தமிழனென்று சொல்லடா – கவிமணி
”தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற பாரதியின் வரிகளைப் பின்பற்றி, நம்மைத் தலை நிமிர்ந்து வாழவைத்த இன்னொரு தமிழ்ப் பெருந்தகை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையாகும்.
பாட்டுக் கொருபுலவன் பாரதியடா! – அவன்
பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! – அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா!
சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமேயடா! – கவி
துள்ளும் மறியைப்போலத் துள்ளுமேயடா !
கல்லும் கனிந்துகனி யாகுமேயடா ! – பசுங்
கன்றும் பால் உண்டிடாது கேட்குமேயடா!
சுப்பிரமணிய பாரதி இயற்றிய பாடல்களின் பெருமையை, செழுமையை, எளிமையை இவ்வளவு இனிமையாகக் கவிதை வடிவில் விளக்கியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையாவார். இதே வரிகளை நாமெடுத்துக் கொண்டு, கவிமணியின் கவியமுதை விளக்கினாலும் அதுவும் பொருத்தமாகவே இருக்குமென நம்புகிறோம்.
கவிமணி அவர்கள் கன்னியாகுமாரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகருக்கு அருகிலுள்ள தேரூர் எனும் சிற்றூரில் 1867 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி பிறந்தார். அவரின் தந்தையார் சிவதாணுப் பிள்ளை, தாயார் ஆதி லக்ஷ்மி அம்மாள். தொடக்கத்தில் தேரூர் ஆரம்பப் பள்ளியிலும், பின்னர் கோட்டாறு அரசினர் உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். பின்னர் முதுகலைப் பட்டமும் (எம். ஏ) பெற்றவர் கவிமணி. மேலும், திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சியும் பெற்றார். அந்தக் காலகட்டத்தில் அவர் வாழ்ந்த பகுதி கேரள மாநிலத்தைச் சேர்ந்திருந்ததால் அவரின் பள்ளிப்படிப்பு முழுவதும் மலையாள மொழியிலேயே அமைந்திருந்தது. பள்ளிப் படிப்பிற்கிடையே, திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்புரானிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். 1901 ஆம் ஆண்டும் உமையம்மை என்பவரை மணந்த கவிமணிக்கு, குழந்தைப் பேறு இல்லை.
இயல்பாகவே இவரிடம் அறிவியல் கண்ணோட்டம் நிறைந்து காணப்பட்டது, அதனோடு கூட வரலாற்று நிகழ்வுகளின்மீது ஆர்வம் அதிகமுள்ளவராக இருந்ததாலும், மரபு வழிச் சிந்தனைகளுடன் நவீன சிந்தனைகளும் ஒருங்கே இணையப் பெற்றவராக இருந்தார். ஆசிரியப் பயிற்சிக்குப் பிறகு ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கல்லூரி ஆசிரியராகவும் பணிபுரிந்து, கிட்டத்தட்ட முப்பத்தி ஆறு வருட கண்ணியமான ஆசிரியப் பணிக்குப் பிறகு ஓய்வு பெற்றார்.
தேச விடுதலைக்கான குரல், காந்தி, பாரதி, போன்ற விடுதலைப் போராட்டத் தலைவர்கள் குறித்த கவிதைகள், ஆராய்ச்சி, வரலாறு, அறிவியல், வாழ்வியல், குழந்தைகளுக்கு நல்லவை அறிவுறுத்துதல், இயற்கை, இறை வழிபாடு, பெண்ணடிமைத் தன எதிர்ப்பு, தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஆதரவு மற்றும் இறுதியாகத் தமிழ்த் திரைத்துறை என இவர் தொடாத துறைகளே இல்லையெனலாம். சுதந்திரப் போராட்டத்தில் மிதவாதத்தைப் பெரிதும் ஆதரித்த கவிமணி, காந்தியைக் குறிப்பிட்டு ஆங்கிலேயர்களைத் தேசம் விட்டுப் போகுமாறு புனைந்த கீழ்க்கண்ட வரிகள் பிரபலமானவை.
கள்ளரக்கா குலத்தோடு நீ
கப்பலேறத் தாமதமேன்
வள்ளல் எங்கள் காந்தி மகான்
வாக்கு முற்றும் பலித்ததினி !!
போராடிப் பெற்ற விடுதலைக்குப் பிறகு, சுதந்திர இந்தியாவில் வாழும் வாய்ப்புக் கிடைத்த நம் கவிஞர், நம் வாழ்க்கை எவ்வாறு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்பதற்கும் மீண்டும் காந்தியையே தலைவராகக் கொண்டு குறிப்பிடுகிறார்.
உண்ணும் உணவுக் கேங்காமல்
உடுக்கும் ஆடைக் கலையாமல்
பண்ணும் தொழில்கள் பலகாண்போம்
பஞ்சப் பேயைத் துரத்திடுவோம்
அண்ணல் காந்திவழி பற்றி
அகிலம் புகழ வாழ்ந்திடுவோம்
பல தனிக் கவிதைகளுடன், சில புகழ்பெற்ற அந்நிய மொழிப் படைப்புகளையும் தனக்கே உரிய தனி முத்திரையுடன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் கவிமணி. சர். எட்வின் அர்னால்ட் எழுதிய “லைட் ஆஃப் ஏஷியா” (Light of Asia) என்ற நூலைத் தழுவி எழுதப்பட்ட “ஆசிய ஜோதி” என்ற அவரின் நூல் தமிழர் சமுதாயத்தில் மிகவும் பெருமை வாய்ந்த நூலாகக் கருதப்பட்டது, இன்றும் கருதப்படுகிறது. இதில் மொழிபெயர்ப்பு எனத் தோன்றாவண்ணம் பல கவிதைகளைத் தந்துள்ளார். மற்றும், மிகப் பெரிய தத்துவஞானி எனப் புகழப்படும் பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் அவர்களின் கவிதைகளைத் தழுவி, தமிழில் பல கவிதைகள் புனைந்துள்ளார்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஆராய்ச்சித் துறையிலும் தனது முத்திரையைப் பதித்தவர் தேசிக விநாயகம் பிள்ளை. குறிப்பாக, 1922 ஆம் ஆண்டு ‘மனோன்மணியம் மறுபிறப்பு’ என்ற பெயரில் அவரெழுதிய திறனாய்வுக் கட்டுரை மிகவும் பிரபலமானது. தவிர, சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராகப் பணி புரிந்தார். மேலும், கம்பராமாயணம், திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். கவிமணி எழுதிய நூல்களில் கீழ்க்கண்டவை மிகவும் பிரபலமானவை;
- அழகம்மை ஆசிரிய விருத்தம்
- ஆசிய ஜோதி
- மலரும் மாலையும்
- மருமக்கள்வழி மான்மியம்
- கதர் பிறந்த கதை
- உமார் கய்யாம் பாடல்கள்
- தேவியின் கீர்த்தனங்கள்
- குழந்தைச்செல்வம்
- கவிமணியின் உரைமணிகள்
குழந்தைகளுக்காகவும் பல எளிமையான, இனிமையான கவிதைகளைப் படைத்தவர் கவிமணி. குழந்தைகளுக்காக அவர் இயற்றிய பாடல்களில் பல தமிழகப் பாடப் புத்தகங்களில் பாடங்களாக இடம் பெற்றுள்ளன. இவற்றில் மிகவும் எளிமையான, இனிமையான பாடல்;
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்றது வெள்ளைப்பசு – உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
சமூக விழிப்புணர்ச்சிப் பாடல்களாகப் பல எழுதியுள்ள கவிமணி, தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்றிருந்த நிலையைச் சாடி, முற்போக்காகப் பாடிய கீழ்க்கண்ட பாடலை எடுத்துக் காட்டாகக் கூறலாம்;
கண்ணப்பன் பூசை கொளும்
கடவுளர் திருக்கோவிலிலே
நண்ணக் கூடாதோ, நாங்கள்
நடையில் வரல் ஆகாதோ
மேலும் சாதிப் பிரிவினைக் காட்டுவதைக் கடுமையாகச் சாடி, சாதிக்கான வரையரையாக இவ்வாறு கூறுகிறார்;
மன்னுயிர்க்காக உழைப்பவரே – இந்த
மாநிலத் தோங்கும் குலத்தினராம்
தன்னுயிர் போற்றித் திரிபவரே – என்றும்
தாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா.
இவர் தனிக் கவிதையாக எழுதிய சில பாடல்கள் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1947 ஆம் ஆண்டு வெளிவந்த “பைத்தியக்காரன்” என்ற படத்தில் இவரின் பாடல் பயன்படுத்தப்பட்டது, அதனையடுத்து 1951 ஆம் ஆண்டு வெளியான “மணமகள்’” என்ற படத்திலும், ”தாயுள்ளம்” என்ற படத்திலும் இவரின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டன.
கோயில் முழுவதும் கண்டேன் – உயர்
கோபுரம் ஏரிக் கண்டேன்
தேவாதி தேவனை நான் – எங்கெங்கு
தேடினும் கண்டிலனே !!
என்ற பகுத்தறிவுக் கருத்துப் பரிமளிக்கும் கவிதையினைத் திரையுலகம் தாயுள்ளம் படத்தில் பயன்படுத்தி அது பிரபலமாகவே இன்னும் பல படங்களில் இவரின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டன. இவராகத் திரைக்கு நேரடியாகப் பாடல் எழுதாவிட்டாலும், இவர் எழுதிய கவிதைகள் நன்றாகப் பொருந்தி வரும் கதைக் களங்களில் உபயோகப் படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, “வேலைக்காரன்” (1952ல் வெளியானது), கள்வனின் காதலி, கண்ணின் மணிகள், நன் நம்பிக்கை எனப் பல திரைப்படங்களில் இவரின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டன.
”ஆசிய ஜோதி” நூலின் பகுதியான ஒரு கவிதை “கள்வனின் காதலி” திரைப்படத்தில் இடம்பெற்று, கண்டசாலா மற்றும் பானுமதியின் குரலில் வெளிவந்து பெரும்புகழ் பெற்றது. அந்தப் பாடல்;
வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!
கவிமணி அவர்களே ஒரு கவிதையின் இலக்கணம் என்ன என்பதைத் தனது எளிதான கவிதை மூலம் தெரிவிக்கிறார்.
உள்ளத் துள்ளது கவிதை – இன்பம்
உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை.
இந்த இலக்கணத்திற்குச் சற்றும் பிறழாமல் கவிதை புனைந்து, நேர்மையுடனும் பெருமையுடனும் நிறைவான வாழ்க்கை வாழ்ந்த கவிமணி தனது எழுபத்தி எட்டாவது வயதில் தனது மனைவியின் ஊராகிய புத்தேரி என்கிற ஊரில் செப்டம்பர்த் திங்கள் 26ஆம் திகதி, நிலவுலகு நீத்தார்.
தமிழ் மொழி உள்ளளவும், உலகில் கடைசித் தமிழன் வாழுமளவும் கவிமணியின் புகழ் மறையாதிருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
– வெ. மதுசூதனன்
நாமக்கல் கவிஞர். பாரதி இல்லை.