. வீணா மனச அலைய விடாதீங்க.’
‘உண்மையில உன்ன எனக்கு பிடிச்சிருக்கு. நீ என் மனைவியா வந்தா எனக்குக் கிடைச்ச பாக்கியமா இருக்கும்.’
‘உங்களுக்கு பாக்கியமா இருக்கும்.. எனக்கு?’
‘நான் என்ன அவ்வளவு மோசமானவனா? கோபம் இருக்கிற இடத்திலதான் குணமிருக்கும். உன்ன கண் கலங்காம இமைக்குள்ள வச்சு காப்பாத்துவேன். என்ன சொல்றே?’
‘இப்ப என்னால எதுவும் சொல்ல முடியாது’
‘ஏன்?’
‘ஏன்னா… ஏத்துக்கிற நிலையில நான் இல்ல…’
‘அதுதான் ஏன்னு கேக்குறேன்…’
‘குடும்ப சூழ்நிலை… நான் யோசிக்கணும்…’
‘யோசி! நல்லா யோசி. ஆனா முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதே என்னால தாங்கிக்க முடியாது.’
குழந்தை மிட்டாய்க்கு அடம் பிடித்துக் கெஞ்சுவதுபோல் மணிகண்டனின் செய்கை இருந்ததை காஞ்சனா உணர்ந்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். ஆனால் யோசித்துச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போன காஞ்சனா இரண்டு நாட்களாக வேலைக்கு வரவில்லை. மணிகண்டனால் எந்தப் பணியும் செய்ய முடியாமல் குட்டிபோட்டப் பூனையைப் போல அலுவலகத்துக்குள் இங்கும் அங்குமாக நடந்தான். எதையும் யூகிக்க முடியாதவனாய் தவித்தான். காஞ்சனா எத்தனையோ முறை ஒரு வாரம் கூட வேலைக்கு வராமல் இருந்திருக்கிறாள். அப்பொழுதெல்லாம் மணிகண்டன் பொருட்படுத்தாதவன் காதலைச் சொன்ன பிறகு இந்த இரண்டு நாளும் இரண்டு யுகம்போல உணர்ந்தான்.
‘ஒருவேலை என்ன அவளுக்கு பிடிக்கலையோ? விருப்பமில்லைன்னா நேருக்கு நேரா சொல்லிட வேண்டியது தானே. அதுக்கு எதுக்கு வேலைக்கு வராம இருக்கணும்? அவள் வீட்டில சொல்லி எதிர்மாறான விளைவு ஏதாவது நடந்திருக்குமோ? நேரா வீட்டுக்குப் போய் பார்த்து விவரம் தெரிஞ்சிக்கலாமா?… வேணாம். சம்பந்தப்பட்ட நானே போவது சரிப்படாது… ஆபீஸ் பையன அனுப்பி கேட்டு வர சொல்லலாமா? வேணாம்… வேணாம்… எங்கப்பன் குதிருக்குள்ள இல்லங்கிற கதையா நம்மல நாமே காட்டி கொடுத்துக்க வேணாம். நாளக்கி வராளா பார்ப்போம்… வரலன்னா, என்ன நடந்தாலும் சரி அவள் வீட்டுக்கே போயிட வேண்டியதுதான்…’ காரணத்தைக் கண்டறிய மூளையை கசக்கிப் பல கேள்விகளை தனக்குள் கேட்டுக் கொண்டவன், புரியாத புதிருக்கு விடை தெரியாமல் தவித்தான். மறுநாளும் காஞ்சனா வேலைக்கு வரவில்லை என்பதை அறிந்த மணிகண்டன் அவள் வீட்டிற்கே சென்று வாசலில் நின்று அழைத்தான்.
‘காஞ்சனா… காஞ்…சனா…’
‘யாரு?’ என்று கேட்டவாறு வீட்டுக்குள்ளிலிருந்து காஞ்சனாவின் தந்தை இராமசாமி வெளியில் வந்தார்.
‘நான் தான் மணியக்காரர்’
‘ஓ… காதல் கீதல்னு என் பொண்ணோட மனசில நஞ்ச கலந்த புண்ணியவான் நீதானா? ஏம்பா குடும்ப கஷ;டத்துக்கு வேலைக்கி வந்த பொண்ணுகிட்ட இப்படியா நடந்துக்கிறது?’
‘நான் ஒண்ணும் தப்பா நடந்துக்கிலியே… நாகரிகமாதான் என் காதல சொன்னேன். இது தப்பா?’
‘தப்புதான்.. இவ யாரு? இவளோட குடும்ப சூழ்நிலை என்னன்னு தெரியாம நீ எப்படி கேக்கலாம்?’
இருவரும் சத்தம் போட்டு காரசாரமாக பேசியதால் ஊர் மக்கள் வுட்டம் கூடி வேடிக்கைப் பார்ப்பதை உணர்ந்து, வீட்டுக்குள்ளிலிருந்து வந்த காஞ்சனா தன் தந்தையைப் பார்த்துக் கேட்;டாள்.
‘அப்பா! ஊரே பாக்குதுப்பா. வீட்டுக்குள்ள கூப்பிட்டு பேசுங்க’
‘கத்திரிக்கா முத்தி கடைத்தெருவுக்கு வந்தாச்சி, மறைச்சி வைக்க முடியுமா?’
காஞ்சனா முகம் அவமானத்தால் சுருங்குவதையும், தவிப்பதையும் கண்டுணர்ந்த மணிகண்டன், அழையா வீட்டில் நுழையும் விருந்தாளியாய் வீட்டிற்குள் நுழைந்தான். காஞ்சனாவும் வீட்டிற்குள் சென்றாள்.
‘ஆபத்துன்னா உதவ வராத நீங்க வேடிக்கை பார்க்கமட்டும் கும்பல் சேர்ந்திடுறீங்க. இங்க என்ன மோவித்தயா காட்றோம்? எல்லா வீட்டிலயும் இருக்கிற ஓட்டதான் என் வீட்டிலயும் இருக்கு. போங்க.. போயி பொழப்ப பாருங்க.’
காஞ்சனாவின் தந்தை கோபமாய் கேட்டதும், ஊரார்கள் கலைந்து செல்ல, வீட்டிற்குள் வந்து கதவை மூடியபோது, வீட்டிற்குள் இருக்கும் இரண்டு பெண்களைப் பார்த்து மணிகண்டன் கேட்டான்.
‘யாரிவங்க?’
‘காஞ்சனாவோட அக்காளுங்க.’
இராமசாமி சொன்னதும், இங்கு என்ன நடந்திருக்கும் என்பதையும், காஞ்சனா எப்படி தீயில் குதித்தவள் போல் துடித்திருப்பாள் என்பதையும் மணிகண்டனால் உணர முடிந்தது. தன்னலத்தோடு நடந்து கொண்டதை எ;ணணி தன்னையே கடிந்து கொண்டான். மூத்தப் பெண்கள் இருக்கும் போது இளையவளுக்கு யாராவது திருமணம் செய்து வைப்பார்களா? அப்படி செய்து வைத்தால் ஊர் என்ன நினைக்கும்? மூத்த பெண்களை எவர் வந்து திருமணம் செய்வர்? பெரும் நோயோ அல்லது கெட்டுப்போன பெண்களோ என்றெண்ணி புறக்கணிப்பார்களே. அப்படியானால் இந்தப் பெண்களின் நிலை என்னாகும்? என்றெல்லாம் சிந்தித்தான்.
‘சரி, இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடியற வரை நான் காத்திருக்கேன்’
‘ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணவே வக்கில்லாதவன் நான். ரெண்டையும் எப்ப கரை ஏத்தறது? நீ எப்ப இவள கட்டிக்கறது?’
‘ஒலகத்துல முடியாதுன்னு எதுவுமில்ல. கிராமத்திலயே கம்ப்யூட்டர் வந்திடுச்சி. நிலாவுல மனுஷன் கால வச்சுட்டான். நாமதான் இன்னமும் நிலாவுல ஆயா வடை சுடறதா சொல்லிட்டிக்கோம்…’
‘வக்கனையா பேசிடலாம். இறங்கின பிறகுதான் அதோட ஆழம் தெரியும். எல்லாம் முடிஞ்சாலும் சாதி மதத்த ஒழிக்க முடிஞ்சதா? இல்ல… வரதட்சணய ஒழிக்க முடிஞ்சதா?’
‘இதெல்லாம் வேணாமுன்னுதான் ஒங்கப் பொண்ண கட்டிக்க ஆசப்பட்டேன்.’
‘நீ ஆசப்பட்டா போதுமா? உன் வீட்ல ஒத்துக்கணுமே…’
‘என் அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பையன். என் விருப்பத்துக்கு எதிரா நடக்கமாட்டாங்க.’
‘நீ உன் வீட்டுக்கு ஒரே பையங்கிறதால வசதியான வீட்ல பொண்ணெடுக்கணும்னு நினப்பாங்க. மீறி என் பொண்ணு வாழ வந்தா குத்தம் சொல்லி குத்திக் காட்டியே என் பொண்ண சாகடிச்சிடுவாங்க. இது சரிப்பட்டு வராது’
‘சரியா வரும். ஒங்க பொண்ண கண்கலங்காம வச்சி காப்பாத்துவேன். ஊம்..னு ஒரே ஒரு வார்த்த சொல்லுங்க. ஒங்க ரெண்டு பொண்ணுங்க கல்யாணத்த நானே முடிச்சி வைக்கிறேன். நீங்களும் மாப்பிளத் தேடுங்க. நானும் பாக்கறேன். இவங்க கல்யாணம் முடியற வரைக்கும் நான் காத்திருப்பேன்’
– சொல்லிவிட்டு இராமசாமியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் மணிகண்டன். ‘அப்பா என்ன சொல்வாரோ? தனக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாழ்க்கை கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலையாகுமோ?’ என்று மனத்திற்குள் நினைத்த காஞ்சனா தேர்வின் முடிவை அறிய ஆவல் கொண்ட மாணவியாய் துடித்தாள்.
‘சரி! என் பொணுங்களுக்கு நல்ல வாழ்க்க கிடைக்கும்னா நான் ஏன் குறுக்கே நிக்கணும்? ஆனா ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் முடியற வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் எந்த தப்புத்தண்டாவும் பண்ணக்கூடாது. மீறி ஏதாவது நடந்தா நாங்க மூணு பேருமே தூக்குல தொங்கிடுவோம்’
‘மனச போட்டு கொழப்பாம இருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும் நான் வரேன்’. மணிகண்டனுக்கும், காஞ்சனாவுக்கும் இராமசாமி எடுத்த முடிவு நெஞ்சில் பால் வார்த்த மாதிரி அல்ல… பரிசு சீட்டில் கோடி ரூபாய் பரிசு விழுந்ததைப் போன்ற மகிழ்ச்சி கிடைத்தது.
காஞ்சனாவின் தந்தை இவர்களின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டியதால் கட்டுக்கடங்காத கார்முகில் போல் தினமும் சுற்றித் திரிந்தனர். வெளிமாநகரங்களுக்குச் சென்று பூங்காக்கள், உணவு விடுதிகள், திரையரங்குகள் என பொழுதை கழித்தனர். ஆடைகள் நகைகள் வாங்கி குவித்தாள் காஞ்சனா. இரண்டு மூன்று மாதந்தான் உருண்டோடி இருக்கும். பிறகு மெல்ல காஞ்சனாவிடமிருந்து வில ஆரம்பித்தான் மணிகண்டன். எங்கு அழைத்தாலும் தவிர்த்தான். அவளிடம் பேசுவதையே தவிர்த்தான். காஞ்சனா புரியாமல் வெயிலில் பட்ட புழுவாய் துடித்தாள். காரணம் தெரியாமல் புழுங்கினாள்.
சின்னச் சின்ன துன்பத் துயரங்களைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் தவிப்பது பெண்களின் இயல்பென்பதால் காஞ்சனா மனமொடிந்து போனாள். எல்லா ஆண்களும் ஒரெ மாதிரி தானா? பெண்களை புகழ்பாடி மயக்கி தன் எண்ணம் நிறைவேறியதும் மலரை கசக்கி எறிவதுபோல் பெண்களை எறிவதுதான் ஆண்களின் விளையாட்டா? பெண்கள் என்ன ஆண்கள் விளையாடும் விளையாட்டு அரங்கமா? மானம், கற்பு பெண்களுக்கு மட்டுந்தானா? நம்பி ஏமாந்து விட்டோமா?
என்று மனம் போன போக்கில் உள்ளுக்குள் புலம்பியவளாய் காஞ்சனா வீட்டின் விட்டத்தைப் பார்த்து பேயறைந்தவள் போல உண்ணாமல், உறங்காமல், வேலைக்குப் போக வேண்டுமென்ற சிந்தனையே இல்லாமல், வீட்டுக் காவலில் உள்ள கைதியாக, யார் எதைக் கேட்டாலும் மௌனமே பதிலாய் எத்தனை நாள் இப்படி ஒரு ஜடமாக இருந்தாள் என்று காஞ்சனாவுக்கே தெரியாது. மெல்ல மெல்ல தன் துயர நிலையிலிருந்து விடுபட்டு பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் மாறத் துணிந்தாள்.
அலுவலகத்தில் மணிகண்டனும் காஞ்சனாவும் அறிமுகமே இல்லாதவர்களைப் போல் நடந்து கொண்டனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவுமில்லை. பேசிக்கொள்ளவுமில்லை. மணிகண்டனை பார்த்தால் காஞ்சனா வேறொரு அலுவலக அறைக்குச் சென்று விடுவாள். கண்ணாம்மூச்சி விளையாட்டு விளையாடுவதாக மற்ற அலுவலகப் பணியாளர்கள் கேலியும் கிண்டலும் பேசி சிரித்தனர். இப்படியே பல நாட்கள் உருண்டோடின. மணிகண்டனுக்கு இந்த விளையாட்டு கசந்ததோ என்னவோ பெற்றோருக்காக தன் மகிழ்ச்சியை பறிகொடுக்கத் தயாரில்லை. மாலையும் கழுத்துமாக போய் நின்றபின் ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும். இனியும் காஞ்சனாவை தவிக்கவிட வேண்டாமென்று முடிவெடுத்தான்.
காஞ்சனாவிடம் சொன்னால் ஏற்றுக்கொள்ள மறுப்பாள். ஆகவே பொய் சொல்லி அழைத்துப் போய் மிரட்டி பதிவு திருமணம் செய்து கொண்டான் மணிகண்டன். தன்னை பிரிந்திருக்க முடியாமல் திருமணம் செய்து கொண்டான். ஆகவே தன் வாழ்க்கை மகிடழ்ச்சியாக இருக்கும், கணவனின் அன்பில் ஆதரவும் அரவணைப்பும் இருக்குமென்று ஏக்கத்துடன் எதிர்பார்ப்புடன் அப்பா அக்காள்களை மறந்து குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைத்த காஞ்சனாவுக்குத் தன் கனவில், ஆசையில், மகிழ்ச்சியில் இடி விழுந்ததைப்போல், பெருத்த ஏமாற்றமாய் போயிற்று.
மணிகண்டனின் தாயும் எல்லா தாய்களைப் போல மனக்கோட்டைக் கட்டி இருந்தாள். ஊரே மதிக்கும்படி இந்த ஊரிலேயே இதுபோன்ற திருமணம் யாருமே செய்யவில்லை என்று எல்லோரும் பேசும்படி வசதியான குடும்பத்தில் பெண்ணெடுத்து ஒரே மகன் என்பதால் வரதட்சணையுடன் சீரும் சிறப்புமாக திருமணம் நடத்த எண்ணி இருந்த மனக்கோட்டையை இடித்துத் தள்ளிவிட்டாள் காஞ்சனா, என்ற கோபத்தில் சண்டை போட்டு வாய்க்கு வந்தபடி தினமும் திட்டித் தீர்த்தாள்.
மணிகண்டனும் தாய்சொல்லைத் தட்டாத பிள்ளையாய் காஞ்சனாவை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினான். அன்புக்காக ஆதரவு வார்த்தைக்காக ஏங்கி தவித்த, காஞ்சனாவிடம் பக்கத்து வீட்டு முரளி தினமும் நடக்கும் சண்டையை கவனித்து வந்ததால் ஆறுதலாக பேசினான். கணவனிடமும், மாமியார், மாமனாரிடமும் கிடைக்காத அன்பும் ஆறுதலும் முரளியிடம் காஞ்சனாவுக்குக் கிடைத்ததால் நாளடைவில் இருவருடையே காதல் மலர்ந்தது. இனியும் இங்கிருக்க வேண்டாமென்று முடிவெடுத்து ஊரை விட்டு இரவோடு இரவாக ஓடி வந்தனர்.
கடந்த கால வாழ்க்கையை சொல்லி முடித்த காஞ்சனா தேம்பித் தேம்பி அழுததைப் பார்த்தால் கல்லும் கரையும் என்றால் ஊராரும் பஞ்சாயத்தாரும் மனம் கரையாமல் இருக்க முடியுமோ? ஒரு சில நிமிடங்கள் அமைதி நிலவியது. பிறகு அமைதியை கலைக்கும் விதமாய் நெஞ்சினை கனைத்து மணிகண்டனை பார்த்து நாட்டாண்மை நடேசன் கேட்டார்.
‘ஏம்மா மணிகண்டா, பெத்த அப்பனையும் கூடப்பொறந்த அக்காளுங்களையும் மறந்துட்டு உன்ன நம்பி நீயே கதின்னு வந்தவள கொடும படுத்தலாமா?’
‘தப்பு தாங்க. அதுக்கு காரணமே இவதாங்க…’
‘எப்படி?’
நாட்டாண்மை கேட்டதும் மணிகண்டன் தன் நியாயத்தைக் கூறலானான். காஞ்சனாவின் தந்தை இராமசாமி இவர்களின் திருமணத்திற்கு ஒப்புதல் கொடுத்தாலும், மூத்தவள் இருவருக்கும் திருமணம் நடக்காமல் காஞ்சனாவுக்கு நடக்காது. மணிகண்டனின் பெற்றோரின் சம்மதம் தேவை. இதை எல்லாம் சிந்திக்காமல் தன்னுடைய எண்ணத்திற்கேற்ப மணிகண்டனை வற்புறுத்தி நகர நகரமாக அழைத்துச் சென்று பலரும் பார்க்கும்படி சுற்றித் திரிந்ததால் மணிகண்டனின் பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரியவந்தது. இதனால் மணிகண்டனை கண்டித்த தாய் தந்தை வேறு பெண் பார்க்கத் தொடங்கியதோடு காஞ்சனாவிடம் பேசக்கூடாதென கட்டளைப் போட்டனர். இதனால் மணிகண்டன் இக்காரணத்தை ஒட்டி காஞ்சனாவிடம் பேசுவதையே தவிர்த்தான். இந்த இடைப்பட்ட காலத்தில் காஞ்சனாவின் அக்காள் இருவருக்கும் மாப்பிள்ளைகள் தேடி ஒரே முகூர்த்தத்தில் திருமணத்தை முடித்துவிட்டு முறையோடு, அப்பா அம்மாவை அனுப்பி காஞ்சனாவை பெண்கேட்டு திருமணம் முடித்துக்கொள்ள எண்ணியதை நடக்கவிடாமல் காஞ்சனாவின் அவசர புத்தியால் தானாகக் கனிய வேண்டியதை தடியால் அடித்து கனியவைத்து விட்டாள்.
இரண்டு பேர் வந்து காஞ்சனா விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருப்பதாகப் பொய் சொல்லி மணிகண்டனை அழைத்துக் கொண்டு பதிவு திருமண அலுவலகத்திற்குச் சென்றனர். காஞ்சனா அங்கு மணப்பெண்ணாய் மலர்ந்திருப்பதைப் பார்த்த மணிகண்டனுக்குக் கோபம் கொந்தளித்தது.
‘நீ என்ன முட்டாள் தனமா நடந்துக்கிறே?’
‘எனக்கு வேற வழி தெரியல. நீங்க என்ன கழட்டிவிட பாக்குறீங்க.’
‘பெண் புத்திங்கிறதுக்கு நீ தாண்டி உதாரணம். உன் அப்பாவுக்கு நான் வாக்கு கொடுத்ததையும் உன் அக்காளுங்க பற்றியும் மறந்திட்டியா?’
‘எனக்கு என் வாழ்க்கதான் முக்கியம். நாம் கல்யாணம் செஞ்சுக்கிட்டா உங்க அப்பம்மா வேற வழி இல்லாம என்னெ மருமகளா ஏத்துவாங்க. ரிஜிஸ்டர்ல கையெழுத்தப் போட்டுட்டுத் தாலிய கட்டுங்க. இல்லன்னா இங்கேய தற்கொலை செஞ்சுக்குவேன்.’
காஞ்சனாவின் மிரட்டலுக்குப் பயந்து பதிவு திருமணம் செய்து கொண்டான். மணிகண்டனின் தாய் ஒப்பாரி வைத்துப் புலம்பினாள். மறுநாளிலிருந்து மணிகண்டனின் தாய் தன் மாமியார் வேலையை காட்டத் தொடங்கி காஞ்சனாவை வறுத்தெடுத்ததால் காஞ்சனா கணவனிடம் அழுது புலம்பி முறையிட்டாள். கொஞ்சநாள் பொறுத்துக்கொள், தன் தாய் போல நீ பார்த்துக்கொண்டால் மனம் மாறி உன்னை மருமகளாக ஏற்றுக்கொள்வார் என்பதை ஏற்றுக்கொண்டு நடக்காததால் அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான் என்று காஞ்சனாவை அடித்து துவைத்தான்.
எந்தப் பெண்ணும் புகுந்த வீட்டில் நிம்மதி இல்லை என்றால் பிறந்த வீட்டிற்குப் போய்விடுவாள். இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வாள். விவாகரத்து கேட்டு மானத்தோடு கூலிவேலை செய்து கற்போடு வாழுவாள். இவள் இன்னொருவனுடன் வந்திருக்காளே இது சரியா?
தன் பழைய நினைவிலிருந்து திரும்பி வந்த மணிகண்டன் பஞ்சாயத்தாரை பார்த்து கேட்க, பஞ்சாயத்தார் புரியாமல் திகைத்தனர். காஞ்சனா கூறியதற்கும் மணிகண்டன் சொன்னதற்கும் நிறைய வேறுபாடு இருப்பதை உணர்ந்தனர்.
‘ஏம்மா, மணிகண்டன்தான் வேணும்னு கட்டாய கல்யாணம் பண்ணிக்கிட்ட நீயே இப்ப வேறொருத்தனோடு வந்திருக்கே. இவனும் சரி இல்லன்னு இன்னொருத்தனோடு ஓடிப்போவியா? இதுக்கு பேரு சம்சாரம் இல்லம்மா இதுக்கு வேற பேரு…’
நாட்டாண்மை கேட்டதற்கு தலைகுனிந்தாள் காஞ்சனா. இப்பொழுதும் அவள் அவமானப் படுவதை மனம் பொறுத்துக்கொள்ள முடியாத மணிகண்டன் பெருந்தன்மையோடு கேட்டான்.
‘அய்யா நானும்; தப்பு பண்ணி இருக்கேன்.. அவளும் அவசரப்பட்டு தப்புப் பண்ணிட்டாள். திருந்தி வாழணும்னு நினைக்கிறேன். பழசை மறந்துட்டு திருந்தி வந்து என்னோட குடும்பம் நடத்தச் சொல்லுங்க. ஏத்துக்க நான் தயாரா இருக்கேன்.’
‘அந்த ஆளுக்கூட என்னால போக முடியாதுங்க. தயவு செய்து உங்க கால்ல விழுந்து கேக்குறேன். என்னெ காதலனோடு வாழ வையுங்க.’
பஞ்சாயத்தாரை நோக்கி காஞ்சனா கை எடுத்துக் கும்பிட்டாள். விருப்பமில்லாதவளை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றாலும் நிம்மதியாக வாழமுடியாது என்பதை எண்ணி பார்த்த மணிகண்டன், காஞ்சனா கழுத்தில் தொங்கிய தான் கட்டிய தாலியை பறித்து முரளி கையில் கொடுத்து கட்டச் சொன்னான். எதிர்பாராத இச்சம்பவத்தால் பஞ்சாயத்து சபையே ஆட்டம் கண்டு திகைத்துப் பார்த்தது.
முரளி, காஞ்சனா கழுத்தில் தாலி கட்டியதும், தன் விதியை நினைத்து மனதை கல்லாக்கிக் கொண்டு நடைபிணமாய் வந்து சேர்ந்து ஆறு மாதங்கூட முடியவில்லை. காங்சனாவை பார்த்து கடந்த காலத்தில் பயணித்த மணிகண்டன் சுய நினைவுக்கு வந்தான். அப்பொழுது காஞ்சனா மணிகண்டன் காலில் விழுந்து அழுது கண்ணீர் வடித்துக் கூறினாள்.
‘நான் மாபாவிங்க. கறைப்பட்ட பிறவிதான். தப்புப்பண்ணது என் போறாத காலம். அதனாலதான் பாறைய பசுமையான புல்வெளினு நெனச்சி ஏமாந்துட்டேன். இனிமே இந்த மாதிரி தப்பப் பண்ண மாட்டேங்க என்ன மன்னிச்சி ஏத்துக்குங்க…’ புலம்பினாள்.
‘அடிப்பாவி உன்ன போலத்தான் பல பெண்ணுங்க அடுத்தவன் வார்த்தையில மயங்கி, அரசன நம்பி புருஷன கைவிட்ட கதையா புருஷனும் இல்லாம அரசனும் இல்லாம தெருவில நிக்குறாங்க. இக்கரைக்கு அக்கரை பச்சையாதான் இருக்கும். கெட்டுப்போகாம பத்தினியாவே என்கூட வாழ்ந்திருக்கலாம். கண்கெட்டப் பின்னால் சூரிய நமஸ்காரம் செய்ற மாதிரி கெட்டுப்போய் வாழ வந்திருக்கியே. இருந்தாலும் அன்னக்கி பஞ்சாயத்தில் அத்தனை பேர் முன்னால் நீ என்னை அவமானப்படுத்தின. நானும் உன்ன வெறுத்தொதுக்கினா நான் மனுஷனே இல்ல. மன்னிப்பு கேட்பவர் மனிதர்னா மன்னிக்கிறவர் தெய்வம். நான் தெய்வமாக வேணாம். மனுஷனா நடந்துகிட்டாவே போதும் என்று உடலாலும் உள்ளத்தாலும் கெட்டிருந்தாலும் எப்பொழுது மனம் மாறி திருந்தினாளோ அப்பொழுதே அவள் புனிதமாகி விட்டாள். என்பதை உணர்ந்து காஞ்சனாவின் தப்பை மன்னித்து மணிகண்டன் காஞ்சனாவைத் தூக்கிக் கண்ணீரைத் துடைத்தான். இப்பொழுது இருவரும் புதுப்பிறவி எடுத்த உணர்வை பெற்றனர்.
– நெருப்பலைப்பாவலர் இராம. இளங்கோவன்