\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பெண்ணின் பெருந்தக்க யாவுள

Filed in இலக்கியம், கதை by on February 28, 2015 0 Comments

pennin_620x548யாரோ தன்  அறைக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு ,தூக்கம் கலைந்து , கண்களை மெல்லியதாய்த் திறந்தாள் காவ்யா. வார்டு பாய் வந்து பாலும் ரொட்டியும் வைத்துவிட்டுச் சென்றான்.

மெல்ல கட்டிலில் இருந்து எழுந்து ,தாங்கித் தாங்கி நடந்து சென்று முகம் கழுவி மீண்டும் வந்து கட்டிலில் அமர்ந்தாள் . இரவு நன்றாக மழை பெய்திருக்க வேண்டும்.

ஆஸ்பத்திரியின் மெல்லிய திரைச்சீலைகள் விலகி, கொஞ்சம் குளிர்ந்த காற்றைத் தந்தது.  சூடான பாலைக் குடித்தபடியே திரைச் சீலைகளை ஒதுக்கியபடி  வெளி உலகத்தை வெறித்துப் பார்த்தாள் .இந்த வாழ்க்கையில் தான் ஒரே நாளில் எத்தனை எத்தனை  மாற்றங்கள்.  நேற்று நடந்ததை எல்லாம் மனம் மீண்டும் ஒரு முறை அசைபோடத் தொடங்கியது.

நேற்று  வழக்கம் போலக் காலை நேரச் சமையல்  வேலைகளில்  பரபரப்பாய் இருந்தாள் காவ்யா.  “ட்ரிங் , ”  ட்ரிங் ” , டெலிஃபோன் அடித்தது.   பூஜை அறையிலிருந்து மாமியார் கமலா அம்மாள் வெளியே வந்து ஃபோனை எடுத்தார்.

“அம்மா !  நான் தான் பேசுறேன். ஒரு குட் நியூஸ் !! ”  என்றாள் மறுமுனையில் கமலாவின் மகள் லாவண்யா . சொல்லும்மா என்ன விசேஷம்  என்றாள் கமலா.

நீ பாட்டி ஆகப் போறம்மா என்று லாவண்யா சொன்னதைக் கேட்டவுடன் கமலாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை .

உடம்ப நல்லாப் பார்த்துக்க, டாக்டர் கிட்ட தவறாமச் செக்கப் போயிட்டு வா.  . நான் அப்பாவோட நாளைக்கு வந்து பார்க்கிறேன், நீ பத்திரமா இரு என்று வழக்கமான  அறிவுரைகளைச் சொன்னாள் கமலா.

சரிம்மா நான் அப்புறம் பேசுறேன் என்று சொல்லி அந்தப் பக்க ஃபோன் துண்டிக்கப்பட்டது.

யார்ம்மா ஃபோன்ல என்று   கேட்டாள் காவ்யா . நம்ம லாவண்யா தான் , முழுகாம இருக்காளாம் . கல்யாணம் ஆகி 4 மாதம் தான் ஆகுது, உடனே நல்ல சேதி சொல்லிட்டா .

ஆனா என் பிள்ளைக்குத் தான் இன்னும் ஒரு நல்ல வழி பொறக்கல . கல்யாணம் ஆகி 7 வருஷம் ஆச்சி ,இன்னும் ஒரு புழு ,பூச்சி இல்ல.

ஐயோ ,காலைலே ஆரம்பிச்சிட்டாங்க இவங்க என்பது போல் முகம் சுளித்தாள் காவ்யா.

உனக்கு என்ன கொறையோ எல்லாத்தையும் மறைச்சி உங்க வீட்ல கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.

அம்மா, சும்மா வாய்க்கு வந்தப்படி பேசாதீங்க . எங்க ரெண்டு பேர்ல யார்க்கு வேணா குறை இருக்கலாம் . நான் மட்டும் தான் காரணம்னு சொல்லாதீங்க.

இதையெல்லாம் ஹாலில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சுரேஷ்  ஓடி வந்து பளீரென்று காவ்யாவின் கன்னத்திலே ஓர் அறை விட்டான்.  யார் கிட்ட குறை இருக்குனு சொன்ன ?

எங்க அம்மா கேக்கறதுல என்ன தப்பு , தன்னோட வம்சத்துக்கு வாரிசு வேணும்னு எல்லாரும் தான் நினைப்பாங்க. உன்னால பெத்துக் கொடுக்க முடியல அது சொன்னாக் கோவம் வருதோ ? என்று பொறுமை இழந்து பொரிந்து தள்ளினான் .

போன வருஷம் தான் பசு மாடு வாங்கி வந்தோம், அது இப்போ கண்ணுக் குட்டியோடு சுத்தி வருது.  கொல்லையில்  மா மரம் நட்டோம் , அதுவும்  இப்போ பூவும், காயுமாப் பூத்துக் குலுங்குது.  நீ மட்டும் தான் இப்படி மொட்ட மரமா நிக்கற  என்று கொஞ்சமும் இரக்கம் இன்றிப் பேசினாள் கமலா

காவ்யா, அழுதபடியே எதிரே இருந்த துர்க்கையின் படத்தை வெறித்துப் பார்த்தாள் . நீயும் பெண் தானே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அமைதியாய்த் தானே இருக்கிறாய் என்று நொந்து கொண்டு அழுதாள் .

இரக்கமற்ற இவர்களிடம்  இவை ஒன்றும் பெரிதில்லை . இனி இந்த இடத்தில் இன்னும் இருந்தால் பிரச்சினை பெரிதாகும் . கடிகாரத்தைப் பார்த்தாள்  ஆஃபீஸிற்குக் கிளம்ப நேரம் ஆயிற்று .

ஒன்றும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விறுவிறுவென்று குளியல் அறைக்குச் சென்றாள் .  குழாயைத் திறந்து விட்டு முழுவதுமாய் நனைந்தாள் .

பால் சுரக்காத தன் மார்பகங்களைப் பார்த்து, உபயோகம் அற்ற பாகத்தைக் கடவுள் தனக்கு ஏன் தந்தார் என்று நொந்து கொண்டாள் . கண்களின் நீரோடு குழாயின் நீரும் சேர்ந்து  வடிந்துக் கொண்டிருந்தது .

ஆபீஸ்  உள்ளே நுழையும் போதே பெரும் பரபரப்பாய்   இருந்தது. தனக்கான வேலைகள் எல்லாம் கழுத்துவரை தயாராக இருந்தது., கொஞ்சம் எல்லா வற்றையும் மறந்து வேலையில் மூழ்கிப் போனாள் .

“காவ்யா ,  யூ காட் அ மினிட்.   ஐ  வுட் லைக்  டு டாக்  டு யூ   ”  என்றார் மேனேஜர் . இருவரும் ஓர் அறைக்குள் சென்றனர்.

“காவ்யா,   ஐ ஹேவ் அன் எக்ஸ்சைடிங் நியூஸ் ஃபார் யூ!    கிளைன்ட் வாஸ் வெரி மச் இம்பிரஸ்டு  வித் யுவர் பர்ஃபார்மன்ஸ். நீங்க UK   போகப் போறீங்க. நல்ல ஆஃபர், வாட் டூ யு ஸே?”  என்றார்.

காவ்யாவிற்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள இரண்டு நிமிடம் ஆனது.பேசாமல் இந்த வீட்டுப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க இது தான்  வழி என்று நினைத்தாள் .

உடனே   ” ஷுர்  ஐ வில் டேக் திஸ் ”  என்று பதில் அளித்தாள் .

“குட் , ஐ நோ யூ வில் மேக்  இட் பிக்.   பட் ஜஸ்ட் எ   க்விக் திங்” என்று ஏதோ இழுத்தார் , “மே பி எ பர்சனல் க்வெஸ்டின் ,  ஆர் யூ ப்ளான்னிங் ஃபார் கிட்ஸ் திஸ் இயர்?” என்று கொஞ்சமும் வாய் கூசாமல் ஒரு கேள்வியைக் கேட்டார்.

ஆயிரம் தேள்கள் ஒரே நொடியில் கொட்டியது போல உணர்ந்தாள் காவ்யா  . சாரி ,  ” ஐ டிட்  நாட் கெட் யு” என்றாள் .

“காவ்யா,   ட்ரை  டு அண்டர்ஸ்டான்ட் . இட்ஸ் எ  பிக் ப்ராஜெக்ட் , ஐ டோன்ட் வான்ட் எனி ஹர்ட்ல்ஸ் இன் பிட்வீன் ” . என்று அவர் பக்க  நியாயத்தை விளக்க முற்பட்டார்.

அப்படியே இடிந்து போனாள் காவ்யா. ஓங்கி ஓர் அறை விட வேண்டும் போல இருந்தது. சிதறிய மனதை ஒரு நிமிடம் ஒன்று சேர்த்து,   ” வில் யூ மேக் ஷுர்  தட் யூ வில் நாட் கெட்  யுவர்  வைஃப்  ப்ரெக்னன்ட் நெக்ஸ்ட் இயர் ?  ” என்று கோபமாய்க் கேட்டு விட்டு , பதிலுக்குக் காத்திராமல் பேகை எடுத்துக் கொண்டு விறுவிறுவென வெளியேறினாள்.

பஸ் ஸ்டாண்ட்க்கு வந்து நின்றாள் . முதன் முதலாய்  சுற்றி நிற்கும் விண்வரை உயர்ந்த  கட்டிடங்கள் அனைத்தும் குப்பை மேடாகத் தோன்றின. எந்த மேல் தட்டு வேலைக்காக பெருமிதம் கொண்டாளோ  அதற்காக இன்று   வெட்கப்பட்டாள் .  வந்த ஏதோ ஒரு பஸ்ஸில்  ஏறினாள் .

சமூகம் வளர்ந்து விட்டது என்பது எவ்வளவு பெரிய பொய். பெண்களைக் கை நீட்டி அடிக்கும் வழக்கம் வேண்டுமானால் குறைந்து இருக்கலாம்.ஆனால் கொடுமையான வார்த்தைகளும், கீழ்த்தரமான பார்வைகளும் இன்னும் மாறவில்லை.

படித்து வளர்ந்த சமூகமும் , குடித்து அழியும் சமூகமும் ஒரே மாதிரியான சிந்தனையைத் தான் கொண்டு உள்ளது.. அன்னையர் தினம் கொண்டாடும் சமூகம், குழந்தை பெறாத  பெண்களுக்கு மலடி என்று பழி சுமத்துவது ஏன்?

எத்தனையோ கேள்விகள் நெஞ்சில் எழுந்தன, பதில் மட்டும் இல்லை , கண்களில் வழிந்த கண்ணீர் , ஜன்னல் ஓர கம்பிகளைக் கழுவி விட்டுக் கொண்டிருந்தது.

சட்டென ஏதோ தோன்றியபடி  மந்தைவெளி ஸ்டாப்பில் இறங்கினாள்.   “டாக்டர். கலா ” என்று பெயர்ப் பலகை பொறித்த வீட்டின் கதவைத் திறந்தாள் .  உள்ளே இருந்து எட்டிப் பார்த்த கலாவிற்கு ஒரே ஆச்சரியம் . என்னடி,  “பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு, இந்தப் பக்கமே வரல நீ? வா உட்கார்” என்று  வரவேற்றாள்  கலா.

“இருடீ காபி கொண்டு வரேன்  ” என்று உள்ளே போனாள் .

காபி குடித்த படியே காவ்யா கேட்டாள். கலா,   “நீ எனக்கு ஒரு உதவி பண்ணணும் “.

” சொல்லுடி என்ன செய்யணும் ?  “என்றாள் கலா .  காவ்யா சொன்னதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனாள் .

“என்னடி சொல்ற உனக்குக் கொஞ்சமும் புத்தி இல்ல. எந்தப் பொண்ணாவது இப்படிச் செய்வாளா ?  ” என்று  அதிர்ந்தாள்.

“இல்ல கலா எனக்கு வெறுத்துப் போச்சு . எனக்கு என் வாழ்க்கையை வாழணும். ஒவ்வொரு மாதமும் உறுப்பில் மட்டும் அல்ல , தாயாக முடியாத ஒவ்வொரு பெண்ணின்  இதயத்திலும் தான் இரத்தம் வடியுது.

வீட்டில் குழந்தை பெற்று தரச்சொல்லி இம்சை. அலுவகத்தில், இவள் எங்கே குழந்தை பெற்று விடுமுறையில் போய் விடுவாளோ என்று பதட்டம். பெண்களுக்குச் சம உரிமை கொடுப்பதாகச் சொல்வதெல்லாம்  வெறும் வெளி வேஷம்டீ .  பிள்ளை பெத்துத் தருவதை மீறியும் ஒரு பெண்ணிற்கு வாழ்க்கை இருக்கு”.

“ப்ளீஸ் நீயும் பழைய கதையப் பேசாதே . உன்னால இந்த உதவி பண்ண முடியுமா ?  “என்று கேட்டாள் காவ்யா . ஹ்ம்ம் .. நீண்ட பெருமூச்சின் பின்   , “ஹ்ம்ம்  எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. எதுக்கும்  நல்லா  ஒரு முறை யோசிச்சு முடிவு பண்ணு .”  “சரிடீ  நான் கிளம்புறேன் , நாளைக்கு ஹாஸ்பிடல் ல  பாக்குறேன்” என்று விடை பெற்றாள் காவ்யா .

“குட் மார்னிங் காவ்யா , ஹவ் ஆர் யூ   ஃபீலிங்க் நவ்? ” என்று கேட்ட படியே உள்ளே நுழைந்தாள் கலா .

நேற்றைய நினைவுகளில் மூழ்கி இருந்தவள் நினைவு திரும்பி,   “பரவால்ல  , ஐ அம் ஒகே!”  என்றாள் .

”ப்ரோஸஸ் எல்லாம் முடிஞ்சிடுச்சி , நீ இன்னிக்கு வீட்டுக்குப் போகலாம். ரிசல்ட் எல்லாம்  பார்த்தேன் , எல்லாம் நார்மலா இருக்கு. இனி என்ன செய்யப் போறேன்னு யோசிச்சு முடிவு பண்ணு. குட் லக் . என்னால முடிஞ்ச அளவு கண்டிப்பா சப்போர்ட் பண்றேன்” என்றாள் கலா.

“ரொம்ப தேங்க்ஸ் டீ  !  “என்றாள் காவ்யா.

“சரிடீ நான்  ரௌண்ட்ஸ் போக நேரம் ஆச்சு , நான் ஈவினிங்  கால் பண்றேன்.டோன்ட் வொர்ரி ஒகே ?  “என்று  கலா ஆறுதல் சொல்லிக் கிளம்பினாள் .

பில் செட்டில் செய்து விட்டு , மெல்ல ரோட்டில் இறங்கினாள் காவ்யா. ரெண்டு  அடி எடுத்து வைத்ததுமே வானம்தூறல் போட்டது .. மழை நன்றாகப் பிடிப்பதற்குள்  ஆட்டோ பிடித்து விட வேண்டும் எனக்  கொஞ்சம் விரைவாக நடந்தாள் .

“கௌவ் ……கௌவ்….. ”  என்ற மெல்லிய சத்தம் கேட்டு திரும்பினாள் .  இரண்டு நாய்க் குட்டிகள் ஒன்றோடு ஒன்றாகப் பிணைந்தபடி, என்ன செய்வதென்று தெரியாமல் ,  தன் கோலிக் குண்டுக் கண்களை அங்கும் இங்கும் சுழற்றியபடி விழித்துக் கொண்டு இருந்தன .

பிறந்து ஒரு வாரத்திற்குள்ளே தான் இருக்க வேண்டும். சட்டென்று இரண்டையும் தன் கைகளில் அள்ளி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் .   அவளின் மார்பகச் சூட்டில்  மிக சௌகர்யமாக இரண்டும் புதைந்து கொண்டன.

கருப்பையை இழந்த பின் , முதன் முதலாய்த் தாய்மையை அனுபவித்தாள் . நெஞ்சிலும் ,அடி வயிற்றிலும் இருந்த வலி   முழுவதுமாக இப்பொழுது நீங்கி இருந்தது..

–    மீனாட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad