முக்தி
கோவிந்த ராஜய்யரின் கவலையெல்லாம் ஒன்றே. சில நண்பர்களிடம் மட்டும் சொல்லி அங்கலாய்ப்பார். “பகவான் நல்ல வாழ்க்கையைக் கொடுத்துட்டான், ஒரு குறை இல்லாம குடும்ப ஷேமத்தைப் பாத்துண்டான்… இருந்தாலும் மனசைப் போட்டு வாட்டற ஒரே விஷயம் நேக்கு ஒரு புள்ளக் கொழந்த இல்லையேங்கறதுதான்.. நானும் லக்ஷ்மியும் என் பொண்ணு பிரபாவைப் புள்ள மாதிரிதான் வளத்தோம்.. ஆனாலும் கட்டையில போற காலத்துல அவளால எனக்குக் காரியம் செய்ய முடியாதே… புள்ள கையால காரியம் செஞ்சுக்காம பரலோகத்துல முக்தி கெடைக்கறது எப்டி?”
கேட்பதற்கு ஏதோ பெரிதாகத் தேவையில்லாத கவலையெனத் தோன்றினாலும், சாஸ்திர சம்பிரதாயத்தில் தலைமுறை தலைமுறையாக ஊறி, அவற்றை முழுவதுமாய் நம்பி, அனைத்துக் கருமங்களையும் செவ்வனே செய்துவரும் ஐயரின் கவலை உணர்ந்து பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியது. இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னரே தவறிப்போன தன் தாயாருக்கும், பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வைகுண்டம் சேர்ந்த தந்தைக்கும் இன்னமும் வருடம் தவறாமல் முறையாக சிரார்த்தம் செய்து கொண்டிருக்கிறார் அவர். தன் தலைமுறைக்குப் பிறகு இதைச் செய்வதற்கு ஆண் வாரிசு இல்லையே, போகும் வழிக்கு விளக்கொளியும், உணவும் தந்து ரட்சிக்கும் சடங்கு செய்ய மகன் இல்லையே என்ற கவலை அவரைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்ற பரந்த நோக்குக் கொண்டவர்தான் அவர், ஆனாலும் தன்னைச் சுற்றி உள்ள சமுதாயம் தன் மகள் பிரபாவை எந்த ஒரு சடங்கும் செய்ய அனுமதிக்காது என்பதை நன்கு உணர்ந்ததால் வந்த கவலை. முடிந்த அளவு அந்தக் கவலையை மகளுக்குத் தெரியாமல் மறைத்து வந்தார் ஐயர்.
ஆனாலும், தந்தையின் கவலையை நன்றாக அறிந்து வைத்திருந்தாள் மகள் பிரபா. எவ்வாறு தந்தைக்கு உதவுவது என்பதில் தீவிர முயற்சி மேற்கொண்டிருந்தாள். பல பண்டிதர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டாள் – குழந்தைகள் யாரும் பெற்றோர் இறப்பது குறித்துப் பேசவோ, ஏன், நினைத்துப் பார்க்கவோ கூட வேண்டாம் என்று இருப்பது இயல்பு என்றாலும், தன் தந்தையை முழுவதுமாய் அறிந்து, அவரின் துயரை ஆணிவேர் வரை உணர்ந்த பிரபா அதற்கு ஒரு தீர்வு காண்பதைத் தன் கடமைகளில் ஒன்றாக ஏற்றுப் பல பண்டிதர்களிடம் பேசத் தொடங்கியிருந்தாள். அனைவரும், சாஸ்திர சம்பிரதாயம் என்று பழக்க வழக்கங்களைப் பேசினார்களேயன்றி அதற்குப் பின்னால் இருக்கும் தத்துவத்தையோ, அளவிடற்கரிய உயர்வினையோ கூறவில்லை – ஏனெனில், அவற்றை விளக்க முனைந்தால் தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் உள்ள வேறுபாடு தெளிவாகும். அந்த முரண்பாட்டை விளக்கப் பெரும்பாலான இன்றைய பண்டிதர்களால் இயலாத நிலை என்பதையே உண்மையான காரணம்.
அவர்களிடம் விடையேதும் கிடைக்காத நிலையில், சாஸ்திரங்களைத் தானே படித்துணர்வது என்ற முடிவுக்கு வந்த பிரபா பல புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினாள். பக்தி இலக்கியம் எனத் தொடங்கி, ஞான மார்க்க நூல்களில் வந்து நின்றது அவளது கல்வி. காவியங்களில் தொடங்கி, இதிகாசங்களில் தொடர்ந்து, வேதங்களில் வந்து நின்றது அவளது படிப்பு. ரமண மகரிஷியில் தொடங்கி ராமகிருஷ்ண பரமஹம்சர் வரை சென்றது. படிக்கப் படிக்க கேள்விகள் அதிகரித்தன. படித்ததையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தோன்ற, மேலும் படிக்கையில் ஏற்றுக் கொள்ளும் கருத்துக்கள் கிடைக்குமா எனத் தேடல் தொடர்ந்தது. இந்த வாழ் நாள் போதுமா என்ற கேள்வியும் தொக்கி நிற்கத் தொடங்கியது.
மகளின் நிலையை உணர்ந்த கோவிந்தராஜர் அவளிடம் இதுகுறித்துக் கேட்கலானார். “ஏம்மா, கொழந்தே, என்ன படிச்சுண்டிருக்க.. எப்பப் பாத்தாலும் எதையோ யோசிச்சிண்டு இருக்கற மாதிரி இருக்கே, என்ன சமாச்சாரம்?” என வினவ, படித்ததன் பொருட்டு வந்த பக்குவத்தில், தன் எண்ணத்தையும், முயற்சிகளையும் தயக்கமின்றி நேரடியாகப் பகிரலானாள் பிரபா. கேட்கக் கேட்க, நெஞ்சு பூரித்த தந்தை, “அம்மா, கொழந்தே, என் ஜென்ம சாபல்யம் ஆன மாதிரி ஒரு சந்தோஷண்டி அம்மா.. நேக்கு இப்பவே எல்லாம் முடிஞ்சு போனாலும் சந்தோஷப்படுவேண்டி என் தங்கம். நான் செஞ்ச பூர்வ ஜென்ம புண்யம் நீ நேக்கு மகளா வாச்சது…” என நாத்தழுதழுக்கப் பேசலானார்.
“அப்பா, நான் இதை ஆரம்பிச்ச காரணம் வேற. ஆனா இதப் புரிஞ்சுக்கணுங்கறதுல முழு மூச்சா இறங்கணும்னு தோண்றது இப்போ. சரியா, தப்பா தெரியல. நல்லதா கெட்டதான்னு புரியல. நீங்களே சொல்லுங்கோப்பா, என்ன பண்ணலாம்?” எனக் கேட்க, “அம்மாடி, நீ ஆரம்பிச்ச காரணத்துக்கும் சுய நலமில்லை, இப்போ போற திக்குக்கும் பிரத்யேகமான எதிர்பார்ப்பும் இல்லை., இதுதாண்டிம்மா ஞான மார்க்கத்துக்கு முதல் படி. என் வாரிசு இந்தப் பயணத்தை ஆரம்பிச்சுட்டான்னு கேக்கும்போதே நான் ஜென்மமெடுத்ததோட காரணம் நிறைவேறிடுத்துன்னு தோண்றது…. பிறவிப் பயனை முடிக்காத ஜென்மங்கள் பிரம்ம ராக்ஷஸா வரக்கூடாதுனுட்டுத்தான் இந்த சம்பிரதாயமெல்லாம் பண்றதா நேக்குச் சொல்லியிருக்கா.. அது சரியா தப்பா நேக்குத் தெரியாது, ஆனா நேக்குச் சொல்லிக் கொடுத்தவாளண்ட இருந்த மரியாதையால அதையெல்லாம் நான் நம்பிண்டிருக்கேன். ஆனா இன்னைக்கு நீ போற பாதையைப் பாத்ததும் பிறவிப் பயனை முடிக்கிற மாதிரியான வாரிசு எனக்கு இருக்குன்னு மனசு சொல்றது. அந்தப் பட்சத்துல நேக்கு நான் பிரம்ம ராக்ஷஸ் ஆக மாட்டேனுட்டு தோண்றது.. அப்டீன்னா நேக்குச் சடங்கு எதுவும் வேண்டாம்னுதானே அர்த்தம்?”
மனதில் ஆண்பிள்ளை இல்லை சாஸ்திர சம்பிரதாயங்கள் செய்ய என்ற கவலை முழுவதுமாக அற்றவராய் மாறியிருந்தார் கோவிந்தராஜய்யர். சடங்குகள் செய்வதினால் மட்டும் முக்தி மலர்வதில்லையென்பதை உணர்ந்தவராய், தனது வாரிசு முக்தி நிலையெய்த அனைத்து முயற்சிகளையும் தொடங்கி விட்டதாய் அறிய, தன்னையறியா இன்ப நிலை எய்தத் தொடங்கினார். அவர் மனதில் அமர்ந்து மகாகவி உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறான்;
“தோன்றி அழிவது வாழ்க்கை – இதில்
துன்பத்தோடு இன்பம் வெறுமை என்று ஓதும்
மூன்றில் எது வருமேனும் – களி
மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி.”
– வெ. மதுசூதனன்.