\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 2

Filed in இலக்கியம், கட்டுரை by on November 29, 2015 1 Comment

msviswanathan_620x620(எங்கேயும் எப்போதும் MSV  – பகுதி 1)

ஜாஸ் (Jazz) என்பது ஐம்பதுகளின் மத்தியில் பிரபலமடையத் தொடங்கிய ஒரு இசை வடிவம். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாழ்வியல் இசையாகக் குறிக்கப்படும் இது பல உட்பிரிவுகளைக் கொண்டு விளக்குவதற்குச் சற்றுக் கடினமாக இருந்தாலும் ப்ளூஸ் (Blues) எனும் பிரிவின் படி மனித வாழ்வியலில் இழையோடும் சோகத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் இது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுப் பிரபலமடையத் தொடங்கியது. அக்காலங்களில் இங்கு சவ ஊர்வலங்களில் இவ்வகை இசை ஒலிக்கப்பட்டதாகவும், அப்போது ஊர்வலத்தில் ஒருவர் ‘வேகப்படுத்துங்கள் நண்பர்களே’ (Jazz it up boys) என்று கூக்குரலிட்டதாகவும், அது முதல் இவ்வகை இசைக்கு ஜாஸ் என்று பெயர் நிலைத்துப் போனதாகவும் கருதப்படுகிறது. லூயி ஆர்ம்ஸ்ட்ராங்க், மைல்ஸ் டேவிஸ் இருவரும் ஜாஸ் இசைக்குப் பெரும்பாங்காற்றியவர்கள்.

இந்த வகை இசை தாழ்ந்த கட்டையில் ஒலித்தாலும், தட்டையாகயில்லாமல் அவ்வப்போது எதிர்பாராத ஏற்ற இறக்க மாற்றங்களைக் கொண்டிருக்கும். ஜாஸில் பிராஸ் என்று வழங்கப்படும் டிரம்பட், சாக்ஸஃபோன், கிளாரினெட் மற்றும் பேஸ், அக்குஸ்டிக் கிட்டார், பியானோ, டிரம்ஸ் இசைக்கருவிகள் பிரதானமாக இடம்பெறும்.

ஜாஸ் இசையின் மிக அத்தியாவசியக் கூறு இம்ப்ரோவைசேஷன் எனப்படும் மெருகேற்றுதல். இசைக்கப்படும் சூழ்நிலைக்குத் தக்கவாறு ஏற்ற இறக்கங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் முறை. ஒரு கட்டுக்குள் இயங்கும் செவ்வியல் (classical) முறையிலிருந்து வேறுபட்டது.

தமிழ் மெல்லிசை வடிவத்தின் பிதாமகர்களில் ஒருவரான எம்.எஸ்.விக்கு இம்ப்ரோவைசேஷன் என்பது இயற்கையாக அமைந்தவொன்று. பாடகர்களுக்கு அவர் பாடலைப் பாடிக் காண்பிக்கும் போது ஒவ்வொரு முறையும் மெருகேற்றிக் கொண்டே போவது பாடகர்களுக்கு மிகச் சவாலாக அமைவதுண்டு.

தமிழ்த் திரைப்பட இயக்குனர்களில் இசைக்கு முக்கியத்துவம் அளித்துப் பல பரிசோதனைகளைச் செய்தவர்களில் ஸ்ரீதரும், பாலச்சந்தரும் முக்கியமானவர்கள். இவர்களது அனைத்துப் படங்களிலும் பாடல்கள் புதுமையாகவும், மற்ற படங்களிலிருந்து வேறுபட்டு அமைந்திருப்பதையும் காண முடியும். அப்படி 1964 ல், எம்.எஸ்.வி. யின் இணைத் தயாரிப்பில் வெளியான படம் கலைக்கோயில். படமொன்று தயாரிக்க வேண்டுமென்று எம்.எஸ்.வி கேட்ட போது வெற்றிக்கு உத்தரவாதம் நிறைந்த முழு நீள நகைச்சுவைக் கதையொன்றும் (காதலிக்க நேரமில்லை), இசைக் கலைஞனைப் பற்றிய முதலுக்கு உத்திரவாதம் அளிக்க முடியாத கதையொன்றும் இருப்பதாக ஸ்ரீதர் கூற எம்.எஸ்.வி. தேர்ந்தெடுத்தது முதலுக்கு உத்தரவாதம் அளிக்க இயலாத “கலைக்கோயில்”. திரைப்படத்தையே.”தங்கரதம் வந்தது வீதியிலே”, ”தேவியர் இருவர் முருகனுக்கு”, ”நான் உன்னைச் சேர்ந்த செல்வம்’ என்ற முத்தானப் பாடல்கள் நிறைந்த திரைப்படம் இது.

பாரம்பரிய இசைக் கதாநாயகன் போதைக்கு அடிமையாகிய பின்னர் பாடும் ‘முள்ளில் ரோஜா’ என்று ‘ஸ்விங்’ முறையில் அமைந்த ஒரு பாடல்.  இதனிடையே சுத்தமான ஜாஸ் இசையைத் தமிழ்த் திரைக்கு அறிமுகப்படுத்திய ‘வர வேண்டும் ஒரு பொழுது’ என்ற பாடல்.

‘வர வேண்டும் ஒரு பொழுது; வராமலிருந்தால் சுவை தெரியாது’.

தனது பல புதுமை முயற்சிகளில் எம்.எஸ்.வி., எல்.ஆர். ஈஸ்வரியைப் பாட வைத்துள்ளார். அதிலும் மேற்கத்திய இசைப் பாணிப் பாடல்களில் அவர் பெரிதும் நம்பியது எல்.ஆர். ஈஸ்வரியைத் தான். ஈஸ்வரியும் மெல்லிசை மன்னரது நம்பிக்கைக்கு என்றும் குறை வைத்ததில்லை.

வர வேண்டும் ஒரு பொழுது – ஸ்மூத் ஜாஸ் அல்லது சாஃப்ட் ஜாஸ் என்று சொல்லப்படும் ஆர்ப்பாட்டமில்லாத, காதல் உணர்வைத் தூண்டக் கூடிய அமைதியான இசை. இசைக் கருவிகளின் அணிவகுப்பு ஒருபுறமிருக்க ‘வர வே…ண்டும்… ஒரு பொழுதூஊஊஊ .. வரா..மல் இருந்தா…ல், சுவை தெரியா…து’ என்று ஓவ்வொரு வரியின் இறுதிச் சொல்லினை இழுப்பதில் தான் ‘ஜாஸ்’ இசையின் சுகத்தை அள்ளி வழங்கியுள்ளனர் மெல்லிசை மன்னர்கள். இந்தப் பாடலின் நுணுக்கங்களைக் கூர்ந்து கவனித்தால், திரையிசை முரண்களுக்குச் சிறிதும் இடமளிக்காமல் பாரம்பரிய ஜாஸ் இசைப்படி ஆண் குரலில் கோரஸ் ஒலிப்பது (வ்வாவ், வ்வாவ் என்று மிக மெலிதாக ஒலிப்பது)  முதல், ஆரவாரமில்லாத டிரம்ஸ், பியானோவுடன் ப்ளுஸ் இலக்கணம் அத்தனையும் ஒரு தமிழ்த் திரைப்படப் பாடலுக்குள் புகுத்தப்பட்டிருப்பது விளங்கும். ‘க்ளப் டான்ஸ்’ என்று அக்காலச் சினிமாக்களில் கிளர்ச்சியூட்டும் பாடல்களில் இப்படி ஒரு புதுமை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மிக மிகக் குறைவான இசைக் கருவிகள், ஒலிப்பதிவு வசதிகளுடன் இத்தனை நேர்த்தியான ஜாஸ் வடிவத்தைக் கொடுக்க இவர்களால் மட்டுமே முடிந்தது. பாடலின் உணர்வுகளையும் இலக்கணத்தையும் முற்றிலும் புரிந்து கொண்டு பாடிய எல்.ஆர்.ஈஸ்வரியும் இதில் மிகவும் பாராட்டப்படவேண்டியவர்.

இந்தச் சமயங்களில் வந்தப் படங்களில் மிக அளவாக அதே சமயம் கவனத்துடன் ஜாஸ் இசையைக்  கையாண்டுள்ளார் எம்.எஸ்.வி. ‘ஆடவரெலாம் ஆட வரலாம்’ (கறுப்புப் பணம்), ‘நீ என்பதென்ன நான் என்பதென்ன’ (வெண்ணிற ஆடை) போன்ற பாடல்கள் இதற்குச் சில உதாரணங்கள்.

இப்பாடல்களின் மகத்துவத்தை வார்த்தைகளால் வருணிப்பது மிக மிகக் கடினம். இதில் துரதிர்ஷ்டமான விஷயம் ‘வரவேண்டும் ஒரு பொழுது’ போன்ற பாடல்களின் ஒலி வடிவம் பாதுகாக்கப்படாமல் தெளிவின்மையுடன் கிடைக்கப்பெறுவது தான். திரையிசை வல்லுநர்களும் ஆய்வாளர்களும் இது போன்ற அரிய பொக்கிஷங்களைச் சேகரித்து வைப்பது அவசியம்.

அடுத்த இதழில் எம்.எஸ்.வியின் மற்றுமொரு இசை வடிவத்துடன் உங்களைச் சந்திக்கிறேன்.

  • ரவிக்குமார்.

பாடலைக் காணும் இணைய முகவரி : https://www.youtube.com/watch?v=cwGqMFn7gD4  

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. dr. Asokan says:

    can i have this song வர வேண்டும் ஒரு ழுது வராமலிருந்தால் சுவை தெரியாது.
    i die to listen to this song since a ling time. not available on the net.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad