மதங்கள் கடந்து மனிதம் தொட்டக் குரல்
‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்று உலகோரைத் தன் கம்பீர வெண்கலக் குரலால் சுண்டியிழுத்தவர் இறைவனடி சேர்ந்து விட்டார்!
தமிழகத்தில், 1925ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25ம் நாள், ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணத்தில் முஹம்மது இஸ்மாயில், மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் நாகூர் ஹனிஃபா. இவரது இயற்பெயர் இஸ்மாயில் முஹம்மது ஹனிஃபா. தனது இயற்பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனிஃபா என்று வைத்துக் கொண்டார். அவரது தந்தையின் பூர்விகமான நாகூர் சேர்ந்து கொள்ள நாகூர் ஹனிஃபா என்ற பெயர் பிரபலமடையத் தொடங்கியது.
முஹம்மது இஸ்மாயில் மலேசியாவில் பணிபுரிந்து வந்தார். அவர் சிறந்த பாடகர். ஹனிஃபாவின் மூத்த சகோதரரும் பாடக் கூடியவர். ஆனால் இருவரும் தொழில்முறைப் பாடகர்களாகத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. வீட்டில் நிலவிய வறுமைச் சூழ்நிலையால் சிறு வயதில் மேடையேறினார் ஹனிஃபா. அவரது பதிமூன்றாம் வயதில் திருவழுந்தூரில் முதல் கச்சேரி, மாட்டு வண்டியே மேடையாக அமைக்கப்பட்டு அரங்கேறியது. அவரது கணீர்க் குரல் அனைவரையும் கவர்ந்து விடவே அடுத்தடுத்து பல வாய்ப்புகள் அணிவகுத்து வந்தன.
தொடக்கக் காலத்தில் அண்டை வீடுகளில் நடந்த அவரது கச்சேரிகள், திருமண விழாக்கள், கொண்டாட்டங்கள் என வளர்ந்தது. சில மாதங்களில் உள்ளூர் தர்காவில் இஸ்லாமிய வழிபாட்டுப் பாடல்களைப் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. மிகுந்த புனிதமாகக் கருதப்பட்ட இந்தப் பணியை, இளவயதில் திறம்பட ஆற்றினார் என்றால் அது மிகையில்லை. ஒலிவாங்கி இல்லாமல் உரத்த குரலில் பாட இதுவே அவருக்குச் சிறந்த பயிற்சியாக அமைந்தது.
சுயமாகப் பாடத் துவங்கிய ஹனிஃபா, சில காலம் நாகூரைச் சேர்ந்த எஸ்.எம்.ஏ. காதிர் என்பவரிடம் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்றார். இருப்பினும் திருமண நிகழ்ச்சிகளில் ஹனிஃபா பாடிய பல பாடல்கள், ரசிகர்களின் விருப்பப்படி திரைப்படப் பாடல்களின் மெட்டுக்களிலேயே அமைந்திருந்தன. அக்காலத்தில் திருமண விழாக்களில் இவர் பாடிய பெரும்பாலான பாடல்களை ஆபிதீன் என்பவர் இயற்றித் தந்தார். ஒரு பாடலை முதல் முறையாகப் பாடும் பொழுது மட்டுமே சிறிது ஒத்திகை தேவைப்படும் ஹனிஃபாவுக்கு. அதற்குப் பின் அப்பாடல்களையும், மெட்டுக்களையும் மனனம் செய்து விடும் திறன் பெற்றிருந்தார் ஹனிஃபா.
நாளடைவில் இவரது புகழ் மற்ற ஊர்களுக்கும் பரவ ஒரு மாதத்தில் நாற்பது நாற்பத்தியைந்து கச்சேரிகள் செய்ய வேண்டிய அளவுக்குப் பணிச்சுமை மிகுந்தது அவருக்கு. ஒலிப்பதிவு நாடாக்கள் இல்லாத நாட்களவை. ஆகையால் பல ஊர்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து, மேடைகளில் தனிப்பாடகராக, உச்சஸ்தாயில், நான்கு மணி நேரத்துக்குக் குறையாமல் பாட வேண்டியிருந்தது.
தனது பதின்மப் பருவகாலத்தில் அவரது தந்தை வழி உறவான அபூபக்கர் ராவுத்தர் என்பவரிடம், தொழில் கற்க திருவாரூர் சென்றார். அப்போது தான் அவருக்கு முத்துவேல் கருணாநிதியின் நட்பு கிடைத்தது. கருணாநிதி நடத்தி வந்த கையெழுத்துப் பத்திரிகையில் லயித்துப் போய் அவருடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டார் ஹனிஃபா. பின்னர் அவர் மூலமாகப் பெரியார், அண்ணாதுரை போன்றோரது அறிமுகம் கிடைத்துத் திராவிட கழகத்தின் மேல்நாட்டம் கொண்டு உறுப்பினர் ஆனார். தி.மு.க. தொடங்கப்பட்ட காலத்தில் மேடைகளில் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் ஹனிஃபாவின் உணர்வுப் பூர்வமான குரலில் ஒலிக்கும் ‘உதிக்கிறான் உதய சூரியன்’, ‘அண்ணா அழைக்கிறார்’ போன்ற பாடல்களைக் கேட்டுத் தான் கூட்டம் கூடும்.அக்காலத்தில் தி.மு. கழகத்தின் ‘போர் முரசு’ என்ற செல்லப் பெயரும் அவருக்குக் கிடைத்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதினாலும், கட்சி மேடைகளில் பாடி புரட்சி ஏற்படுத்த முயல்வதாகவும் பத்து முறைகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் எக்காலத்திலும் அவர் இஸ்லாமியப் பாடல்களைப் பாடுவதை நிறுத்தவில்லை.
தனது திருமணத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க கூட நேரமின்றி உழைத்தவர், முப்பது வயதைக் கடந்த பின் ரோஷன் பேகம் பீவி என்பவரை மணந்தார்.இவர்களுக்கு ஆறு பிள்ளைகள். அவர்கள் அனைவரையும் பார்க்கக் கூட நேரமின்றி அலைந்தாலும் மிகவும் கண்டிப்புடன் தனது பிள்ளைகளை வளர்த்தார் ஹனிஃபா. தனது பிள்ளைகள் படித்துப் புகழ் பெற வேண்டுமென விரும்பியதால் அவர்களை இசைத்துறையில் பயிற்றுவிக்கவில்லை அவர்.
இடையில் இஸ்லாமிய மதம் இசைக்கு எதிரானது என்ற ஒரு கருத்து வலுத்த போது அவரது மேடைப் பாடல்களுக்குச் சிக்கல் ஏற்பட்டது. இது போன்ற எதிர்ப்புகளைத் தனது இசை ஆளுமையாலும், ஆற்றலாலும் புறந்தள்ளினார். இந்த நாட்களில் ராசய்யாவின் (இளையராஜா) இசையில் உருவான பாடல்தான் ‘தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு; எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு’.
இதைத் தொடர்ந்து வெளிவந்த பாடலான ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ மத எல்லைகளை உடைத்தெறிந்து நல்லிணக்கத்தை உண்டாக்கியது என்றால் அது மிகையில்லை. காலத்தால் அழியாத, பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பாடல் இது. இதை எழுதியவர் ஹனிஃபாவின் நண்பரான அப்துல் சலாம் எனும் ஜவுளி கடை உரிமையாளர். ஹனிஃபா ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருந்தாலும் இந்தப் பாடலுக்குத் தனிச் சிறப்பு உண்டு. இந்தப் பாடல் அனைத்து மதத்தினருக்கும் பொருந்துகிற பாடல் என்று திருமுருக கிருபானந்த வாரியார் பலமுறை பாராட்டிக் கூறியுள்ளார். வானொலிகளில் காலை வேளைகளில் ஒலிபரப்பாகும் ஆன்மிகப் பாடல்களில் தொடர்ந்து பல ஆண்டுகள் இடம் பெற்ற பாடல் இது. கோயில், தேவாலயம், தர்கா எனவேறுபாடின்றி அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் இடம்பெற்ற பாடல்.
திரைப்படங்களிலும் அவ்வப்போது பாடி வந்தார் ஹனிஃபா. குலேபகாவலியில் அவர் பாடிய பாடல் இடம் பெற்றது. பாவ மன்னிப்புத் திரைப்படத்தில்‘எல்லோரும் கொண்டாடுவோம்’ பாடலின் இடையிடையே ‘கடலுக்குள் பிரிவுமில்லை கடவுளில் பேதமில்லை’ போன்ற வரிகளில் வரும் கம்பீரக் குரல் இவருடையது தான். படங்களில் பாட தொடர்ந்து வாய்ப்புகள் வந்த போதும், நேரமின்மையால் அவற்றை ஒதுக்கி வந்தார். திரையுலகம் அவரைப் பொதுவான பெயரில் பாடச் சொன்ன போது, தனது அடையாளத்தை இழக்க விரும்பாமல் அதை நிராகரித்தார் என்ற கருத்தும் உண்டு. நீண்டஇடைவெளிக்குப் பிறகு ‘செம்பருத்தி’, ‘ராமன் அப்துல்லா’ ஆகிய படங்களில் ‘கடலிலே தனிமையில்’, ‘உன் மதமா, என் மதமா’ என்ற பாடல்களைப் பாடியுள்ளார்.
தொடர்ந்து அரசியல் மேடைகளிலும் பாடி வந்தார் ஹனிஃபா. ஒரு புறம் ஆன்மிகப் பாடல்களைப் பாடி வந்தாலும், சமூகத்தில் நிறைந்திருந்த மூட நம்பிக்கைகளைப் பற்றியும் பாடினார். ஹனிஃபா நாத்திகம் பேசத் துவங்கிவிட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.
அவரது அரசியல் பணியில் அவருக்கு வஃக்பு வாரியத் தலைவர் பதவி தரப்பட்டது. பின்னர் வாணியம்பாடி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார். பல அரசியல் தலைவர்களுடன் மிக நெருக்கமான பரிச்சயம் இருந்தபோதும் ஒருவரிடமும் தனக்காக உதவிகள் கேட்டு நின்றதில்லை அவர். மாறாக நட்பின் காரணமாகப் பலருக்குத் தோள் கொடுத்து நின்றிருக்கிறார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது, மதுரைப் பல்கலைக் கழகம் வழங்கிய ‘இசைத்தமிழ்ச் செம்மல்’ போன்ற சிறப்பு விருதுகளுடன் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘இசை முரசு’ என்ற பட்டப் பெயரையும் பெற்றவர் ஹனிஃபா.
தொடர்ந்து மேடைகளில் உச்சஸ்தாயில் பாடி வந்ததால், பின்னாட்களில், அவரது இரு காதுகளும் கேட்கும் திறனை இழந்து போயின. தனதுகுடும்பத்தினருடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர் கடந்த ஏப்ரல் 8ம் தேதி சென்னையில் காலமானார்.
முறையாகச் சங்கீதம் பயிலாவிடினும் ஆன்மிகப் பாடல்கள் வழியே தனது கணீர்க் குரலால் மதச் சுவர்களை உடைத்தெறிந்து, கேட்கும் ஒவ்வொருவரும் கரைந்து போகச் செய்த ஹனிஃபா பூவுலகை விட்டுப் போனாலும், அவரது குரல் இசைக் கலையின் முகடுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
– ரவிக்குமார்