பாபநாசம்
புத்திசாலித்தனம் ஒவ்வொரு நிமிடமும் இழையோடி, முழுவதுமாய்ப் பின்னிப் பிணைந்து, இணைந்து நிற்கும் கதை, அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ என்று இருக்கையின் நுனிக்கு இழுத்துச் செல்லும் திரைக்கதை, நேர்த்தியான ஒளிப்பதிவு, இயற்கையும், முதிர்ச்சியும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தெளிவாய்க் காட்டும் நடிப்பு, தேவையான அளவு உணர்ச்சிப் பிழம்புகளை வெளிப்படுத்தும் அழகான உரையாடல்கள், நெல்லைத் தமிழை மண்மணம் மாறாமல் வெளிப்படுத்தும் சற்றும் மிகைப்படுத்தலில்லாத வசனங்கள், இப்படிப் பல உயர்வான, போற்றுதலுக்குரிய விஷயங்களைக் கொண்ட வெற்றித் திரைப்படம் பாபநாசம்.
மலையாளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
திரைப்படம். கேள்விப்பட்ட தினத்திலிருந்து மனதில் உறுதி செய்துகொண்ட விடயம் “பாபநாசம் படத்தை முதலில் பார்த்துவிட்டுப் பின்னரே திருஷ்யம் பார்ப்பது” என்பதே. நம் சபதத்தில் நாமும் உறுதியாக இருந்து பாபநாசம் திரைப்படத்தை முதலில் பார்த்தோம். ஒருசில வசனங்களுக்காகவும், முகபாவங்களை மீண்டும் உன்னிப்பாய்க் கவனிக்க வேண்டும் என்ற காரணங்களுக்காகவும் இரண்டாவது முறையாகவும் இதனைத் தமிழ் மொழியிலேயே பார்த்தோம். அதன் பின்னரே, மோகன்லால் நடித்து மலையாளத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இதன் மூலமான “திருஷ்யம்” திரைப்படத்தைப் பார்த்தோம். சுருங்கச் சொல்வதென்றால் மூன்று முறையும் முழுவதுமாய் மகிழ்ச்சிகரமாகத் திரைப்படத்தை அனுபவிக்க முடிந்தது.
ஹீரோயிஸம் காட்டுவதென்றால் ஒரே உதையில் பத்துப் பேரை
அடித்துப் போடுவதுதான் என்று காலங்காலமாய் வலியுறுத்திவரும் திரைப்படங்களுக்கு
மத்தியில், புத்திசாலித்தனமாய் யோசித்துத் தன் குடும்பத்தை ஒரு மிகப்பெரிய சட்டச் சிக்கலிலிருந்து, தண்டனையிலிருந்து காக்கும், பெருமளவு படிப்பறிவில்லாத சாதாரண மனிதனை நாயகனாகக் காட்டுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். வெறும் துணிச்சல் மட்டும் இல்லாமல், ஒவ்வொரு காட்சியமைப்பிலும், சிறு சிறு நிகழ்வுகளிலும் குற்றவாளி எவ்வாறு யோசிப்பான், காவல்துறை எவ்வாறு யோசிக்கும் என்று உளவியல் ரீதியாக ஆராய்ந்து அதற்கேற்றாற்போல் காரியங்கள் புரிந்து போலிஸிடம் மாட்டாமல் தப்பிக்கும் கதாநாயகனின் கதாபாத்திரம் நாட்கணக்காக யோசித்து, பலமுறை ஒத்திகை பார்த்து மிகவும் கவனத்துடன் செதுக்கப்பட்ட பாத்திரமாகும். அதனைக் கனக்கச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறார் கமலஹாசன்.
வலுவான கதை, சற்றும் குழப்பத்திற்கு வழிவகுக்காமல் கடினமான நிகழ்வுகளை மிகவும் தெள்ளத் தெளிவாக விளக்கும் வகையில் அமைந்த அருமையான திரைக்கதை இவையிரண்டும் திரைப்படத்தின் இரண்டு கண்கள் என்றே கூறலாம். நிகழ்காலமும், கடந்த கால ஃப்ளாஷ் பாக்கும் சற்று முன்னே பின்னே போய்வர, அவையிரண்டையும் குழப்பமெதுவுமில்லாமல் தெளிவாகக் காட்டியிருப்பதில் இயக்குனர் முழு வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்தப் படத்தில் கமலஹாசனின் நடிப்பைப் பற்றி ஒரு
கவிதையே எழுதலாம். நீண்ட நெடுநாட்கள் ஆகிவிட்டது இந்தக் கமலஹாசனைப் பார்த்து, என்றுதான் சொல்ல வேண்டும். கமலஹாசனின் தீவிர ரசிகன் என்ற உரிமையில் அவரிடம் பல எதிர்பார்ப்புகள் உண்டு. கடந்த பல திரைப்படங்களில், இந்த எதிர்பார்ப்புகளால் ஏமாற்றம் அடைந்தேன் என்றே கூறவேண்டும். கடந்த பல வருடங்களாகவே, நடிப்பு என்று ஒன்று மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் கமல் என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு துறைகளிலும் அவருக்குத் திறமையிருக்கிறது என்பதிலும் எந்தவொரு ஐயமுமில்லை, ஆனாலும் அதுபோன்று பல விஷயங்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் நேரமின்மை காரணமாகப் பல துறைகளில் திறமை முழுவதையும் பர்ஃபெக்ஷனிஸ்ட் என்ற அளவில் காட்ட இயலாமல் போகிறதோ என்ற எண்ணம் நம்மை எப்போதும் வாட்டி எடுக்கும். அந்தக்குறைக்கு இடமில்லாமல் இந்தப் படத்தில் நடிப்புத் தொழில் மட்டுமே செய்தது மிகவும் போற்றுதலுக்குரியது என்பது நம் கணிப்பு. பாசமலர் திரைப்படத்தைத் தொலைக்காட்சியில் பார்த்து அழுவதும் உதவியாள் வந்து கிண்டலடிக்க நாசூக்காய் வேட்டி நுனியில் கண்ணீரைத் துடைத்து விட்டு ஹிட்லர் குறித்து ஒரு காமெண்ட் அடிக்கையில் கமல் எங்கோ போய் விடுகிறார். போலீஸ்காரனின் பூட்ஸ் கால் முகத்தை நோக்கி வர, விழ இருக்கும் உதையின் வலிமையையும், உடல் படப்போகும் வலியையும் உணர்ந்த பயமும், அதே சமயத்தில் தன் உறுதியிலிருந்து இம்மியளவும் பிசகாது எந்த உண்மையையும் போலீஸிடம் சொல்ல மாட்டேன் என்ற மனோதிடத்தையும் ஒரு சேர முகத்தில் காட்ட, ஒரு வினாடி நடிகர் திலகத்தைப் பார்த்தது போல் உணர்ந்தேன் என்றே சொல்ல வேண்டும். நடிப்பதை விட, வந்து கேமரா முன்னர் வாழ்ந்து விட்டுப்போகும் இயல்பு நடிகர் மோகன்லால் ஒரு உயரத்தைத் திருஷ்யத்தில் தொட்டிருக்கிறார் என்றால், அதேபோன்ற ஒரு பின்புலத்தைத் தமிழ் ரசிகர்களுக்கேற்ப மாற்றியமைத்து, அதற்குத் தேவையான நடிப்பை மிகவும் நேர்த்தியாகக் காட்டியிருக்கிறார் கமல் என்றே சொல்ல வேண்டும்.
கமலின் மனைவியாக வரும் கதாபாத்திரத்தை கௌதமி
நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையுலகப் பிரவேசம் செய்த கௌதமி, மிகவும் நன்றாக நடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். “ஏட்டி, திங்கிறது என்ன பண்டம் வேணும்…” என்று மகளிடம் கேட்பதாகட்டும், “இன்னைக்கு என்ன, குளிக்கிற சீனா, பெட்ரூம் சீனா” என்று கணவனிடம் சற்றே நாணத்துடன் கொஞ்சும் கிளாமராகட்டும், ”ஐயோ, அந்த செல் போனுல துணியில்லாமயெல்லாம் படம் வருமாமே” என்று மகளிடம் பதறுவதாகட்டும், “ஐயா, சாமி, உன்ன என் புள்ளயா நெனச்சுக்குக் கேக்குறம்பா, இந்தக் குடும்பமே மொத்தமா தற்கொல பண்ணிகிட்டுச் செத்துப் போகும்பா” என்று வில்லனிடம் மன்றாடுவதாக இருக்கட்டும் – கௌதமி, நடிப்பின் ஒரு உச்சத்தைத் தொட்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
ஆஷா சரத் ஒரு உயர் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.
மகனைக் காணவில்லை என்று தெரிந்ததும், ஆரம்பத்தில் காட்டும் அசாத்திய உறுதியாகட்டும், படிப்படியாகத் தான் கேட்டறியும் விஷயங்களை வைத்துத் தன் மகன் ஆபத்தில் இருக்கிறான் என்று உணர்கையில் காட்டும் சோகமாகட்டும், கமல் குடும்பத்தினருக்கு ஏதோவொரு தகவல் தெரிந்திருக்கிறது என்ற நம்பிக்கை வந்தவுடன் அதனை வரவழைப்பதற்காக அவர் காட்டும் பயமேற்பட வைக்கும் முகபாவங்களும் வசன வெளிப்பாடுகளாகட்டும், இனித் தன் மகனைக் காணவே இயலாதோ என்ற சந்தேகம் தொற்றிக்கொள்ள, ஒரு அன்னையாக அனைத்தையும் துறந்து மகனுக்காக கண்ணீர் விடுவதிலாகட்டும், ஆஷா சரத் மிகவும் தேர்ந்த நடிகை என்று அனைவரும் உணர்ந்து கொள்ளும்படி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
இவர்கள் தவிர, கலாபவன் மணி, எம். எஸ். பாஸ்கர், டெல்லி கணேஷ், நிவேதா தாமஸ் என அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதா பாத்திரங்களை உணர்ந்து, மிகவும் அழகாக நடித்துள்ளனர் என்றுதான் கூறவேண்டும்… கமலஹாசனின் இந்தப் படத்திலும், கிப்ரன் தான் இசையமைத்துள்ளார். ”ஏய்யா என் கோட்டிக்காரா, ஏட்டி என் கோட்டிக்காரி…” பாடல் நன்றாகவே முணுமுணுக்க வைக்கிறது. அதுதவிர, வேறு ஏதுவும் பாடல்கள் அவ்வளவாக மனதில் இடம்பெறவில்லை என்பதுதான் உண்மை. பல இடங்களில் பின்னணி இசை மிகவும் அருமை. நா. முத்துக்குமாரின் பாடல்களின் கவிதை வரிகளும் இந்த இசைக்கு அணி சேர்ப்பது போல் அமைந்திருக்கின்றன.
இந்தப் படத்தின் இயக்குனர் ஜித்து ஜோசஃப்
மலையாளத்திலும் இந்தப் படத்தை இயக்கியவர். மிகவும் நேர்த்தியாக இந்தப் படத்தை
இயக்கி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மனிதர் இன்னும் மேலும் மேலும்
சிகரங்களைத் தொட இந்த படம் ஒரு பாலமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.
மோகன்லாலின் இயற்கை மாறா நடிப்பு மலையாள மண்ணுக்கு ஏற்புடையதாக
இருக்கும். தமிழகத்திற்காக ஒரு சில இடங்களில் சற்று மிகைப்பட்ட நடிப்பு
தேவைப்பட்டிருக்கிறது எனத் தோன்றுகிறது. வெகு சில காட்சிகளே. ஒரு சில மாற்றங்களைச்
செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை முடிந்த அளவு கமலஹாசன் தவிர்த்திருந்தாலும், போலீஸ்காரர் இரண்டு விரல்களை
ஒடிப்பது போன்ற ஒரு சில காட்சிகள் இதனைத் தவிர்க்க முடியாததற்கு உதாரணங்கள்.
மொத்தத்தில், அருமையான படம். தெளிவான கதை, குழப்பமில்லாத திரைக்கதை நெஞ்சை அள்ளும் ஃபோடோகிராஃபி, அழகான நடிப்பு என மிகவும் திருப்திகரமாக அமைந்தது இந்தத் திரைப்படம்.
வெ. மதுசூதனன்.