எசப்பாட்டு
மண்ணுக்கும் மரத்துக்கும் தாகமுன்னா
மழை கொட்டியே தாகத்தைத் தீக்குதடி!
வண்டுக்கும் தும்பிக்கும் தாகமுன்னா
வண்ண மலரும் தேன்தந்து தீக்குதடி!
பொறந்த கன்னுக்குத் தாகமுன்னா
பசுவும் மடி சுரந்து தீக்குதடி!
பச்சப் புள்ளைக்குத் தாகமுன்னா
பெத்தமனமும் முலை தந்து தீக்குதடி!
வளந்த சனத்துக்குத் தாகமுன்னா
வழி ஏதும் தெரியாம நிக்குதடி!
வெளிவானச் செவ்வாயில நீரிருக்காம்
வெருசா பானையைத் தூக்கி வாருங்கடி!
– ரவிக்குமார்
தாகமோ தாகமுன்னு விக்கி விக்கி
தவிக்குதுங்க நம்ம பூமிச் சனம்
தாகத்தத் தீக்கும் தந்திரந்தான் கேக்கையில
தகிக்கிற செவ்வாய்க்குத் தயங்காமப் போகச்சொன்ன…..
நாடாரு பஸ்ல நயமாத்தான் ஏறி
நாளு முளுக்க டவுனைச் சுத்த
நாலு ரூபாய் டிக்கட் எடுக்க
நாதி யில்லாம இருக்கும் என்ன
செவ்வாய்க் கிரகம் பாத்துப் பயணம்
செய்யச் சொன்னா எங்கே போவேன்?
செருப்ப வாங்கிவர காலை விக்கும்விதி
செத்துப்போறத விட்டா இருக்கோ வேறவழி?
-மதுசூதனன்.