\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-12

pulampeyarthar_620x960(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-11)

சமூக விரோதச் செயல்

சமூகம் மீது பிடிப்பில்லாத சுயநலப் போக்கின் விளைவாக, பிறர்மீது கரிசனை, பற்று என்பன இல்லாதுபோக தன்னைத்தானே சீரழித்துத் தன் சமூகத்துக்கும் சீரழிவை ஏற்படுத்தும் வன்முறைகளில் புலம்பெயர்ந்தோரில் சிலர் செயற்பட்டு வருவதனையும், வெளிநாடுகளில் குழுக்களாகச் சேர்ந்து சீட்டாட்டம், போதைப் பொருள் கடத்தல், குடி, குழு மோதல்களில் ஈடுபட்டுச் சீரழிவதையும் சில கவிதைகள் கூறுகின்றன. மைத்திரேயி எழுதிய ‘ஊரிலிருந்து ஒரு கடிதம்’ என்ற கவிதையில் வரும்;

“ஊடறுக்கும் குளிரில்

வசந்தத்தை எதிர்பார்த்து

வெளிநாட்டு வாழ்வில் அள்ளுண்டு

சீட்டாட்டம், ஏமாற்று

போதைப்பொருள் கடத்தல்

பல்வேறாய்ப் பிளவுண்ட

குழு மோதல்கள், குடி

மேற்குலக  யாத்திரிகத்தின் விசுவரூபம்….”1

என்ற வரிகளில் தேடிச் சென்ற வசந்தத்தைத் தொலைத்து இளைஞர்களிடையே விஸ்வரூபமெடுக்கும் வன்முறை பற்றி அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

திருமாவளவன் எழுதிய ‘மனிதர் காட்சிச்சாலை’ என்ற கவிதை வரிகள்;  அகதியாகப் பல நாடுகளுக்கும் சென்ற பலர் தமது இருப்பை உறுதி செய்த பின்னர், நிலையாகக் காலூன்றி விட்டோம் என்ற துணிவில் தமது சுயரூபங்களை வெளிப்படுத்தத் தலைப்பட்ட விதத்தினைத் தெளிவுப்படுத்தியுள்ளது.

“படர்ந்தோம்

புலம்பெயர்ந்து

உலகின் திசைகள் பதினாறிலும்

மனிதர் கனத்துச்

சமநிலை கெட்டது உலகு

மாற்றிய முகங்களைப்

பிடுங்கி எறிந்தோம்

மீளத் தோன்றியது இயல்பு

பிறகென்ன கூட்டம் கொண்டாட்டம்

குழிபறிப்புக் குழையடிப்பு

கோவில் சடங்கு – சங்காரம்

சந்திச் சண்டித்தனம்

குரங்காட்டம் கரடிவித்தை

எல்லாம்………………..”2

புலம்பெயர்ந்த நாடுகளிலும் சாதிச் சண்டை, கட்சிச் சண்டை, கோஷ்டி மோதல் முதலானவையும்; மற்றவர் மீது வன்மங்களைத் தீர்த்துக் கொள்ளல், பழிக்குப் பழிவாங்கல், கத்தி, பொல்லு, துப்பாக்கி முதலிய ஆயுதங்களின் மூலம் பழிவாங்கல் முதலியன சாதாரண  நிகழ்வாகி விட்டதை இயல்பான நடையில் சொல்கிறது கவிதை.

அடிக்குறிப்புகள்

  1.    திருநாவுக்கரசு.ப, (தொ.ஆ), புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்.50
  2.    மேலது, பக்.129-130

-தியா-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad