நிலாவரை
யாழ்ப்பாணத்தில் உள்ள நவக்கிரி கிராமத்திற்கு அருகில் அமையப் பெற்று உள்ள நிலாவரைக்கும் கடலுக்கும் தரைக்கீழ்த் தொடர்புண்டு என மக்கள் நம்புகின்றனர். நிலாவரையில் ஒரு எலுமிச்சங் காயைப் போட்டால் அது கீரிமலைக் கடலில் மிதக்கும் என்றனர். இது சதுரக் கேணி போன்று அமைந்து பயத்தை தரக் கூடிய வகையில் கருமை படர்ந்த நிறத்தோடு கூடிய தண்ணீரைக் கொண்டது. ஆழங்காணாத இக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்தவர்கள் பலர். இது வற்றாத கிணறாகக் கருதப்படுகின்றது. கி. பி. 1824 இல் சேர் எட்வேட்பாண்ட் (Sir. Edward Bond) எனும் தேசாதிபதியின் கட்டளைப்படி அதனை அடுத்துள்ள தோட்டங்களுக்கு நீர் வழங்க நிலாவரைக் கிணற்றைப் பயன்படுத்தியதற்கான குறிப்புக்கள் நிறைய உண்டு. இன்றும் நிலாவரையைச் சுற்றி உள்ள எத்தனையோ வயல் நிலங்களுக்கும் வாழைத் தோட்டங்களுக்கும் கோடைக் காலங்களில் இங்கு இருந்துதான் நீர் எடுக்கின்றார்கள்.
இக்கிணறு குறித்து இராமாயணத்தோடு தொடர்புபட்ட கதை ஒன்று உள்ளது. சீதையை மீட்க இலங்கைக்கு வந்த இராமன் வானர சேனையின் தாகத்தைப் போக்க அம்பு எய்து இக்கிணற்றை உருவாக்கினார் என்று ஒரு ஐதீகக் கதை உள்ளது.
பேராசிரியர் சிவச்சந்திரனின் நிலாவரைக் கிணறு ஜீவநதியா என்கிற பயனுள்ள கட்டுரையில் முக்கிய விடயங்களைப் பதிவு செய்கின்றார்,
“இவ்வாறான கிணறுகளை நாம் நீர்ப்பாசனத்திற்காகவும், மழை நீரை தரைக்குக் கீழே சேமிப்பதற்காக உட்செலுத்துவதற்காகவும் பயன்படுத்தலாம். நிலாவரைக் கிணறு உள்ளிட்ட இவ்வாறான கிணறுகளிற் சில நீண்ட காலமாகப் பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1965 இல் நீர்வள வடிகாலமைப்புச் சபையினர் இவ்வகைக் கிணறுகள் பற்றி சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். நிலாவரைக் கிணற்றில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி 10 மணித்தியாலங்களில் 30 000 – 40 000 கலன் நீர் தோட்டப்பாசனத்திற்காக அக்கிணற்றில் இருந்து இறைக்கக்கூடிய தன்மை வெளியிடப்பட்டது. மேலதிகமாக நீரை இறைப்பின் உப்பு நீர் மேலோங்கி வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.”
போருக்குப் பிந்திய யாழ்ப்பாணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா இடங்களில் ஒன்றாக இக்கிணறு பிரபலம் பெற்று விளங்குகின்றது.
-தியா-