மாலையில் யாரோ மனதோடு பேச
”மாலையில் யாரோ மனதோடு பேச” என்று பாடிக்கொண்டிருந்த யாழினியின் பாடலுக்குக் கடலலைகள் இசை மீட்டின. தனது காதலனின் வருகைக்குக் காத்திருக்கும் யாழினியைத் தென்றல் தழுவிக் கொண்டிருந்தது. அமுதனின் வருகையைக் கண்டதும் யாழினியின் விழிகள் சூரிய ஒளியாகப் பிரகாசித்தது. தனது வருகையின் ஆனந்தத்தால் யாழினியின் மனதில் பூக்கள் பூத்துக் குலுங்குவதை அவளது விரிந்த உதடுகளின் வழியாக கண்ட அமுதன் மயங்கி அவளைக் கட்டியணைத்தான்.
கடலலையின் ஓசையோடு தங்கள் காதல் காவியங்களைப் பேசத்
தொடங்கினர் இந்த இளஞ்சிட்டுக்கள். நான்காம் படிவத்தில் பயிலும் இவர்களின் காதலின்
வயது இரண்டு ஆண்டுகள் ஆனாலும் இவ்வுறவைப் பற்றி யாழினியின் பெற்றோருக்கு எதுவும்
தெரியாது. காதல் காவியங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கையில் அகிலனின் தொலைபேசியின் ஒலி
இவர்களின் ஊடலுக்குச் சங்கொலியாக
விளங்கியது.
அமுதனின் நண்பன் அகிலன் தனது நண்பனிடம் அளவளாவ
ஆரம்பித்தான். யாழினியிடம் கொஞ்ச நேரம் என்று கண் ஜாடைக் காட்டி அமுதன் அகிலனிடம்
உரையாடத் தொடங்கினான். அவர்களின் உரையாடல் இடையூறாக இருப்பதை எண்ணி யாழினி
மனதுக்குள் வருந்திக் கொண்டு கடலலைகள் கரையை முத்தமிட்டுச் செல்லும் காட்சியை
ரசித்துக் கொண்டிருந்தாள்.
கண்கள் கடலலையை ரசித்தாலும் செவிகள் இரண்டும்
இவர்களின் தொலைபேசி உரையாடலை நாடிச்
சென்றது. தனது பள்ளியில் பயிலும் பெண்களின் அழகையும், அந்தரங்கங்களையும் கேலியாகப் பேசும் இவர்களின் பேச்சைக் கேட்ட முடியாமல் சட்டென்று எழுந்து நடந்தாள் யாழினி.
யாழினியின் கோபத்தை உணர்ந்த அமுதன் தன் நண்பனோடு
நடத்திய தொலைபேசி லீலையைச் சுமுகமாக நிறுத்திக் கொண்டு யாழினியைப் பின் தொடர்ந்து
சென்றான்.
யாழினி அமுதனின் நடத்தையைக் கண்டு தனது மனக்
குமுறல்களை அவளிடம் கோபமாகக் கொட்டிக் கொண்டிருந்தாள். அவள் பேசி முடிக்கும் முன்னே
அமுதன் தனக்கும் அந்த உரையாடலுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் தனது காதல் மோகத்தை
யாழியினிடம் வார்த்தைகளால் கோர்த்து அலங்கரித்துக் கொஞ்சினான்.
யாழினியும் அமுதனின் கொஞ்சலுக்கு இடங்கொடுக்காமல்
தனது கோபக்கனலை அமுதனிடம் காட்டினாள். உடனே அமுதனும் தன் தவற்றை ஒப்புக்கொள்ளாது
தன் நண்பனோடு நடத்திய உரையாடலை நியாயப்படுத்தினான். வாக்குவாதம் இருவருக்குள்
சுனாமியைப் போல் தாக்கத் தொடங்கியது. யாழினி அமுதனிடம் “நம் இருவரின் காதல் மிகவும் புனிதமானது என்றால் நீங்கள் இனி இதுபோன்று வக்கிர புத்தி உள்ளவர்களிடம் நட்பு கொள்ளக்கூடாது” என ஆவேசமாக அழுது புலம்பினாள்.
“காதல்! காதல்! காதல்! வாழ்க்கையில் இதை விட்டா வேற எதுவும் இல்லையா?” என்றான் அமுதன். “எனது சுதந்திரத்திற்கு இடையூறாக யார் இருந்தாலும் அவர்களை விட்டு விலகி விடுவேன்; அது என் காதலாக இருந்தாலும்” என்று கூறி அவ்விடத்தை விட்டுத் திரும்பிப் பார்க்காமல் சென்றான் அமுதன்.
தனது காதலனின் செயலைக்கண்ட யாழினி இடி விழுந்ததைப்
போன்று அதிர்ந்தாள். மகிழ்ச்சியாகக் காதலனைக் காண வந்த யாழினி மனக்குமுறலுடன் வீடு
திரும்பி தனது அறைக்குள் நுழைந்தாள்.
யாழினியின் கவலையான வதனத்தைக் கண்ட தாய் மகளின்
அறைக்குச் சென்றார். யாழினியிடம் அவள் தாய் “ஏன் என் யாழினிச் செல்லத்தின் முகம் வாடி உள்ளது” என்று வினவினார். அமுதனின்மேல் இருந்த கோபக்கனலுக்குத் தாய் பலியானார். “ஒண்ணும் இல்ல, எனக்குத் தூக்கம் வருது” என்று கூறிச் சட்டென்று அறை விளக்கை அணைத்தாள்.
அறையிலிருந்து வெளிவந்த தாய் மகள் வகுப்பு முடிந்து வந்த
களைப்பால் இப்படிப் பேசுகிறாள் என்று நினைத்து தன்னைத்
தானே ஆறுதல்படுத்திக் கொண்டு, தனது கணவரிடம் நடந்தவற்றைக் கூறினார்.
அந்த இருட்டறையில் யாழினி தனது கண்ணீர் வெள்ளத்தில்
மிதந்து கொண்டிருந்தாள். தனது காதலனின் ஈனச் செயலைத் தாங்க முடியாமலும் அவன்மேல்
கொண்ட காதலை மறக்கவும் முடியாது யாழினியின் மனம் தள்ளாடியது. அமுதனின் செயல்களை
நினைத்துத் துக்கம் தொண்டையை அடைப்பதைத் தாங்க முடியாமல் தனது வாழ்க்கையே
அழிந்துவிட்டதே என்று எண்ணித் தன்னிடம் இருந்த அந்த மருந்தில் இரண்டை எடுத்து
விழுங்கி நீரைப் பருகினாள். தனது படுக்கையை மெல்ல வருடித் தலையணையில் சாய்ந்தாள்.
மின்விசிறியை முதன்முதலாக வாழ்வில் காண்பதைப் போன்று பார்த்துக் கொண்டிருக்கையில்
அவளது விழிகள் மெல்ல மெல்ல மூட தன்னையே மறந்தாள்.
வீட்டின் முன் ஒரே உறவினர்களின் வருகையும் அழுகுரலுமாக
இருக்கத் தன் தாயின் அருகில் செல்கிறாள் யாழினி. தன் தாயைத் தொடுகையில் எந்த ஒரு
தொடுதலின் உணர்வையும் உணராத யாழினியின் கைகள்; தன்னைப் போன்ற ஓர் உருவத்தைப் பெட்டிக்குள் கண்டு வியந்து தாயைக் கட்டி அணைப்பதற்கு முன் தன் தந்தை “யாழினிம்மா, ஏன் எங்களை இப்படி ஏமாற்றினாய்” என்றதைக் கேட்டு அத்திசையைத் திரும்பிப் பார்க்கையில் தனது உடலும் உயிரும் பிரிந்திருந்ததைக் கண்டு வியந்தாள் யாழினி. தனது முட்டாள் தனமான முடிவால் இப்பொழுது பிணமானதை எண்ணி அதிர்ந்தாள். தனது தாயைக் கட்டிப்பிடித்தும் தாய் உணராததை எண்ணி என்ன செய்வதென்று தெரியாமல் வியக்கிறாள்.
”ஊரிருந்தும் உறவிருந்தும் ஒற்றுமையாகச் சேர்ந்திருந்தும் யாரிருந்து என்ன பயன், என் பயணம் இறுதி என்பேன்” என்று கதறி அழுகிறாள். ஒரு காதலுக்காகத் தனது பெற்றோரின் அன்பையும் கனவையும் புதைத்ததை எண்ணித் தன்னைத் தானே வெறுத்தாள்.
யாழினிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த உற்றார்
உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவளது ஆசிரியர்கள் வருகையைக் கண்டு கதறினாள். அவள் அழுகுரல் அவளுக்கு மட்டுமே இசைக்கப்பட்ட ராகமாக அந்த இரங்கல் வீட்டில் அமைந்தது. வந்தவர்கள் யாழினியின் உயிரற்ற உடலைக் கண்டு அழுதனர். ஒரு நிமிடம் தன்னை நேசிக்கும் பெற்றவர்களையும் அன்புள்ளங்களையும் நினைக்காமல் காதலுக்காக சுயநலமாக இருந்து விட்டோமே என வருந்தினாள்.
இனி வருந்தி பயனென்ன என்றவாறு இறுதிச் சடங்குகள்
முடிந்து தனது உடலைப் பெட்டியில் மூடும் தருணம் தனது தாய் தந்தையின் அழுகுரலையும்
கதறலையும் கண்டு நரகவேதனையாக இருந்தது. “எனது தெய்வங்களே என்னை மன்னித்து விடுங்கள்” என்று கத்தினாள். “எனக்கு நீங்கள் வேண்டும்” என்று கதறினாள்.
“யாழினிச் செல்லம்” என்ற என் தாயின் குரலைக் கேட்டு எனது கண்கள் மெல்லத் திறந்தன. “என்னம்மா, கனவா? பள்ளிக்கு நேரமாகுது; அம்மா சிற்றுண்டி தயாரிக்கிறேன், போய்க் குளி” என்றதும் என் தாயின் அழகு வார்த்தையையும் அன்பு வார்த்தையையும் என்னைப் பிரமிக்க வைத்தன. மீண்டும் மறுபிறவி எடுத்ததைப் போன்று யாழினியின் உள்ளம் பிரமித்தது.
தன் தாய் சென்றபின் தனது உடலை முதன் முதலாகப் பயந்து
யாழினி தொட்டுப் பார்த்தாள். “நேற்று நான் சாப்பிட்ட தூக்க மாத்திரை எனது வாழ்க்கைக்கு ஒரு நல்ல திருப்புமுனை லேகியமாக அமைந்தது” என்று தன்னைத் தானே தெளிவுப்படுத்திக் கொண்டாள். குளித்துப் பள்ளிக்குத் தயாராகி இறைவனை வணங்கித் தனது மாற்றத்திற்கு நன்றி மலர்களைச் சமர்ப்பித்தாள்.
தாயின் அருகில் சென்று தன்னை மன்னிக்கும்படி
முத்தங்களால் தெரிவித்தாள். அமுதனின் உறவை கானல் நீராக நினைத்து, பள்ளிப் பருவத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வியே வசந்த காலம் என்று எண்ணி அந்த வசந்த காலத்தைத் தேடிச் செல்கிறாள் யாழினி.
–
த. சிவசங்கரி.