எசப்பாட்டு – அக்கரை பச்சை
கைகளிலே புரளுமுன்னு
காடு கழனி எல்லாம் விட்டு
காத்துப் போல பறந்து வந்தோம்
அசல் நாட்டு வாழ்க்கையிலே
அமைதிக் கொரு பஞ்சமில்ல
அன்பாகப் பழக வுந்தான்
ஆளுக்கொரு குறைவும் இல்ல
கொஞ்ச நாள்ல போயிரவே
நெஞ்சு முழுசும் ஆசையிருக்க
பிஞ்சுப் புள்ளைகள நினைக்கயிலே
அஞ்சும் நம்மனசு மறுக்கவில்ல
நம்மப் பெத்தவுக
நடுத்தெருவுல நிக்க விட்டு
நாம பெத்தவுக
நலம் நெனக்கும் செய்கையிதோ?
– வெ. மதுசூதனன்.
அக்கரை பச்சையிலே
விழிக்குறை ஏதுமில்லை
இக்கரைக்கு வந்ததால
அக்கறைக்குப் பஞ்சமில்லை
அஞ்சு புள்ள பெத்தாலும்
பஞ்சுத் தலைக் கெழவனுக்கு
பிஞ்சு போன பாயிதான்
நெஞ்சு கனக்கும் நெசந்தான்.
பெத்ததைச் சீராட்டினாலும்
சேத்தசொத்தைக் கொட்டினாலும்
குத்தமொண்ணு தொக்கிநிக்கும்
பெத்தவன்மேல எந்நாளும்!
ஊத்தெடுத்த உதிரம்
வத்திப்போகும் நேரம்
முத்திப்போன ஏக்கம்
தத்திவருவது சகசம்!!
சிறகடித்து வானத்திலே
சிறுகுஞ்சு பறக்கையிலே
பொறப்பு பூரணமாச்சுன்னு
பொறுப்பறுக்குமாம் சிட்டுக்குருவி!
கூத்துக் கட்டிய உறவும்
நேத்து வந்த பிரிவும்
காத்தாகும் பொறவு
மாத்தமில்லா வாக்கு!
அக்கரை இக்கரையின்னு
நித்திரை இழப்பதாலே
இம்மறை மாறாது
நம்குறையும் தீராது!
– ரவிக்குமார்
நாம பெத்தவுக
நலம் நெனக்கும் செய்கையிதோ? hurting truth
உண்மை ரினி அவர்களே.. வலியின் வெளிப்பாடே அந்த வரிகள்
நம்குறை தீர ஒரு
நல்வாக்கு கேட்டுட்டேன்
நலமாகும் செய்கையதே
நண்பரவர் சொன்ன சொல்லும்
எங்குண இருந்தாலும்
எந்நிலை திரிஞ்சாலும்
எங்குணம் மாறாம
என்சனம் துணையாக
அசராமப் பல உதவி
அன்பாகச் செய்திட்டா
அவனவனப் பாத்த சனம்
அழகாக உதவிடுமே
ஊரார் பிள்ளையத
ஊட்டியே வளத்திடவே
ஊனுருகும் நம் சனமும்
ஊறு வராது வாழ்ந்திடுமே !!!
ஆயிரம் தான் இருந்தாலும்
சொர்க்கம் தான் ஆனாலும்
சித்தி தான் அம்மா ஆகுமா?
யாதும் ஊரே யாவரும் கேளிருன்னும்
சொன்ன பாட்டனத்தான் மறக்க முடியுமா?