\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கண்மாய்க் கரையும் களத்து மேடும்

Filed in இலக்கியம், கட்டுரை by on October 25, 2015 4 Comments

Asruvadai_2_620x300இலையுதிர் காலம் வந்தால் மினசோட்டாவில் பெரிதும் கொண்டாடப் படுவதில் ஒன்று இயற்கை காட்டும் வண்ண விளையாட்டு. மற்றொன்று ஆங்காங்கே நடத்தப்படும் அறுவடைக் கொண்டாட்டங்கள். வைக்கோல் கட்டுகளைத் திறந்த வண்டியில் அடுக்கி அதன் மீது அமரச் செய்து ஊர்வலம் கொண்டு செல்லும் வைக்கோல் சவாரி (Hay Ride) மற்றொரு புறம். பரங்கிக்காய்களை அறுவடை செய்து ஆங்காங்கே கிடத்தி விளையாட வைக்கும் பரங்கித் திட்டுகள் (Pumpkin Patch) இன்னொரு புறம். இந்தக் கொண்டாட்டத்தை எனது பிள்ளைகளோடு சென்று கண்டு களித்த போது, தமிழரின் நெற்பயிர் அறுவடையும் அதில் எனக்கு ஏற்பட்ட படிப்பினையையும் பதிவு செய்ய எத்தனித்தேன். அதில் விளைந்த கட்டுரைதான் இது.

அண்டை வெட்டி சேடை கூட்டி வயலைத் தயார்ப்படுத்துவது முதல் படி. ஆழ உழுது, உயரமான வரப்புகளை வெட்டுவர். இதை நினைக்கையில்

வரப்புயர நீர் உயரும்  

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்

என்ற ஒள‌வையின் வாழ்த்து நினைவிற்கு வருகிற‌து. வரப்பின் உயரம் நாட்டின் வர்த்தகத்தை நிர்ணயிக்கும் என்ற இந்தப் புரிதல் மனிதன் அறிய வேண்டிய முக்கியமான பாடம்.

தனது வயலில் விளைந்ததில் தரமானதை விதை நெல் என்று பாதுகாத்து வைத்திருப்பர். அதனை ஒரு சென்ட் (435 சதுர அடி) நிலத்திற்கு  ஒரு மரக்கால் (ஐந்து கிலோ) என்ற விகிதத்தில் விதைப்பர். நிலத்தின் தன்மையைக் கொண்டு முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஈரத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பர். விதைத்த முப்பது முதல் நாற்பது நாட்களுக்குள் நாற்றை எடுத்து மாற்றி நடுவர். இளம் நாற்றை நடுவதால் பூச்சிகள் அதிகம் வரும். பருவத்தே பயிர் செய் என்ற சொற்படி பருவமும் காலமும் பயிருக்கு மட்டுமின்றி மற்ற தொழிலுக்கும் முக்கியம்.

முன்னிரவு இருட்டு, சலசலக்கும் நெல் வயல் வரப்பு, வலக்கையில் தடியும் இடக்கையில் லாந்தரும் ஏந்தி என் தந்தை முன் நடக்க நான் பின்னாலே தொடர்ந்த நினைவுகள் பசுமையானவை. ஏரிப்பாசனத்தை நம்பிய நிலம் எங்களுடையது. சுற்றுமுறையில் ஏரி நீரைப் பயன் படுத்திக் கொள்வது வழக்கம். ஒருமுறையைத் தவற விட்டால் அடுத்த முறை வரச் சில நாட்கள் ஆகும்.  ஒரு முறை கூட தனது முறையை என் தந்தை தவற விட்டதாக நான் அறியேன். இந்தப் பயணத்தில் மேலே சொன்ன ஒழுக்கமும், உலகியல் பற்றிய அவரது பட்டறிவும் எனக்குப் பாடமானது.

வளர்ந்து வரும் நெற்பயிர் நிமிர்ந்து நிற்கும். பச்சைப் பசேல் என நிமிர்ந்த நெற்பயிர் வீசும் காற்றில் உரசிச் செய்யும் சத்தம் உழவால் வாழ்வோர்க்கு உயிரின் கீதம். நெற்பயிர் வளர்ந்து, குருத்து விட்டு, பால் பிடித்து, முற்றிக் கதிர் ஆகப் பல வாரங்கள் ஆகும். கதிர் முற்றிய பின்னர் தன் சுமையைத் தாங்க இயலாது சாய்ந்து விடும். அறியாத வயதில் ஆடி அசைந்து ஆர்ப்பரித்த இதே பயிர் இன்று கதிர் முற்றி முழுமை பெற்றதும் சாய்ந்து கிடப்பதில் நமக்கு இருவேறு பாடங்கள் உண்டு. ஒருபுறம் நிலையாமையைச் சொல்லும் இந்தக் கதிர், மற்றொரு புறம் கற்றுத் தெளிந்தவர் காட்டும் பணிவை உணர்த்துகிறது.

பண்டைய நெற்பயிர் வகைகள் சிறுமணி, கிச்சிலிச் சம்பா, பொன்னி எல்லாம் ஐந்து முதல் ஆறு மாதப் பயிர்களாகும். இக்காலக் கண்டு பிடிப்புகள் அதிகப் படியாக மூன்று மாதப் பயிர்களாகவே உள்ளன. பண்டைய வகைகளின் சுவையை, திடத்தைச் சொல்லவா வேண்டும். முற்றிய பயிரை இறுகப் பிடித்து, அறிவாள் கொண்டு அடியோடு அறுத்துக் கையில் பெரும்பிடி சேர்ந்ததும்  அறியாக அடுக்கி வைப்பர். இதனை அறிகெடை என்று சொல்வர். வைக்கோலில் திரித்த கயிற்றைப் பயன்படுத்தி இந்த அறிகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கட்டுவர். இரு பக்கமும் சமமாக இருக்கக் கதிரையும் அடியையும் மாற்றி மாற்றி வைத்துப் பிரி (வைக்கோலில் திரித்த கயிறு) கொண்டு கட்டுவர். இந்தக் கட்டுகளைத் தலையில் சுமந்து வயல்வெளியில் இருந்து களத்துமேடு வரை கொண்டு வருவர். இந்தப் பயணம் ஒரு சில நேரங்களில் 1 கிலோ மீட்டர் வரை நீளும். வயலில் கடைசியாகக் கட்டை தூக்கிக் கொண்டு நடக்கத் துவங்கும் என் தந்தை முதல் ஆளாகக் களத்திற்கு வந்து கட்டுகளை வாங்கி அடுக்குவார். வேலையைச் செய்யப் பெற அவ்வேலையை நாமே செவ்வனே செய்து காட்டுதல் முக்கியமானது. இன்று கண்காணிகள் பலர் தான் கண்காணிக்கும் வேலையைத் தானே ஒருமுறை கூட செய்து பார்த்திராததால் பல பிரச்சனைகள் வருகின்றன.

Asruvadai_1_620x620கட்டுகளைச் சுமந்து கொண்டு செல்வோரைப் பார்த்து மிக  எளிமையானது என்று நினைத்து, என் தலையில் ஒருகட்டைத் தூக்கி வைக்கச் சொல்லி வம்பு செய்தேன். பலர் சொல்லியும் அடங்காததால் ஒருகட்டை என்தலையில் ஏற்றிவிட்டு என் முன்னர் பலரும் நடக்கத் தொடங்கினர். பாதி தூரம் கூட தாண்டி இருக்க மாட்டேன். கழுத்தில் ஒரே அழுத்தம்.. இன்னும் சற்று தூரம் நடந்தேன். தொடர முடியாது என்ற நிலையில் கட்டைக் கீழே போட்டுவிட்டேன். அந்தக் கட்டை மற்றொருவர் தாங்கிச் சென்று களத்தில் சேர்த்தார். அடுத்த முறை வயலுக்குஎ சென்ற என் தந்தையின் பார்வையில் சிந்தி இருந்த நெல்மணிகள் பட்டன. அன்று என்னை ஒரு மரக்காலைக் கையில் கொடுத்து இறைந்த நெல்லை என்னைக் கொண்டு எடுக்க வைத்தார். அவர் அன்று கொடுத்த வேலையும், எனக்கு அளித்த அறிவுரையும் உணவை வீண் அடிப்பது பெருங்குற்றம் என என் நெஞ்சில் பதிய வைத்தது.   

கட்டுகளை நெடுஞ்சாணாகவும் இல்லாமல் தரையளவும் இல்லாமல் சமபக்க முக்கோணம் போல அடுக்குவர். கட்டுகளை அடிக்க போட்டு கயிற்றைப் பயன்படுத்துவர். இதனால் முறையாக   வாங்கி அடித்த பின் எளிதாக வைக்கோலை விடுவிக்க இயலும். கட்டடித்த வைக்கோலை மாடு கட்டி அல்லது இயந்திரம் கொண்டு மிதித்து மீதமுள்ள நெல்லையும் பிரிப்பர்.

”மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று

ஆனைகட்டி போரடித்த”தும் உண்டாம்.

நெல்லைச் சேகரித்து சில நாட்கள் களத்திலேயே உலர்த்துவர். இரவில் சேமித்து அம்பாரமாக (குவியல்) வைப்பர். களவைக் கண்காணிக்க முத்திரைப் பலகை கொண்டு சாம்பல் வைத்து நெல்லின் மீது பரவலாக முத்திரை வைப்பார். வீட்டிற்குக் கொண்டு சென்று உயரமான குதிரில் கொட்டி நெல்லைப் பாதுகாப்பர். உணவுத் தயாரிப்பில் இருக்கும் வலியை உணர்ந்து அந்த வேளாண் பொருளுக்கு உழவர் பெரும் விலையை ஆராய்ந்தால் நாம் போலியான வணிக மாயையில் சிக்கி இருப்பது நமக்கு புலனாகும்.

  • சச்சிதானந்தன் வெ  

Comments (4)

Trackback URL | Comments RSS Feed

  1. Gajalakshmi S says:

    The essay is awesome. Just traveled back in time to the village and experienced the harvest time! Way to go Sachi sir.. All the Best for future endeavors too!

    Keep writing these fabulous articles!

  2. சச்சிதானந்தன் வெ says:

    நன்றி கஜலக்ஷ்மி!

  3. யோகி says:

    அழகான விவரிப்பு சச்சி, நீங்கள் வயல் வரம்பில் எம்மை நடக்க வைத்தமைக்கு நன்றிகள் பல. உங்கள் சொல் ஓவிய சித்தரிப்பே தனித்துவமானது. அருமை

  4. Sachi says:

    தங்களின் படங்களே இந்த கட்டுரைக்கு உயிரூட்டுகிறது. நன்றிகள் பல யோகி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad