\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சங்கீதமே என் பிராண வாயு – திருமதி. நிர்மலா ராஜசேகர் பேட்டி

nirmala_2_620x443கர்நாடக சங்கீத சூப்பர் ஸ்டார் திரு. பால முரளி கிருஷ்ணாவின் கையால் சங்கீத விபன்ஷி என்ற விருது பெற்றவர். எம். எஸ். சுப்புலக்‌ஷ்மி அம்மாவின் கையால் தொடங்கி வைக்கப்பட்ட, கல்லூரிக் கால கர்நாடக சங்கீத அமைப்பு ஒன்றின் தொடக்க கால உறுப்பினர், திரையிசை மற்றும் கர்நாடக இசையில் இன்றும் கொடிகட்டிப் பறக்கும் பல சங்கீத மாமேதைகளுடன் நட்புக் கொண்டுள்ள இனிய தோழி, திருமதி. கற்பகம் சுவாமிநாதன், திரு. டி.ஆர். சுப்பிரமணியம், வீணை காயத்ரியின் தாயார் திருமதி. கமலா அஸ்வத்தாமா, திருமதி. சென்னம்மா, திருமதி இ.பி. அலமேலு போன்ற வீணை மற்றும் கர்நாடக சங்கீத ஜாம்பவான்களிடம் பயின்ற மாணவி, யு.என். தொடங்கி மினசோட்டா மாநிலம் வரை எல்லா நாடுகளிலும் ஏதோவொரு விருது பெற்று, புகழ் பெற்ற சங்கீத விற்பன்னர், தமிழர், திருமதி நிர்மலா ராஜசேகர் பனிப்பூக்கள் நடத்தப்படும் மினசோட்டா மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார் என்பது இங்குள்ள தமிழர்களுக்கெல்லாம் ஒரு பெருமைக்குரிய விஷயமல்லவா?

அவர்களைச் சமீபத்தில் பனிப்பூக்களுக்காக பேட்டி கண்டோம். மடை திறந்த வெள்ளமெனப் பெருகியது அவரின் பதில்கள். அடைந்த உயரம் குறித்துச் சற்றும் பெருமை காட்டிக் கொள்ளாது, கேள்விகள் கேட்பதற்கு முன்னரே தனது அனுபவங்களைச் சகஜமாகப் பகிர்ந்து கொண்டார். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு மேல் எங்களுடன் கலந்துரையாடிய அவரின் கேள்வி பதிலைக் கீழே சுருக்கித் தருகிறோம்.

கேள்வி: உங்கள் குருநாதர் பற்றி?

பதில்: நிறைய பேரிடம் வீணையும், வாய்ப் பாட்டும் கற்றுள்ளேன். பலரையும் குரு என்று சொல்ல வேண்டும். மிக நீண்ட நாட்கள் பயின்றதென்றால் கலாஷேத்ராவைச் சேர்ந்த தமிழ்நாடு இசைக் கல்லூரியின் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியரான கற்பகம் சுவாமிநாதன் அம்மாவைத்தான் சொல்ல வேண்டும். இவரிடம் நான் வீணை பயின்றேன். மிகவும் திறமைசாலி, இப்பொழுது அவர் நிலவுலகில் இல்லை. அடுத்ததாக சங்கீதத்தைப் பேராசிரியர் டி.ஆர். சுப்பிரமணியன் (டி.ஆர்.எஸ்) அவர்களிடம் கற்றேன். அவர்கள் தவிர, எனக்குப் பனிரெண்டு வயது இருக்கும் பொழுது, பெங்களூரில் இருந்த ஜி. சென்னம்மகாரு அவர்களிடமும் வீணை பயின்றேன். அவர் மிகவும் திறமை வாய்ந்தவர், டைகர் வரதாச்சாரியின் சகோதரரான வீணா கிருஷ்ணமாச்சாரியின் மாணவி. அதன் பிறகு கானமந்திரா என்ற பள்ளி வைத்திருந்த திருமதி இ.பி. அலமேலு அவர்களிடமும் பயின்றேன். இவர்களுடன் வீணை காயத்ரியின் தாயார் திருமதி. கமலா அஸ்வத்தாமா அவர்களிடமும் மாணவியாகப் பயின்றேன்.

கலாபீடம் அமைப்பின் இயக்குனராக இருந்த திரு. பகவதுல சீதாராம் ஷர்மா அவர்களிடமும் பயின்றுள்ளேன். திரு. உன்னி கிருஷ்ணன், திரு. வீணை கண்ணன், திரு. விஜய சிவா, திரு. ஆர். கே. ஸ்ரீராம்குமார், திரு. முல்லை வாசல் சந்திர மௌளி, திரு. மன்னார்கோயில் பாலாஜி, திரு. வி. ராஜசேகர், திரு. டி. எம். கிருஷ்ணா, திரு. சஞ்சய் சுப்பிரமணியம், திரு. கடம் சுரேஷ், திருமதி. உஷா சுப்பிரமணியம் மற்றும் பல கலைஞர்களுடன் சேர்ந்து  யூத் அசோஷியன் ஃபார் கிளாஸிகல் மியூஸிக் என்ற அமைப்பை நாங்கள் ஏற்படுத்தினோம். இதனைத் திறந்து வைத்து எங்களைக் கௌரவப்படுத்தியவர்கள் இசை மற்றும் நடன உலக ஜாம்பவான்களாகிய திருமதி எம். எஸ், சுப்புலக்‌ஷ்மி அம்மையார், திரு செம்பங்குடி ஸ்ரீனிவாச ஐயர், திருமதி. பத்மா சுப்பிரமணியம் மற்றும் பலர். கே.ஜே. ஏசுதாஸ் உட்பட பல புகழ் பெற்ற கர்நாடக சங்கீத வித்துவான்கள் இந்த அமைப்பிற்கு வருகை தந்துள்ளனர். இதனைத் தொடங்கி வைத்த என் நண்பர்களான பத்துப் பேரும் சங்கீத உலகில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். நான் சென்னை விட்டு இங்கே வந்து விட்டாலும், அந்தச் சூழ்நிலையை விடாது இங்கேயும் அமைத்துக் கொண்டுள்ளேன். இப்பொழுதும் சென்னைக்குச் சென்று, வருடத்திற்கு இரண்டு மூன்று மாதங்கள் தங்கியிருந்து, டிசம்பர் மாதம் நடைபெறும் சங்கீதவிழா உட்பட இன்னும் பல இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறேன்.

வீணை போன்ற வாத்தியத்தை இன்றும் உபயோகப்படுத்துவதைப் பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். பொதுவாக இது போன்ற பழங்கால வாத்தியங்களை அருங்காட்சியகத்தில் தான் காணமுடியும். அதிலும் தென்னிந்திய சரஸ்வதி வீணையைப் பார்ப்பது மிகவும் அரிது. நான் சமீபத்தில் கூட U.W. விஸ்கான்ஸின் மாணவர்களுக்கு ஸ்கைப்பின் மூலம் வீணை கற்றுக் கொடுத்தேன். கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல், வட அமெரிக்கர்கள், அந்த வகுப்பைக் கற்றுக் கொடுத்தேன் என்று சொல்வதற்குச் சற்றுப் பெருமையாக உள்ளது. என் குருநாதர்களிடமிருந்து நான் பயின்ற வித்தையை அடுத்த தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுத்து என்னாலியன்ற பணியைச் செய்வதாக ஒரு நிறைவு உள்ளது.

கேள்வி: படைப்பாற்றல் பற்றிப் பேசுகிறோம், உங்களின் தனித்துவத்தைப் படைப்பாற்றலில் எவ்வாறு காட்டுகிறீர்கள், அதனை எவ்வாறு மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்கள்?

பதில்: படைப்பாற்றல் என்பது கூடக் கற்றுக் கொடுத்து வருவதுதான் என்பது எனது கருத்து. எவ்வளவுதான் சொந்தமான கற்பனை வளம் இருந்தாலும்,  சில நியமங்களுக்கு உட்பட்டே அவற்றை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு நியமங்களை நன்கு தெரிந்திருத்தல் அவசியம். நமது சங்கீதத்தை மனோதர்ம சங்கீதம் என்று கூறுவர். இது மிகவும் கட்டுப்பாடான இலக்கணமுள்ளது. இந்த இலக்கணங்களை மீறாத படைப்பாற்றலே ரசிப்பதற்குரியதாக இருக்கும். நமக்கு இத்தனை முத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அவை அனைத்தையும் எப்படி அழகாகக் கோர்ப்பது என்பதே நமது படைப்பாற்றல். ஆனால் அப்படிக் கோர்க்கையில் கொடுக்கப்பட்ட தர்மங்களை மீறக் கூடாது. அப்படி மீறாமல், அதை எப்படி சொல்லிக் கொடுப்பது என்பதுதான் நமது தனித்தன்மை. இவை எல்லாவற்றையும் மீறி நமக்கும் மேலே கடவுள் என்றொருவர் உள்ளார், அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் கொடுக்கும் சக்தியே இந்த முத்துக்களைக் கோர்க்கும் தன்மையை நமக்கு வழங்குகிறது.

கேள்வி: நீங்கள் உள்ளூர்க் கோயில் பல பணிகளைச் செய்வதைப் பார்த்திருக்கிறோம். அதைப் பற்றிச் சற்றுச் சொல்ல முடியுமா?

பதில்: பணி என்று அப்படிப் பெரிதாக எதுவும் செய்வதில்லை. நம்மூரில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலின் சூழ்நிலையில் பல அழுத்தமான அதிர்வுகளை உணர முடிகிறது. அந்தக் கோயில் குருக்கள் பலரும் மந்திர உச்சாடனங்களையும், அதன் அதிர்வுகளையும் சொல்லிக் கொடுத்தனர். அதனாலே பல சுரங்களை நன்றாக அமைக்க முடிந்தது.  2015 ஆம் வருடம் கோடையில் நடைபெற இருக்கும் ஜகன்னாத ஸ்வாமியின் சன்னிதி மாற்றத்திற்கு ஹிந்துஸ்தானி இசையையும் சேர்த்து ஒரு நிகழ்ச்சி செய்து தர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளனர் குருக்கள். அதை எவ்வாறு செய்வதென்று திட்டமிட வேண்டும்.

நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என்பதை நான் மிகவும் உறுதியாக நம்புகிறேன். நம் அனைவருக்கும் ஏதோ ஒரு திறமை பரிசாக வழங்கப்பட்டுள்ளது, ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று. அந்தத் திறமை நம்மை மற்றவரை விட எந்த வகையிலும் பெரியவராக மாற்றவில்லை. இறைவனின் படைப்பில் அனைவரும் சமம், அனைவருக்கும் ஏதோவொரு திறமை ஒளிந்து கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதிலேயே வேறு படுகிறோம்.

கடவுள் மிகத் தாராளமாக இந்தப் பரிசை அளித்துள்ளார். பெற்றோர் இதனைப் பாதுகாத்து மேலும் வளர்ப்பதற்கான ஒரு மேடையை ஏற்படுத்திக் கொடுத்தனர். ஆசான்கள் அதனை வளர்த்து, நம்பிக்கையையும் ஊக்கத்தையும் கொடுத்து நான் இன்று இருக்கும் நிலைக்கு என்னைக் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அனேக கோடி நமஸ்காரங்கள்.

கேள்வி: கோயிலில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நீங்களும் பல நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுக்கின்றீர்கள். அதைப் பற்றி?

பதில்: கோயில் நிர்வாகிகள் எல்லாவிதமான கலைகளையும் ஆதரிக்கின்றனர். வட இந்தியா, தென் இந்தியா என்ற் எல்லாப் பகுதிகளையும் ஆதரிக்கின்றனர். கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, பரத நாட்டியம் என எல்லா நிகழ்வுகளும் நடக்கின்றன. அது ஒரு பொதுவான இடம். பொதுவான இடம், தனியாரால் நடத்தப்படுவது இல்லை என்பதால் தரம் குறைவானது என்ற முடிவுக்கு யாரும் வந்து விடக்கூடாது. ஆரம்ப காலங்களில், நான்கூட ஒலிப் பெருக்கி சரியாக வேலை செய்யவில்லை போன்ற குறைகளைக் கூறியுள்ளேன். ஆனால் அதுபோன்ற குறைகளை உடனடியாகச் சரி செய்கின்றனர் அமைப்பாளர்கள். பொதுமக்களால் மிகவும் தரமான முறையில் நடத்தப்பட்டு மிகக் குறைவான அமைப்புகளில் நம் கோயிலும் ஒன்று எனப் பெருமையாகக் கூறிக் கொள்ளலாம்.

கேள்வி: கோயிலின் நிதி நிலையை விரிவாக்குமுகமாக சில நிகழ்வுகளை நடத்த இருக்கிறீர்கள், அதுபற்றிச் சொல்லுங்கள்.

பதில்: யூத இனத்தவர் பொதுவாகப் பயணிப்பவர்கள். இஸ்ரேல் போன்ற நாடுகள் உருவாவதற்கு முன்னால், தங்களுக்கென்று ஒரு தேசமில்லாமல், மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல நாடுகளிலும் பயணித்திருந்தவர்கள் யூதர்கள். அவர்களின் இசைக்கும் நம் தென்னிந்திய இசைக்கும் பெருமளவு ஒற்றுமை இருக்கிறது. இந்த இசையில் பெயர் பெற்ற டேவிட் ஜார்டன் ஹேரிஸ் (David Jordan Harris) அவர்களையும் என்னையும் அழைத்து, செய்ண்ட் தாமஸ் பல்கலைக் கழகத்தில் இசை குறித்த சங்கமம் போன்ற நிகழ்ச்சி ஒன்றை அமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டனர். டேவிட்டும் நானும் கலந்தாலோசித்து, அதிசயங்களின் கீதம் (Song of Wonder) என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை வடிவமைத்து, கச்சேரியாக அரங்கேற்றினோம். அதன்பிறகு காலேஜ் ஆஃப் செய்ண்ட் பெனடிக்டிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். பிறகு இதே நிகழ்ச்சியைக் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி நமது கோயிலில் மிகவும் விமர்சையாக நடத்தினோம். இது இரவு உணவுடன் கூடிய நிகழ்ச்சி. நேராக இசை நிகழ்ச்சி, அதற்குப் பின்னர் கேள்வி பதில் என அமைத்தோம். எவ்வாறு இரு வேறுபட்ட கலாச்சாரத்தின் இசை ஒன்றாகப் பரிமளிக்கிறது என்பது குறித்துக் கேள்விகள் கேட்பதற்கு வசதியாகக் கேள்வி, பதில் நிகழ்ச்சியை அமைக்கிறோம்.

இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து மினசோட்டா மாநில அரசு மானியத்தை (Grant) வழங்கிக் கௌரவித்தது. இந்த வருடமும், அடுத்த வருடமும் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து இந்த நிகழ்ச்சியை நடத்தி இந்த இசையைப் பரப்ப இருக்கிறோம்.

nirmala_1_620x443கேள்வி: இந்தியாவிலும் விருதுகள் வாங்கியிருக்கிறீர்கள், அமெரிக்காவிலும் வாங்கியிருக்கிறீர்கள். இவற்றில் உங்களுக்கு மிகவும் மனதைத் தொட்ட விருது என்று எதனைச் சொல்வீர்கள்?

பதில்: இது மிகவும் கடினமான கேள்வி. ஒவ்வொரு விருதும் ஒவ்வொரு காரணங்களுக்காகக் கொடுக்கப்படுகிறது. அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து எது சிறப்பானது என்று கூறுவதென்பது இயலாத ஒன்று. எனது மனதிற்கு மிகவும் நெருங்கிய ஒன்று என்று கூற வேண்டுமென்றால் ஒன்றைச் சொல்லலாம். பலமுறை “சிறந்த சங்கீத நிகழ்ச்சி” என்ற விருதைப் பெற்றிருந்தாலும்,   எனது குரு திருமதி கற்பகம் சுவாமிநாதன் அவர்களின் முன்னிலையில், முதன்முதலாக மியூசிக் அகாடமியில் நான் வாங்கிய “சிறந்த சங்கீத நிகழ்ச்சி” விருதைச் சொல்லலாம். அந்த விழாவிற்கு எனது பெற்றோரும் வந்திருந்தனர்.

இரண்டாவதாக, கர்நாடக சங்கீதத்தின் சூப்பர் ஸ்டார் திரு. பால முரளி கிருஷ்ணா அவர்களின் கையால் வாங்கிய நாத கலா விபன்சி என்ற விருதைக் கூறலாம்.

கேள்வி: சாங்க் ஆஃப் வீணா என்றொரு ஆல்பம் சமீபத்தில் வெளியிட்டுள்ளீர்களே, அது போல வேறு ஆல்பம் வெளியிடும் திட்டமுள்ளதா?

பதில்: புதிதாக ஒரு ஆல்பம் செய்து கொண்டிருக்கிறேன். இது ஜனவரியில் வெளிவர உள்ளது இந்த ஆல்பம் சென்னையில் பதிவாகிறது. நமஸ்தே ஸ்லாஷே என்று இன்னொரு ஆல்பம் நவம்பர் 2013 ல் செய்தேன், இது முழுக்க முழுக்க வீணை மற்றும் செல்லோ (Cello) இசைக் கருவிகளைக் கொண்ட ஆல்பம். செல்லோ இசைக் கருவி வாசித்தது திரு. மிஷைல் கின்னி (Michelle Kinney), மிருதங்க வாத்தியம் திரு. தஞ்சாவூர் முருக பூபதி அவர்களாலும், டிரம்செட் திரு கிரஹாம் ஓப்ரைய்ன் (Graham O’brien) அவர்களாலும் வாசிக்கப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் செய்வதற்கான அழைப்புகள் வந்துள்ளன.

பின்குறிப்பு; இந்த பேட்டி பிரசுரமாகும் நிலையில் இந்த ஆல்பம் வெளிவருவது உறுதியானதால், திருமதி. நிர்மலா ராஜசேகரின் ஒப்புதலுடன் இதன் பெயரை வெளியிடுகிறோம். ஆல்பத்தின் பெயர் “சுதா சாகரா”, இதனை வெளியிடும் நிறுவனம் “சார்ஸூர் டிஜிடல் வொர்க் ஸ்டேஷன்” (Charsur digital work station).

கேள்வி: நீங்க ஐக்கிய நாடுகள் சபையில் (United Nations) இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளீர்கள், கார்னிகி ஹாலில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளீர்கள். ஒரு வித்தியாசமான அனுபவம் என்று எதனைக் கூறுவீர்கள்?

பதில்: கார்னிகி ஹால் நிகழ்ச்சியைச் சொல்வேன். மிகவும் அழகாக ஒருங்கிணைக்கப் பட்டிருந்தது. எங்களைக் கவனித்துக் கொள்ள என்று ஒருவர் நியமிக்கப் பட்டிருந்தார். பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அவரவர் அவரவரது நேரத்தில் வந்து அவர்களது இசையை நிகழ்த்தி முடித்துச் சென்றனர். எனக்கு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் கைகுலுக்கிப் பாராட்டும் வரையில் கார்னிகி ஹாலில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லை.

இந்த நேரத்தில் ஒரு பெருமைக்குரிய விருதைப் பற்றிக் கூறியாக வேண்டும். அமெரிக்காவில் பல வருடங்களாக நடந்து, பெரும்புகழ் பெற்ற க்ளீவ்லண்ட் (Cleveland) ஆராதனா விழாவில் கலந்து கொண்டிருக்கையில், மினசோட்டாவைச் சேர்ந்த இந்தியச் சங்கத்திலிருந்து ஒரு தொலைபேசிச் செய்து வந்தது. மினசோட்டா மாநிலத்தின், வருடா வருடம் வழங்கப்படும்

“வாழ்நாள் சாதனையாளர்” (Lifetime Achievement) விருது அந்த வருடம் எனக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தியே அது. இந்த விருது, மினசோட்டாவின் அப்போதைய கவர்னரான டிம் போலண்டி (Tim Pawlenty) அவர்களின் மனைவி திருமதி மேரி போலண்டி (Mary Pawlenty) அவர்களால் வழங்கப்பட்டது.

அவரவர்கள் என்னவெல்லாமோ சாதனை செய்திருக்கையில், பாட்டுச் சொல்லிக்கொடுக்கும் நமக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதா என்று அதிர்ச்சி தான் ஏற்பட்டது எனக்கு. இவையெல்லாம் இசைக்காகக் கிடைக்கும் விருதுகள். நான் ஒரு கருவியாக இடையில் நின்று பெற்றுக் கொள்கிறேன், அவ்வளவுதான்.

Nirmala3_920x250

கேள்வி: நிர்மலா ராஜசேகரின் மாணாக்கர்களைக் காட்டி, இவர்களெல்லாம் இங்கே பிறந்து, இங்கேயே வளர்ந்து வருபவர்கள். இவர்களுக்கு இவர்கள் நேரடியாகப் பார்த்தறியாத ஒரு கலாச்சாரத்தை, கலையைக் கற்றுக் கொடுப்பது எப்படி இருந்தது? அதிலிருக்கும் சவால் என்ன?

பதில்: உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், இவர்களே என் வாழ்வாதாரம். இவர்களின் ஆர்வமே என் தொடர்ந்த ஆர்வத்திற்குக் காரணம். நான், இந்தியர்களுக்குப் பிறந்த குழந்தைகள் என்று மட்டுமல்ல இந்த ஊர்க்காரர்களுக்கும் கூடக் கற்றுக் கொடுக்கிறேன்.

எனக்கு முதலாவதும், சிறப்பானதுமான மாணாக்கர்கள் என் குழந்தைகளே. என் மகன் நீரஜ் ராஜசேகர் மூன்று வயதாக் இருக்கையில் அமெரிக்காவில் குடிபுகுந்தோம். என் மகள் ஷ்ருதி ராஜசேகர் இங்கே பிறந்தவள். இவர்கள் இருவரும் இந்தக் கலாச்சாரத்தில் வளர்ந்தாலும், கர்நாடக இசையை ஈடுபாட்டுடன் கற்றுக் கொண்டு உயர முடிந்தது என்பது இங்கு வாழும் இந்தியக் குழந்தைகளுக்கு ஊக்கம் தரும் செய்தியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஷ்ருதி மூன்று வருடங்களுக்கு முன்னர் அரங்கேற்றம் செய்தவள், இப்பொழுது மூன்று மணி நேரம் தொடர்ந்து கச்சேரி செய்யுமளவுக்கு கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.

மேலும் பல மாணாக்கர்  இருக்கிறார்கள். இவர்களில் இருவர் ராச்செஸ்டர் (Rochester, MN) இருந்து வருகின்றனர், மேலும் இருவர் செய்ண்ட் கிளவுட் (St. Cloud, MN) இருந்து வருகின்றனர். (இந்த இரண்டு நகரங்களும், கிட்டத்தட்ட 70 மைல்கள் தொலைவில் உள்ளது.). அவ்வளவு தூரம் காரில் பயணித்து, இங்கு வந்து வீணையையும் வாய்ப்பாட்டையும் கற்றுக் கொள்வதே அவர்களின் ஆர்வத்தைக் காட்டுகிறது. (இதனைக் கூறிய பின்னர் அவரின் மாணவிகளில் ஒருவரான பதின்பருவப் பெண் தனது அனுபவங்களை, அழகான தமிழில் பகிர்ந்து கொண்டார்.)

மினசோட்டாவிற்கு வருகை தரும் புகழ் பெற்ற கலைஞர்கள் அனைவரையும்  எனது மாணாக்கர்கள் சந்திப்பதற்கான முயற்சிகளைச் செய்ய நான் தவறுவதில்லை. அவர்களும் தங்களாலான அளவில் மாணாக்கர்களுக்குப் பயிற்சியோ, கருத்துக்களையோ தருவதிலும் தவறுவதில்லை. அவ்வாறு வந்து சென்றவர்களில் புகழ் பெற்ற சங்கீத கலாநிதி திரு. டி.வி. சங்கரநாராயணன், புல்லாங்குழல் வித்வான் திரு. ஷஷாங்க், திரு. விஜய் சிவா. திருமதி. காயத்ரி வெங்கட்ராகவன் மற்றும் பல மேதைகளும் அடக்கம். தஞ்சாவூர் முருக பூபதி அண்ணா எங்களுக்காக, கடந்த மூன்று ஆண்டுகளாக அளவிடற்கரிய பயிற்சிகளை அளித்துள்ளார்.

கேள்வி: பல விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள், குடும்பத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். இவை எல்லாவற்றிகும் நேரம் எப்படிக் கிடைக்கிறது?

பதில்: நேரத்தைச் சரியாகச் செலவிடுவது என்பது எனக்குக் கைவந்த கலையல்ல. என்னைச் சுற்றி உள்ள எல்லோரும் எனக்கு எல்லா விதங்களிலும் உதவி செய்கின்றனர். எனது பெற்றோர் தொடங்கி, கணவர் தொடர்ந்து, பிள்ளைகள் மற்றும் மாணாக்கர்கள் உட்பட அனைவரும் என்னிடம் மிகவும் கனிவுடனும் உதவிகரமாகவும் உள்ளனர். எனது கணவர் ராஜசேகர் பிலானியில் படிக்கையில் ஹிந்துஸ்தானி இசையில் மிகவும் தேர்ந்தவர். திருமணம் ஆன புதிதில், அவர் ஹிந்துஸ்தானி இசையின் பெருமைகளைப் பேசப் பேச, இவரை எப்படியாவது கர்நாடக சங்கீதத்திற்கு இழுத்தாக வேண்டுமேன நினைக்கத் தொடங்கினேன் (பலத்த சிரிப்பு). ஹிந்துஸ்தானி இசையும் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனாலும் கர்நாடக இசையில் ஊறிப்போன எனக்கு, கர்நாடக இசைமீது இவ்வளவு வெறியுள்ளது என்பது என் கணவருக்கு அப்போது அவ்வளவாகத் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அவர் எனக்கு மிகப் பெரிய அளவு ஆதரவு கொடுப்பதால்தான் என்னால் இசைக்காக இவ்வளவு நேரம் செலவிட முடிகிறது.

தவிர, என் குழந்தைகளின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் குறிப்பிட்டாக வேண்டும். என் வீட்டிற்கு எப்பொழுதும் பலர் விஜயம் செய்த வண்ணம் இருப்பர். அதற்கு மத்தியில், எல்லாவற்றையும் அனுசரித்து வீட்டு வேலைகளையும், தங்களின் படிப்பு முதலான வேலைகளையும் அவர்கள் தாங்களாகவே செவ்வனே கவனித்துக் கொள்வதால், என்னால் இசையில் இந்த அளவு கவனம் செலுத்த முடிகிறது.

கேள்வி: எதிர்காலத் திட்டம்?

பதில்: ஒரு சின்ன ஆசை மட்டும்தான். வீணை என்ற வார்த்தையும், கர்நாடக இசை என்ற வார்த்தையும் உலகின் ஒவ்வொருவரின் வாயிலும் ஒலிக்க வேண்டுமென்பதே எனது ஆசை. பண்டிட் ரவிசங்கர்ஜி பெருமளவுக்கு இதற்கான பணிகளைச் செய்துள்ளார். அதற்கு அருகில்கூட என்னால் வரமுடியுமா என்று தெரியவில்லை. மினசோட்டா மாகாணத்தில் தொடங்கி, அமெரிக்கா தொடர்ந்து உலகம் முழுவதும் இது ஒலிக்க வேண்டுமென்பது மட்டுமே எனக்கு ஆசை.

அனைவருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், நாம் ஒரு மிகச் சிறந்த கலாச்சாரத்திலிருந்து வந்துள்ளோம், அது குறித்த பெருமிதம் கொண்டவர்களாக விளங்க வேண்டுமென்பதே.

உங்களுக்கு நன்றி. உங்கள் வாசகர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

கேள்விகள்: பிரபு ராவ்

தொகுப்பு. வெ. மதுசூதனன்.

Comments (4)

Trackback URL | Comments RSS Feed

  1. Krishnamurthy says:

    Super Prabu. Madhu Missing :-)….????

  2. kannan iyer says:

    great nimala rajshakar towards music.she will get all.we pray to gt all in hr life to go up and up till no nd…..

  3. senthil says:

    Very nice know about her.Thanks panippookal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad