\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 10

Filed in இலக்கியம், கதை by on July 28, 2015 0 Comments

முன்கதைச் சுருக்கம்:

கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வர, கணேஷ் அதனைப் போலீஸ் அதிகாரி ராஜேந்திரனிடம் விளக்கி கார்டையும் ஒப்படைக்கிறான்.

ஆனால், ராஜேந்திரன் தனது பர்ஸ்ஸுடன் சேர்த்து அந்தக் கார்டைத் தவற விட்டுப் பின் அதனைப் பணத்திற்கு ஆசைப்பட்டு எடுத்த துப்புறவுத் தொழிலாளி மாசானின் வீட்டிற்கருகில் கண்டுபிடிக்கிறார். அதனைத் தோண்டி எடுக்கையில், அந்த எஸ்.டி. கார்டிற்கு அருகில், புதைக்கப்பட்ட ஒரு பெண் பிணமாகக் கிடைக்கிறாள். டாக்டர் தேசிகனின் மகளைக் கடத்தி வைத்து, தட்சிணா மூர்த்தியைக் கொலை செய்தால் புஷ்பாவை விட்டு விடுவதாக  மிரட்டி மருத்துவமனைக்குக் கடத்திவருகிறார் தனவந்தர் ராமச்சந்திரனும் அவரின் ஆட்களும். தட்சிணா மூர்த்தி படுத்திருந்த ரெகவரி அறையில் அவனைக் கொலை செய்ய முயலுகையில், கையும் களவுமாக சிறைப்படுத்தப்படுகிறார்கள். இதற்கு முன்னதாகவே செல்வந்தர் வேலாயுதமும் சிறைப்படுத்தப்பட்டிருகிறார்.  

இதற்கிடையில், கல்லூரிக்கு வந்த பாரதி கடத்தப்பட்டதை அறிந்த கணேஷ், நண்பனுடன் அவளைத் தேடிப் புறப்படுகின்றான். அதற்குள்ளாக பாரதி மீட்கப்பட்டு வீடு சேர்க்கப்படுகிறாள். வேலாயுதத்தின் நண்பரும், இந்தக் கடத்தலுக்குத் தலைமை தாங்கியவருமான ஆடிட்டர் விஸ்வனாத்தும் கைது செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்ட சபாரத்தினம் ஆசாரியின் மகன் வேலாயுதம் கைது செய்யப்பட்டவுடன் தன் தந்தை வேலாயுதம் கொடுக்கவிருந்த நகை ஆர்டரை வேண்டாமென்று மறுத்த விஷயத்தைப் போலீஸுக்குச் சொல்வது என்று முடிவெடுத்தான்.   

அதன் பிறகு என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

திங்கட்கிழமை அதிகாலை இரண்டு மணி:

இரண்டு மணி நேர கவனமான தோண்டலுக்குப் பிறகு, அந்தப் பெண்ணின் பிணம் முழுவதுமாக வெளியே எடுக்கப்பட்டிருந்தது. மண் தரையில் கிடத்தப்பட்டிருந்த பிணம், வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருக்க, ஃபாரன்ஸிக் ஆட்களும், மற்றும் சில போலீஸ்காரர்களும் அந்த இடத்தை அக்குவேர் ஆணிவேராகச் சோதனை போட்டுக் கொண்டிருந்தனர். பிணம் கிடத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றி வெள்ளை நிற சுண்ணாம்பினாலான கோடு போட்டுக் குறிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தைச் சுற்றி, வேறு எவரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக மஞ்சள் நிற நடாவால் கட்டி எல்லைக் கோடு போட்டிருந்தனர் போலீஸார். தோண்டியெடுக்கப்பட்ட பள்ளம் சகதியுடன் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பிணத்தின் வாடையும் சற்றுத் தூக்கலாக இருக்கவே, அங்கிருந்த அனைவரும் கைக்குட்டையால் மூக்கைப் பொத்திய வண்ணம் தங்களது வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். போலீஸ்காரர்கள் சுற்றியிருந்த பொது ஜனங்களை முடிந்த மட்டும் விரட்டிக் கொண்டிருந்தனர்.

ஒரு மூலையில் மண் தரையில் அமர்ந்திருந்தான் மாசான். அவன் கையிரண்டையும் சேர்த்து விலங்கு மாட்டப்பட்டிருந்தது. கமிஷனர் ராஜேந்திரனின் மணிப் பர்ஸைத் திருடியது என்ற குற்றச்சாட்டில் தொடங்கி, கொலை நடந்தது பதிவாயிருந்த எஸ்.டி. கார்டை மறைக்க முயன்றான் என்ற குற்றச்சாட்டாக வளர்ந்து, இப்பொழுது அதற்காக ஒரு பெண்ணைக் கொலை செய்து தான் வாழும் வீட்டிற்குப் பின்னால் குழி தோண்டிப் புதைத்து விட்டான் என்ற அபாண்டமான கொலைப்பழிவரை அவன் மேல் வீழ்ந்துள்ளது. அவன் அந்தக் கொலையைச் செய்யவில்லை என்று பலவழிகளிலும் யோசனை செய்யும் ராஜேந்திரனுக்குத் தோன்றினாலும், முழுமையாக அவனை நிரபராதி என்று விட்டுவிடும் நிலையில் அவரில்லை. தவிர, அது நீதிமன்றத்தின் வேலை என்பதில் உறுதியாக இருப்பவர் அவர். காவலுக்காக ஒரு கான்ஸ்டபிள் அருகிலேயே நின்று கொண்டிருக்க, சற்றுத் தொலைவில் முந்தானையால் மூக்கைத் துடைத்துக் கொண்டிருக்கிறாள் மாசானின் மனைவி. “ஐயோ, அதுவே வோணான்னு சொல்லிகினே இருந்துச்சே… நான் தான் கேட்டுக்காம போனனே…” கான்ஸ்டபிளின் அதட்டலுக்குப் பயந்து சற்று அமைதி காக்கத் தொடங்கினாள் ஆனாலும், அழுவது மட்டும் நிற்கவில்லை.

பிணத்தின் முகத்தை நன்றாகக் கழுவி வெளிச்சம் போட்டுப் பார்க்கையில், இறந்து கிடப்பது டாக்டர் தேசிகனின் மகள் டாக்டர் புஷ்பா என்று உடனடியாக உணர்ந்து கொண்டார் ராஜேந்திரன். டாக்டரின் குடும்பத்திற்கு அவர் குடும்ப நண்பர் என்ற முறையில் புஷ்பாவை நன்றாகத் தெரியும். இறந்து, புதைந்து கிடந்ததில் முகம் சற்று வீங்கியிருந்தாலும், அடையாளம் காண்பது அவ்வளவு கடினமாக இல்லை. ஆனாலும், டி.என்.ஏ டெஸ்ட் செய்யுமாறு குழுவிற்குப் பரிந்துரை செய்து விட்டு அடுத்த நடவடிக்கைகளுக்கு ஆயத்தமானார் அவர். புஷ்பா அவருக்கு ஒரு நல்ல நண்பி, ஆனாலும் கடமையில் கண்ணாயிருக்கும் அவருக்கு இதுபோன்ற செய்திகளில் வருத்தமிருந்தாலும், அதனூடேயும் வேலையைத் தொடர்ந்து செய்யுமளவுக்கு ஒரு பக்குவமும் இருந்தது. ஆனால், இந்தச் செய்தியை டாக்டரிடம் எப்படித் தெரிவிப்பது என்பதிலேயே அவரின் முழு நினைப்பும் இறங்கியது.

அந்த யோசனையில் இருக்கையில் அவரின் கைபேசி சிணுங்க, அதனை எடுத்து “கமிஷனர் ஹியர்…” என்று மிடுக்கான தொனியில் பதிலளிக்க, மறுமுனை என்ன சொன்னதோ தெரியவில்லை, “ஃபெண்டாஸ்டிக்… குட் ஜாப், எங்க இருக்காங்க இப்போ?” எனக் கேட்டார். “ஒ.கே. ஒ.கே.. ஐ வில் பி தேர் ஏஸ் சூன் ஏஸ் பாஸிபிள்”.. என்று கூறிக் கொண்டே, அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவரிடம் பார்த்துக் கொள்ளுமாறு சைகை செய்து கொண்டே, ஜீப்பில் தாவி ஏறினார் ராஜேந்திரன். அதிகாரி வருவதைப் பார்த்தததும் அந்த மூலையில் டீக்குடித்துக் கொண்டிருந்த டிரைவர், டீயைப் பாதியிலேயே விட்டுவிட்டு, ஓடிவந்து வண்டியில் ஏறி அமர்ந்து ஓட்டுவதற்குத் தயாரானார்.

திங்கட்கிழமை அதிகாலை இரண்டு மணி முப்பது நிமிடம்:

” “பெரிய அதிகாரிக்குப் போன் போட்டுருக்கமப்பு, இப்ப வந்துருவாக…” சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மேசையின் மேல் லத்தியை உருட்டிக் கொண்டே லாக்கப்பில் அமர்ந்திருந்த மூன்று தனவந்தர்களையும் பார்த்துப் பொரிந்து கொண்டிருந்தார். நேர்மையான, மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்த, போலீஸ் அதிகாரியான முருகனுக்கு, இதுபோன்ற பணத்திமிர் பிடித்தவர்களை, அதிலும் குற்றவாளிகளைக் கண்டால் மிகவும் ஆத்திரம் வரும். நேர்மையான உயரதிகாரியான ராஜேந்திரனின் மதிப்புக்கும், நம்பிக்கைக்கும் உரிய போலீஸ் அதிகாரி முருகன்.

எதிரே நாற்காலியில் அமர்ந்திருந்த வழக்கறிஞர் கல்யாணம், “நீங்க நெருப்போட விளையாடுறீங்க மிஸ்டர் முருகன்” எனச் சொல்ல, கோபம் இன்னும் அதிகரித்தவராய், “தபாரு…. நீ எதுவும் குத்தத்த நேரடியாச் செய்யலயின்னு ஒக்காத்தி வச்சிப் பேசிகுனு இருக்கேன்… மரியாதயக் காப்பாத்திக்கணும்னா பேயாம ஒக்காந்திரு, சொல்லிபுட்டேன்..” என எகிறி விழுந்தார். “ஆனாலும், இவனுக்குத் திமிரு சாஸ்திதான்யா, வெளிய வந்து இவன ஒரு கை பாக்கணும்” என்று தனது கூட்டாளிகளுக்கு மட்டுமே கேட்கும் வகையில், முணுமுணுத்தார் வேலாயுதம். “நம்மள ஜெயிலுக்குள்ள ஒக்காத்தி வச்சுட்டான் ராஸ்கல், இவன சும்மா விடமாட்டேன்” கருவினார் விஸ்வநாத். “கமான் ஃப்ரெண்ட்ஸ், இவன் முக்கியமில்ல, நாம வசம்மா மாட்டியிருக்கோம், இதுலருந்து தப்பிக்க என்ன வழின்னு பாக்கணும். மொதல்ல அந்த ராஜேந்திரன் வரதுக்கு முன்னால ஒரு முடிவு பண்ணணும். அவன் வந்தான்னா, நம்மள ஒண்ணா இருக்க விடமாட்டான். எனக்கு நல்லாத் தெரியும், அவன் நம்மகிட்ட இருந்து விஷயத்தக் கறக்காம விடமாட்டான்… அதப்பத்தி யோசிக்கலாம்” என்று நிலைமையை முற்றும் உணர்ந்தவராகப் பேசிக் கொண்டிருந்தார் ராமச்சந்திரன்.

இவர்களின் பேச்சுத் தொடர்ந்து கொண்டிருக்க, வெளியில் இருப்புக் கொள்ளாமல் வழக்கறிஞர் கல்யாணம் அமர்ந்து கொண்டிருக்க, தனது மேலதிகாரி வந்தவுடன் இந்தப் பணக்காரக் கயவர்களை எப்படியெல்லாம் “விசாரிக்க” வேண்டுமென மனதுக்குள் கற்பனை செய்த வண்ணம், இரவு இரண்டு மணிக்கும் பளப்பளவென ஒளிவீசும் கண்களுடன் அமர்ந்திருந்தார் முருகன்.

கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் உருண்டோட, வாசலில் வந்து நின்ற ஜீப்பிலிருந்து முழுவதுமாக நிற்பதற்குள் குதித்திறங்கி மிடுக்காக உள்ளே நடந்து வந்தார் ராஜேந்திரன். அவரின் வருகையைப் பார்த்து அனைவரும் தங்களின் நாற்காலிகளிலிருந்து எழுந்து சல்யூட் அடிக்க, கருப்புக் கோட்டுப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்த கல்யாணம் அவசர அவசரமாக எழுந்து, “குட் மார்னிங் சார்… நல்ல நேரத்துல வந்தீங்க” என்று பேசத்தொடங்க, கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு, கையை உயர்த்தி ”நிறுத்து” எனச் சைகை செய்து கொண்டே, “முருகன், லாயருக்கு இங்க என்ன வேலை?” என்று வினவுகிறார். ”எம்புட்டுச் சொன்னாலும் கேக்க மாட்டுங்குறார் சார்..” எனச் சொல்ல, “மிஸ்டர், வாட் டு யூ வாண்ட்?” என அதட்டலாகக் கேட்க, “எனக்கு இவங்கள அரெஸ்ட் பண்ணினதுக்கான காரணம் தேவை சார்” எனக் கல்யாணம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னான்.

அவனைத் திரும்பி எரித்து விடுவது போலப் பார்த்த ராஜேந்திரன், “நீ யாரு மேன், ஒய் ஷுட் ஐ ஆன்ஸர் டு யூ?” கோபமாகக் கேட்க, “சார், இது ஜனநாயகம். சர்வாதிகாரமில்லை, நீங்க நினைச்சதையெல்லாம் செய்ய முடியாது. ஐ ஆம் அ லாயர். எனக்குச் சட்டம் தெரியும், நீங்க எனக்குப் பதில் சொல்லித்தான் ஆகணும்” எனப் பேசிக் கொண்டே போக அவனை இடைமறித்து, “ஸ்டாப்…. உங்கிட்ட கோர்ட் ஆர்டர் இருக்கா? இது போலீஸ் ஸ்டேஷன், ஐம் நாட் ஆன்ஸரபிள் டு யூ. எனக்குக் கோபம் வரதுக்குள்ள இங்கயிருந்து போயிடு, விளைவுகள் ரொம்ப மோசமாயிருக்கும்.” அவரின் குரலிலிருந்த உறுதி கல்யாணத்தைச் சற்று உலுக்கி எடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். வேறு ஏதோ சொல்ல வாயெடுத்தவன், சற்று பயத்துடன் வேண்டாமென முடிவு செய்து வாசல் நோக்கி நடக்கத் தொடங்கினான்.

கைதிகள் இருந்த அறை நோக்கிச் சென்ற ராஜேந்திரன், அந்த மூன்று தனவந்தர்களைப் பார்த்து முறைக்கத் தொடங்க, அவர்களும் அவரைப் பார்த்து முறைக்கத் தொடங்கியிருந்தனர். இரண்டு தரப்பும் சற்றுப் பெரிய இடத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அனைவரின் பார்வையிலும் பொறி பறந்தது. “தப்புப் பண்ணிட்ட ராஜேந்திரன்” விஸ்வநாதன் பேசத் துவங்க, “டேய், கமிஷனர் சார்னு சொல்லு, இல்லை முட்டிகிட்டியெல்லாம் பேத்து எடுத்துடுவேன்” என உறுமிய ராஜேந்திரனைப் பார்த்துச் சற்று ஏளனமாகச் சிரித்தார் ராமச்சந்திரன். அவர் விஸ்வநாதனைப் பார்த்து, “கொஞ்சம் பேசாம இருங்க பார்ட்னர், சார், இப்ப எதுக்காக எங்களை இங்க இழுத்து வந்திருக்கிங்க. நாங்க என்ன தப்புப் பண்ணினோம்? நாங்கள்ளாம் பெரிய புள்ளிங்க, சமூகத்தில ரொம்ப அந்தஸ்து உள்ளவுங்க, ரொம்ப பிஸியானவங்க. ஏன் எங்க நேரத்தை வீணடிக்கிறீங்க” என்று பேசிக் கொண்டே போனவரை இடைமறித்து, “உங்க மூணு பேர் மேலயும் கொலைக் குத்தம் இருக்கு, அதுக்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் என்கிட்ட இருக்கு. உங்களைக் கோர்ட்ல நிறுத்தி, மரண தண்டனையோ, ஆயுள் தண்டனையோ வாங்கிக் கொடுக்குற வரைக்கும் எனக்குத் தூக்கமே கிடையாது” என்று சொன்னார் ராஜேந்திரன். அவர் சொல்லி முடிப்பதற்குள் முருகனின் மேசையிலிருந்த தொலைபேசி அலறியது. எடுத்துப் பேசிய முருகன் மிகவும் கலவரத்துடன், “சார் ஃபோன் உங்களுக்குத்தான்” என்கிறார்.

“யாருன்னு கேட்டீங்களா முருகன்”

”சார்……… செண்ட்ரல் மினிஸ்டர் பி.ஏ. பேசுறார் சார்” என்று முருகன் முடிப்பதற்குள் விஸ்வநாதன் இடி போலச் சிரிக்கத் தொடங்கினார்.

செவ்வாய்க் கிழமை அதிகாலை மூன்று மணி:

அப்பா தன்னைத் துளைத்து எடுத்ததை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை பாரதியால். பார்த்த கொலைகளையும், கடத்திய கூட்டத்தைப் பற்றிய துப்புக்களையும் போலீஸில் சொல்வதற்கு அப்பா முழு ஆதரவாக இருப்பதாக உறுதி கூறியிருந்தார். ஆனாலும் அவரால் கணேஷ் யாரென்றும், அவனுக்கும் இவளுக்கும் இருக்கும் உறவு என்னவென்றும் கேட்காமல் இருக்க இயலவில்லை. இதுவரை கணேஷையும் அவளையும் சேர்த்து வைத்துப் பலர் அரசல் புரசலாகப் பேசியபோதெல்லாம் அது அவளைச் சிறிதும் பாதித்ததில்லை. தனது தந்தையே கேட்டபொழுது அது அவளை யோசிக்க வைத்தது.

”எல்லோரும் பார்த்தால் உறுத்துமளவுக்கு இருக்கிறதா எங்களின் உறவு?” மண்டையைக் குடைய ஆரம்பித்திருந்தது. அப்பா மிகவும் பக்குவமானவர். என்னைத் தனது உயிருக்கும் மேலாக நேசிக்கிறார். முற்போக்குச் சிந்தனை உள்ளவர். கணேஷின் மீது காதலா என்று நேரிடையாகக் கேட்காவிடினும் அதுவே அவரின் கேள்வியின் சாராம்சம். காதல் செய்வது தவறு என்று கூறும் ரகமல்ல அவர். “இந்த வயசுல இதிலெல்லாம் புத்தி போனா, படிப்புல கான்ஸண்ட்ரேஷன் இல்லாமப் போயிடுமே” விசாரிப்புகளின் மத்தியில் தனது அங்கலாய்ப்பாய் அவர் கூறிய விஷயம் இதுவே.

“அப்படியெல்லாம் எதுவுமே இல்லப்பா… அவன் எனக்கு நல்ல ஃப்ரெண்ட், வெல் விஷர்.. அவ்ளோதான்.. நேக்கு நன்னா தெரியும்பா, அவன் மனசுலயும் எந்தக் கல்மிஷமும் இருக்காது… ரொம்ப இன்னஸண்ட்டாப் பழகுவாம்பா…” இதெல்லாம் அப்பாவிடம் மனமாற, முழுவதுமாய்த் தான் நம்பியதைத் தான் கூறினாள். ஆனாலும், அவரிடம் சொல்லி முடித்துக் கடந்த இரண்டு மணி நேரங்களாக அதையே அசை போட்டுக் கொண்டிருக்கிறாள்.

அவன் நிஜமாவே வெறும் ஃப்ரெண்ட் தானே, எல்லா ஃப்ரெண்ட்ஸ் கிட்டயும் பழகுற மாதிரித்தான் என்கிட்டயும் பழகுறானா… என்ற கேள்வி அவளைத் துளைக்க ஆரம்பித்தது. “ஐ டோண்ட் திங்க் ஸோ” என்று ஒரு அசரீரிக் குரல் கேட்க ஆரம்பித்தது.

ஒவ்வொரு காலையிலும், தினம் தவறாமல் நான் வரும் பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறானே – ஏன்? ஒரு சில தினங்கள் நான் தாமதமாக வரும்பொழுதும் எனக்காக ஏன் காத்திருக்க வேண்டும்? என்னைப் பார்த்தவுடன் அவனது மற்ற நண்பர்கள் அனைவரையும் கழட்டி விட்டு விடுகிறானே – ஏன்? அவர்களையும் சேர்த்து அழைத்து வந்து என்னருகில் அமர்ந்து பேசலாமே – ஏன் அவ்வாறு செய்யாமல் அவன் மட்டும் என்னருகில் அமர நினைக்கிறான்? எத்தனையோ முறை மற்றவர்களைப் பற்றி நான் பேசும்பொழுதெல்லாம் பேச்சை மாற்றி, பேச்சு எப்பொழுதுமே அவனையும் என்னையும் பற்றியதாக மட்டுமே வைத்துக் கொள்வானே, – எதற்காக? அன்று அந்தக் கொலையைப் பார்த்த பதைபதைப்பான நேரத்திலும், என்னைப் பத்திரமாகக் கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்பதில்தானே முனைப்பாக இருந்தான் – ஏன்?

நன்றாக மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்க்கையில் தெளிவாக விளங்குவது போலத்தான் உள்ளது. நம்மைக் காதலிக்கிறான் என்றுதான் நினைக்கிறேன். அதிலென்ன ஆச்சரியம் இருக்க முடியும், நாம்தான் அழகாக, அறிவாக, அவனுக்குப் பிடித்த தமிழ்மீது பற்றுடன் இருக்கிறோமே. ஆனாலும், நேரடியாகச் சொல்லும் வரையில் எதையும் முடிவு செய்து கொள்ளக் கூடாது. ஆனால் இதனை நேரடியாகக் கேட்பது எவ்வாறு? மீண்டும் ஒரு மனப்போராட்டம் தொடங்கியிருந்தது.

அந்த நடுநிசியில், பின்னியிருந்த ஒற்றைச் சடையைத் தோளின் மேலிருந்து முன்பக்கமாகத் தொங்கவிட்டுக் கொண்டு, அதனை வலது கையால் ஆட்டிக் கொண்டே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கும் தன் மகளை அறையின் ஜன்னல் வழியே சற்றுக் கவலையோடு பார்த்துக் கொண்டு நிற்கிறார் சுந்தரம்.

செவ்வாய்க் கிழமை அதிகாலை மூன்று மணி முப்பது நிமிடம்:

ராமச்சந்திரனின் ஆட்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்டது, அதன் பின்னர் தன் மகளின் வெட்டப்பட்ட விரலைப் பார்த்து அதிர்ச்சியானது, மகளின் உயிரைக் காக்க வேண்டும் என்ற உந்துததில் தட்சிணா மூர்த்தியைக் கொல்லச் சம்மதித்தது, அதனை நிறைவேற்ற முயற்சிக்கும் வேளையில் ஆயுதமேந்திய காவல் துறை உள்ளே நுழைய அவர்களுடன் ராமச்சந்திரனும் அவருடைய ஆட்களும் போராடியது என ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல அதிர்ச்சி தரும் நிகழ்வுகளைப் பார்த்து, ஏற்கனவே சற்று பலவீனமான இருதயத்தைக் கொண்ட டாக்டர் தேசிகன் அதே விஸ்வேஸ்வரய்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

டாக்டர் தேசிகனுக்கு அடுத்ததாக இரண்டாவது முக்தியத்துவம் பெற்ற டாக்டரான நடேசன் விஷயம் கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு விரைந்து வந்திருந்தார். அவரும் நர்ஸ்களும் முழுமூச்சாகத் தங்கள் பாஸின் உடல் நிலையைச் சரி செய்வதில் இறங்கியிருந்தனர். அவரின் உடல்நிலை மிகவும் பலவீனமாக ஆகியிருந்ததால், அனைத்து மருந்துகளும் ட்ரிப்ஸ் முறையில் மட்டுமே ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் சுய நினைவுடன் படுத்துக் கொண்டிருந்தார்.

டாக்டர் நடேசன் அவருக்கு மன தைரியம் கொடுக்க வேண்டியது முக்கியம் என்பதை உணர்ந்தவராக அவருடன் பேசிக் கொண்டிருந்தார். தேசிகனால் பேசிப் பதில் கூற இயலாவிட்டாலும், தலையாட்டி மற்றும் கண்களினால் விடையியம்பிக் கொண்டிருந்தார். அவர்களின் பேச்சின் முழு சாராம்சமும் தேசிகனின் மகள் புஷ்பா குறித்ததாகவே இருந்தது.

“சார், நீங்க எதுவும் கவலைப்படாதீங்க. டாக்டர் புஷ்பாவுக்கு எதுவும் ஆகியிருக்காது. ரொம்ப தைரியமானவங்க. ஷி நோஸ் ஹௌ டு டேக் கேர் ஆஃப் ஹர்ஸெல்ஃப்” எனச் சொல்ல, டாக்டர் தேசிகன் நன்றி என்பதைக் கண்ணசைப்பினால் கூறிக் கொண்டார். அவர்களின் பேச்சுப் பரிமாறல் தொடர்ந்து கொண்டிருக்கையில் வராந்தாவில் ராஜேந்திரனின் உதவியாளர்களான பிரேம் மற்றும் உதயகுமார் இருவரும் போலீஸ் யூனிஃபார்மில் இரண்டு கான்ஸ்டபிள்கள் புடைசூழ மருத்துவமனை வராந்தாவில் நடந்து வருகின்றனர்.

வரும் வழியில் பார்த்த வார்ட் பாயிடம், “டாக்டர் தேசிகன் எந்த ரூம்ல இருக்காரு” என்று வினவ, ”அது ஸ்பெஷல் வார்ட் சார், ஆஸ்பத்திரிக்குப் பின்னால, இரண்டாவது கதவு வழியாப் போனீங்கன்னா, ரூம் நம்பர் 124 சார்” என்று பவ்யமாகப் பதில் சொன்னான்.

அவன் கூறிய வழியைப் பின்பற்றி, அந்த அறையை அடைந்த போலீஸ்காரர்கள் உள்ளே டாக்டர் நடேசன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தபிறகு சற்றுத் தயங்கியபடி வெளியில் நின்றனர். சிறிது நேரம் கழித்தபிறகு, கதவைத் தட்ட, “ஹூ இஸ் இட்?” என்று டாக்டர் நடேசன் கேட்கிறார். “நாங்கதான் சார், போலீஸ். ராஜேந்திரன் சாரோட அஸோஸியேட்ஸ். உள்ள வரலாமா” எனக் கேட்க, டாக்டர் நடேசன், தேசிகனின் முகத்தைப் பார்க்கிறார். அவரும் சற்றுப் பதட்டமாக இருப்பதாய்த் தெரிகிறது. அந்தப் பதட்டத்தினுடனேயே, அவர்களை உள்ளே வருமாறு தலையாட்டுகிறார்.

“சொல்லுங்க இன்ஸ்பெக்டர், என்ன விஷயம்” டாக்டர் நடேசன் கேட்க, சற்றுத் தயங்கிய பிரேமும், உதயகுமாரும், ”சார், உங்ககிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்” என்று டாக்டர் நடேசனிடம் தெரிவிக்க அவரும் அவர்களுடன் சேர்ந்து நடந்து, அறையை விட்டு வெளியில் வராந்தாவிற்கு வந்து நின்றார். “என்ன ஆச்சு?” என்று வினவ, “சார், டாக்டர் தேசிகனோட மகள் டாக்டர் புஷ்பா இறந்துட்டாங்க சார், கொலை செய்யப்பட்டிருக்காங்க” என்று கூறி முடிக்க, நடேசனும் அதிர்ச்சியில் உறைந்தார்.

”என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர், அவர் ரொம்ப வீக்கா இருக்கார், அதுலயும் ஹார்ட் ரொம்பவுமே பலவீனமா இருக்கு. அவர் இருக்கிற நிலைமையில இதை எப்படி அவர்கிட்ட சொல்றது?” என்ற நடேசன், தான் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்துக் கையில் வைத்துத் துடைத்துக் கொண்டே யோசிக்கலானார்.

(தொடரும்)

– வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad