பொறுமை
கோடைக்காலம். அந்தப் பத்து வயது சிறுவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எப்படியாவது கடைக்குச் சென்று வாங்கியே தீர வேண்டும். வெயில் கொளுத்துகிறது, சைக்கிளை எடுத்துச் செல்லலாமா? தங்கையோ தானும் வர வேண்டுமென்று துடிக்கிறாள். அவளுக்கும் சைக்கிளில் வர ஆசை. ஆனால் மிகவும் மெதுவாகத்தான் வருவாள். வேலையிலிருந்து அம்மா வரும்வரைக் காத்திருக்க முடியுமா?
கண்களில் ஆர்வம், அப்பாவிடம் கேட்கத் தயக்கம். அவரோ கைபேசியை வைப்பதாகத் தெரியவில்லை. அவருக்கு அவருடைய வேலை. சரி தாத்தா பாட்டியிடம் கேட்கலாமென்றால் அவர்களுடைய குறட்டை வீட்டுக்குள் எதிரொலித்தது. அம்மாவிடம் பேசலாமென்றால், முடியாது. கார் ஓட்டும்பொழுது கைபேசியை உபயோகிக்க மாட்டாள். இது எழுதாத வீட்டின் விதிகளில் ஒன்று.. ஹும்… என்ன செய்வது. பொறுத்துப் பார்ப்போம்.
தன்னை மறந்து தங்கையுடன் விளையாடியபடியே தூங்கி விட்டான். ”கண்ணா, காலை நீட்டிப் படுத்துக்கோ” என்று அம்மாவின் குரல் கேட்டு எழுந்தபோது…. “அடடா, ரொம்ப நேரம் தூங்கி விட்டோமோ?” ஒரே சலிப்பாக இருந்தது! வாங்க முடியவில்லை என்ற ஏக்கம் ஒரு புறம்.
சமயலறைக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றபொழுது, “இந்தா கண்ணா, உனக்குப் பிடித்த ஐஸ் க்ரீம்” அம்மா நீட்ட, சந்தோஷத்தில் துள்ளினான். நம்ப முடியவில்லை! எல்லையற்ற மகிழ்ச்சி! ஆசை நிறைவேறியது.
பொறுமையாய் இருந்ததற்குப் பரிசு!!
– ரஞ்சனி.