\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

முழுவல்

Filed in போட்டிகள் by on July 28, 2015 1 Comment

FONவழக்கம் போல அதிகாலை மூன்று மணிக்கு முழிப்பு வந்தது நடேசனுக்கு. மெதுவாக எழுந்து அந்த சுத்தமான அதிகாலைக் காற்றைச் சுவாசித்தார். எவ்வளவு ஜனத்தொகை பெருகினாலும், காலையில் வாகனங்கள் சத்தம் தொடங்கும் முன், மாசு உலகை சூழும் முன், அந்த அதி காலை மூன்று மணி ஒரு பெரிய சந்தோசம் தான் அவருக்கு. அந்த அமைதி, எங்கேயோ கூவும் ஒரு குருவி, பாதித் தூக்கத்தில் ஊளையிடும் பக்கத்துத் தெரு நாய், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

சூரியன் உதிக்கும் திசை நோக்கி ஒரு நிமிடம் கை உயர்த்தி வணங்கினார். வாசலில் கோலம் போட்டு முடித்து பாக்கியம் உள்ளே வந்தார்.

“குளிச்சுட்டு வரேன் வந்து காபி போட்டுத் தரேன்”.

“சரி இட்லி வெக்கட்டுமா ?”.

“ஒரு ஈடு வெச்சுருக்கேன். பொங்கல் பண்ணிட்டு அப்புறம் இன்னொரு ஈடு சூடா வெக்கலாம்”

“சரி, போய்க் குளிச்சுட்டு வா , அதுக்குள்ள சாம்பாருக்கு வேணுங்கற காய் நறுக்கறேன் நான்”

மெதுவாகத் தலை ஆட்டியபடி அந்த அறுவது வயது பாக்கியம் நடந்து அந்த வீட்டின் பின் புறம் சென்றார். அது ஒரு சிறிய ஒட்டு வீடு, அடுக்களை, ஒரு படுக்கை அறை, வாசலில் முற்றம் போல் ஒரு சின்ன அறை.

அடுக்களையில் நேற்று வாங்கிய காய்களை நீரில் சுத்தம் செய்து, நறுக்கத் தொடங்கினார்.

நடேசன். அறுபத்தி ஐந்து வயதுப் பெரியவர், நரைத்த, தளர்ந்த உடல், ஆனால் அமைதியான மனதை பிரதிபலிக்கும் முகம்.

நறுக்கிய கைகளை ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டபடி இருந்தார்.

குளித்து முடித்த பாக்கியம் வந்து இருவருமாகச் சேர்ந்து, 150 பேருக்கு வேண்டிய உணவைத் தயார் செய்தனர்.  இட்லி, பொங்கல், வடை,சட்னி, சாம்பார் என ஒரு பெரிய கூடையில் ஏற்றி கொண்டார் பெரியவர். அந்தக் கூடையை இருவருமாகச் சேர்ந்து ஒரு தள்ளு வண்டியில் ஏற்றினார்கள். சூடாக ஒரு அடுக்கில் காபியையும் ஏற்றிக் கொண்டார்.

சூரியன் உதிக்கும் நேரம், “பாக்கியம் பத்திரமாக் கதவப் பூட்டிக்கோ. நான் மத்தியானம் வந்துடறேன்”. சொல்லி விட்டு தள்ளு வண்டியை மெதுவாகத் தள்ளியபடி நடந்தார் பெரியவர்.

அந்த பிரசித்தி பெற்ற கோவிலில், கும்பல் வரும் முன் வழக்கமான தன்னுடைய இடத்தில் வண்டியை நிறுத்தினார். அங்கு அருகில் இருந்த நாய்களுக்கு,, பறவைகளுக்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் இட்லியைக் கிள்ளி உணவாக வைத்தார். வரத் தொடங்கிய பக்தர்களுக்கு, கூட்டங்களுக்கு எல்லாம் உற்சாகமாக விற்பனை செய்யத் தொடங்கினார். அவருடைய சிரித்த முகமும், அந்த உணவின் சுவையும், அதில் இருந்த அன்பும் அனைத்து பக்தர்களையும் இழுத்தது. ஒவ்வொரு உணவும் காலியாக மூன்று, நான்கு மணி நேரம் பிடித்தது. பெரியவரின் உற்சாகமும் தொய்வு பெறத் தொடங்கியது. பதினோரு மணி அளவில், விற்றது போக மீதி இருந்த உணவை அங்கு இருந்த சாமியார்களுக்கும், பிச்சைக் காரர்களுக்கும் தானம் அளித்து விட்டுக் காலியான கூடையைத் தள்ளியபடி வீட்டிற்குக்  கிளம்பினார்.

கோவிலில் பனிரெண்டு மணிக் கும்பல் வரத் தொடங்கி இருந்தது. இப்பொழுதெல்லாம் பக்தர்கள் கூட்டத்தோடு காதலர்கள் கூட்டமும் அதிகமாக வரத் தொடங்கி இருந்தன. வீட்டில் பெற்றோருக்குத் தெரியாமல் சந்திக்கும் இடமாக கோவிலைப் பயன்படுத்தினர் இந்த இள வட்டங்கள். சில காதல் ஜோடிகள் ஒரு ஓரமாக நகர்ந்து சென்று விடுவர். அவர்களில் பலர் இவரை ஏதோ கீழ்த்தரமாகப் பார்ப்பது இவருக்குப் புரிந்தது. நாகரீக உடை அணிந்த அந்த இள வட்டங்கள் அவரின் உடையை நகைச் சுவையாகக் கேலி செய்வர் பெரியவர் அவர்கள் கேலியையோ, பார்வையையோ சட்டை செய்யாமல் நடந்து விடுவார்.

மதியம் பாக்கியமும், அவரும் எளிமையான உணவு உண்ட பின்னர் இருவரும் தூங்கி  ஒய்வு எடுப்பார்கள்.

ஒவ்வொரு மாலையிலும் இருவரும் காலாற நடந்து அருகில் இருக்கும் கடைகளுக்குச் சென்று மறு நாளைக்கு வேண்டிய காய்களை வாங்குவதோடு, மனதிற்கு அமைதியாகப் பிடித்த இடங்களுக்குச் சென்று வருவார்கள்.

இருவரும் அவர்கள் இளமைக் காலத்தின் பொழுது நல்ல பெரிய உணவகம் ஒன்றை நடத்தி அதில் பெருமளவு புகழ்பெற்று இருந்தார்கள். இயற்கைச் சீற்றத்தின் பேரழிவு ஒன்றில் உணவகத்தை இழந்து வாழ்கையை முதலில் இருந்து தொடங்கும் கட்டாயத்தில் தள்ளப்பட்டார்கள்.

எந்த வயதாக இருந்தால் என்ன “உயிர்களிடத்தில் கருணையோடு, எளிமையான வாழ்க்கையில் இருக்கும் சந்தோசம் மிகப் பெரியது என்று அந்த கோவிலின் அருகில் வீடு பார்த்து, ஒரு தள்ளு வண்டியில் உணவு விற்பனை மூலம் தங்கள் வாழ்க்கையை அமைதியாகக் கழிக்கிறார்கள்.

***

அன்றும் அது போலத் தான் ஒரு நாள் தான், “இன்னிலேந்து நானும் வரேன் உங்களுக்கு விற்பனைக்கு உதவி செய்ய, தனியாகப் போக வேண்டாம்” என்று சொல்லி விட்டு பாக்கியம் அவரோடு கிளம்பி வந்தார்.

விற்பனை முடித்துத் திரும்பும் பொழுது, வழக்கமான அந்தக் காதல் ஜோடிகள் செய்யும் கேலியைக் கேட்ட பொழுது, அவர்களைக் கோபமாகப் பார்த்து ஏதோ பதில் சொல்லத் தொடங்கும் முன்,

” விடு பாக்கியம் , இள வயது அப்படித் தான் பேசும்”. என்று தடுத்தார் பெரியவர்.

” என்ன அதுக்காக இப்படிப் பேசறாங்க, வயசு மரியாதை இல்லாம, இவங்க எல்லாம் யார்? இத்தனை ஜோடியா இந்த நேரத்துக்கு கோவிலுக்கு வராங்க?”.

“அவங்க எல்லாம் காதல் ஜோடிங்க, ஏதோ சும்மா வராங்க விடு”.

“அந்த இள ஜோடிகளில் ஒன்று பெரியவரின் அழுக்குப் படிந்த அந்த வேஷ்டியைச் சுட்டிக் காட்டிக் கேலி செய்ததைப் பார்த்த பொழுது, இன்னமும் கோபம் பொங்கியது பாக்கியத்திற்கு.

அவர்களைக் கோபமாக முறைத்த வண்ணம் நடந்தார்.

“அவங்க வயசு அப்படி பாக்கியம். அதுவும் அவங்க காதல் வயப்பட்டு இருப்பதால் மத்தவங்கள கேலி செய்றது எதோ ஒரு பொழுது போக்கு அவங்களுக்கு. நீ வருத்தபடாத வா”.

“””காதல்! காதல்! காதல்! வாழ்க்கையிலே இதை விட்டா வேற எதுவுமே இல்லையா?,” என்ன தெரியும் இவங்களுக்கு, அடுத்தவங்க மனம் நோகும் பேச்சிலேயே தெரியுதே. கஷ்டமே இல்லாம ஊர் சுற்றுவதும், கஷ்டத்தில் இருப்பவர்களைக் கேலி செய்வதும் இவங்களுக்குப் பொழுது போக்கு போல, அப்போ அவங்களுக்கே ஒருத்தருக்கு கஷ்டம் வந்தா என்ன பண்ணுவாங்க இன்னொருத்தர்  ஓடிப் போய்டுவாங்களா? ஏதோ உடல் அழகும், இளமையும் இருக்கும் வரைக்கும் இருப்பது தான் இவங்க காதல் போல.

அதுக்கு அப்புறம் தாண்டி வரும் ஒரு பிரியம் தான் உண்மையான காதல். அது எப்போ புரியுமோ? அந்த நட்பு, புரிதல், பிரியம், கருணை இது எல்லாத்துக்கும் காதல் என்ற வார்த்தையே ஒரு கொச்சையான வார்த்தை. பெரிய காதல் பண்றாங்களாம் காதல்”.

பெரியவரின் கையைப் பிடித்தபடி வண்டியை கோபமாகத் தள்ளினார் பாக்கியம்.

அந்த முழுவலில் இருந்த முழுமை அவர்கள் முதுமையை அழுகு படுத்தியது.

–    லக்‌ஷ்மி சுப்பு

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Sintu Bairavi says:

    Congratz…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad