அமெரிக்க இருதய மாதம்
நான் விசேட விரைவோட்டப் போட்டிக்காரனும் இல்லை, விளையாட்டு வீரனும் இல்லை எனக்கேன் இருதய நாடிக்கணக்கு? என்று நாம் கேட்டுக் கொள்ளலாம். இதன் காரணம் காலாகாலத்தில் வயது ஏறுதல் மற்றும் இளமுதிர்வு காலத்தை (40 – 55 வயதுகள்) அடைதல் போன்றனவாகும். இந்தக் காலகட்டத்தில் ஏற்படக்கூடிய இருதயப் பிரச்சினைகளை முடிந்த அளவு முன்கூட்டியே தெரிந்து கொள்ளுவது என்பது தான் விவரம் தெரிந்த மருத்துவ நிபுணர்கள் தரும் பதில்.
எமது இருதய அடிப்பு அல்லது நாடித்துடிப்பு என்பது எத்தனை தரமுடன் இருதயம் செயல்படுகிறது என்பற்கான கணிப்பாகும். இருதயத் துடிப்பு ஆளுக்கு ஆள் ஒரே அளவாக இருக்காது. குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் நாடித்துடிப்பு வயதுக்கு வந்தவர்களிலும் அதிகமானது. அதே சமயம் ஒருவர் தமது இருதயத் துடிப்பு மாற்றங்களைக் காலாகாலம் அறிந்து கொள்வது அவசியமானதொன்று.
எனது வயது, உடல் நிலை இருதய அடிப்பின் நிலவரத்தை மாற்றக் கூடிய காரணி. இந்த மாற்றங்கள் குறைந்த காலத்தில் பெரிதாக மாறினால் உரிய காலத்தில் மருத்துவப் பரிசீலனையை நாடுவது ஆயுளை நீட்ட உதவலாம்.
சரியாக எங்கு நாடித் துடிப்பைப் பார்ப்பது?
நாடித் துடிப்பானது உடலின் பல பாகங்களில் தோலின் அண்மையில் காணப்படும் பிரதான இரத்தக் குழாய்களை விரல்களினால் உணர்வதாலோ, அல்லது மருத்துவர் வைத்திருக்கும் மார்புக்குள் தொனிக் கேட்புக் கருவி (stethoscope) மூலமோ அறிந்து கொள்ளலாம்.
அனுமானிக்கக் கூடிய உடற்பாகங்கள்
- கைக்கூட்டு
- முழங்கையின் உட்பாகம்
- கழுத்தின் அருகில்
- பாதத்தின் மேல்பகுதி
தெளிவான நாடியடிப்பு அனுமானத்திற்குச் சுண்டுவிரல், அடு்த்த விரல்களை நாடிக்கருகில் வைத்து 60 நொடிகளில் எத்தனை தடவை துடித்தது என்று கணித்து அறிந்து கொள்ளலாம்.
ஓய்வு நாடித் துடிப்பானது உடல் பிரயாசம், துரிதப் பயிற்சி போன்ற அசைவுகள் இல்லாத போது கணிக்கப்படும். இது கணிக்கப்படுவர் ஓய்வாக ஓரிடத்தில் அமர்ந்து இருக்கும் போதோ அல்லது படுத்து இருக்கும் போது கணித்துப் பெறலாம். இருதய மருத்தவர்களின் கணிப்பின்படி இந்தத் துடிப்பு, சாதாரணமாக நிமிடத்திற்கு 60 தொடங்கி 100 நாடித் துடிப்புக்களுக்கும் இடையே இருக்கும்.
நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 60 இலும் குறைந்தால் அது மருத்துவ பரிபாலனைக்குள்ளாகத் தேவையில்லை. குறைந்த நாடித்துடிப்பு விளையாட்டு, அதிக உடல் அப்பியாசம் உள்ளவர்களில் காணப்படக் கூடியதொன்று. காரணம் அப்பியாசம் செய்பவர்கள் தசைகள் அதிகச் சக்தியைத் திடீரென உபயோகிக்கத் தேவையில்லை. அவர்களின் தசைக்குத் தேவையான சக்தி குறைந்தளவிலேயே பயன்படுத்த வல்லன. எனவே நாடித் துடிப்பு எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்கும். குறைந்த நாடித் துடிப்பானது இன்னொரு முறையிலும் ஏற்படலாம். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளெடுக்கும் (Betablocker) என்னும் உயர் அழுத்தத் தடை மருந்தினாலும் உண்டு பண்ணலாம்.
கீழே வயதிற்கேற்ப நிமிடத்திற்கான சராசரி நாடித்துடிப்பு அட்டவணை
வயது | ஓய்வு நாடித்துடிப்பு வலயம் 50-85% | அதிக அல்லது அப்பியாச நாடித்துடிப்பு வலயம், 100% |
20 | 100-170 | 200 |
30 | 95-162 | 190 |
35 | 93-157 | 185 |
40 | 90-153 | 180 |
45 | 88-149 | 175 |
50 | 85-145 | 170 |
55 | 83-140 | 165 |
60 | 80-136 | 160 |
65 | 78-132 | 155 |
70 | 75-128 | 150 |
நாடித்துடிப்பைப் பாதிக்கும் காரணிகள்
உட்கொள்ளும் மருந்துகள் :
தற்காலத்தில் இரத்த அழுத்தத்தை உண்டு பண்ணும் (Adrenaline) சுரப்பைத் தடைசெய்யும் beta blockers என்னும் மருந்து வகை நாடித் துடிப்பைக் குறைக்கும். அதே சமயம் thyroid எனும் உடல் வளர்வைப் பாதிக்கும் சுரப்பியைத் தணி்க்கும் மருந்துகள், அவற்றின் அதிக பாவிப்பு நாடித் துடிப்பை அதிகரிக்கவும் செய்யும்.
உடல் இருந்து கொள்ளும் விதம்
வழக்கத்தில் நிற்றல், இருத்தல், ஓய்வு போன்ற உடல் நிலைகளில் நாடித்துடிப்பு ஒரே மாதிரியாகத்தான் காணப்படும். ஆயினும் திடீரென எழும்புதல், இருந்தல் போன்ற உடல் அசைவுகளின் போது முதல் 20-30 வினாடிகளுக்கு உடல் நாடித் துடிப்பு மாறலாம். இதைவிட அழுதல், அதிக கவலை, அதிக மகிழ்ச்சி போன்றவையும் நாடித் துடிப்பைத் தூண்டலாம்.
உடல் பருமன்
நாடித்துடிப்பு சாதாரண உடல் பார வேறுபாடுகளினால் பாதிக்கபடுவதில்லை. ஆயினும் பருமனான உடல் அதன் ஓய்வு நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 100 துடிப்புக்களிலும் அதிகமாக இருக்கலாம். அது அவதானத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விடயமாகும்.
சூழல் காற்றின் வெப்பநிலை
பருவகால மாற்றங்களின் போது சுழல் காற்று வெப்ப நிலை அதிகரிக்கக் காற்றின் ஈரப்பதன் (humidity) அதிகரிக்கலாம். இது நாடித் துடிப்பையும் நிமிடத்துக்கு 10 துடிப்புக்களுக்கு மேல் அதிகரிக்கக் கூடியது.
மருத்துவரை நாடவேண்டிய நிலைகள்
ஓய்வு நிலையில் அடுத்தடுத்து இருதயத் துடிப்பு மாறியபடியிருத்தல், மற்றும் அடிக்கடி தலைசுற்றல், மயக்கம் வருதல், போன்று காணப்படுதல் போன்றவை சில சமயம் இருதயக் கோளாறுகளுக்கு முன்னோடி அறிகுறி. எதற்கும் மருத்துவ ஆலோசனையை தாமதிக்காது பெறுதல் நலம்.
ஃபிப்ரவரி அமெரிக்க இருதய மாதம்:
அமெரிக்கச் சுகாதாரம் மற்றும் நோய்த் தணிப்பு அமைச்சு (Center for Diesease Control and Prevention – CDC) 2017ம் ஆண்டில் மாரடைப்பு நோயில் இருந்து ஒரு மில்லியன் நோயாளிகளைப் பாதுகாக்க, அமெரிக்க இருதய மாதத்தை உருவாக்கியுள்ளது. சுமார் 67 மில்லியன் மக்கள் அவதானிக்கப்படாத உயர் இரத்த அழுத்தங்களினால் இருதய நோய்க்கு உள்ளாகின்றனர். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் 4 மடங்கு பாரிசவாதத்தாலும் (stroke) 3 மடங்கு இருதய நோயினாலும் உயிரழக்க வாய்ப்புண்டு. எனவே எமது உடலையும், இருதயத்தையும் பேணி உரிய காலத்தில் வைத்திய ஆலோசனை பெற்று ஆயுளை நீட்டிப்போம்.
– யோகி அருமைநாயகம்.