\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பொன்னம்பலம் ராமநாதன்

Ramanathan_420x420இங்கிலாந்திடமிருந்து இலங்கை நாட்டின் விடுதலைக்காகப் பல தலைவர்கள் உருவாகி அரும்பணியாற்றியுள்ளனர். அவர்களில் தமிழ்த் தலைவர்கள் பலரும் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவர் சர். பொன்னம்பலம் ராமநாதன்.

1851ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினைந்தாம் தேதி கொழும்பில் பிறந்தவர் ராமநாதன். இவரது தந்தை கேட் (ராச வாசல்) முதலியார் அருணாச்சலம் பொன்னம்பலம். தாயார் செல்லாச்சி அம்மாள். தந்தை ஆங்கில அரசாங்கத்தில் ஒரு உயர் பதவியில் இருந்ததாலும்,வியாபாரம் நடத்தி வந்ததாலும் ராமனாதனின் பால்ய நாட்கள் சுகமாகவே அமைந்தன. கொழும்பு ராயல் கல்விக்கழகத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து, பின்னர் மெட்ராஸ் பிரெசிடென்சி கல்லூரியில் உயர் கல்வி பயின்றார். சட்டப்படிப்பை முடித்த பின்பு, கொழும்பு நீதிமன்றத்தில் வழக்குரைஞராக வாழ்க்கையைத் துவங்கினார். பணியில் சேர்ந்ததும், அந்த நீதிமன்றத்தில் முப்பது வருடங்களாக நடந்த வழக்குகளை ஆராய்ந்து அவற்றுக்கான அறிக்கைகளைத் தயாரித்தார். இது அனைவரின் கவனத்தையும் அவர் பக்கம் திருப்ப உதவியது.

சட்ட மேலவை உறுப்பினரும் அவரது தாய் மாமனுமான சர். முத்துக் குமாரஸ்வாமி ஒய்வு பெற்ற போது, ஆங்கில அரசாங்கம் ராமநாதனை அங்கீகரிக்கப்படாத சட்டமேலவை உறுப்பினராக்கியது. பின்னர் 1879 ஆம் ஆண்டு அக்கால சிலோனின் சட்டசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ராமநாதன் KCMG (Knight Commander of the Order or Michael & George) எனும் வீரத்திருத்தகைப் பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டதுடன், இங்கிலாந்து அரசரின் சட்ட ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.

1897ம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசி விக்டோரியாவின் பொன்விழாவைக் கொண்டாடியபோது இங்கிலாந்தின் பிரதம மந்திரி, லார்ட் சாலிஸ்பரி (Lord Salisbury), தங்களது காலனி ஆதிக்கத்திலிருந்த நாடுகளிலிருந்து பிரதிநிதிகளை அழைக்க எத்தனித்து, சிலோனின் ஒரே பிரதிநிதியாகப் பொன்னம்பலம் ராமநாதனை அரசியின் முன்னிலையில் உரையாற்ற அழைத்தார். தனது வழக்கமான நீண்ட கோட்டும், மிடுக்கான தலைப்பாகையும் அணிந்திருந்த ராமநாதன் பேசத்துவங்கி அவையிலிருந்த அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகச் சிறப்பானதொரு உரையாற்றினார். அரசர், அரசி மற்றும் அங்குக் கூடியிருந்த அனைத்து கனவான்களும் ராமநாதனின் ஆங்கிலப் புலமையையும் நாவன்மையையும் கண்டு அசந்து போயினர். ராணி விக்டோரியா ராமநாதனின் பேச்சுத் திறமையை வியந்து பாராட்டி அவருக்குத் தங்கப் பதக்கம் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார். இதற்குப் பின் 1930களில் இதைப் போன்ற பெருமையைப் பெற்றவர் இந்தியாவைச் சார்ந்த ஸ்ரீனிவாச சாஸ்திரி மட்டுமே. இவர்கள் இருவர் மட்டுமே பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தினால் ‘வெள்ளி நாக்கு’ படைத்தவர்கள் (Silver Tongued Orator) என்று அறியப்பட்டார்கள். சிலோனின் சொலிசிட்டர் ஜெனரலாகவும் 1892 முதல் 1906 வரை பணியாற்றியுள்ளார் ராமநாதன்.

1911ல் ராமநாதன் அரசியலில் நுழையக் கூடிய சூழ்நிலை உருவானது. சிலோனின் கல்வியாளர்களுக்கான உறுப்பினர் பதவித் தேர்தலில் தன்னை எதிர்த்துநின்ற சிங்களர் ஒருவரை வென்று சாதனை படைத்தார்.

தமிழ் மன்னன் விஜயராஜசிங்கனின் அரசு வீழ்த்தப்பட்டதன் நூற்றாண்டைக் கொண்டாடவும், புத்த ஜெயந்தியைக் கொண்டாடவும் 1915 பெளத்தமதத்தினர் பெரிய அளவில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவின் ஊர்வலம் இஸ்லாமிய மக்களின் தொழுகை நடக்கும் மசூதியின் வழியாகச் சென்றால் பிரச்சனை ஏற்படலாம் என்றெண்ணிய ஆங்கிலேயக் காவல்துறை மாற்று வழியில் செல்லப் பணித்தது. இதனைக் கிண்டல் செய்ததினால் இருபிரிவினருக்கும் இடையே சிறியளவில் மூண்ட சண்டை பெரிய இனக்கலவரமாகப் பரவியது. நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். பலமாகாணங்களுக்கும் பரவிய இந்தக் கலவரத்தை அடக்கப் பிரிட்டிஷ் அரசாங்கம் பல சிங்கள, பௌத்த தலைவர்களைக் கைது செய்தது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பல முக்கியச் சிங்களத் தலைவர்கள் கைதிகளாகப் பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டனர். கலவரம் ஏற்படுத்தியவர்களைக் கைது செய்ததாகக் கூறினாலும், நிஜத்தில் தங்களது அரசாங்கத்தை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ எதிர்த்து வந்த பல சிங்களத் தலைவர்களையும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திச் சிறையில் தள்ளிப் பழி வாங்கத் துடித்தது பிரிட்டிஷ் அரசு. நாலாயிரத்துக்கும் அதிகமானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். இதனைக் கண்டு வெகுண்ட ராமநாதன், கலவரத்தில் ஈடுபட்ட சிங்களவர்கள் தரப்பில் தவறு இருப்பினும் நியாமற்ற முறையில், அந்தச் சம்பவத்தில் ஈடுபடாத பலரையும் கைது செய்திருப்பதைக் குறிப்பிட்டு சிலோனிலிருந்த ஆங்கில ஆளுநரை எதிர்த்துப் போராடினார். இதனை ஒட்டி நடந்த வழக்கை சிலோனில் நடத்தினால் அசம்பாவிதம் ஏற்படும் என்பதால் இங்கிலாந்தில் நடத்தினார்கள். ஆங்கிலேய அரசை எதிர்த்து சிங்களர், தமிழர் என அனைவரையும் இணைத்து, விடுதலை வேட்கையைத் தூண்டக் கூடிய வாய்ப்பாக இதைக் கருதிய ராமநாதன், கைது, கொலை அச்சுறுத்தல்களை மீறி இங்கிலாந்துக்குச் சென்று வாதாடி மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த சிங்களத் தலைவர்களை மீட்டு வந்தார். இதன் விளைவாக அந்த ஆளுநர் இங்கிலாந்துக்குத் திருப்பியழைக்கப்பட்டார். ராமநாதன் சிலோனுக்குத் திரும்பிய போது அவரை வரவேற்க ரதம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. குதிரைகளுக்குப் பதிலாகப் பலரும் இணைந்து ரதத்தை இழுத்துச் சென்று மாபெரும் வரவேற்பளித்தனர்.

ஆனால் ராமனாதனின் ஒன்றுபட்ட சிலோனின் விடுதலை வேட்கைக்கான கணிப்புத் தவறிப் போனது. இன, மத அடிப்படையில் புதிய பிளவுகள் தோன்றின. இருப்பினும் சோர்ந்து போகாமல் ‘சிலோன் சீர்திருத்த லீக்’ என்ற அமைப்பினை உண்டாக்கி நாடு முழுதும் பயணம் செய்து இனவேற்றுமைகளைக் களைய முயன்றார். இந்தியாவில் ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ உருவாகி விடுதலைக்குப் போராடுவதைப் போல 1919 ம் ஆண்டு ‘சிலோன் தேசிய காங்கிரஸைத்’ தோற்றுவித்தார். ஆனால் மக்களிடம் இனவுணர்வு புரையோடிப் போயிருந்தது. ஆங்கிலேய அடக்குமுறை எதிர்ப்பை இந்த இனவுணர்வு மங்கச் செய்துவிட்டது. ராமநாதன் உருவாக்கிய ‘சிலோன் தேசிய காங்கிரஸ்’ தலைவர் பதவி வகிக்க அவர் லாயக்கற்றவர் என்று புறக்கணிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டார். தமிழராக இருந்தாலும் தமிழர், சிங்களர் ஒற்றுமையை வளர்க்கும் விதமாகச் சிங்கள கலாச்சாரத்தையும், பழமையையும் பாதுகாக்கப் பல வழிகளிலும் உழைத்தவர் அவர். பெருமளவில் நிதி திரட்டி சிலோனின் பௌத்தக் கல்லூரியான ‘ஆனந்தா கல்லூரி’யை உருவாக்கியவர். சிங்களர், தமிழர் யாராக இருந்தாலும் தமது மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றி வாழ வேண்டும் என்று குரல்கொடுத்து மற்ற கலாச்சாரங்களையும், மொழிகளையும், மத நம்பிக்கைகளையும் மதிக்கவேண்டும் என்ற கொள்கையை நிலை நாட்ட நினைத்தவர். மக்கள் அவரது இந்த உயர்ந்த தத்துவங்களையும், கருத்தையும் ஏற்கும் நிலையில் இல்லை.

1921ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ராமநாதனுக்கு பிரிட்டிஷ் அரசின் உயரிய சிவில் விருதான ‘சர்’ பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

ராமநாதனின் தம்பி சர். பொன்னம்பலம் அருணாச்சலமும் சிலோனின் விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இருவரின் குறிக்கோளும் ஒன்றுபட்ட நாடாக ஆங்கிலேயரிடமிருந்து விடுபடவேண்டும் என்பதாக இருந்தாலும் அவர்களின் வழிமுறைகள் மாறுபட்டிருந்தன. இறுதியில் இருவரின் கனவுகளும் தரைமட்டமாக்கப்பட்டன.

1930ஆம் டோனோமார் திட்டம் (Donoughmore Commission) பரிந்துரைத்த வாக்காளர் விதிமுறைகள் சிறுபான்மையினரை, குறிப்பாகத் தமிழர்களை ஒதுக்குவதை மாற்றும்படி பிரிட்டிஷ் அரசாங்கத்தாரிடம் வாதிட்டார் ராமநாதன். ‘Donoughmore Commission, Tamils No More’ என்ற நோக்கில் அமைந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். ஆனால் இந்த முறை அவரது கோரிக்கைகளை ஆங்கில அரசு நிராகரித்தது.

அரசியல் மட்டுமல்லாது சிறுபான்மையினர் கல்வி கற்றவர்களாக மாற வேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தவர் ராமநாதன். சிங்களக் கல்லூரி உட்படப் பல கல்லூரிகளை நிறுவினார். ‘பெராதினிய பல்கலைக்கழகம்’ (Paradenia University) உருவாவதற்கு முக்கியக் காரணம் ராமநாதனே.

பதினெட்டாம் நூற்றாண்டிலேயே அரசியலில் ஆன்மிகத்தைப் பின்பற்றியவர் ராமநாதன். அனைத்து மக்களும் சமம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பிரிவினைகள் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியவர். சைவ மதத்தைச் சார்ந்தவரான ராமநாதன், கொழும்பில் தனது தந்தையார் உருவாக்கிய பொன்னம்பலவானேஸ்வரர் கோயிலின் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டார். மண்ணாலும், செங்கலாலும் உருவாக்கப்பட்ட அந்தக் கோயிலை முற்றிலும் கருங்கற்கள் கொண்ட சுவர்களால் மாற்றி, மிகுந்த கலைநயமும், கட்டிட நுட்பமும் கொண்ட கோபுரங்களைக் கட்டினார். விவேகானந்தரைப் போல், ராமநாதனும் அமெரிக்காவில் இந்து மதத்தைப் பரப்புரை செய்தார். விவேகானந்தர் சமஸ்கிருத வேதாந்தங்களைப் பற்றிப் பேசி இந்து மத விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தாலும் ராமநாதன் தமிழ்ச் சைவ சித்தாந்தங்கள் பிரபலமடைய உதவினார். கிறித்துவ மதத்தினை ஆழ்ந்து கற்றறிந்தவர் ராமநாதன். அந்நாட்களில் கிறித்துவப் புத்தகங்களில் இருந்த பிழைகளைச் சுட்டிக் காட்டித் திருத்துமளவுக்கு அம்மதத்தின் நுட்பங்களை அறிந்திருந்தார். அவர் எழுதிய பல புத்தகங்களில் கிறித்துவ மதப் புத்தகங்களும் அடங்கும்.

ராமநாதன் 1874ல், கொழும்புவைச் சேர்ந்த நன்னித்தம்பி முதலியாரின் மகள் செல்லாச்சியை மணந்தார். இவர்களுக்கு ராஜேந்திரா, வர்ணதேவா என்று இரு பிள்ளைகள். தனது மனைவி செல்லாச்சியின் மறைவுக்குப் பின்னர் ஹாரிசன் எனும் ஆங்கிலேயப் பெண்ணை மணந்தார் ராமநாதன். ஹாரிசன் ராமநாதனின் அமெரிக்கப் பயணத்தின் போது அவரது செயலாளராக உடன் சென்றவர். இந்து மதத்தின் மீது கொண்டப் பற்றுதலால் திருமணத்துக்குப்பிறகு தனது பெயரைத் திருமதி. லீலாவதி ராமநாதன் என்று மாற்றிக் கொண்டார். முழுதும் சைவச் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்ட அவர், அசைவம் சாப்பிடுவதை நிறுத்திச் சைவராகவே மாறினார். ராமநாதன் பல புத்தகங்களை எழுதிய போது அவரின் உடல்நலத்தைப் பாதுகாத்து வந்ததோடு, பெரும் உதவிகள் செய்தவர். ராமநாதனின் மறைவுக்குப் பிறகு லீலாவதி இந்தியாவில் கொடைக்கானலில் வசிக்கத் துவங்கினார். தினமும் காலை வேளைகளில்அங்கிருந்த குன்றுகளில் நின்று பழனி முருகன் கோயில் கோபுரத்தினைக் கண்டு தரிசித்து வந்தார். காலப்போக்கில் வளர்ந்த மரங்களாலும், பனியாலும் கோபுரத்தைக் காண முடியாமல் போனபோது கொடைக்கானலில் முருகன் கோயில் ஒன்றினைக் கட்டவேண்டுமென்ற உந்துதலில் குறிஞ்சி முருகன் கோயிலைக் கட்டினார்.

இப்படித் தள்ளாத வயதிலும் தன்னலம் பாராமல் உழைத்த பொன்னம்பலம் ராமநாதன் 1930ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி மரணமடைந்தார்.

ஒருங்கிணைந்த சிலோன் தீவு முழுமைக்கும், அதன் அனைத்து மக்களுக்கும், அவர்களது நலனுக்கும் தன் சொல், செயல், சிந்தனை எல்லாவற்றையும் அர்ப்பணித்து உழைத்த சிலோனின் முதல் தமிழ்த் தேசியத் தலைவரான பொன்னம்பலம் ராமநாதனின் மரணம் இலங்கையின் வரலாற்றில் ஒரு சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

டோநோமோர் சீர்த்திருத்தங்களை எதிர்த்துக் குரல் கொடுத்த ராமநாதன் தனது உரையை முடிக்கும் போது சொன்ன வரிகள் இவை.

“நான் சொல்ல வேண்டியவற்றைத் தெளிவாகச் சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன். நிற்கக் கூட முடியாத இந்த நிலையில் ‘எதுவும் எக்கேடோகெட்டுப் போகட்டும்’ என்று சொல்லி அமர்வது எளிதாக இருந்திருக்கக் கூடும். ஆனால் நான் அப்படி வளர்க்கப்படவில்லை. எனது கடைசி மூச்சை சுவாசிக்கும் வரை சிலோனில் நடக்கும் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுப்பேன். எனது நீண்ட உரைக்கு அதுவே காரணம்”.

– ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad