ஒரு IT ஆண் மகனின் சோகக் கதை
காலை அலாரம் அடித்தது. ஒரு சோம்பலுடன் புரண்டு படுத்து அதை அமர்த்தினான் தினேஷ். சமையல் அறையிலிருந்து ஒரு குரல் கொடுத்தாள் கலை.
“எழுந்திருங்க, இன்னிக்கு உங்க turn வர்ஷாவைக் குளிக்க வைக்கறது”
“ஹ்ம்ம்”
காலை 3 மணிக்குத் தான் படுத்திருந்தான். கண்கள் எரிந்தன.
நேற்று முழுவதும் offshore டீமுடன் மண்டையை உடைத்து என்ன தவறு நடந்தது என்று குடைந்தாகி விட்டது.
இன்று client இடம் பதில் சொல்லி ஆக வேண்டும்.
யாருடைய தவறு என்று கண்டு பிடிக்க முடியவில்லை. இரவு முழுவதும் offshore டீம் யோசித்துத் தங்கள் தவறு இல்லை என்று நிரூபித்து விட்டார்கள். அவர்கள் வேலையை “பேட்ச்” (patch) செய்யும் ஒரு பகுதியை நான் தான் எழுதினேன். ஒரு வேளை என்னுடைய பகுதியில்தான் எதாவது தவறோ?
யோசிக்கவே முடியவில்லை தினேஷால். இன்று மாலை 4 மணிக்கு ஒரு மீட்டிங் உள்ளது. என் தவறு என்றால் என்ன ஆகும்?.
இந்த ஒரு பகுதி செயல் இழப்பதால் client அதிருப்தி ஆவான். அப்புறம் மேலே உள்ள மேனேஜர் என் மண்டையை உடைப்பான். யோசித்துத் தானே எழுதினோம். என்ன தப்பாக ஆகியிருக்கும்?
யோசைனையுடனே இன்னும் படுத்திருந்தான். மறுபடியும் ஒரு குரல் “எழுந்திருங்க நேரம் ஆகுது. எனக்கு இன்னிக்கு காலையிலேயே டீம் மீட்டிங்”. எரிந்த கண்களில் தண்ணீர் அடித்துத் தூக்கம் மறக்க முயற்சித்தான். மூன்று மணி நேரம் தான் தூங்கி இருந்ததால் உடல் வேகமாக ஒத்துழைக்க மறுத்தது. மகள் வர்ஷாவை எழுப்பிக் கிளப்பினான்.
ஐந்து வயது வாண்டு ஏதோ விஷயங்களைப் பேசியபடி கிளம்பியது. இடையிலே வர்ஷாவிற்கு ம்ம் கொட்டியபடி கிளப்பினான். “என்ன தவறு ஆகி இருக்கும். ஒரு முக்கியமான பகுதிக்கான code அது. offshore டீம் தலை ரொம்ப சாமர்த்தியமாக தங்கள் பகுதி எல்லாம் சரியாக உள்ளது என்று தெளிவாக ஒரு ஈமெயில் அனுப்பி விட்டான். அப்போ இது சொதப்பினா என் தலை தான் மாட்டும். என்ன ஆகும்?”.
“அப்பா.. அப்பா”
வர்ஷா அழுத்தி அழைத்த பொழுது தான் அவள் எதோ கேள்வி கேட்டதை உணர்ந்தான்.
“சொல்லுடா”
“எனக்கு வாங்கித் தரியா?”
“என்ன?”
“வாங்கித் தரியா?”
தினேஷ் பதிலுரைக்கும் முன் வெளியில் கலையின் குரல் கேட்டது
“நீங்க பாட்டுக்குச் சரின்னு சொல்ல வேண்டாம். உங்கள நல்லா ஏமாத்தி வாங்கிக்கறா. எப்போப் பாரு வேற ஏதோ சிந்தனைல இருந்தா, அப்போ வீட்டில இருக்கற நண்டு கூட நல்லா ஏமாத்தும் உங்கள”
“என்னடா வர்ஷா குட்டி இப்படி அப்பாவை ஏமாத்தற”, சொல்லி விட்டு அவளைக் கொஞ்சமாகக் கிச்சுக் கிச்சு மூட்டிச் சிரிக்க வைத்து விட்டுக் கிளப்பினான். நடுவில் ஃபோனில் ஒரு மெயில் வந்ததன் சத்தம் வந்த பொழுது, பகீர் என்றது. இங்குள்ள மேனேஜர் சிக்கிரம் இந்தப் பிரச்சினையைச் சரி செய்யுமாறு மெயில் அனுப்பி இருந்தான்.
அவன் அனுப்பி இருக்கும் தொனி பார்த்தால், தவறு இவனுடையாதாக இருந்தால் வம்பு தான் போல. வேலையை விட்டு நீக்கப்படுவோமோ? நினைத்துப் பார்க்கவே பகீரென்று இருந்தது. வீட்டு லோன், கார் லோன், எல்லாம் என்ன ஆகும்.
இதே சிந்தனையில் தானும் கிளம்பினான். வெளியில் கலை அவசரமாக அனைவரது மதிய உணவை அடைத்துக் கொண்டு இருந்தாள்.
“தினேஷ் இன்னிக்குச் சாயங்காலம் நீங்க வர்ஷாவைக் கொஞ்சம் பிக் அப் பண்ணிட்டு அப்படியே …”
அவளைப் பிக் அப் என்றதற்கு அப்புறம் அவள் செய்யச் சொன்ன விஷயங்கள் காதில் ஒன்றும் விழவில்லை தினேஷ்க்கு மனம் பூராகவும் அலுவலகம் பற்றிய சிந்தனையில் இருந்தது”
“தினேஷ் புரிஞ்சதா”
“ஹ”
“நான் கேட்ட உதவி பண்றீங்களா?. உங்களுக்காக வேலையை விட்டு இங்க வந்து ஒரு வழியா இப்போ தான் வேலைக்குப் போறேன். எனக்கு உதவி பண்றதா வாக்குக் கொடுத்து இருக்கீங்க”.
கலை ஒரு பாட்டம் திரும்பி ஆரம்பிக்க, இவ்ளோ நேரம் அவள் என்ன உதவி கேட்டாள் என்று கேட்க வாயில்லாமல், “சரி கலை, கட்டாயம் வர்ஷாவை பிக் பண்ணணும், அப்புறம் நீ கேட்ட ஒரு ஹெல்ப் அவ்ளோ தானே நான் பாத்துகிறேன்.” ஒரு வேளை என் வேலை போய் விட்டால் இவள் வேலை ஒரு தெம்பு அளிக்கும் என்று யோசித்தபடிக் கிளம்பினான்.
***
அலுவலகம் வந்தான் தினேஷ். டீமின் சக பணியாளர்கள் இவன் முகம் பார்த்து ஏதேதோ பேசிக் கொண்டார்கள். client இந்தப் பிரச்சினையைப் பெரிதாக ஆக்கி இருப்பான் போல. எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது. வயிற்றில் புளியைக் கரைப்பது போல இருந்தது. கணினியின் முன் அமர்ந்து அத்தனை மின்னஞ்சல்களையும் படித்த பொழுது, நேற்று தடை பட்டுப் போன “go live ” குறித்து ஒரே அதிருப்தியாக இருப்பதையும் , இவர்கள் பக்கம் உள்ள தவறுகளைத் திருத்தி இன்று மாலை 4 மணி மீட்டிங் போது சரியான code கொடுக்குமாறும் பணித்திருந்தார்கள்.
“சரிதான் போச்சு”
வேகமாக ஒரு காப்பி எடுத்து வந்து தன் பகுதியில் என்ன தவறு என்று தேடத் தொடங்கினான். தன் மேல் தவறு இல்லை என்று இதில் இருந்து எப்படியாவது தப்பிக்க முடியுமா என்று யோசித்து கொண்டே இருந்தான்.
“ச்சே கடைசியில் கணினியில் இன்ஜினியரிங் படித்து, பாதி நேரம் செய்யும் வேலை இது தான். இது மாதிரி என் தவறு இல்லை உன் தவறு என்று சுட்டிக் காட்டியே வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டி இருக்கு” மிகவும் சலிப்பாக இருந்தது அவனுக்கு.
“என்னுடைய பகுதியில் எந்தத் தவறும் இல்லை, இது அவர்கள் data issue ஆக இருக்கலாம்” என்று கொஞ்சம் இழுத்து மேனேஜரிடம் சொல்லத் தொடங்கிய பொழுது அவர் வெறுமனே உதடு பிதுக்கினார்.
நேரம் ஓடிக் கொண்டே இருந்து. மதிய உணவு சாப்பிட மனம் இல்லை.
“வேலை போய் விடும் போல…. நன்றி இல்லாத கம்பெனி எத்தனை வருஷம் நாயா உழைச்சிருக்கேன் ” கோபம் வந்தது தினேஷ்க்கு
ரெண்டு மாதம் முன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஒரு பெரியவர் இன்றைய கால கட்டத்தில் IT கம்பெனிகளில் ஒரு union கூட இல்லை. ஒருவருக்கு வேலை போய் விட்டால் அதைப்பற்றி மற்றவர்கள் கவலைப்படுவது இல்லை என்று அங்கலாய்த்த பொழுது. அவரைக் கேலி செய்திருந்தான் தினேஷ். இப்பொழுது இந்த வேலைக்கு ஒரு பாதுகாப்புக் கூட இல்லையே என்று தோன்றியது. இரவு முழுக்கத் தூங்காதது, சரியாகச் சாப்பிடாதது என்று எல்லாமாகச் சேர்ந்து தலையை வலிக்கச் செய்தது. மணி நான்கு ஆகப் பத்து நிமிடம் இருந்தது. “சரி அவ்ளோ தான், வேற வேலை பார்க்க வேண்டியது தான்”. எதுக்கும் இணைய தளத்தில் தன்னுடைய சமீபத்திய resume ஒன்றை எடுத்துப் போட்டு வைத்தான்.
நான்கு மணி…..
மீட்டிங்க்குப் போகும் முன் சரியான நேரத்தில் ஒரு ஈமெயில் வந்தது. client சைடு அனுப்பி இருந்தார்கள். இது அவர்கள் data issue என்றும், அதைச் சரி செய்த பின் எல்லாம் மிகச் சரியாக வேலை செய்கிறது என்றும் இவனுடைய பகுதி மிகச் சிறப்பாக இருப்பதாகவும் தனிப்பட்ட முறையில் பாராட்ட விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு வினாடியில் ஜீரோ விலிருந்து ஹீரோ ஆகிப் போனான் தினேஷ். அனைவரும் அவனைப் பாராட்டித்தள்ள, அப்படியே மேலே பறப்பது போல இருந்தது தினேஷ்க்கு “நானா, கொக்கா . சூப்பர்ரா தினேஷ், கலக்கிட்ட .. என எல்லாப் பயமும் மறந்து ஒரே குஷியாகிப் போனான்” டிடிங் என்று ஒரு கைபேசியில் ஒரு மெசேஜ் வந்தது. கலை ஒரு நினைவூட்டல் அனுப்பி இருந்தாள்.
“சோ ஸ்வீட் . என்ன ஹெல்ப் கேட்டாள் ன்னு சேர்த்துச் சொல்லியிருக்கா போல , யோசித்தபடி எடுத்துப் பார்த்தான்”
“டைம் டு பிக் அப் வர்ஷா அண்ட் திஸ் இஸ் அ ரிமைண்டெர் ..” என்று வெறுமனே எழுதி இருந்தாள்.
அலுவலகத்தில் சொல்லி விட்டுக் கிளம்பினான். அடுத்த அவார்ட் க்கு பேரைப் பரிந்துரை செய்வதாக மேனேஜர் கூறியதும், பறந்தபடி கிளம்பி வர்ஷாவைக் கூட்டிக் கொண்டான்.
“அப்பா இன்னிக்கு எனக்கு டான்ஸ் கிளாஸ் இருக்கு”.
“ஓ இதுக்குத் தான் ஹெல்ப் கேட்டிருப்பா கலை . நான் சூப்பர் இல்ல. நான் கூட்டிட்டுப் போறேண்டா”
ஹப்பாடி வீட்டிலயும் இன்னிக்கு திட்டு மிச்சம் .
நிம்மதியாக வர்ஷாவை அவள் டான்ஸ் கிளாசில் விடும் பொழுது , டீச்சர் ஒரு மாதிரிப் பார்க்க, “ஓ வேற எதையோ மறந்து விட்டோம் போல” என்று உரைத்தது. இப்பொழுது அவார்ட் எல்லாம் மறந்து போனது தினேஷ்க்கு.
என்ன சொன்னாள் கலை?. திருப்பிக் கேட்டா சண்டை வரும்.
“என்ன அவார்ட் கிடைச்சு என்ன, வீட்டில ஜீரோ ன்னு திட்டு விழும்”.
ஹ்ம்ம் என்ற பெருமூச்சுடன் வீட்டிற்க்குள் நுழைந்தான் தினேஷ்.
- லக்ஷ்மி சுப்பு
A very true IT Indian story … Day to day life of an Indian IT guy in USA. Well written and narrated very well . Want part 2 . Lol Great job !!!
superb story Lakshmi. Superb screenplay. Kudos to you . Priya C K
Wonderful, Lakshmi. Have been missing your stories all these days. Just loved to read a reality we all go through.