சீதா எலிய
இலங்கையின் கண்டியில் உள்ள பெரதனியா தாவரவியல் பூங்கா மிக அழகான பூங்காக்களில் ஒன்று பார்த்திபன் கனவு படத்தில் வரும் “ஆலங்குயில் பாடிவரும்….” என்ற பாட்டு இங்கேதான் படப்பிடிப்பு நடத்தியாதகச் சொல்கிறார்கள். இலங்கையில் உள்ள இன்னொரு மிகச் சிறப்பான தாவரவியல் பூங்கா நுவரேலியாவில் இருக்கும் “ஹக்கல” என்ற இடத்தில் உள்ளது.
இந்தப் பூங்காவுக்கு மிக அருகில்தான் சீதையம்மன் கோவில் ஒன்று உள்ளது. உயர்ந்த மரங்கள் நிறைந்த மலையைப் பின்னணியாகக் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது. “சீதாஎலிய” என்பது அந்த ஊரின் பெயர். இராவணன் சீதையைச் சிறையிட்டதாகச் சொல்லப்பட்ட அசோகவனம்தான் இது. இங்கு ஸ்ரீராமர்,சீதை,லட்சுமணன், அனுமன் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. கோயிலின் ஒரு பக்கத்தில் மிகவும் அழகிய தோற்றத்துடன் காட்சி தருகிறது “இராவணன் நீர்வீழ்ச்சி“. அந்த அருவியின் சலசல சத்தம் எந்த நேரமும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். கோயிலின் பின்புறம் சீதா அருவியும் அனுமன் பாதச்சுவடுகள் போன்ற பள்ளங்களும் காணப்படுகின்றன. இவை அனுமனின் காலடிகள் என்று பலர் நம்புகின்றனர்.
இராமாயண இதிகாசத்துடன் தொடர்புகொண்டதாகக் காணப்படும் இந்த ஆலயம் சிறியதாக ,நேர்த்தியானதாக இருக்கிறது. உலகில் சீதைக்கென உள்ள தனியான ஆலயம் இதுவாகும். அசோகவனத்தில் சீதை சிறைப்பட்டிருந்தமை தொடர்பில் அமைக்கப்பட்ட ஆலயமாதலால் பெரிதாக திருவிழாக்கள் எதுவும் கொண்டாடப்படுவதில்லை. எனினும் இங்குள்ள உழைக்கும் மக்களால் ஆலயத்தில் தைப்பொங்கல் விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பிக்கப்படுகிறது என அறியமுடிகிறது. சீதா எலிய கோயிலில் தற்போது இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர்.
சீதையைக் கடத்தி வரப் பயன்படுத்திய புஷ்பக விமானம், இராவணன் நிறுத்தி ஓய்வெடுத்ததாகக் கூறப்படும் இடம் ஒன்றில் தோட்டத் தொழிலாளர்கள் பூஜை வழிபாடு செய்து வருகின்றனர். சிவனொளி பாத மலைக்கு அருகில் அமைந்துள்ள மஸ்கெலியா, மவுசாகலை நீர்த்தேக்கம் மற்றும் கெனியோன் நீர் மின் நிலையத்திற்கு மேல் ஐந்து கன்னிமார் ஆலய மலைக்கு அருகில் மவுசாகலை நய்சா தோட்டத்தின் ஒரு பிரிவில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பிலான கற்பாறையாக இந்த இடம் காணப்படுகிறது. அந்தக் கற்பாறையில் சில அடையாளங்கள் காணப்படுகின்றன. அவை இராவணனின் புஷ்பக விமானத்தின் சில்லுகளின் தடங்கள் எனத் தோட்டத் தொழிலாளர்கள் நம்புகின்றனர்.
சில சமயம் இலங்கைக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தால்; பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் சின்ன இங்கிலாந்து என அழைக்கப்பட்டு இன்றும் இயற்கை அழகு பொங்கி வழியும் நுவரெலியா மாவட்டத்தின் கொள்ளை அழகுடன் கூடிய பாரம்பரியப் புகழ் பெற்ற இந்த ஆலயத்தையும் பார்த்து வரத் தவறாதீர்கள்.
–தியா–