இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 9
(இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 8)
கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வர, கணேஷ் அதனைப் போலீஸ் அதிகாரி ராஜேந்திரனிடம் விளக்கி கார்டையும் ஒப்படைக்கிறான்.
ஆனால், ராஜேந்திரன் அந்தக் கார்டுடன் தனது பர்ஸ் முழுவதையும் தவற விட்டுப் பின் அதனைப் பணத்திற்கு ஆசைப்பட்டு எடுத்த துப்புறவுத் தொழிலாளி மாசானின் வீட்டிற்கருகில் கண்டுபிடிக்கிறார். அதனைத் தோண்டி எடுக்கையில், அந்த எஸ்.டி. கார்டிற்கு அருகில் ஒரு பெண்ணின் கை புதைக்கப்பட்டதைக் காண்கிறார். இதற்கு முன்னரே தட்சிணா மூர்த்தியின் உயிரைக் காப்பாற்ற அறுவைச் சிகிச்சை செய்யும் டாக்டர் தேசிகனின் மகள் டாக்டர் புஷ்பா கடத்தப்பட்டிருக்கிறாள். தட்சிணா மூர்த்தியை அவர் கொலை செய்தால் புஷ்பாவை விட்டு விடுவதாக ஃபோனில் டாக்டருக்கு மிரட்டல் வருவதைத் தொடர்ந்து அவரின் வீட்டிற்கு அடியாட்களுடன் வந்து மிரட்டத்தொடங்குகிறார் தனவந்தர் ராமச்சந்திரன். இதற்கு இடையில் செல்வந்தர் வேலாயுதம் சிறைப்படுத்தப்படுகிறார், அவரை ஜாமீனில் எடுப்பதற்கு ஒரு வழக்கறிஞர் வருகிறார்.
இதற்கிடையில், கல்லூரிக்கு வந்த பாரதி கடத்தப்பட்டதை அறிந்த கணேஷ், நண்பனுடன் அவளைத் தேடிப் புறப்படுகின்றான், வழியில் பாரதியின் வீட்டிலிருந்து அழைப்பு வருகிறது. இதற்கிடையில், தட்சிணாமூர்த்தியின் தொலைபேசியிலிருந்து கிடைத்த துப்புக்களைக்கொண்டு அவனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமனாதனுக்கு இந்தக் கொலைகளில் சம்பந்தம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அவன் வீட்டை அடைந்த போலீசார் அவன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதைப் பார்க்கின்றனர். கடத்தப்பட்ட பாரதியின் காரைத் தொடர்ந்து சென்று அவள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில், தனவந்த விஸ்வநாதனையும் சேர்த்துப் பிடித்து விடுகிறார் இன்ஸ்பெக்டர் முருகன்.
அதன் பிறகு என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
திங்கட்கிழமை நள்ளிரவு:
விஸ்வேஸ்வரய்யா மருத்துவமனை. தட்சிணாமூர்த்தி அறுவைச் சிகிச்சை முடிந்து ரெகவரி ரூமில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட பனிரெண்டு மணி நேரங்களுக்கு முன்னர் முடிந்த அறுவைச் சிகிச்சை. பல மயக்க மருந்துகளுக்குப் பின்னர், அவன் இன்னும் மயக்க நிலையிலேயே இருந்தான்.
ராமச்சந்திரனும் அவரது ஆட்களும் டாக்டர் தேசிகனைச் சக்கர நாற்காலியில் உட்கார வைத்து வேன் ஒன்றில் அழைத்துக்கொண்டு வந்து மருத்துவமனையின் வெளியில் இருட்டில் வேனை நிறுத்திவைத்துக் காத்துக்கொண்டிருந்தனர். அவரைச் சக்கர நாற்காலியில் வைத்து தட்சிணாமூர்த்தி இருக்கும் அறைக்கு ஒருவருக்கும் தெரியாமல் அழைத்துக் கொண்டு செல்வது என்பது அவர்களின் திட்டம். அவனது அறைக்கு வெளியில் காவலிலிருந்த இரண்டு போலீஸ்காரர்களும் மங்கலான விளக்கு வெளிச்சத்திற்கு அடியில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் சற்றும் அயர்வது போலத் தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அங்கேயே நின்று காத்துக்கொண்டிருக்கின்றனர் ராமச்சந்திரனும் அவரது குழுவும்.
அப்படியும் இப்படியும் சற்று நடக்கத் தொடங்கியிருந்த போலீஸ்காரர்கள், வராண்டாவின் கடைசிவரை நடந்து சென்று பீடி பிடிப்பதற்காகச் சற்று ஒதுங்கினர். அந்தச் சில நிமிட இடைவேளைதான் தங்களுக்குக் கிடைத்த ஒரே சந்தர்ப்பம் என்று உணர்ந்த ராமச்சந்திரன் குழுவினர் உடனடியாகச் செயல்படத் தொடங்கினர்.
ஆங்கிலப் படங்களில் வருவது போல, துரிதமாக வேன் கதவைத் திறந்து, சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு, அவசர அவசரமாக கட்டிடத்தை நோக்கி விரைந்து சென்றனர். மிகத் துரித கதியில் வராந்தாவை அடைந்து, இரண்டே நொடிகளில் தட்சிணாமூர்த்தி வைக்கப்பட்டிருந்த ரெகவரி ரூமையும் அடைந்து உள்ளே நுழைந்தும் விட்டனர். சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்த டாக்டர் தேசிகன், அவரைத் தள்ளிக் கொண்டு வந்த இரண்டு வேலையாட்கள் மற்றும் ராமச்சந்திரன் என நால்வரும் வேனிலிருந்து கிளம்பி உள்ளே தட்சிணாமூர்த்தியின் அறையை அடைவதற்கு ஆன நேரம் மொத்தம் ஆறு நிமிடங்கள். வேன் ஓட்டி வந்த டிரைவர் மட்டும் இருட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டிக்குள் டிரைவர் சீட்டில் அமர்ந்து, தயாராகக் காத்திருந்தான்.
அறைக்குள் நுழைந்தவுடனேயே, டாக்டர் தேசிகன் தனக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவுகளின்படிச் செயல்படத் தயாராயிருந்தார். தனது உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதைக்கூட அவ்வளவாகப் பொருட்படுத்தாத டாக்டர், தனது மகள் டாக்டர் புஷ்பாவின் உயிர் இவர்கள் கையில் என்று புரிந்தவுடன் இவர்கள் சொல்வது எல்லாவற்றையும் கேட்பது என்ற முடிவுக்கு வந்திருந்தார். அவரை முழுவதுமாக வீழ்த்தியது, அவரின் வீட்டில் வைத்து மிரட்டுகையில், அவர்கள் காட்டிய, ஒரு சிறிய நகைப்பெட்டி போன்ற ஒன்றில் பாதுகாக்கப்பட்ட தனது அருமை மகளின் இடது கை மோதிர விரல். ஆம், பாவிகள் அவளின் விரலை அறுத்துக் கொண்டு வந்திருந்தனர். ரத்தம் தோய்ந்து விகாரமாய்க் காணப்பட்ட அந்த விரலில் இன்னும் அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளை கலரில் மின்னும் வைர மோதிரம் – புஷ்பாவின் அம்மா, தேசிகனின் மறைந்த மனைவியின் வைர மோதிரமது. அவர்களது கல்யாணத்திற்கு, முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னர் தேசிகன் ஸ்பெஷல் ஆர்டர் செய்து வாங்கி வந்தது. மனைவியின் மறைவுக்குப் பின்னர் தனது செல்ல மகளுக்குப் போட்டு அழகு பார்த்திருந்த பாசமிகு தந்தை அந்த விரலைப் பார்த்தவுடன் சப்த நாடியும் ஒடுங்கி, அதிர்ச்சியில் நடைப்பிணமாகி விட்டிருந்தார். எஞ்சியிருந்த மகளின் உயிரைக் காப்பதற்காக இவர்கள் சொல்வதைச் செய்வதுதான் சரியென அந்த முடிவுக்கு வந்துவிட்டிருந்தார்.
தனது பல வருட மருத்துவ அனுபவங்களினால், அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட தட்சிணாமூர்த்தியை, பிறருக்குச் சந்தேகம் வராவண்ணம், பிரேதப் பரிசோதனையிலும் கண்டுபிடிக்கப்படாத வண்ணம் – ஏதோ அறுவைச் சிகிச்சையில் பின்விளைவுகளைப் பக்க விளைவுகளை ஏற்றுக் கொள்ள இயலாமல் தானாக உயிர் பிரிந்ததாக எல்லோரும் நம்பும் வண்ணம் கொலை செய்வது மிகவும் எளிதான ஒன்றாகும் அவருக்கு. என்ன செய்வது என்று முடிவு செய்து, தட்சிணாமூர்த்தி படுத்திருந்த படுக்கையை நெருங்கிச் செயல்பட முனைகிறார் டாக்டர் தேசிகன். அந்த நொடியில், யாரும் எதிர்பாரா வண்ணம், பலத்த சத்தத்துடன் தட்சிணா மூர்த்தி இருந்த அறையின் கதவு உடைக்கப்படுகிறது. வெளியில் காவலிலிருந்த இரண்டு போலீஸ்காரர்களும் கைகளில் நவீன ரகத் துப்பாக்கிகளுடன், திரைப்படங்களில் வருவது போல உள்ளே பாய்ந்து வருகின்றனர்.
பீடி குடித்து விட்டுத் திரும்ப வந்த இருவரும், தட்சிணாமூர்த்தியின் அறைக்கதவுக்கு வெளியே, சற்று முன்னரே பதிக்கப்பட்ட ஈரம் உலராத காலடித் தடத்தைப் பார்த்துச் சந்தேகம் கொண்டு, கதவிடுக்கு வழியே உள்ளே பார்த்து, நடப்பதை உணர்ந்துசரியான நேரத்தில் கதவை உடைத்துக்கொண்டு வந்திருந்தனர்.
ராமச்சந்திரன் அதிர்ச்சியுடன் அவசர அவசரமாகத் தன் கோட் பாக்கெட்டிலிருந்த பிஸ்டலை எடுப்பதற்குள், உஷாரான காவலரால் துப்பாக்கியின் பின்புறத்தால் தாக்கப்பட்டுத் தரையில் விழுகிறார். மொத்தமாக மூன்று பேராயினும், துப்பாக்கியேந்திய இரு காவலர்களால், சில நிமிடங்களில் நிலைமை கட்டுக்கடங்குகிறது. அனைவரும் விலங்கு மாட்டப்படுகின்றனர். டாக்டர் தேசிகன் தான் செய்த பெரும்பாக்கியம் தன்னைப் பெரிய பாவம் செய்வதிலிருந்து காப்பாற்றியதாக உணர்ந்து சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், “சார், என் பொண்ணைக் காப்பாத்துங்க் ப்ளீஸ்….” எனப் பரிதாபக் குரலில் புலம்ப ஆரம்பிக்கிறார்.
திங்கட்கிழமை இரவு பனிரெண்டு மணி முப்பது நிமிடம்:
அந்த நள்ளிரவு நேரத்தில் சைரன் சத்தத்துடன் அதிவிரைவாகப் போய்க் கொண்டிருந்தது அந்தப் போலீஸ் ஜீப். டிரைவருக்கு அருகில் பேஸஞ்சர் சீட்டில் அமர்ந்துகொண்டு சற்று வெற்றிக் களிப்பான முகத்துடன் பின்னால் திரும்பிப் பார்த்து எதையோ டிரைவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சப்-இன்ஸ்பெக்டர் முருகன். பின்னால் அவர் கூர்ந்து பார்த்தது அப்பொழுதுதான் கைது செய்யப்பட்ட ஆடிட்டர் விஸ்வநாத்.
ஒரு மணி நேரத்திற்கு முன்னர்த் தனது வீட்டில் வைத்துக் கையும் களவுமாகப் பிடிபட்ட விஸ்வநாத், சப்-இன்ஸ்பெக்டர் முருகனின் துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்தது அறிந்ததே. எதிர்பாரா வண்ணம் போலீஸ் வந்து சேரத் தான் முழுவதுமாக நம்பிய தனது வேலையாட்கள் தன்னைத் தனியாகத் தவிக்க விட்டு ஓடி விட்டபின்னர், என்ன செய்வது என்று தெரியாமல் முருகனிடம் பேரம் பேச ஆரம்பித்தார் விஸ்வநாத். முருகன் எவ்வளவு நேர்மையானவர் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. தன்னை விலைபேச நினைத்த விஸ்வநாத்தின் மேல் கட்டுக்கடங்காத கோபம் கொண்ட முருகன், அவரைக் கைது செய்வதற்கு முன்னர், ஓங்கிக் கன்னத்தில் ஒரு அறை விட்டார். “ஏண்டா நாயே, இந்த வயசுல பொம்பளப் பொறுக்கியா இருந்துகிட்டு, நீ பொண்ணுங்கள அசிங்கப்படுத்துறத நான் காச வாங்கிகிட்டு கண்டுக்காம விட்டுரணும்கிறியா, இன்னொரு வாட்டி என்ன வெல பேச நினைச்ச, இந்த துப்பாக்கிதான் பேசும்” எனக் கோபமான வார்த்தைகளை உதிர்த்தார்.
அவரின் கைகளைப் பின்புறமாக வைத்து விலங்கு மாட்டிய பின்னர் தனது போலீஸ் படையை ஒயர்லெஸ்ஸில் அழைத்து விவரத்தைச் சொல்லி அவர்களை வரவழைத்தார். அவர்கள் வருவதற்குள்ளாக விஸ்வநாத்தை சோஃபாவுடன் உட்கார வைத்து இன்னொரு விலங்கால் கால்களையும் பூட்டினார், அதன் பின்னர் பாரதியின் கட்டுக்களை அவிழ்த்து விட்டு, அவளுக்குத் தண்ணீர் கொடுத்து, இதமாகச் சில வார்த்தைகளைப் பேசி அவள் வீடு, பெற்றோர்கள் பற்றிய விவரங்கள் அறிந்து, அவர்களிடம் டெலிஃபோனில் அழைத்து விவரம் சொல்லச் செய்தார். இன்னொரு போலீஸ் ஜீப்பில் அவளை அவளின் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுவரச் செய்து, கடைசியாகத் தனது ஜீப்பில் கைதான விஸ்வநாத்தை ஏற்றிப் பயணம் செய்து கொண்டிருந்தார் சப் இன்ஸ்பெக்டர் முருகன்.
“சார் எங்க சார் போகணும்” பவ்யமாய்க் கேட்ட டிரைவரிடம் “நம்ம ஸ்டேஷனுக்குத் தாம்பா” என வேலாயுதம் ஏற்கனவே அடைபட்டிருக்கும் புதுவயல் ஸ்டேஷனுக்கு விஸ்வநாதனையும் கொண்டு செல்லலாம் என டிரைவருக்கு ஆணையிட்டுக் கொண்டிருந்தார் முருகன்.
செவ்வாய்க் கிழமை அதிகாலை ஒரு மணி:
கிட்டத்தட்ட பனிரெண்டு மணிநேரத்திற்கு முன்னதாகக் கொண்டுவரப்பட்ட தந்தையின் பிணத்தைச் சுடுகாடு வரை கொண்டு சென்று எரித்துத் திரும்பியிருந்தனர் குடும்பத்தினர் அனைவரும். அதனைத் தொடர்ந்து சொந்தக்காரர்கள், நண்பர்கள், போலீஸ்காரர்கள் என அனைவருக்கும் பதில் சொல்லி மாளாமல் திணறிப் போயிருந்தனர். குறிப்பாக, சபாரத்தினம் ஆசாரியின் மகன் லக்ஷ்மணனுக்கு அன்றைய தினம் வாழ்நாளில் மறக்கப்பட வேண்டிய ஆனாலும் சற்றும் மறக்க முடியாத தினம்.
கடந்த பனிரெண்டு மணிநேர நிகழ்வுகளைத் திரும்பத் திரும்ப மனதிற்குள் அசைபோட்டுக் கொண்டிருந்த லக்ஷ்மணனால் சற்றும் தூங்க இயலவில்லை. தனது தந்தையின் மீது அவன் வைத்திருந்த பாசம் அளவிடற்கரியது. பாசத்தைவிட மரியாதை என்பது அளவு கடந்ததாயிருந்தது. தனது தந்தை ஒரு நேர்மை தவறாதவர், கடவுள் நம்பிக்கை உள்ளவர், மற்றவர்களுக்கு நல்லது மட்டுமே நினைப்பவர், உலகத்திலுள்ள எந்த ஒரு நேர்மையாளனிடமும் ஏதாவது ஒரு விஷயத்தில் குறை இருக்கும், ஆனால் தன் தந்தையிடம் அதுபோன்ற ஒரு குறை கண்டுபிடிப்பதென்பது இயலாத ஒன்று என்பது லக்ஷமணனின் தீராத நம்பிக்கை.
அப்படிப்பட்ட மனிதரை இப்படி ஈவு இறக்கமின்றி சுட்டுக் கொல்ல யாருக்கு மனது வரும்? என்ன காரணம் இருக்க இயலும்? நினைக்க நினைக்க அவன் வருத்தம் இன்னும் பல மடங்காகி கட்டுக்கடங்காத கோபமாகிவிட்டிருந்தது.
அவனும் அந்தப் பனிரெண்டு மணி நேரங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளைச் செய்திகளின் மூலம் ஓரளவு அறிந்து கொண்டிருந்தான். தனவந்தர் வேலாயுதமும் இந்த வழக்கின் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதைக் கேள்வியுற்றவுடன் அவனுக்கு எங்கோ சற்றுப் பொறி தட்டியது?
இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு தன் தந்தையுடன் நடத்திய சம்பாஷணை ஒன்று நினைவுக்கு வந்தது. வேலாயுதத்தின் தமக்கையின் மகள் திருமணம் சமீபத்தில் நிகழவிருப்பதாகவும், அதற்காக நகை செய்யும் முழுப் பொறுப்பையும் சபாரத்தினத்திடமே விடுவதாக வேலாயுதம் கூறியதாகவும் அவர் மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “இவுக பணஞ்சம்பாரிக்கிறது நல்ல வளியில இல்லன்னு ஊருக்கே தெரியும், அந்தப் பாவக் காசு நமக்கெதுகுனு யோசிக்கிறேன்… நேராச் சொல்லாம என்னத்தயாவது தனதாப் பேசி வேண்டாமுனுடலாம்னு பாக்குறேன்” என்றார்.
“அவுக எப்டிச் சம்பாரிச்சா நமக்கென்ன அப்பச்சி…. நாம நாயமாத்தானே தொளில் பண்றோம்…. அதுக்குள்ள காசைத்தானே வாங்குறோம்… சரின்னு சொல்லுங்க அப்பு” என்று தந்தையிடம் தன் கருத்தைக் கூற, மகனையும் தன் தொழிலில் ஒரு முதலாளிபோல் நடத்தும் சபாரத்தினத்தால் அதனைத் தட்ட முடியவில்லை. ஆனாலும் வேலாயுதத்திற்கு வேலை செய்வது மனம் ஒப்பவில்லை. குழப்பத்தில் இருந்த அவர் கடைசியாக அந்த வியாபாரத்தை வேண்டாமென்று முடிவெடுத்தார். அதனை அவரிடம் நேரடியாகச் சென்று, சந்தித்துச் சொல்வதே மரியாதை என்று நினைத்த அவர் தனது சம்பந்தி வீட்டிற்கு அருகிலிருக்கும், வேலாயுதம் அடிக்கடி வந்து சீட்டு விளையாடும், படைப்பு வீட்டிற்குச் சென்று சந்திப்பது என்று நினைத்திருந்ததை மகனிடம் கூறியிருந்தார்.
இதுவரை இந்த விஷயத்தைப் பெரிதாக நினைக்காத லக்ஷ்மணன் வேலாயுதம் கைதாகியுள்ளார் என்ற செய்தி கேட்டவுடன், இந்த விஷயத்திற்கு ஏதேனும் தொடர்பு இருக்கக் கூடும் என நினைக்கத் தொடங்கினான். இதனை உடனே போலீஸிடம் தெரிவித்து விடவேண்டும் என்று முடிவு செய்தான். உடனே நினைவிற்கு வந்தது காவல்துறை மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்திய உதவிக் கமிஷனர் ராஜேந்திரனின் கைபேசி எண் மட்டுமே. பதறி எழுந்து, பரணில் போட்டிருந்த அன்றைய செய்தித்தாளைத் தேடி எடுத்து அந்த நம்பரைக் கண்டுபிடித்து, அவசர அவசரமாக எண்களைச் சுழற்றினான். மறு முனையில், “ஹலோ… அஸ்ஸிஸ்டண்ட் கமிஷனர் ஸ்பீக்கிங்க்”.. என்றது கம்பீரக் குரல்.
செவ்வாய்க் கிழமை அதிகாலை ஒரு மணி முப்பது நிமிடம்:
கானாடுகாத்தானிலுள்ள பாரதியின் இல்லம். ஒரு பத்து நிமிடத்திற்கு முன்னர் போலீஸ் ஸ்குவாட், மீட்கப்பட்ட பாரதியைப் பத்திரமாகக் கொண்டு வந்து வீட்டில் விட்டிருந்தது. அவர்களின் வீடு அக்கிரகாரத்துடன் சேர்ந்ததில்லையெனினும், அக்கிரகாரத்தின் கடைசி வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளியுள்ள காம்பவுண்ட் வீடு. மிகப் பெரிய இடம், அழகான ஆர்ச் ஷேப்பில் செய்யப்பட்டிருந்த முகப்பு, அந்த முகப்பின் உச்சியில், பாம்பைக் கழுத்தில் அணிந்து கொண்டு ஜடாமுடியும் மரவுரியும் தரித்த விதமாய் அமர்ந்திருந்த சிவனின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. அதன் கீழே செந்நிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்த “சிவ சிவ” என்ற வாசகம் பாரதியின் குடும்பத்தினர் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் எனச் சிறப்பாகப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
வீட்டின் முன் வந்து சென்ற போலீஸ்கார்களையும், அதற்கு முன்னர் பாரதி வீட்டிற்கு வரவில்லையென்று அரசல் புரசலாகத் தெரிந்து வைத்திருந்ததையும் வைத்துக் கணக்குப் போட்ட அக்கிரகாரம் முழுவதும் அவர்களின் வீட்டில் ஆஜர். “ஏண்டாப்பா சுந்தரம், ஒம் பொண்ணண்ட இப்ப எதுவும் கேள்வி கேட்டுண்டு அலையாதே, அவளே பாவம் களைச்சுப் போயி வந்திருக்கா” என்று ஆரம்பித்தது நலிந்த பூணூலணிந்த தேகத்தை ஒரு தும்பைப்பூத் துண்டால் போர்த்தியிருந்த கிழம். “என்னதான் தைரியமானவளா இருந்தாலும், பொண்ணுன்னா கொஞ்சம் ஜாக்ரதையாத்தான் இருக்கணும்” யாரும் கருத்துக் கேட்காமலேயே, தானாக இலவசமாய் உதிர்த்துக் கொண்டிருந்தாள் பல மாமிகளுக்கு நடுவில் வராந்தாவில் நின்றிருந்த ஒரு மாமி.
நடு முற்றத்தில் அப்பாவின் ஈஸி சேரில், தனது உடலின் சில பாகங்களை மட்டும் சற்றே பொருத்தி, அவ்வளவாக நிம்மதியின்றி, கவலையுடன் அமர்ந்திருந்தாள் பாரதி. ”என்ன திமிர் இருக்கணும்பா அவாளுக்கு, மனுஷாளக் கொலை பண்றது அவ்வளவு சுலபமாயுடுத்து.. என்னவாவது பண்ணணும்பா… நான் போலீஸுக்கும் கோர்ட்டுக்கும் ஒரு பெரிய சாட்சி, என்ன பேச விடுவேளோனோ?” எனத் தந்தையின்மீது சற்று நம்பிக்கை குறைந்தவளாய்க் கேட்டாள் பாரதி. “ஏம்மா, நோக்கு அந்தப் பேரை சும்மா வெச்சேன்னு நெனச்சுண்ட்ருக்கியா? உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லைம்மா. நோக்கு என்ன சப்போர்ட் வேணும் சொல்லு, நான் செய்றேன்” சொன்ன தந்தைக்குக் கண்களாலேயே ஆரத்தழுவி நன்றி சொல்லிக் கொண்டிருந்தாள் புதல்வி.
”ஏன்னா, என்ன பேசுறேள், அவதான் புரியாம ஏதேதோ உளறிண்ட்ருக்காள்னாக்கா உங்களுக்கும் என்ன வந்தது.. அவாளப் பத்தி நமக்கென்ன தெரியும், கொல்லு கொலைக்கு அஞ்சாதவாளாட்டமா தெரியறது, நமக்கேன் இந்த வம்பு… போலீஸ் அவா வேலையைச் செய்யட்டும், நம்ம கொஞ்ச நாள் மெட்றாஸ் போயி என் தம்பி வீட்டுல இருந்துட்டு, இந்தப் பிரச்சனையெல்லாம் முடிஞ்சப்புறம் வரலாம்” என்று சொன்னவளைச் சுட்டெரிப்பது போல் பார்த்த சுந்தரம், “ஏண்டி, இவ்வளவுதானா நீ என்னப் புரிஞ்சுண்டது? சின்னக் கொழந்த, பொண் கொழந்த, அவளே தைரியமா இருக்கறச்ச, நோக்கு என்னடி” என அதட்டிவிட்டு, “அம்மா, பாரதி, நாம நல்லது செய்யணும். அதே சமயத்தில யோசிச்சு, சரியாச் செய்யணும். மொதல்ல நடந்தது என்னன்னு நேக்கு விபரமாச் சொல்லு. நம்ம உள்ள போயி பேசலாம்” என்று கூறிக்கொண்டே, “எங்காத்து விஷயத்துல அக்கறை எடுத்துண்டு இந்த நடு ராத்திரில அக்கிரகாரமே வந்துருக்கிறத பாக்கிறச்ச ரொம்ப சந்தோஷமா இருக்கு, எங்களுக்கேதாவது ஒத்தாசை தேவைப்பட்டா நானே வந்து கேக்குறேன், இப்போ எல்லாரும் அவா அவா ஆத்துக்குப் போங்கோ” என்று அனுப்பி வைத்தார்.
உள்ளே வந்து கதவைச் சாத்திக் கொண்டு, அனைவரும் சென்று விட்டனர் என்று உறுதி செய்துக்கொண்டபின்னர், சுந்தரம் மெதுவாக, “அந்தக் கணேஷ் நோக்கு வெறும் கிளாஸ்மேட்டுத் தானேம்மா” என்றார். தந்தையை முதன் முறையாக வித்தியாசமாகப் பார்த்த பாரதியைச் சட்டை செய்யாமல் தனது கேள்விகளைத் தொடர்ந்தார் சுந்தரம்.
(தொடரும்)
– வெ. மதுசூதனன்.