\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கடவுளுமில்லை… கர்மமுமில்லை..

Filed in இலக்கியம், கதை by on March 30, 2015 0 Comments

higgs_boson‘கடவுள் இல்லைன்னு இப்ப சொல்லு பாக்கலாம் ..’ அவன் பேசிய பாஷை புரியாவிடினும் இதைத்தான் சொல்கிறான் என்று ஊகிப்பதற்குள், கைத்துப்பாக்கியின் பின்புறத்தால் தலையைக் குறி வைத்து அடித்தான் அவன். அவனது கை பின்னுக்குப் போன வேகத்தில் முகத்தை லேசாகத் திருப்பினார் தீனா. தலையைக் குறி வைத்த அந்த அடி சற்றுக் கீழிறங்கி நெற்றிப் பொட்டுக்கும் கண்ணுக்கும் இடையில் கிழித்துக் கொண்டு சென்றது. இருட்டிக் கொண்டு வந்தது தீனாவுக்கு. ஏதோ சொல்ல முனைவது தெரிந்தது. முடியவில்லை அவரால். கையால் ஏதோ சைகை காண்பிக்க முனைந்தார். அவர் ஏதோ தவறாகச் சொல்ல வருகிறார் என்று நினைத்த மற்றொருவன் புரியாத ஏதோ ஒரு மொழியில் திட்டியவாறு விலாவில் எட்டி உதைத்தான். கையால் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சுருண்டு போனார் தீனா. அவரது நரைத்துப் போன தலைமுடியைப் பிடித்திழுத்து நிமிர்த்தி முகத்தில் எதாலோ குத்தினான் இன்னொருவன். ‘ப்ளக்’ என ரத்தம் கொட்டியது. வாய் முழுதும் கசப்பாக இருந்தது. துப்பினார். வாயிலிருந்து எச்சிலும் ரத்தமும் கலந்து  ஒழுகியது. கண்களைத் திறந்து பார்க்க முயன்றார். இடது கண் விண்ணென்று வலித்தது. மிகக் குறுகிய அளவே திறக்க முடிந்தது. கைகளால் தொட்டுப் பார்த்தார். பெரிய அளவில் பஞ்சை வைத்துக் கட்டியது போல வீங்கியிருந்தது. எதிரில் யாரோ நிற்பது மங்கலாகத் தெரிந்தது அவருக்கு. தண்ணீர் கேட்டுச் சைகை காண்பித்தார். மங்கலாகத் தெரிந்த அந்த உருவம் தன்னை நோக்கி வருவதை அவர் உணர்வதற்குள் அடி வயிற்றில் பூட்ஸ் காலால் இன்னொரு அடி இறங்கியது.  நிலைகுலைந்து போனார். தரையில் இழுத்துச் செல்லப்படுவது மட்டும் புரிந்தது அவருக்கு.

தீனதயாள் வைத்யநாதன் – ரூர்கி ஐ.ஐ.டி.ல் நியூக்ளியர் ஃபிஸிக்ஸ்,  ஸ்டான்ஃபோர்டில் டாக்டரேட் இத்யாதிகளை முடித்து விட்டுச் சமீப காலங்களாக இலினாயில் ஃபெர்மி லாபில், பார்டிக்கில் ஃபிஸிக்ஸ் ரிசர்ச் சயின்டிஸ்ட். சிகாகோவின் மத்தியில், மிலேனியம் பார்க்கில் பல மில்லியன்களைக் கொட்டி வீட்டை வாங்கியிருந்தாலும் அதில் தங்க நேரமின்றி அலைந்து கொண்டிருப்பவர். இரண்டு முறை நோபல் பரிசுக்காகக் கூட அவரது பெயர் அடிபட்டது. பன்னிரண்டு வருடங்களுக்கு மேல் அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தவர், இருபதாண்டுகளுக்கு முன் பார்டிக்கில் ஃபிஸிக்ஸில் தீவிரம் காட்டத் துவங்கினார். எடின்பர்க்கில் ஹிக்ஸ் பாசன் ஆராய்ச்சில் பெரும் பங்காற்றியவர். ஒரு மாதத்துக்கு முன்னர் தான் பிள்ளைகள் கேட்டுக் கொண்டதன் பேரில் ஆறு மாதங்கள்  குடும்பத்துடன் செலவிட ஒத்துக் கொண்டு சிகாகோ வந்திருந்தார்.

குடும்பத்துடன் ஒரு வாரம் பஹாமாஸ் க்ரூஸ் போய் வந்தது, பழைய நண்பர்களைச் சந்தித்தது. வீட்டிலிருந்து அரை மைல் தூரம் கூட இல்லாத நேவி பியருக்கு முதல் முறையாகப் போய் வந்தது எல்லாம் இந்த ஒரு மாதத்தில் தான். இது தான் சமயம் என்று அவரது மனைவி பரிமளம் பல முறை கேட்டும் நிறைவேறாது போன தனது ஆசையை மீண்டும் முயன்றார்.

“நீங்க இந்த மாதிரி எங்களோட டைம் ஸ்பெண்ட் பண்றது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?”

“நான் எங்க போனாலும் தான் கூட்டிட்டுப் போறேனே உன்னை, அப்புறம் என்ன?”

“இருந்தாலும் இந்த மாதிரி சொந்த ஊரில, பிள்ளைங்களோட இருக்கிறது தனி சுகம் தானே …”

“ம்..ம்.. ஐ நோ.. முடிஞ்சளவுக்கு எஞ்சாய் பண்ணிக்கோ .. மூணு மாசத்தில ஆஸ்பென் போகணும் .. திரும்ப வரதுக்கு வருஷக் கணக்கானாலும் ஆகும்..”

“எனக்கு இந்தியாவுக்கு போயிட்டு வரணும்னு ஆசையா இருக்கு …”

“போயிட்டு வாயேன் .. ஏதோ புதுசாப் போற மாதிரி கேக்கிற… அதான் நாலு மாசத்துக்கு ஒரு தடவை ஏதாவது சாக்கை வைச்சு கிளம்பிடுவியே..”

“தனியாப் போறதுக்கு நான் எதுக்கு உங்க கிட்ட கேக்கறேன்.. நாம ரெண்டு பெரும் சேர்ந்து போகணும்னு ஆசையா இருக்கு ..”

“ஒகே .. ஒகே .. நான்… ஒரு வாரம், பத்து நாளுக்குள்ள திரும்பிடலாமில்ல?  ”

சற்றும் யோசிக்காமல் தீனா ஒப்புக் கொண்டது அவருக்கு ஆச்சரியமளித்தது. ஐ.ஐ.டி. ரூர்கி நிர்வாகம் ஆண்டுக்கணக்கில் நச்சரித்து வரும் அலும்னி கூட்டமும் அதற்கு ஒரு காரணம் என்று பரிமளம் அறிந்திருக்கவில்லை.

கூட்டத்துக்கு முதல் நாளே உத்தரகாண்ட் போய்விட்டார் தீனா. அவர் முதல் நாள் அங்கு வந்தது ஒருவருக்கும் தெரியாது. தனது கல்லூரி நாட்களை மனதில் அசை போட அவருக்குத் தனிமை தேவையாயிருந்தது. மனைவி பரிமளாவைக் கூட அழைத்து வரவில்லை. அவருக்கு சீனியராக இருந்து இன்னும் அங்கேயே பேராசிரியராகப் பணிபுரியும் ஸ்ரீவத்சவாவுக்கு மட்டும் இரவு வந்து சந்திப்பதாகச் சொல்லியிருந்தார். தான் தங்கியிருந்த ஹோட்டலில் வண்டி ஏற்பாடு செய்து கொண்டு நகரை வலம் வந்தார்.

காற்றில் இனம் புரியாத ஒரு வாசம் இருந்தது. உத்தராஞ்சல் – உத்தரகாண்ட் என்று மாறியதை எதிர்ப்பவர் அவர் – நல்ல மாநிலம். ஹிமாலயாஸ், கங்கை, அடர்ந்த காடுகள் என இயற்கை நிரம்பியிருக்கும். ‘லாண்ட் ஆஃப் ஹெவன்ஸ்’ என்று பெயர் வைத்திருக்க வேண்டும் இந்த மாநிலத்துக்கு. ‘லாண்ட் ஆஃப் காட்ஸ்’ என்று யாராவது சொல்வதைக் கேட்டால் அவருக்கு பற்றிக் கொண்டு வரும். என்ன ஒரு அபத்தம் இது. நதிகள், காடுகள், மலைகள், வயல்கள் என எல்லாவற்றையும் இணைத்து எவ்வளவு அழகான அமைப்பை இயற்கையளித்துள்ளது. அதை கேவலப்படுத்தி நகரில் திரும்பிய இடமெல்லாம் கோபுரம் கட்டி, காவி பூசி, மலைகளில் மிருகங்களை அச்சுறுத்தும் வகையில் தாடி மீசை வளர்த்து முகம், உடம்பு எல்லாம் சாம்பல் பூசி அமர்ந்துக் கொண்டு, புண்ணியம் தேடுகிறேன் பேர்வழி என்று நதியில் பிணத்தை மிதக்க விட்டு, போதை ஏற்றிக் கொண்டு, ‘கேனிபல்ஸ்’ நாட்களிலேயே தங்கி .. இம்சை.

“வாழ்க்கை எப்படி இருக்கு இப்போ ஹரித்வார்ல” அரைகுறை ஹிந்தியில் கேட்டார் ட்ரைவரிடம்.

“கடவுள் புண்ணியத்திலே நல்லா ஓடிக்கிட்டிருக்கு சார் .. பிசினஸா சார்.. இல்லை டெத் எதாவதா?”

“இல்லை இங்க ஒரு மீட்டிங் இருக்கு ..”

“ஐ.ஐ.டி. சமாச்சாரமா.. மானஸா தேவி மந்திர் போலாமா சார்.. உள்ள போய் உக்காந்திங்கன்னா மனசு அமைதியாயிரும்.. சொர்க்கத்துக்கு போய் வந்த மாதிரி இருக்கும் .. மீட்டிங் ஈசியா ஜெயிச்சிடலாம்.. “

“ஹ..ஹ.. ஹ.. நீ சொல்றத பார்த்தா நீ நிறைய தடவை சொர்க்கத்துக்கு போய் வந்திருப்ப போலிருக்கு … போற இடத்திலேயெல்லாம் மானஸா தேவியைத் தேடிட்டிருக்க முடியாது பாரு.. நான் சொர்க்கத்துக்குப் போய் வர வேற சமாச்சாரம் வெச்சிருக்கேன் ..”

அரைகுறை ஹிந்தியில் அவர் சொன்னது அவனுக்குப் புரியவில்லை.

“ஓ.. விவேகி ஆளா சார் நீங்க?”

“இல்லை அக்னாஸ்டிக் ..”

“புரிலே சார்”

“உணரும் வரை நம்பாதவன் ..”

“ரைட்டு, அப்படியே இருந்துட்டுப் போங்க சார்.. இப்போ எங்க போவணும் உங்களுக்கு”

“கேஞ்சஸ் வெட்லாண்ட்ஸுக்குப் போ ..”

நதியோரம் இறங்கி நடந்தார். மஞ்சள் விளக்கொளியில் அந்த நதிக்கரை தங்க நிறத்தில், சில்லென்று காற்றுடன் மிக ரம்மியமாக இருந்தது.. கரையோரத்தில் ஆங்காங்கே சில படகுகள் கட்டப்பட்டிருந்தன .. அரை மைல் தூரம் நடந்திருப்பார் … காசிக்குப் போக நேரமில்லாத அல்லது பணவசதியில்லாத கூட்டமொன்று யாருடைய ஆன்மாவுக்கோ விளக்கேற்றி, ஊதுவத்தி கொளுத்தி, பூக்களையும் சாப்பாட்டையும் நதியில் எறிந்து கொண்டிருந்தது. என்ன ஜனங்கள் இவர்கள்.. வாட்டர் கண்டாமினேஷன் பத்தி அறிவார்களா இவர்கள்? அமெரிக்காவாக இருந்தால் இவர்களைக் கைது பண்ணியிருப்பார்கள். மேலும் அங்கிருக்கப் பிடிக்காமல் காரிலேறி ஹோட்டலுக்கு வந்தார்.

மறுநாள் ஐ.ஐ.டி.க்கு நுழையும் போது தான் அந்த டிரைவருக்கு இவர் எதோ பெரிய ஆளு போலவென்று தெரிந்தது. நிறைய மாணவர்கள் அவரை ஃபோட்டோ எடுப்பதாக நினைத்து அவருடைய காரைக் கிளிக்கித் தள்ளினார்கள். வாசலில் பெருங்கூட்டம்.. ஸ்ரீவத்ஸவா மாலையுடன் காத்திருந்தார். கூடவே தொப்புளுக்குக் கீழே புடவையணிந்த ஒருத்தி கையில் ஒரு பூச்செண்டைக் கொடுத்தாள். ‘இது ரூபா சிங்கால் .. ஃபிஸிக்ஸ் டிபார்ட்மெண்ட் ஹெட்..’ கைகூப்பினாள் அவள்.

அரங்கில் ஏறக்குறைய முன்னூறுக்கும் அதிகமான மாணவர்கள் இருந்தனர். நிறைய பேனர்கள் – சிலதில் அவர் பெயரும், ஆய்வுகளும் தவறாக எழுதப்பட்டிருந்தன. தீனாவுக்கு முப்பதைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏதோவொரு மூலையில் அமர்ந்திருந்து யாரோவொருவர் பேசுவதைத் தூக்கத்தின் நடுவே, எப்போது முடிப்பார் இவர் என்ற வேதனையுடன் கேட்டது ஞாபகம் வந்தது. பத்து நிமிடங்களுக்கு மேல் பேசக் கூடாது என்று நினைத்துக் கொண்டார்.

ரூபா எழுந்து பேசினாள்.. “மாணவர்களே இன்று நமக்கு அதிர்ஷ்டமான நாள்..  உலகமே ஆர்வத்துடன் எதிர்நோக்கி வியந்து கொண்டிருக்கும் ‘கடவுள் துகள்’ ஆராய்ச்சியில் ஒருவரான, நமது கல்லூரி முன்னாள் மாணவரான டாக்டர். ‘தீன்தயால்’ வைத்யா  நமக்காகத் தனது பொன்னான நேரத்தை ஒதுக்கி இங்கு வந்திருக்கிறார். அவரது பேச்சைக் கேட்க உங்களைப் போலவே நானும் வெகு ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறேன்.. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் கலந்துக் கொள்ளும் ஒரு கலந்துரையாடலும் உள்ளது. உங்களது அறிவுபூர்வமான கேள்விகளை அதுவரை சேமித்து வையுங்கள்”. கைத்தட்டல் அறை முழுதும் நிரம்பி எதிரொலித்தது.

திரும்பி ஸ்ரீவத்சவாவைப் பார்த்தார் தீனா. “பத்திரிகையாளர், பொதுமக்கள் சந்திப்பைக் கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாமல் போய்விட்டது .. அதிக நேரமாகாது… அரை மணி நேரம் தான் கண்டிப்பாகச் சொல்லி விட்டேன் ..”

சின்னச் செருமலுடன் பேச்சைத் துவங்கிய தீனா பெரிய பெரிய கனவுகளுடன் காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களை வாழ்த்தினார். குறிப்பாக அவர்கள் ஃபிஸிக்ஸில் ஆர்வம் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டி வியந்தார். தனது பள்ளி நாட்களில் சாக்பீஸை மிகப் பொடியாக உதிர்த்து அதில் என்ன உள்ளது என்பதை, கைராசி பார்ப்பதற்காகத் தனது தாத்தா வைத்திருந்த பூதக்கண்ணாடி வழியே பார்த்தறிய முற்பட்டதைக் கிண்டலாகக் குறிப்பிட்டார். பின்னர் ரூர்கி, ஸ்டான்ஃபோர்டில் தான் கற்றதை உரைத்து அவ்வாழ்வின் ஒவ்வொரு நாளும் தனக்கு இன்றும் படிப்பினை அளித்துக் கொண்டிருப்பதைச் சொன்னார். ‘ஹிக்ஸ் பாசன்’ வெற்றிட ஆய்வைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிட்டுப் பேசி, அதன் முழு வடிவத்திற்கான விடை காண இந்த மாணவர்களில் பலர் ஈடுபடுவார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். கேள்விகள் மட்டுமே வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் வாகனம், கேள்வி கேட்பதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள் என்று சொல்லித் தனது உரையை முடித்தார். மீண்டும் கைத்தட்டல் அரங்கத்தை நிரப்பியது. அடுத்த ஐந்து பத்து நிமிடங்களில் அறைக்குள் பத்திரிகையாளர், பொதுமக்கள் என்று சொல்லிக் கொண்டு ஐம்பது, ஐம்பத்தைந்து பேர் நுழைந்தனர். காவி உடையணிந்த சிலரும் அவற்றில் இருந்தனர்.

‘இவர்களுக்கும் ஃபிஸிக்ஸுக்கும் என்ன சம்பந்தம்’

“சும்மா வந்திருப்பார்கள்” என்றார் ஸ்ரீவத்சவா.

கேள்வி பதில் பகுதி துவங்கியது.

‘எலக்ட்ரான் புரோட்டான் இவை இரண்டும் ஹிக்ஸ் பார்ட்டிகலுடன் மாறுபடுவது ஏன்?’

“ஹிக்ஸ் பீல்டுடன் உராய்வதில் புரோட்டான் ஒரு பனிச்சறுக்கு வீரனைப் போல வழுக்கிக் கொண்டு செல்கிறது .. புரோட்டான் சாதாரண பூட்ஸுடன் ஒருவர் பணியில் நடந்து செல்வதைப் போன்றது. அவை இரண்டும் மாஸ் – அடர்த்தியைப் பெறும் விதம் மாறுபடுகிறது.. ஒரு கிரிக்கெட் பந்தை எளிதில் தூக்கி எறிய முடிகிறது.. அதே ஒரு ஷாட் புட் பந்தைப் போட அதிக எனர்ஜி தேவைப்படுகிறது.. இதைக் கனம் என்று தவறாகச் சொல்லி வந்தோம் ..உண்மையில் அது வெற்றிடத்தின் அடர்த்தித் தன்மையைப் பொறுத்தது.”

“ஸ்விட்சர்லாந்தில் நீங்கள் மேற்கொண்ட ஆய்வில் புரிந்துக் கொண்டது என்ன?”

“ஜெனிவாவில் நடந்த ஆராய்ச்சியில் பிக் பேங் தியரியை சிமுலேட் செய்து பார்த்தோம். அணுக்களை இணைக்கும் மொலாசிஸில் பன்னிரெண்டாவது துகள் எதுவாக இருக்கும் என்று ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது.. அதைத் தான் ஹிக்ஸ் பாசன் என்று குறிப்பிடுகிறோம்.”

“அந்த பன்னிரெண்டாவது பொருள் தான் கடவுளா?” பொது மக்களில் ஒருவர் கேட்டார்.

“அந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு ப்ரோட்டான், எலெக்ட்ரான், நியுட்ரான் என்பது போல .. லைக் பாசிட்ட்ரான்னு போல ஏதாவது ஒரு பேரு இருக்கலாம்”

“கடவுளுக்கு பேரு வைக்க நீ யார் ..” காவி உடை ஆசாமி கேட்டார். ஸ்ரீவத்சவாவைப் பார்த்தார் தீனா. அவர் கையைப் பிசைந்தார்.

“ப்ளீஸ் .. கடவுளுக்கும் இந்த கண்டு பிடிப்புக்கும் சம்பந்தமில்லை .. இது அறிவியல்.. இங்கு கடவுளுக்கு இடமில்லை”

“அதைக் கண்டு பிடிக்க முடியாததால தானே கடவுள் துகள்னு சொல்றீங்க?”

“மறுபடியும் சொல்றேன்.. நான் இங்கு கடவுளைப் பத்தி பேச வரவில்லை .. இதிலே கடவுள் இல்லை”

“இந்தப் பொருளில் உலகத்தை அழிக்கக் கூடிய சக்தி இருக்கிறதால தானே கடவுள்னு ஒத்துக்கறீங்க ..”

“நீங்க எல்லாரும் தப்பாப் புரிஞ்சிகிட்டிருக்கீங்க… லியான் லெட்டர்மன் ‘வாட் இஸ் திஸ் காட் டாம் பார்டிகில்னு’ தான் புத்தகத்துக்கு பேரு வைச்சாரு.. அந்தப் பேரிலே பப்ளிஷ் பண்ணா பிரச்சனை வரும்ன்றதால ‘வாட் இஸ் திஸ் காட் பார்டிகில்’னு அவங்க மாத்திட்டாங்க.. ஃபிஸிஸிஸ்ட் நாங்க உணரக்கூடிய பொருட்களைத் தான் நாங்க தேடிக்கிட்டிருக்கோம்.”

“கடவுளை உணர முடியும் உனக்குத் தெரியுமா?”

“ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்குங்க .. நான் ஃபிஸிஸிஸ்ட்.. .. கடவுளை நான் உணர்ந்ததில்லை ..அதனால் அது இல்லை என்பது எனது கருத்து.. உணர முடிந்தால் நம்புவேன் .. இதுவரை நடந்த ஆராய்ச்சிலே ஒரு பொருளைக் கண்டுபிடிக்க முடியுங்கிற அடிப்படையிலே முயற்சி செய்துகிட்டிருக்கோம் ..மத்தபடி இந்த ஆய்விலே கடவுளுமில்ல .. கர்மமுமில்ல .. நோ மோர் கொஸ்டின்ஸ் ப்ளீஸ்” நகர்ந்து விட்டார் தீனா. அரங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

மாலை நாலரை மணிக்கு ஹோட்டலை விட்டுக் கிளம்பி டேராடூன் ஜாலி கிராண்ட் ஏர்போட்டுக்குப் போய்க் கொண்டிருந்த போது தான் அது நடந்தது. புறநகர்ப் பகுதியில் வண்டி போய்க் கொண்டிருந்தபோது சடாரென அவர்களது காரை உரசிக் கொண்டு சென்ற கார், இவர்களை முந்திச் சென்று குறுக்கே நின்றது. என்னவென்று உணர்வதற்குள் தலை முண்டாசை இழுத்து முகத்துக்குக் குறுக்கே கட்டி மூவர் இறங்கி ஓடி வந்தார்கள். டிரைவர் நடப்பது புரியாமல் கண்ணாடியை இறக்க முனைந்த போது ஒருவன் டிரைவரை வெளியே இழுத்துப்போட்டு கையிலிருந்த பொருளால் முகத்தில் அடித்தான். மற்றொருவன் பின் கதவைத் திறந்து தீனாவை வெளியே இழுத்தான் அவர் கையிலிருந்த செல்ஃபோனை இயக்குவதற்குள் டேசர் போன்ற கருவியை அவரது கழுத்தில் வைத்தான். உடலில் மின்சாரம் இறங்குவதை உணரத் தொடங்கியதும் நினைவிழந்தார் தீனா.

தவு திறக்கும் சத்தம் கேட்டதும்தான், தான்  இன்னும் உயிரோடு இருப்பதை உணர்ந்தார் தீனா. சுளீரென வெயிலடித்தது.  கண்ணைத் திறக்க முடியவில்லை. அதுவும் இடது கண் வழியே ஒரு நூலிழை மட்டுமே பார்க்க முடிந்தது.

“என்ன கடவுள் தெரியுதா இல்லை  பாசிட்ரான் தெரியுதா இப்போ மூளையிலே ..திபலஹு” முட்டியில் உதைத்தான்.. கடைசிச் சொல் அராபிய வாசனையைக் காட்டியது. “சொல்லு நாயே ..”

முக்கி முனகி கையை மட்டும் தூக்கிப் புரியவில்லை என்று சைகை காண்பித்தார்.

“உன்னை மாதிரி பரதேசிங்களுக்கு கடவுள் தெரிய மாட்டார் .. நீ சாத்தானோடவே இருந்துட்டுப் போ அதைப் பத்தி எங்களுக்குக் கவலையில்லை .. ஆனா அறிவியல்ன்ற பேர்ல அடுத்தவங்களைக் கெடுக்காதே..” இன்னொருவன் சொன்னான்.

“சாத்தானுடைய பிள்ளைகளைத் தான் அமெரிக்காவுக்கு ரொம்ப பிடிக்குமே.. எங்க கிட்ட நீ சிக்கின அடுத்த நிமிஷம் அவனுங்களுக்கு மூக்கிலே வேர்த்துடுச்சு .. மூணு நாளா உன்னை உங்க ஊர்க்காரங்க தேடிக்கிட்டிருக்காங்க .. அவங்களுக்கு உன்னைத் துண்டு துண்டா அனுப்பப் போறோம்… நீயே சொல்லு உனக்கு எந்தப் பாகம் வேண்டாம்னு சொல்லு, அதை வெட்டி அவனுங்க மூஞ்சியிலேயே தூக்கியடிக்கலாம்..”

“வெட்டலாமா .. ஒடைக்கலாமா?”

“கேமரா ரெடியா?” முகத்தின் குறுக்கே துணியைக் கட்டிக் கொண்டே கேட்டான் ஒருவன்.

“ரெடி ..”

வேண்டுமென்றே குரலை ஜெர்மானியன் போல் மாற்றிக் கொண்டு வீடியோவில் பேசினான் ஒருவன். ஏதேதோ பேசி விட்டுப் பாக்கு வெட்டும் கருவியைப் போல ஒன்றை எடுத்துக் கொண்டு தீனாவை நெருங்கினான் ஒருவன். மற்றொருவன் வாயில் துணியைச் சுருட்டி அடைத்தான். குமட்டிக் கொண்டு வந்தது. என்ன செய்யப் போகிறான் என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவருக்குச் சாகப் போகிறோம் என்று தோன்றியது. மனதில் ஏதோ ஒரு குரல் கேட்டது. வாயைத் திறக்க முடியவில்லை.

விரலைப் பிடித்தான் ஒருவன்.. தீனாவின் முகத்தில் அவன் விரலைப் பிடித்ததில் வலி தெரிந்தது. விரலை வெட்டப் போகிறார்களா?

டம..டமவென துப்பாக்கிச் சத்தம் கேட்டது.. முகத்தை மூடிக் கொண்டிருந்த இருவரும் குண்டடிப் பட்டுச் சாய்ந்தனர். சரேலென இராணுவ உடையில் துப்பாக்கியேந்திய ஒருவன் உள்ளே நுழைந்தான்…”ஹே கூல் கூல்.. யு.எஸ். மிலிட்டரி  ..ஐ அம் ஹியர் டு சேவ் யூ.” கழுத்தில் தொங்கிய நேம் டேக்கைக் காண்பித்தான் Jesus Fabela என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்து.

– மர்மயோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad