\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஸ்வெனும் மரநீர்த் தொட்டியும்

sven-bucket_620x441முதற்குறிப்பு:  இளைஞர்களால் தங்கள் கை கால்களைக் கட்டி வைத்துக்கொண்டு எதுவும் செய்யாமல் இருக்க  முடியுமா? முடியாது.  ஏதாவது ஒரு கும்மாளம், கோஷ்டியுடன் குதித்தல் என்று உயிராபத்துக்குப் போகக்கூடிய சாகசங்களில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பித்தவாறு போகுதலே ஒரு வாழ்க்கை. இதுபோன்ற உற்சாகமான பண்டைய மினசோட்டா நொர்வீஜியன் பையனொருவனின் கதைதான் இது.

பனிக்காலத்திற்கு ஆயுத்தமாகுதல்

”ஓடு ஓடு சீக்கிரம் வா, பொழுது நேரத்தை வீணாக்கக்கூடாது, ஏயிங்கர், கரேன் இந்த வாளிகளை உடன் ஓலினாவிடம் கொண்டுபோய்க் கொடுங்கள். ம்…… ஸ்வென் நீ விறகுக் குச்சிகள் எடுத்து வராவிட்டால் இந்த அடுப்பு நெருப்பு எந்த நிமிடத்திலும் அணைந்து விடும்.”

இவ்வாறெல்லாம் சத்தமிட்டுக் கட்டளை செய்பவர் தாத்தா வீட்டுத் தலைமைச் சமயலறைச் சலவையம்மாள். நான் எனது பாட்டி ஃபல்ச் அவர்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். அதே சமயம் இன்று அரை வருட வீ்ட்டு ஒட்டுமொத்தச் சலவை நாளும் வந்து விட்டதாக்கும்.

வீட்டின் அருகே, கீழ்ப்புறமாக பள்ளத்தாக்கில் காணப்படும் ஆறானது கார்த்திகை மாதக் கடைசியிலேயே மேல்பகுதி உறைந்து பனிக்கட்டியாகி விட்டது. மார்கழி மாதம் முழுவதும் பெரும் குளிர் மழை, சில தரம் வானம் வெளித்தது ஆயினும் குளிர்காலம் ஒட்டுமொத்தமாகச் சூழத்தொடங்கி விட்டது. தற்போது அடிவானத்தில் பனியைக் கொண்டுவரும் சாம்பல், மற்றும் வெள்ளை மேகங்கள் தெரிகின்றன். அவை பனிகாலத்தை வாரியழைத்து வரப் போகின்றன என்றும் நன்றாகவே  புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

நாட்டுப்புறப் பழங்குடிகள் இந்தமுறை நீண்ட, கடின பனிக்காலத்தை எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளனர். இது அயல்காட்டு ஓநாய்கள் பசியோடு விவசாய வயல்களுக்கு அருகே வந்து போவதில் இருந்து உணரக்கூடியதாக இருக்கிறது.

இந்த ஐரோப்பியக் குடியேற்றக் கிராமங்களின் எல்லைகளில் குடிமக்கள் முடிந்தளவு வரவிருக்கும் பனிக்காலத்திற்கும், மேலும் வன விலங்குகளில் இருந்து பாதுகாப்புக்குமாகச் சுவர், கூரைகள் யாவற்றையும் பலப்படுத்தியிருந்தனர். விவசாயத்தை நம்பியிருப்பதால் விவசாய பண்ணைக் குடில்கள், குடில் வீடுகள் மற்றும் தானிய சேகரிப்பு அறைகள் போன்றவற்றைத் பனிக்குளிர் ஊடுருவாமல் திருத்திக் கொண்டனர்.

ஒவ்வொரு கூரை, மற்றும் சுவர் மூலைகளில் காணப்படும் துளைகள், ஓட்டைகள் யாவும் வைக்கோலும், களிமண்ணும் கொண்டு அடைக்கப்பட்டன. கடைசி வானில் வெளிச்சமும் உள்ள நல்ல நாட்களில், பெண்களும் பிள்ளைகளும் அருகேயுள்ள காய்ந்த  பாசி (peat) மணைகளை வெட்டி எரிபொருட்காக குடில் மனைகளிலும், பண்ணை அறைகளிலும் நீண்ட பனிகாலத்திற்காகச் சேகரித்து வைத்தனர். அதே சமயம் ஆண்களும் மும்முரமாக கோடரி, மரமறியும் வாட்கள் கொண்டு அயல்காட்டிலிருந்து விறகு வெட்டிக் கொண்டு வந்து சேகரித்தனர்.

பண்ணைகளின் உள்ளே காணப்படும் விசால அறைகளில் நிலத்திலிருந்து கூரைவரை இனிமையாக மணக்கும் இலையுதிர்கால அறுவடை வைக்கோல்கட்டுகள் சேகரிக்கப்பட்டுக் காய்ந்தவாறு இருக்கும். பாரிய இடை நடுவு மரத்தூண்களில் இருந்து உலர்ந்த ஹாம் பன்றி வற்றல், பேக்கன், மற்றும் புகையில் சுட்டு உலர்த்திய ஆட்டு வற்றல், வெய்யிலில் உலர்த்திய சாமன் மீன் கருவாடு, மற்றும் காட் மீன் கருவாடுகள் போன்றவை தொங்கும். சுவரோரங்களில் பெரும் வட்டமான பரல் எனப்படும் மரப்பேழைகளில்  பனிக்காலத்தில் விலைமதிப்பில்லாத உருளைக்கிழங்குகள், கோவா இலை தளைகள் போன்றவை சேகரித்து வைக்கப்படும். மற்றைய மரப்பேழைகளில்  ஊறுகாய் போடப்பட்ட காட் மீன்கள் மற்றும் நெத்தலி போன்ற சிறிய ஹெறிங் மீன்கள் போன்றவை சேமித்து வைக்கப்படும்.

ஆடுகள், மாடுகள், கோடைக்கால வயல் நிலங்களில் இருந்து வரும் வெப்பமான துப்புறவான மணத்தைப் போல மணம் தரும் பண்ணைத் தொழுவங்களிற்கு உள்ளே கொண்டு  வரப்பட்டுகின்றன.

மேலும் மக்கள் வாழும் குடிமனைகள் சிலவற்றில் இரண்டு கதவுடைய சாளரங்கள் யாவும் திருப்பிப் பூட்டப்பட்டு விட்டன. மிகவும் தடிப்பான போர்ஸிலின் வெண்களிமண் ஓடுகளினாலான அடுப்புக்கள் ஒவ்வோரு வீடுகளிலும் ஒளிவிடும் சிவப்பு மாணிக்கக் கற்கள் போன்று, அவரவர் வெப்ப உலைகளில் (hearth) மினுங்கி வெப்பம் தரத்தொடங்கிவிட்டன.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களிற்கு ஒரு சில வாரங்களிற்கு முன்னால் தான் இந்த அரைவருட ஒட்டு மொத்த சலவை முயற்சி மேற்கொண்டு சட்டை, புடவைகளைத் தயார் செய்து கொள்ள வேண்டிய தேவையாகவுள்ளது. இந்தக் கிராம மக்கள் நோர்வே நாட்டு அடிக்கொடிகள். இந்த நேரம் நோர்வே நாட்டில் பல குடும்பங்களிடையே பெருந்தொகையளவில் வீட்டில் தயாரித்துக் கொண்ட மிருதுவான நூல்களினால் ஆன சரிகை புடவைகள் காணப்படும். வழக்கமாக அரை வருடத்தில் இருந்து ஏன் வருடம் முழுவதும் பாவிக்குமளவுக்குத் தேவையான மேசை நூல் சரிகைகள் இருக்கும். பொதுவாக நத்தார் பண்டிகைக்காலப் பொழுதிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் பொழுதிலும் பல அடுக்களைகளில் இனிப்பு ரொட்டி, பை போன்ற தின் பண்டங்கள் செய்யப்படும்.

இந்த வருடம் பல வயலில் வேலை செய்யும் பெண்களை வயது முதிர்ந்த எனது பாட்டியார் சலவை வேலை உதவிக்கு அழைத்துள்ளார். இந்த வயல் பெண்கள் தமது முடியை நிறங்கள் கூடிய பிரகாசமான துணிக் கர்ச்சீப்புகளுடன் சுற்றித் தலையில் சொருகிக் கொள்வர். அவர்கள் வீட்டின் பின்னாலுள்ள பாரிய மரப்பலகைகளால் ஆன நீர்த் தொட்டிகளில் சோப்பின் நுரைகள் மத்தியில் துணிகளைத் தோய்த்துப் பிழிந்து கொண்டிருப்பர். வெள்ளை நிறம் தொடங்கிப் பல நிற நுரைக்குழிழிகள் நீர்த் தொட்டிகள் மேல் பொங்கி மினுங்கியவாறு கரைகளில் பரந்தன. மற்றவர்கள் தமது மரக்காலணிகளை இழுத்து நடந்து சமயலறைக்கும் வெளியேயுமாக ஊறப்போட்ட துணிகளை ஒரு புறமும், சுடு தண்ணீரை மறுபுறமும் பாவிச் சென்றனர்.

சமயலறை அடுக்களையில் பாரிய உலோகப்பாத்திரங்களில் காரமான சோற்றுக் கஞ்சி வெப்பக்குமிழிகள் மேல் வந்து திறந்தவாறு, தயாராகியவாறு இருந்தது. அந்த உணவுதான் பாரிய சலவை நாட்களில் யாவருக்கும் பரிமாறப்படும்.

பாட்டி துணிகள் இருக்கும் அறைக்கும், சமயலறைக்கும் மாறிமாறிச் சென்று வந்து கொண்டிருந்தார். அதே சமயம் கூக்குரலில் இளம் பெண்கள், சிறுவர்களை சற்று வேகமாக வேலை செய்யுமாறும் அதட்டிக் கொண்டிருந்தனர். பாட்டியார் ஹான்ஸ் மற்றும் ஸ்வென் ஆகிய சிறுவர்களை ஓடியோடி விறகுக் குவியலில் இருந்து விறகு பெற்று வந்து அடுக்களைச் செந்தணல் நெருப்புக் குறையாது பார்த்துக் கொள்ளுமாறு ஏவினார்.

அதே சமயம் இரு இளம் பெண்கள் வெளியில் இருந்து வந்து தமக்கு இருக்கும் நீர்த் தொட்டிகள் போதாது, குறைந்தது இன்னும் ஒன்றாவது வேலை செய்து முடிக்கத்தேவை என்று அறிவித்தார்கள்.

இன்னுமொரு மரத் தொட்டியா? அது எங்கேயிருது இப்போது வரப்போகிறது? பக்கத்தில் இருக்கும் ஹோகன் வீடோ வீதி வழியாகப் போனால் சுமார் 10 மைல்களுக்கப்பால், ஆறு வழியாகச் சறுக்கு வண்டியில் போனால் 5-6 மைல்களாகவும் இருக்கிறது.  தாத்தா வேறு காலையில் எழுந்து கிறிஸ்டியன்சன் தொழிலிடம் குதிரைகள் வண்டியில் போய்விட்டார். எனவே ஒரேயொரு விதமாக இன்னொரு மர நீர்த்தொட்டி பெறுவதானால் ஆற்று வழியாகவே ஸ்வென் போக வேண்டும்.

பையன், நீர்த் தொட்டியும் காட்டு ஓநாய்களும்

ஸ்வெனிற்குப் பாட்டியார் சூடான கஞ்சியை அருந்தக் கொடுத்தார். அதன் பின்னர் கம்பளியால் நெய்த, தாத்தாவின் சொந்தமான, கடுங்குளிரைத் தாக்குப் பிடிக்கும் காதுகளைப் பாதுகாக்கும் மஃப்ளரைத் தாந்தார் பாட்டி. ஸ்வெனிற்கு பன்னிரண்டு வயது மாத்திரம் தான், பார்த்தால் அந்த வயதிற்கு அதிகமான பருமனாக இருந்தான்

சாதாரணச் சலவை செய்யும் மர நீர்த்தொட்டியானது  மிகவும் பெரியது. பெரிய மனிதரையும் அவர்கள் இடுப்பளவு கொள்ளக்கூடிய ஆழமானது. யாவரும் எப்படித்தான் இந்தச் சின்னப் பையன் இந்தப் பெரிய நீ்ர்த்தொட்டியை எடுத்து வரப் போகிறான் என்று யோசித்தார்கள். சகோதரன் ஹான்ஸ் பனிச்சறுக்கியை எடுத்துச் சென்றால் அதில் பாரிய நீர்த்தொட்டியை உறைந்த ஆற்றின் மேல் இழுத்து வரலாம் என்று யோசனை கூறினான். மேலும் ஹாகன் பெரு வீட்டில் உள்ள பெரிய பையன்களில் ஒருவன் நீர்த்தொட்டியை ஆற்றுக்கரை மட்டும் காவி வந்து பனிச்சறுக்கியில் ஏற்றி விட்டால், ஸ்வென் திரும்பியதும் ஹான்ஸ் கீழ் ஆற்றங்கரையில் இருந்து தாத்தா பாட்டி வீடு வரை எடுத்துவர உதவுவான்.

ஸ்வென் ஹாகன் பெருவீட்டை நோக்கிடச் செல்ல மதிய நேரம் ஆகிவிட்டது. அவன் பல மைல் தூரம் போகவேண்டியுள்ளது, ஆனால் அவனிற்குப் பிடித்த விடயம் ஆற்றில், ஏரியில், குளத்தில் விளையாடும் பனிச்சறுக்கல் விளையாட்டு. அவன் போகவும் வழிக்குச் சாதகமாகக் காற்றும் அடித்தது. அவன் பறவை போன்று தடையேதும் இன்றி அருமையாக மின்மினுக்கும் உறைபனிக்கட்டிகள் மேல் இலகுவாகச் சறுக்கிச் சென்றான். ஆற்றோர மரங்கள் யாவும் வெள்ளை நிறமாக வெளுத்தது, இடையிடையே சூரிய ஒளிபடும் உறைபனிப்பூக்கள் பல வெண் இரத்தினங்கள் போன்று வர்ண ஜாலத்துடன் மின்னின. ஆற்றங்கரை யாவும் ஏதோவொரு தேவதை பூமி போல இருந்தது ஸ்வெனிற்கு.

ஒரு மணித்தியாலத்திற்குள் ஸ்வென் தனது தூரத்தைக் கடந்து ஹோகன் வீட்டடி ஆற்றங்கரை வந்து சேர்ந்தான். ஹோகன் வீட்டில் அவர்கள் தரவிருக்கும் மர நீர்த்தொட்டி துப்பறவு செய்யப்படும் தருணத்தில் பையன் ஸ்வெனிற்கு சூடான கறுப்புக் காப்பி பரிமாறப்பட்டது. ஸ்வென் சந்தோசமாக வீ்ட்டில் இருக்கும் ஆண்கள், சிறுபையன்களுடன் ஆற்றில் சறுக்குவது பற்றியும், அடுத்த வாரம் வரவிருக்கும் சறுக்குப் போட்டி பற்றியும் சுவாரஸ்யமாக கதைத்துக் கொண்டான். அடுத்தவாரப் போட்டியோ கிராமங்களில் இருக்கும் பையன்களின் கனாவில் முதன்மையானது. வெற்றி பெறுபவர் புத்தம் புதிய பனிச் சறுக்கியைப் பெற்றுக் கொள்வார்கள். இதை விட வேறு எதுவும் பனிக்காலத்தில் முக்கியமில்லை கிராமத்தில் வாழும் சிறுவர்களுக்கு.

முதல் போட்ட திட்டப்படியே ஹோகன் வீட்டுப் பெரிய பையன் ஒருவன் நீர்த் தொட்டியைக் காவி வந்து அகலமான ஸ்வென் சறுக்கியில் ஏற்றிவிட்டான். ஸ்வெனும் சறுக்கியில் கயிறுகளை இறுக்கமாகக் கட்டிச் சறுக்க ஆரம்பிக்க பெரிய பையன் விளையாட்டாகச் சொன்னான்:.”ஸ்வென், காட்டு ஓநாய்கள் உன்னைச் சாப்பிடாமல் பார்த்துக் கொள் ஏனெனில் உனக்கு வருகிற கிழமை சறுக்கிப்போட்டியில் முதலிடம் பெற வாய்ப்பிருக்கிறது”.

இதற்குக் கெக்கெட்டம் விட்டுச் சிரித்து ஸ்வென் சொன்னான்: ”நீ பார்த்துக் கொண்டிரு, வந்த அதே வேகத்தில் நான் சென்று மறைந்தும் விடுவேன்”.

மீண்டும் பாட்டிவீடு நோக்கிச் சறுக்கத் தொடங்க கொடுங்குளிர் காற்று முகத்தை நோக்கி ஊடுருவி அடித்துச் சென்றது. வானில் பனிமுகில்கள் படிப்படியாக அடர்த்தியாகி, கார்மேகம் கறுப்பாகத் தோன்றத் தொடங்கியதும், ஸ்வென் தன்னால் இயன்றளவு விரைவாக உந்திச் சறுக்கிச் சென்றான். பாரிய மர நீர்தொட்டியையும் தாங்கிக் காற்றிற்கு எதிராகக் குலுங்கியவாறு செல்வது இலகுவான விடயமில்லை. அவன் கிட்டத்தட்ட மூன்று மைல்கல் கூடத் தாண்டியிராத நிலையில், பனி வேறு கொட்டத் தொடங்கியது. ஸ்வென் கண் திறந்து பெய்யும் பனியூடு பார்ப்பதே சற்று உபத்திரவம் ஆகியது. மேலும் அவன் நெளிந்து பரவும் உறிந்த ஆற்றின் ஒரு மூலையைத் தாண்டத் திடீரேன நிலமே அதிரும் பெரும் ஊளைச்சத்தம் கேட்டது.

ஸ்வென் உடல் சிலிர்க்க மிகவும் பயந்து விட்டான். அவன் சுற்றாரம் திரும்பிப் பார்க்கவே சற்றுத் தயங்கினான். அவன் பின் திரும்பிப் பார்த்த போது அச்சத்தால் உடல் நடுங்கியது. சிறிது தூரத்தில் பைன் மரங்களிடையே இடப்பக்க ஆற்றங்கரையில் மெல்லிய நீண்ட உருவத்துடைய ஓநாய் ஒன்று நின்று கொண்டிருந்தது. ஸ்வென் அதனை நோக்கித் தன் பார்வையைச் செலுத்த, அவனைப் பார்த்து அந்த ஓநாய் இன்னொரு முறை நீண்ட ஊளையிட்டது. இது பசியால் வந்த ஊளை மாத்திரமல்ல என்று ஸ்வென் நினைத்தான், அது மற்ற ஓநாய்களையும் அழைக்கும் சைகையென்று தோன்றியது அவனுக்கு. அவன் சிந்தனை பிழையானதாக இருக்கவில்லை, உடனடியாக இன்னொரு ஓநாய் ஊளையும் சேர்ந்து கேட்கத் தொடங்கியது.

ஸ்வென் தற்போது தனது சறுக்கும் வேகத்தை இருமடங்காக்கினான். அவன் அவ்வாறு செல்லும் பொழுது தான் சிறுவயதில் ஓநாய்கள் குணாதிசயம் பற்றிக் கேட்ட கதையை நினைவில் கொண்டான். அதாவது ஒற்றையாகப் போகும் பயணியை ஓநாய்கள் விடாமல் தொடரும். இறுதியில் பசியான ஓநாய்க் கூட்டம் ஒருங்கிணைந்து இரையைக் கடித்துக் குதறி, சிதறடித்துச் உட்கொள்ளும்.

தற்பொழுது ஒரு ஓநாய் ஸ்வென்னை நிச்சயமாகக் கரையோரமாகத் தொடர்கிறது. அது படிப்படியாக ஸ்வெனின் வேகத்திற்குச் சமராகத் துரத்தத் தொடங்குகிறது. அடுத்த மலைச்சாரலில் ஸ்வெனிற்குத் தாத்தா வீடும் தெரிகிறது. அவன் ஒரேயெண்ணம் ஓநாய் அவனைப் பிடிக்கும் முன்னர் வீட்டுக்குப் போய்ச் சேர்வது. சற்று இடது புறம் திரும்பி, பார்வையை மேலெடுத்துப் பார்த்த பொழுது இன்னும் இரண்டு ஓநாய்கள் அவன் போகும் திசையை நோக்கிப் பாய்ந்து வருவதையும் உணர்ந்து கொண்டான்.

தற்பொழுது ஓநாய்கள் அவன் செல்லும் வேகத்தை விட அதிக வேகத்தில் துரத்தத் தொடங்கின. சில நொடிகளில் முதல் ஓநாய் சில அடிகளிற்குப் பின்னால் நெருங்கித் துரத்தத் தொடங்கியது. ஸ்வென் அபாயக் கண்களோடு சுற்றாடலை நோக்கினான். பக்கத்தில் அவனிற்கு உதவ ஒருவரையும் காணவில்லை. அவன் இன்னும் வீட்டில் இருந்து கணிசமான தூரத்திலேயே இருந்தான், இதனால் அவன் பெரிதாகச் சத்தம் போட்டு அழைத்தாலும் அடிக்கும் காற்றில் அவன் குரல் வீட்டாருக்கும் கேட்காது. எனினும் அவன் இரண்டு மூன்று தடவை ”உதவி” என்று அபாயக்குரலில் அழைத்துப் பார்த்தான். ”ஹா-ன்ஸ், ஹா-ன்ஸ், வந்து உதவுடா, வந்து உதவுடா, ஹா-ன்ஸ்”. ஆனால் ஒரு பதிலும் வரவில்லை. மேலும் அடிக்கும் காற்று அவன் பக்கம் திருப்பியும் விட்டது. மிகவும் பயனற்ற முயற்சி.

இப்போது முதல் ஓநாய் ஸ்வென் அருகாமையில் வந்திருந்தது, அதன் பளிங்குக் கண்கள் சிவப்பு எரிதணல் போன்று தோன்றியது. அதே சமயம் அருகாமையில் மற்றைய ஓநாய்களும் நெருங்கி வந்து அடியெடுத்து வைக்கத் தொடங்கின. பெரும் பசியோடுள்ள இந்தக் குரோத நாய்களிடம் இருந்து ஓடித்தப்பிக்க வழியே இல்லை என்பதை உணர்ந்து கொண்டான் ஸ்வென்.

அப்போது தான் தன்னிடம் இருக்கும் பாரிய மர நீர்தொட்டி ஞாபகத்திற்கு வந்தது. உடனே மின்னல் வேகத்தில் மரத்தொட்டியை சறுக்கியில் இருந்து விடுவித்து  உறை பனித்தரையில் குப்புரக் கவிழ்த்து அதன் கீழ் தவழ்ந்து சென்று மூடி மறைந்து கொண்டான்.

சிலமணி நேரத்திற்கு அதனுள்ளேயே அடங்கியிருந்தான் ஸ்வென். தாத்தா பொழுது மறையும் அந்திமாலை நேரம் தம் பயண வேலை முடித்து வந்தடைந்திருந்தார். கார்த்திகை மார்கழிகளில் வெகு விரைவில் அந்திமாலை இருள் சூழ்வது வழக்கம். பனிக்கால வாழ்க்கை வட துருவத்தின் அருகில் இருக்கும் மேற்கத்திய பிரதேசங்களில் பெரும்பாலும் இருளிலேயே கழிகிறது. வீட்டில் யாவரும் ஸ்வென் இன்னும் வந்து சேராததை நினைத்து வெகுவாகக் கவலைப்படத் தொடங்கினர்.

பாட்டியாரும் அடிக்கடி உறைந்த ஆற்றங்கரை நோக்கிக் கண்ணோட்டம் செய்து நிம்மதியற்ற மூச்சு விட்டார். வழக்கமாக ஸ்வென் ஆற்றோரம் பனியில் விளையாடுவது தெரியும் பாட்டிக்கு. அடுத்த கண்ணோட்டத்தில் ஏதோ ஆற்றடியில் சிறிதாக அசைவது போலத் தெரிந்தது. பாட்டி இதைத் தாத்தாவிற்குச் சொல்ல அவர் தனது பைனாக்குலர்  எடுத்து ஆற்றோரம் நோக்கினார்.

தாத்தா விநோதமாக கவிழ்ந்த மர நீர்த்தொட்டியும், ஆளில்லாத பனிச் சறுக்கியையும் அவதானித்தார். அந்த மரத்தொட்டிக்கு அருகாமையில் முதலில் இரண்டு மூன்று நாய் போன்ற உருவங்களையும் கண்டார். ஆயினும் தாத்தா தன்னைத்தானே சுதாரித்து ஓநாய்கள் நீர்த் தொட்டிக்குள் மறைந்திருக்கும் சிறுபையனைத் தாக்கவுள்ளன என்பதை ஊகித்துக் கொண்டார்.

தாத்தா தனது துப்பாக்கியை எடுக்கச் சென்றார். ஹான்ஸும் கொட்டிலில் உள்ள தனது துப்பாக்கியை எடுக்க ஓடினான்.அதே சமயம் மேலும் கூலிக்கு வேலையாளர்கள் பண்ணையில் வெப்பத்தில் குளிர் காய்ந்து கொண்டிருந்தவர்கள் விறகுக்குவியலிலிருந்து பெரும் தடிகளை எடுத்து ஓடிவந்தனர். பாட்டியும் வீட்டுப் பெண்களும் கம்பளி  மற்றும் வெப்பத் தணற்கற்களைக் (pure hot bricks) கொண்ட பாத்திரங்களையும் ஸ்வென் கட்டில் அடியில் தயார் செய்தனர். சமையலறையில் கேத்திலில் பாரிய பாட்டி மருத்துவத் தேனீர் தயாராகியது.

தாத்தாவும் மற்றையவர்களும் அபாயத்திற்குள்ளான சிறுவனை மீட்டு வரும் வரையில் பெண்கள் சமையலறையில் கூடினர். அப்போது பாட்டி “அந்தச் சுட்டிப் பையன் ஸ்வென் தானாகத் தன்னைக் கொடும் ஓநாய்களிடமிருந்து மர நீர்த்தொட்டி கவிழ்த்துக் காப்பாற்றிக் கொண்டது, இந்தப் பனிக் காலம் முழுக்கவும் கதைக்கக் கூடிய புத்திசாலிப் பையனின் புகழ்கதை” என்று கூறினார். அவள் சொன்னது போல முதற்பூக்கள் தரையில் இளவேனிலில் பூக்கும் வரை இந்தக் கதை வட மினசோட்டா முழுவதும் கிராமம் கிராமாகக் கதைக்கப்பட்டதாம்.

–        யோகி அருமைநாயகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad