ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-13
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-12)
அந்நிய மனோநிலை உணர்வு
புதிய உணர்வு நிலைகளும் அந்நிய மொழியின் ஆதிக்கமும் தமிழ்க் கவிதை மரபில் சில மாற்றங்களை விளைவிக்கத் தொடங்கி விட்டன. மேற்குலகிற்குப் புலம்பெயர்ந்து சென்றவர்களில் அதிகமானவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப் பட்டனர். எம்மவர்களின் நாளாந்த வாழ்க்கை மேலைத்தேச நாட்டினர் போல் அமைந்ததல்ல. சமூகப் பொருளாதார ரீதியாகக் குடும்ப உறவுகளுடன் பின்னிப் பிணைந்த வாழ்க்கை எமக்குத் தனித்துவமானது. ஆனால் முன்பின் அறிமுகமில்லாத ஒரு நாட்டில் முற்றிலும் புதிதான ஒரு வாழ்வியற் சூழலில் வாழ நிற்பந்திக்கப் பட்டமையினால் ஒருவிதமான அந்நிய மயப்பட்ட உணர்வு (alienation) அவர்களிடையே குடிகொண்டது. காலப்போக்கில் இவ்வுணர்வுச் சித்திரிப்பினைக் கவிதைகள் முதலிய இலக்கிய வடிவங்களினூடாகப் பிரதிபலிக்கத் தொடங்கினர்.
“உருத்துக்கள் உறவுகள்
நெருப்புக்குள் வாழ…
அவர்கள் இருப்பின் சுகமறிய
காலைகள் விடிந்ததும்
கடிதங்கள் தேடுகிறோம்
வீட்டுக்கு வெளியே குளிர் கொட்ட
நெஞ்சுக்கூடு நெருப்புக்குள் அவியுது.
இருப்பதற்காய் வாழாமல்
மற்ற மனிதரைப் போல்
வாழ்வதற்காய் இருக்கும்
காலங்கள் வரவேண்டும்.”1
புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களில் பலர் வருடக் கணக்கில் குடும்பத்துடன் நேரடித் தொடர்புகளைப் பேண முடியாதவர்களாகக் கடிதங்களிலேயே குடும்பம் நடத்துபவர்களாக வாழ்ந்து வருகின்றனர். திருமணமான புதிதில் மனைவியை விட்டுப் பிரிந்து புலம்பெயர்ந்த சிலர் தனக்குப் பிறந்த குழந்தையைக்கூட பத்துப் பதினைந்து வருடங்களின் பின் பார்க்கவேண்டிய அவலத்துக்குள் தள்ளப்படுகின்றனர். இத்தகைய ஒரு சூழலில் சோகங்களைச் சுமத்தலையும் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒட்டுமொத்தக் குரலைப் பிரதிபலிப்பதாக நெருப்பாய் சுடுகிறது இந்தக் கவிதை. ‘வாழ்வதற்காய் இருக்கும் காலம் வரவேண்டும்’ என ஏங்கி இறைஞ்சிக் கேட்பது உச்சக்கட்ட வேதனையின் வெளிப்பாடாக அமைகின்றது.
“அழையா விருந்தாளிகள்”2 என்ற தலைப்பிலான கவிதை, தாயகத்தைப் பிரிந்து சென்ற ஒரு சராசரிக் குடியானவனின் அந்நியமாகிப் போன உணர்வு நிலையினைப் பிரதிபலிக்கின்றது.
என்னதான் கடினமான வேலை செய்து உழைத்தாலும் அந்நிய நாட்டில் தாம் அழையா விருந்தாளிகள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இக்கவிதை. இதில் வரும் ‘வெம்மை’ என்ற குறியீட்டுச் சொல்லின் மூலம் அவனுடைய உள்ளத்துணர்வுகளையும் அறியக்கூடியதாகவுள்ளது. தாய்நாட்டின் பிரிவு அவனுக்கு வேதனையைத் தந்தது. அவை நினைவுகளாக மனதில் ஒட்டிக் கொண்டதால், எதிர்காலக் கனவுகள் அத்தனையும் அப்படியே தொலைந்து போய் ஓர் நடைப்பிணமாக யாருமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லி, அவர்களின் மனோநிலையைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைகின்றது.
அடிக்குறிப்புகள்
- திருநாவுக்கரசு.ப, (தொ.ஆ), புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்.64
- மேலது, பக்.பக்.89
-தியா-