இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 7
(இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 6)
கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வர, கணேஷ் அதனைப் போலீஸ் அதிகாரி ராஜேந்திரனிடம் விளக்கி கார்டையும் ஒப்படைக்கிறான்.
ஆனால், ராஜேந்திரன் அந்தக் கார்டுடன் தனது பர்ஸ் முழுவதையும் தவற விடுகிறார். அதே நேரத்தில் இறந்த சபாரத்தினத்தின் சம்பந்தி சண்முக சுந்தரத்திடம் போலீஸ் விசாரணை செய்து கொண்டிருக்கிறது. தட்சிணா மூர்த்தியின் உயிரைக் காப்பாற்ற அறுவைச் சிகிச்சை செய்யும் டாக்டர் தேசிகனின் மகள் டாக்டர் புஷ்பா கடத்தப்பட்டுகிறாள். தட்சிணா மூர்த்தியை அவர் கொலை செய்தால் புஷ்பாவை விட்டு விடுவதாக ஃபோனில் டாக்டருக்கு மிரட்டல் வருகிறது. இதற்கு நடுவில் செல்வந்தர் வேலாயுதமும் ஒரு சில தனவான்களும் தட்சிணா மூர்த்தியிடம் சிக்கிய மைக்ரோ எஸ்.டி கார்டை எவ்வாறு கைப்பற்றுவது எனப் பேசிக் கொண்டு இருக்கின்ற பொழுது, வேலாயுதம் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கே சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அவரைத் தீவிரமாக விசாரணை செய்து கொண்டிருக்கையில் ஒரு தொலைபேசிச் செய்தி தந்த கலவரத்தால் உடனடியாக எழுந்து அழைப்பு வந்த இடத்தை அடைய, அங்கே அவரை அழைத்த ஆடு மேய்க்கும் இளைஞன் கத்தியால் குத்தப்பட்டு விழுந்து கிடக்கிறான். இதற்கிடையில், தட்சிணாமூர்த்தியின் தொலைபேசியிலிருந்து கிடைத்த துப்புக்களைக்கொண்டு அவன் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமானாதனுக்கு இந்தக் கொலைகளில் சம்பந்தம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அவன் வீட்டை அடைந்த போலிஸ் அவன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதைப் பார்க்கின்றனர்.
ராஜேந்திரன் தவற விட்ட பர்ஸை எடுத்தது துப்புறவு ஊழியன் மாசான் என்று அறிந்து அவனை விசாரிக்கையில், அவன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு மைக்ரோ எஸ்.டி கார்டை வீசி எறிந்த இடத்தைக் காட்டுவதாகக் கூறுகிறான். இதனிடையில், துப்பாக்கி ஏந்திய உருவமொன்று டாக்டர் தேசிகனின் வீட்டிற்குள் புகுந்து அவரை மிரட்டத் துவங்குகிறது. கல்லூரியிலிருந்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த பாரதி, சிலரால் கடத்தப்பட்டு ஒரு பாழடைந்த கட்டிடத்திற்குள் கட்டி வைக்கப்பட்டிருக்கிறாள்.
அதன் பிறகு என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
திங்கட்கிழமை மாலை எட்டு மணி:
ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு மயக்கமான நிலையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த பாரதியை ஏற்றிக் கொண்டுவந்த கார் புதுக்கோட்டை நகரைத்தாண்டி ஒரு புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு பெரிய வீட்டை அடைந்தது. உயரமான காம்பவுண்ட் சுவர் கொண்ட அந்த வீட்டில் இரண்டு மூன்று நிமிடக் கார்ப் பயணத்திற்குப் பின்னரே போர்ட்டிக்கோ வந்து சேரும், அவ்வளவு பெரிய காம்பவுண்ட். இடத்தைப் பார்த்தவுடன் தோட்டக்காரன், சமையல் காரன், டிரைவர் எனப் பல வேலைக்காரர்கள் இருப்பார்கள் என்று நினைப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக அவ்வளவு பெரிய வீட்டில் வெளியில் காக்கி உடையணிந்த ஒரு காவலாள் தவிர வேறு யாரும் வசிப்பதில்லை என்பதுதான் உண்மை.
காரைக் கொண்டு வந்து நிறுத்தியவுடன் அதிலிருந்து இறங்கிய முதலாமவன் பாரதி கடத்தி வைக்கப்பட்டிருந்த பாழடைந்த மண்டபத்தில் சீட்டாடிய நான்கு பேரில் ஒருவன். அவன் பெயர் நாகராஜன். ஆறடி உயரம், ஆஜானுபாகுவான உடல், கரிய நிற, பெரிய அடர்த்தியான மீசை, முழங்கை வரை மடித்து விடப்பட்டிருந்த பழுப்பு நிற ஜிப்பாவும், முழுவதும் இறக்கி விடப்பட்டு, பட்டையான பெல்ட்டால் கட்டப்பட்டிருந்த லுங்கியும்.. பார்ப்பவர்களுக்கு உடனடியாக பயத்தை உண்டாக்கும் ஒரு தோற்றம்.
இறங்கியவுடன், பேஸஞ்சர் சீட்டில் அமர்ந்திருந்த பாலாவையும், பின் சீட்டில் மயங்கிய நிலையில் அமர்ந்திருக்கும் பாரதியின் இருபக்கமும் உட்கார்ந்துள்ள ராஜு மற்றும் துலுக்காணம் ஆகிய மூவரையும் கீழே இறங்குமாறு பணித்தான். “அவளத் தூக்கிகிட்டு வாங்கடா”.. என ஆணையிட்டுக் கொண்டே உள்ளே நடக்கத் தொடங்கினான் நாகராஜன்.
மூன்று பேரும் மயங்கிய நிலையிலிருந்த பாரதியைத் தூக்கிக் கொண்டு உள்ளே நடக்க, ”அப்பா, இந்தக் கனம் கனக்குறா பாரு..” என்று அங்கலாய்த்துக் கொண்டே நடந்து செல்ல, இவர்கள் நடக்கும் அசைவிலும், ஒலியிலும் லேசாகக் கண் விழிக்கத் தொடங்கினாள் பாரதி. மெதுவாக முனகிக் கொண்டே கண்களைச் சுற்று முற்றும் பார்த்து, தான் தூக்கிக் கொண்டு செல்லப் படுகிறோம் என்றுணர்ந்தவுடன் பயம் பற்றிக் கொள்ளத் தொடங்கியது. அலறி அடித்துக் கொண்டு எழ முயற்சிக்கிறாள். அந்த முயற்சியில் தூக்கிக் கொண்டு வந்தவர்களை உதைக்க எத்தனிக்க, பலசாலிகளான அவர்கள் அவளை எளிதாய் அடக்கிப் பிடிக்கின்றனர்.
ஹாலில் இருந்த சோஃபா ஒன்றில் உட்கார வைத்து அழுத்திப் பிடித்து, கையைக் காலைக் கட்டத் தொடங்கினார்கள். அவள் வாயைத்திறந்து அலறத் தொடங்க, ஆத்திரமடைந்த ஒருவன் பளாரென அறைகிறான். பலமாக அடிபட்டதால், மறுபடியும் மயக்கமடைகிறாள். அடித்த சுவடு மறைவதற்குள் அவள் வாயில் துணி வைத்துக் கட்டுகிறான்.
அவன் கட்டி முடிக்க, உட்புறமிருந்த ரூமிலிருந்து ஒரு தனவந்தர் வெளியே வந்து கொண்டிருக்கிறார். இவர் நம் வாசகர்கள் அனைவருக்கும் ஏற்கனவே நன்கு அறிமுகமான ஒருவர்.
திங்கட்கிழமை மாலை எட்டு மணி முப்பது நிமிடம்:
மருத்துவமனையில் எல்லா ஃபார்மாலிடிகளையும் முடித்துக் கொண்டு, போலீஸ்காரர்களின் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லி முடித்துக் கிளம்பிய கணேஷ், நேராகக் கல்லூரிக்குச் சென்று அங்கு பாரதி கடத்தப் பட்டதைத் தெரிந்துக் கொண்டான். உடனடியாக என்ன செய்வது என்று யோசிக்கலானான். போலிஸிடம் போகலாமா எனத் தோன்றிய யோசனையை உடனே வேண்டாமென நினைத்து, அழித்து விட்டான். இப்போதுதான் பல விஷயங்கள் நடந்து முடிந்து போலிஸிடமிருந்து தப்பித்து வந்திருக்கிறோம், திரும்பவும் சென்று மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற நினைப்பில், தானே ஏதாவது செய்து தன் காதலியைக் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.
என்ன செய்யலாம் என்ற யோசனையில் ஆழ்ந்த கணேஷுக்கு, நண்பன் சிதம்பரம் ஞாபகம் வர, அவனுக்கு ஃபோன் செய்கிறான். சிதம்பரத்தின் வீட்டிற்கு அருகில் இருக்கும் கணபதி, புதுவயல் போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிள். அவரது மேலதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தான். அவர் ஃபோனில் வந்த தகவலைக் கேட்டிருந்த கணபதி, சிதம்பரத்தின் கேள்விக்கும் அந்த ஃபோன் செய்திக்கும் தொடர்பு உள்ளது என்பதைக் கணித்துக் குறிப்பிட, சிதம்பரம் இந்த விஷயத்தைக் கணேஷிடம் சொல்லி விடுகிறேன்.
“டேய் மாப்ள, கணபதி அங்கிள் சொல்றதக் கேட்டா அது நம்ம பாரதி மாதிரித்தான் தெரியுதுடா”
“ஆமாண்டா, நீ சொல்றதக் கேட்டா அப்டித்தான் தெரியுது.. அவரு எங்க போனாருன்னு தெரியுமா?”
“தேவகோட்டை போற வழியாமுடா”
”சரிடா, நான் போய் பாக்குறேன்” என்று கணேஷ் சொல்ல, “மச்சான், நானும் வரேண்டா நீ தனியா போகாத… அதுமத்திரமில்ல நம்ம குரூப் கொஞ்சம் பேரக் கூட்டிகிட்டுப் போலாண்டா. ஏதாவது பிரச்சன வந்தாலும் பாத்துக்குருவாங்க…”
“சரிடா, நீ அவுங்கள கூட்டிகிட்டு கார்ல வா, நான் மொதல்ல போரேன்”
ஃபோனை வைத்துவிட்டு, பக்கத்தில் நின்று கொண்டிருந்த பைக் ஒன்றை எடுத்துக் கொண்டு போகலாம் என்று முடிவெடுத்து, கல்லூரி வாசலில் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்த தன் வகுப்பு மாணவனை அணுகினான். “டேய், எங்கடா போகணும், நானே கூட்டிகிட்டுப் போறேன்” எனச் சொல்ல, எதற்கும் பயன்படும் என்ற எண்ணத்துடன் அவனையே வண்டியை ஓட்டச் சொல்லி, பின்னால் உட்கார்ந்து கொண்டுப் பயணம் செய்யத் தொடங்கினான் கணேஷ்.
அவர்களது வண்டி பைபாஸ் ரோடில், தேவகோட்டையை நோக்கிப் புறப்பட்டது. அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர, டீக்கடையின் பின்னாலிருந்து லுங்கி கட்டிக் கொண்டு வெளியே வந்த ஒருவன், தனது கைபேசியை எடுத்து யாருக்கோ ஃபோன் செய்யத் தொடங்கினான். மறுமுனையில் ஃபோனை எடுத்துப் பேச, “மேப்படியான் பொறப்பட்டு வாராண்ணே…” எனப் போட்டுக் கொடுக்கத் துவங்கியிருந்தான்.
திங்கட்கிழமை மாலை ஒன்பது மணி:
இரவு ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. நன்றாக இருட்டி விட்டது. கானாடுகாத்தான் நகரத்தார் வீதியில், பல நகரத்தார்கள் வீடுகளுக்கு மத்தியிலே ஒரு பணக்கார ஐயர் வீடு. பாரதியின் தந்தை வெங்கட்ராமன் சார் அந்த வீட்டின் சொந்தக்காரர். இந்த நேரத்தில் பெண் வீட்டிற்கு வரவில்லையென்ற பயம் பெற்றோர்களுக்கு வந்து தொற்றிக் கொண்டது. வழக்கமாக கல்லூரி முடிந்து, ஸ்பெஷல் க்ளாஸெல்லாம் முடிந்து வந்து சேர இரவு எட்டு மணி ஆவது வழக்கம். சில சமயங்களில் நண்பர்களுடன் அரட்டை அடித்து விட்டு வீட்டிற்கு வருவதனால் எட்டு மணிக்கு மேலாவதும் வழக்கம் தான். அதனால் இதுவரை ஃபோன் எதுவும் வரவில்லை. பொதுவாக நொடிக்கொரு முறை ஃபோன் செய்து பெண் எங்கிருக்கிறாள் என்று உறுதிப்படுத்திக் கொள்ளும் பழக்கம் வெங்கட்ராமன் சாருக்கும் இல்லை, அவரின் மனைவி கௌரிக்கும் இல்லை. ஆனால் இப்பொழுது நேரமாகிவிட்ட காரணத்தால் ஃபோன் செய்யத் தொடங்கியிருந்தார்கள்.
பாரதியின் செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. பல முறை அழைத்து இதே செய்தி வருவதனால், அடுத்ததாக அவளின் கார் டிரைவர் ஃபோனுக்கு அழைக்கத் தொடங்கியிருந்தனர். டிரைவரின் ஃபோன் விடாமல் அடித்துக் கொண்டிருக்க யாரும் எடுப்பதாகத் தெரியவில்லை. குழப்பமடைந்த வெங்கட்ராமன், அடுத்ததாக பாரதியின் நண்பர்கள் ஒவ்வொருவராக அழைக்கத் தொடங்கினார். அழைக்கப்பட்ட அனைவரும், ஒன்று ஃபோனை எடுக்கவில்லை. அல்லது எடுத்தாலும், “தெரியலையே அங்கிள்” என்ற பதிலை மட்டுமே சொன்னார்கள். வேறு யாரையாவது கால் பண்ணலாமா இல்லை காவல் துறையிடம் சென்று விடலாமா என்று நினைக்கத் தொடங்கியிருந்தார். இதற்குள் கௌரி முழுவதுமாக அழத்தொடங்கியிருந்தாள். “ஏண்டி, இப்ப என்ன நடந்துடுத்துன்னு அழ ஆரம்பிச்சுட்ட? அவ என்ன சின்னக் குழந்தயா, ஊர வித்துடுவா.. தவிர நம்ம கார்லதானே போயிருக்கா, ஒண்ணும் ஆயிருக்காது… செத்த பேசாம இரு, யோசிக்க விடு” என்று கூறிக்கொண்டே என்ன செய்வது என்று யோசிக்கலானார்.
பளிச்சென்று அவருக்குத் தோன்றியது கணேஷின் நினைப்பு. கணேஷும் பாரதியும் நல்ல நண்பர்கள் என வெங்கட்ராமன் அறிவார். அவர்களுக்குள் இருந்தது நல்ல நட்பு என்றுதான் அவர் நினைத்துக் கொண்டிருந்தார். கணேஷின் நம்பர் எங்கே என்று தேட, அதிர்ஷ்ட வசமாக, எப்பொழுதோ அவனைக் கூப்பிட வேண்டிய தேவையிருந்தபோது அதனை செல்ஃபோனில் சேவ் செய்து வைத்திருந்தது இப்போது உதவிகரமாக இருந்தது. எடுத்து ஃபோன் செய்கிறார்.
நண்பனின் பைக்கில் பின்னால் உட்கார்ந்து போய்க்கொண்டிருந்த கணேஷ் தன் செல்ஃபோன் மணி அடிக்க, அதனை எடுத்துப் பார்க்கிறான். பாரதியின் வீட்டு நம்பர் என்று பார்த்த உடனேயே தூக்கி வாரிப் போடுகிறது கணேஷிற்கு. ஓடிக் கொண்டிருக்கும் வண்டியில் பின்னால் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினான். எடுத்துப் பேசினால் அவளைப் பற்றி என்ன சொல்வது, அவர்களுக்கு எவ்வளவு விஷயம் தெரியும் எனக் குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கணேஷும் ஃபோனை எடுக்கவில்லை என்றவுடன் இன்னும் பயம் அதிகரிக்கத் தொடங்கியது வெங்கட்ராமனுக்கு. திரும்பவும் ஒரு முறை ஃபோன் அடிக்கத் தொடங்க, இப்பொழுது கணேஷால் பொறுக்க முடியாமல் ஃபோனை எடுத்துப் பேசத்தொடங்கினான். “கணேஷ், நான் வெங்கட்ராமன், பாரதியோட ஃபாதர் பேசுறேன்”…. என்றவுடன், “அங்கிள், சொல்லுங்க அங்கிள்.” எனக் குரல் நடுநடுங்கப் பேசத் தொடங்குகிறான் கணேஷ்.
திங்கட்கிழமை மாலை ஒன்பது மணி முப்பது நிமிடம்:
சப்-இன்ஸ்பெக்டர் முருகன் பாரதியைக் கடத்திய காரைத் தொடர்ந்து செல்வதை விடக் கிழே அடிபட்டு விழுந்து கிடக்கும் ஆடு மேய்ப்பவனைக் காப்பாற்றுவது என்று முடிவு செய்தது நாம் அறிந்ததே. இரத்தம் சொட்டும் அவனைத் தூக்கித் தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்த்தி அருகேயிருந்த விஸ்வேஸ்வரய்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எத்தனிக்கையில், அவர் ஏற்கனவே அழைத்திருந்த போலீஸ் படை அங்கு வந்து சேர்ந்திருந்தது.. வந்திருந்த படையிலிருந்து இரண்டு கான்ஸ்டபிள்களிடம் காயப்பட்ட ஆடு மேய்ப்பவனை அழைத்துச் செல்ல ஆணையிட்டுவிட்டு, பாரதியைக் கடத்திய காரைத் தேடிச் செல்லத் தொடங்கினார் முருகன்.
இதற்குள் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்கள் கடந்து விட்டபடியால், அந்தக் காரைப் பின் தொடர்வது என்பது இயலாத வேலையாகிவிட்டிருந்தது. ஆனாலும் அங்கிருந்து வெளியில் செல்வதற்கு ஒரே வழிதான் என்பதாலும், அந்த வழியிலிருக்கும் கார் தடங்களையும் ஃபாலோ செய்து கொண்டு சில மைல் தூரம் தொடர்ந்தார் சப்-இன்ஸ்பெக்டர் முருகன்.
ஆளரவம் இல்லாத ரோடுகளைக் கடந்து ஒரு சிறிய ஊர் வந்து சேர்ந்தார் முருகன். அங்கு, சற்று மங்கலான ஒளிவிளக்கில் அந்த நேரத்திலும் கடை ஒன்றைத் திறந்து வைத்துக்கொண்டிருந்த பெரியவரைப் பார்த்து அருகில் சென்றார் முருகன். “ஐயா, இந்தப் பக்கம் ஒரு வெள்ளை அம்பாஸடர் கார் போறதப் பாத்தீங்களா?” என்று கேட்க.. “ஆ… என்ன?” என்று இவரின் கேள்வியைப் புரிந்துக் கொள்ள இயலாத பெரியவர் திரும்பவும் கேட்கச் சொல்கிறார்.
“வெள்ளைக் கலரு ப்ளெசரு காரு ஒண்ணு போச்சா” எனக் கேட்க, “ஆமா, சாரு, கொஞ்ச நேரத்துக்கு முன்னால” எனப் பதில் சொல்லத் தொடங்கினார்.
“அம்ம பெரிய வீட்டு டிரைவருதான் ஓட்டிக்கிட்டுப் போனாரு… நம்ம செல்லன் மயன் சுப்ரமணி.. அவன் தான் டைவரு…” என்று கூற, முருகன் வண்டியை விட்டு இறங்கி, அவரின் பதிலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். “ஆமா சாமி, அவுக வண்டியை நிறுத்தி, மூணு பேரு இறங்கி வந்தாவ… பீடி வாங்கிக் குடிச்சுப்புட்டுப் போனாவ…” எனக் கூற, முருகன் உஷாராகத் தொடங்கியிருந்தார். “எங்க போனாகன்னு தெரியுமா பெரியவரே” எனத் தொடர, “நாம் பாக்கல, ஆனா அவுக எல்லாம் அந்தப் பெரிய வீட்டுக்குத் தான் போயிருப்பாகன்னு நெனக்கிறேன்” என்றார்.
“எந்தப் பெரிய வீடு?”
“அந்த இறக்கத்துல போனீகன்னா, நடு வீதி தெரியுமா.. அங்க போனீங்கன்னா அந்தத் தெருவுலயே பெரிய வீடு, பெரிய சுவரு, மரமெல்லாம் நெறய இருக்கும்.. அந்த வீட்டைப் பாத்தாலே தெரியும்..” என முழு அடையாளங்களையும் சொல்லி முடிக்க, முருகனுக்கு அந்த வீட்டைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமான வேலையாக இருக்கவில்லை.
அந்த வீட்டின் வெளியில் வந்து உள்ளே பார்வையிடவே, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை அம்பாஸடர் கண்ணுக்குப் புலப்பட்டது. இந்தக் கார் அந்தக் கார்தான் என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், அதுவாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று உள் மனம் கூற ஆரம்பித்ததும், அங்கேயே நின்று அந்த வீட்டை நோட்டம் விடுவது என்ற முடிவுக்கு வந்திருந்தார் முருகன்.
(தொடரும்)
– வெ. மதுசூதனன்.