தமிழர் கை வைத்தியக் குறிப்புக்கள்
அசீரணம் – ஓமம்(basil) அரைத்துப் பசும்பாலிலோ, அல்லது பச்சடியாகவோ உட்கொள்ளலாம். அத்துடன் 2 அவுன்ஸ் தேனையும் தண்ணீரில் கலந்து சாப்பிடலாம்.
கண்ணீர் வடிதல் – இதைத் தவிர்க்க வெறும் வயிற்றில் பாதாம் பருப்பை (Almonds) மெதுவாக மென்றுத் திண்ணலாம்.
காது வலி – மூன்று உள்ளிப்பூண்டு நகங்கள் வாதுமை (Almond) ஆகியவற்றை எண்ணெயில் அவை கருகும் வரை காய்ச்சி எடுத்துக்கொள்ளவும். தேவையான நேரம் 3 சொட்டுக்களை வலிதரும் காதில் விட்டுக்கொள்ளவும்.
குமட்டல் (Feeling to vomit )– சிறிதளவு கடல் உப்பை உள்ளங்கையில் வைத்து நக்கவும்.
சலதோசம் – சலதோசம், மார்புச்சளி, இருமல் போன்றவற்றின் தற்காலிக நிவாரணத்திற்கு சிறிதளவு பாலில் மச்சள், உடன் குத்திக் கலந்த மிளகு சேர்த்து உட்கொள்ளலாம்.
தலை வலி – தலைவலிகள் உடலில் பல விதமான கோளாறுகளுக்கான முன்காட்டி. ஆயினும் தலையின் ஓரிடத்தில் மாத்திரம் வலி இருந்தால், காலையில் திராட்சைப் பழச்சாறு (உடல் பருமனைப் பொறுத்து) 4-5 அவுன்ஸ் குடித்தால் நலம்.
தூக்கமின்மை – மது, மற்றும் தேநீர்,கோப்பி தவிர்த்து சில நாட்களுக்கு நன்கு கனிந்த மாம்பழங்களும், பாலும் உட்கொண்டு வரவும்.
தொண்டை வலி – புதிதாக வெட்டி பிழிந்த எலுமிச்சஞ் சாற்றை சற்று வெப்பமாக்கி, தேன்விட்டுக் கலந்து கொள்ளவும். அந்தச் சாற்றை நாக்கில் நக்கி, மெதுவாக தொண்டையுள் விழுங்கவும். இதை குறைந்தது மூன்று தடவைகளாவது செய்வது தொண்டை வலிக்கு நிவாரணத்தைத் தரும்.
நீரழிவு/Diabetes – இரத்த சர்க்கரையைக் குறைக்க இரண்டு மாதங்கள் வரை தொடர்ந்து பப்பாளி, நாவற்பழம் மாறிமாறிச் சாப்பிடவும். பிழிந்த எள்ளுப் பிண்ணாக்கை (எள்ளு அரைத்து, நல்லெண்ணெய் பிழிந்து வடித்த பின்னர் வரும் சத்துள்ள எச்சவுணவு) சிறிதளவு பனஞ்சக்கரை சேர்த்து தினசரி இரண்டு தடவை சாப்பிடவும். மேலும் நாவற்பழ விதையை உலர்த்தி இடித்து மாவாக்கி தினமும் 2-3 தடவை நீரில் சேர்த்து வெறும் வயிற்றில் உட்கொள்ளவேண்டும்.
அரிசிச்சோறு நிதமும் உண்போர் தீட்டிய வெள்ளையரிசியைத் தவிர்த்து, நாட்டரிசி அல்லது சிவப்பு அரிசியைப் பாவிக்கவேண்டும். மேலும் சோறு சமைத்தலிலும் கறுவாப் பட்டை Cinnamon சேர்த்து உலைக்கஞ்சி வடித்து சிறிதளவு சோற்றையும் கூடியளவு காய்கறிகளையும் உட்கொள்ளலாம்.
மலச்சிக்கல் – நார்த்தன்மையுள்ள பப்பாளிப் பழம், வாழைப்பழம் அதிகம் சாப்பிடலாம். இரவில் படுக்கப்போகு முன்னர் வெந்நீரும், காலை எழுந்ததும் குளிர்ந்த நீரும் சாப்பிடவேண்டும்.
வயிற்றுவலி – வெந்நீர் அருந்தலாம், அடுத்து மாதுளம் பழச்சாற்றில் உப்பு மிளகுபொடி சேர்த்துச் சாப்பிடலாம்.
வாந்தி – எலுமிச்சம் பழத்தை அறுத்து சிறிதளவு சர்க்கரை தடவி உறிஞ்சவும்.
- யோகி அருமைநாயகம்
முக்கிய பின்குறிப்பு/Disclaimer
மேலே தரப்பட்டவை யாவும் நாட்டுப்புற வைத்தியத் தொகுப்புத் தகவலாகவே தரப்படுகிறது. இந்தக் கைமுறைகளைப் பாவிப்பதிலும் அதனால் வரும் பிரதிவிளைவுகளுக்கும் இந்தத் தொகுப்பாளரோ இல்லை பனிப்பூக்கள் சஞ்சிகையோ பொறுப்பேற்காது.