\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சமத்துவம்

Filed in இலக்கியம், கதை by on December 27, 2015 0 Comments

samathuvam_620x690அதிகாலை 5 மணி……

என்றும் போல் அன்றும் கணேஷின் வீடு முழுவதுமாக
எழுந்திருந்தது. அம்மா சரஸ்வதி எழுந்து படுக்கையை மடித்து வைத்துக்
கொண்டிருந்தார். கணேஷின் அப்பா கோவிந்தராஜ ஐயர் எழுந்து குளியலறைக்குச் சென்று
குளியலைத் தொடங்கியிருந்தார். கணேஷ் ட்ராக் பேண்ட் டி. ஷர்ட் சகிதமாக ஹாலில்
அமர்ந்து ஷூ மாட்டிக் கொள்ளத் தொடங்கியிருந்தான். வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர்
நடந்தால் மெரீனா பீச், அதில் தினமும் ஜாகிங்க் செய்வது அவனுக்கு மிகவும் பிடித்தமான வழக்கங்களில் ஒன்று. தங்கை ஜெயஸ்ரீ தனது அறையில் புரண்டு புரண்டு படுத்து இன்னமும் சில நிமிடங்களில் இந்த அம்மா எழுப்பி விட்டுவிடுவாள் என்ற எரிச்சலுடன் எழுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

அப்பா அம்மாவிற்கு ஒரு அறை, கல்லூரி படிக்கும் கணேஷிற்கும், ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருக்கும் ஜெயஸ்ரீக்கு ஒரு அறை, விருந்தினர் அறை, பூஜை அறை என்று நான்கு அறைகளும், விஸ்தாரமான ஹாலும், அடுக்களையும், மூன்று பாத்ரூம்களும் கொண்ட மயிலாப்பூரின் மத்தியில் அமைந்த வசதியான ஃப்ளாட் ஒன்றில் அவர்கள் வசித்து வந்தனர். கோடீஸ்வரர்கள் என்று சொல்ல இயலாவிட்டாலும், கார், வீடு, கைநிறையப் பணம் என வசதியாகவே வாழ்ந்து வந்த குடும்பம் அது.

மிகவும் சாஸ்திரோத்ஸ்வமான குடும்பமது.
கோவிந்தராஜய்யர் ஒரு I.A.S அதிகாரி. சென்னை மாநகராட்சியின் ஒரு உயர்ந்த பதவியிலிருப்பவர். மிகவும் நேர்மையானவர். தனக்கிருக்கும் அதிகாரத்தை வைத்து லஞ்சம் வாங்குவது என்று தொடங்கியிருந்தாரேயானால், கோடீஸ்வரராக ஆகியிருக்கலாம். ஆனால் அதற்குச் சற்றும் உடன்படாதவர் அவர். வரும் சம்பளம், பூர்வீக சொத்து மற்றும் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மட்டுமே வைத்துக் கொண்டு வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொண்டு யாருக்கும் தொந்தரவு தராத நிலையிலிருப்பவர். ஆழமாகப் படிப்பவர், சமஸ்கிருத நாட்டமும், இயல்பாகவே தமிழ் இலக்கியங்களில் நாட்டமும் கொண்ட அவரின் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரே குணம் என்று சொல்ல வேண்டுமானால் எவரிடமும் அவ்வளவு எளிதாகப் பழகமாட்டார் என்பதே. பல வருடங்களாகப் பயின்ற சாஸ்திரங்களும், வளர்ந்த வளர்ப்பும் அவரை ஒரு கட்டுக் கோப்பிற்குள் போட்டு வைத்திருந்தது என்றே சொல்ல வேண்டும். சாதி வேறுபாடு பார்த்து மனிதர்களைப் பிரிப்பவரல்ல, ஆனால் இது போன்ற நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்று ஒரு வழி வகுத்துக் கொண்டு அதுபோன்ற நடைமுறை இல்லாதவர்களிடமிருந்து சற்று ஒதுங்கி இருப்பவர். ஆனால் மிகவும் எளிதாக, சாதி வேறுபாடு பார்ப்பவர் என்று அடையாளப்படுத்தப் படக்கூடியவராகத் தான் இருந்தார்.

கடவுளுக்காகவும், சமுதாயத்திற்காகவும் பணமாகவும், பொருளுதவியாகவும், சரீரப் பிரயாசையாகவும், தன் தொழில் கடமையாகவும் அவர் தந்த பங்களிப்பு அளவிடற்கரியது. ஆனால் அவரின் தோற்றம், மொழி, நடை, உடை, பேசும் தன்மை அனைத்தும் அவரை ஒரு பிற்போக்குவாதியாகவும், உயர்ந்த சாதி என்ற எண்ணம் கொண்டவராகவும் தான் உலகுக்கு காட்டியது. அவர் அதைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

கணேஷ் அவரிலிருந்து பெருமளவு மாறுபட்டவன்.
என்ஜினியரிங்  படிக்கும் அவனுக்குப் பல
துறைகளிலும் ஆர்வமதிகம். சிறு வயதிலேயே அப்பாவின் கண்டிப்பினால் பல நல்ல
குணங்களும் தாமாக அமையப் பெற்றவனாக இருந்தான். ஆனால், அவனுக்கு ஏற்பட்ட ஒரு தமிழாசிரியரின் தொடர்பால் பாரதியையும், பாரதிதாசனையும் ஆழ்ந்து படிக்கத் தொடங்கியிருந்தான். சாஸ்திரங்களின் அர்த்தங்கள் என்ன என்பதை அறிய பாரதியைப் படிக்க வேண்டுமென்பது தமிழார்வம் உள்ள பலருக்கும் தெரியாது என்பதே உண்மை. பாரதியின் வழிகாட்டுதலால், திருப்பாவை, திருவம்பாவை எனவும் படிக்கப் படிக்க அவன் ஆளுமை சிறகடித்துப் பறக்கத் தொடங்கியிருந்தது. ஆழமான தமிழ்ப் புலமையும், ஆர்வமும் உள்ள பலரும், அறியாத விஷயம் மேற்சொன்ன இலக்கியங்களெல்லாம் வெறும் பக்தி இலக்கியங்களல்ல என்பதே. அவை சமூக இலக்கியங்கள். ஒரு மனிதன் எவ்வாறு வாழவேண்டுமென்பதைப் படிப்படியாகச் சொல்லித்தரும் பழமை இலக்கியங்கள். இவற்றைப் படித்ததனால் கணேஷின் மனம் தனது தந்தையை விடவும் பரந்து விரிந்திருந்தது. மகன் தந்தையைவிட அதிகமான உயரத்தை அடைவது தானே இயற்கையின் நியதி, பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சி.

தந்தைக்கும் மகனுக்கும் அவ்வப்போது விவாதம்
வருவதுண்டு. பொதுவான விவாதங்கள் கணேஷின் அன்றாடச் செயல்களைப் பற்றியே இருக்கும்.

“நான் கேள்விப்பட்டது உண்மையா? அவாத்துக்கெல்லாம் எதுக்குப் போன?”

“அவன் என் ஃப்ரெண்ட் பா”

“ஸோ, மாம்சம் பண்ற பாத்திரத்திலயே நோக்கும் வெஜிடேரியன் வடிச்சுப் போட்டாளா, நீயும் அதக் கொட்டிண்டு வந்தியா?”

”எவ்வளவு உயர்ந்த மனிதரான தன் தந்தை இந்த விஷயத்தில் மட்டுமேன் இப்படி…” ஆச்சரியப்படுவான் கணேஷ். வெஜிடேரியனிஸத்தின் உள்ளர்த்தங்களை உணர்ந்து அதனைப் பின்பற்றுபவன் கணேஷ், அதனைத்தான் தந்தையும் குறிப்பிடுகிறார் என்று உணர்ந்திருந்தாலும் அவரின் வெளிப்பாடுகள் சாதி வித்தியாசம் பார்ப்பவராக அவரை ஊருக்குக் காட்டுகிறதே என்பது கணேஷின் மிகப் பெரிய வருத்தங்களில் ஒன்று.

ஜாகிங் சென்று வரும் வழியில் மீனவக் குப்பங்களைக்
கடந்து செல்வது அவன் அன்றாட வாடிக்கை. அங்கு வசிக்கும் அனைவருக்கும் அவனைத்
தெரியும். அனைவரும் அவனை அன்புடனும் மரியாதையுடனும் நடத்துவர்.

அந்த சபிக்கப்பட்ட டிசம்பர் 1 ஆம் திகதி…….

என்றும் போல் அன்றும் காலை ஜாக்கிங் போய்க்கொண்டிருந்தான்
கணேஷ். அதற்கு முன்னர் இரண்டு வாரங்களாக மழை பெய்து கொண்டுதானிருந்தது சென்னையில்.
கிட்டத்தட்ட தீபாவளியை ஒட்டித் தொடங்கிய மழை. விட்டு விட்டுப் பெய்து
கொண்டிருந்தது. ஆங்காங்கே நீர் நிலைகள் தோன்ற ஆரம்பித்தன. பள்ளிகளுக்குப் பல
தினங்களாக விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது. பள்ளியும் இல்லை, வீட்டுப் பாடமும் இல்லையென்ற நிலையில் குழந்தைகள் என்ன செய்வதென்று தெரியாமல் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். பல சேர் சகதிகளையும் ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தன் ஓட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான் கணேஷ்.

“கருப்பண்ணே… ராத்திரி மழையில ஆமெல்லாம் ஒண்ணும் ஆகலைதானே….” மீனவக் குப்பத்தின் தலைவனை வழியில் பார்த்து விசாரித்துக் கொண்டே போனான் கணேஷ்.

“என்னான்னு சொல்ல கணேசு…. குடிசையாண்ட நெரியா தண்ணி வந்து போச்சு… சனங்க ரொம்ப பேஜாராயிட்டாங்கபா…. மீன் புடிக்கவும் போகாத, வூட்டுக்குள்ளயும் குந்திக்கினு இருக்க முடியாம… ஒரே பேஜார்பா”

அவன் விளக்கத்தைக் கேட்டுக் கிட்டத்தட்டக் கண்
கலங்கிவிட்டான் கணேஷ். ”கருப்பண்ணே விஜாரிச்சுச் சொல்லுங்கோ, எதுனா உபகாரம் வேணும்னாச் சொல்லுங்கோ” என்று கூறிக் கொண்டே, இந்தத் துன்பங்களுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்க வேண்டும், மனிதர்கள் இந்தத் துயரங்களிலிருந்து நிரந்தரமாக விடுபட ஏதேனும் ஒரு மார்க்கம் இருக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீடுவரை வந்தடைந்தான். குளித்து, ஆடை மாற்றி, தும்பைப் பூ இட்லியைத் தின்று முடிக்க டைனிங் டேபிளில் அமரும்பொழுது டி.வி. நியூஸ் ஆன் செய்ய கடந்த சில தினங்களாகவே எப்பொழுதும் தெரியும் முகமான வானிலை ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ரமணன் காட்சியளித்தார். நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில் அவர், “இன்று பலத்தது முதல் மிக பலத்த மழைவரை பெய்யக் கூடும், இன்றைய தினம் முடிவடைவதற்குள் கிட்டத்தட்ட 50 செண்டி மீட்டர் மழை பெய்யக்கூடும் என்று கூறிக் கொண்டிருந்தார்.

”50 செண்டி மீட்டர் அக்யுமலேஷன்னா
இரண்டடிக்கும் மேலே, ஐயோ பகவானே, இன்னைக்குக் கொஞ்சம் பிரச்சனை
ஜாஸ்தியாயிருக்கும்னு தோண்றது” அப்பா சொல்ல,

“ஏன்னா, இன்னைக்கு வேணா ஆஃபிஸ் லீவு
போட்டுடுங்கோளேன், இவ்ளோ
பெரிய மழையில எங்கயாவது போய் மாட்டிண்டா வம்பாப் போறது.. கொழந்தேளுக்கு ஸ்கூல், காலேஜெல்லாம் லீவுன்னு அனௌன்ஸ்
பண்ணிட்டா” அம்மாவின்
பதில்…

“நாங்கென்ன ஸ்கூல் கொழந்தேளா, மழை பெய்யறது, வெயிலடிக்கறதுன்னு லீவு விடறதக்கு… தவிர, இன்னைக்காவது அந்த ஜி.ஓ. வருமா, ரெஸ்க்யூ ஆபரேஷன முடுக்கி
விடலாம்னு பாத்துண்டு இருக்கேன், என்ன ஆத்துல ஒக்காண்டு டி.வி. பாத்துண்ட்ருக்கச் சொல்றியா” என்று கேட்டுவிட்டு பேண்ட், ஷர்ட் மாட்டக் கிளம்பியிருந்தார்
அவர்.

அம்பது செண்டி மீட்டர் மழையா, அந்த மீனவக் குடும்பமெல்லாம் என்ன
ஆறது, எங்க போய்
ஒதுங்குறது. மனத்திரைக்குள் ஓடிக்கொண்டிருந்தது கணேஷிற்கு. அவா யாருக்காவது ஃபோன்
பண்ணிப் பேசலாம்னா, அவா ஃபோன்
கொஞ்ச நாளாவே வேலை செய்யல, கேட்டா
எல்லாரும் மழையைக் காரணமாக் காட்டிண்டு இருக்கா…. என்ன செய்யலாம் என யோசிக்க
யோசிக்க, எதுவும்
ஓடவில்லை. நம்மாலானது, எத்தனை
குடும்பங்கள் இருக்கோ அத்தனையும் மொதல்ல அந்த இடத்தை விட்டு வெளியேத்தணும், ஏதாவது ஸ்கூல், காலேஜ் பில்டிங்க்னு தங்க
வைக்கணும். மத்திய அரசு “டிஸாஸ்டர்
ஜோன்”னு
சீக்கிரம் அனொன்ஸ் பண்ணினாப் பரவாயில்ல, மிலிட்டரி நேவின்னு எல்லாரும்
ரெஸ்க்யூக்கு வருவா… அவா வந்தாலும்
வராட்டாலும் நம்ம ஃப்ரெண்ட்ஸ், நெய்பர்ஸ்னு யாரெல்லாம் வராளோ வரட்டும்.. முடிஞ்ச வரைக்கும்
எல்லாரையும் சேஃப் ஜோனுக்குக் கூட்டிண்டு போயிடணும்…. அம்மாவிடம் சொன்னால் விட மாட்டாள், எல்லா அன்னைகளையும் போல் என்
பாதுகாப்புக் குறித்துக் கவலைப்பட்டவளாக இருப்பாள். சொல்லாமல் கிளம்பி விட
வேண்டியதுதான்…

அப்பா ஷூ மாட்டி ரெடியாகிவிட்டார். அதற்குமேல் அவரை
எதிர்த்துப் பார்க்க இயலாது என்ற காரணத்தால் மனதிற்குச் சற்றும் ஏற்பில்லாமல் அவரை
அலுவலகத்திற்கு வழியனுப்புகிறாள் அம்மா. அப்பா அந்தப் பக்கம் சென்றவுடன், “அம்மா, நான் ஃப்ரெண்ட்ஸ் ஆத்துக்குப் போய்ட்டு வரேன், காலேஜ் தான் இல்லயே” என்று கூற ”நோ, நோ கணேஷ்… நோ வே…. இந்த மழையில வெளியில போக வேண்டாம்னு தானே காலேஜே லீவ் விடுறா” என்று அம்மா கூற… “நோம்மா, இங்க அடுத்த தெரு சிதம்பரம் வீட்டுக்குத்தான் மா. அவன் காலனியில இருந்து இன்னும் ரெண்டு மூணு பேரு வரளாம்.. போரடிக்காம போய்ட்டு வரேம்மா”

சில தினங்களாகக் கல்லூரி மூடப்பட்டிருப்பதால், அவனும்தான் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறான். சிதம்பரத்தின் வீடு இதோ கூப்பிடு தொலைவிலிருக்கிறது. நடந்தே போய் விடலாம்.ஒண்ணும் பிரச்சனை இருக்காது என்று மனதில் உறுதி செய்து கொண்டாள். “சரி, போய்ட்டு வா, ஆனா வேற எங்கயும் போக்கூடாது, ரெண்டு மணி நேரத்துல திரும்பி வந்துடணும், ஃபோனை எப்பவும் ஆன் பண்ணியே வச்சுக்கோ, பக்கத்துலயே வச்சுக்கோ.. எப்ப ஃபோன் பண்ணினாலும் எடுக்கணும்” இன்ஸ்ட்ரெக்‌ஷன்ஸ் மேல் இன்ஸ்ட்ரெக்‌ஷன்ஸ் கொடுத்துக் கொண்டே இருந்தாள். பர்மிஷன் கிடைத்தால் சரி என்று இருந்த கணேஷ், அவள் சொல்வதற்கெல்லாம் சரி என்று தலையாட்டிவிட்டு அவசர அவசரமாய்க் கிளம்பி மீனவக்குப்பம் நோக்கி மோட்டார் சைக்கிளில் செல்லத் தொடங்கினான்.

வீட்டை விட்டு வெளியே வந்த ஐந்து நிமிடத்தில், வானத்தைப் பிளந்து கொண்டு வர்ண பகவான் தனது பலமான நீர்க்கீற்றுகளைச் சென்னையை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தார். இரண்டு நிமிட நேரத்தில் தொப்பலாய் நனைந்த கணேஷால் கண்களைத் திறந்து கூடப் பார்க்க இயலவில்லை, இடைவிடாது பொழிந்து கொண்டிருந்தது. ஏற்கனவே நண்பர்களை அழைத்திருந்தாலும், மீண்டும் ஒருமுறை ஃபோன் செய்து எங்கிருக்கிறார்கள் என்று கன்ஃபர்ம் செய்து கொள்ள நினைத்தால், அதற்கு வழியே இல்லாமல் செல் ஃபோன் முழுவதும் தொப்பலாய் நனைந்து வேலை செய்யும் அருகதையை இழந்திருந்தது. ரோடில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அப்படி அப்படியே ஓரங்கட்டத் தொடங்க, பலரும் ஏதேனும் ஒரு இடத்தில் ஒதுங்குவதே உத்தமம் என்று தேடிக் கொண்டிருந்தனர். சற்றுக் கஷ்டப்பட்டுத் திரும்பிச் சென்றால் ஒர் பத்துப் பதினைந்து நிமிடங்களில் அடைந்து விடக் கூடிய தூரத்தில் தான் இருக்கிறது வீடு, ஆனால் மீனவக் குப்பம் என்ன ஆகியிருக்குமோ, மீனவர்கள், குழந்தைகள் பெரியவர்கள் எனப் பலரும் எந்த நிலையிலிருப்பார்களோ என்ற எண்ணமே அவனை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்ததால் தொடர்ந்து செல்வது என்று முடிவு செய்திருந்தான்.

நேரம் ஆக ஆக மழையின் வேகம் அதிகரித்துக்
கொண்டேயிருந்தது. சாதாரணமாக ஒரு இருபது நிமிடங்களில் சென்றடையக்கூடிய
தூரத்திலிருந்த குப்பம் ஒரு மணி நேரமாகியும் இன்னும் வெகு தொலைவிலிருப்பதாகத்
தோன்றிது. ஒரு மணிநேரமாக இடை விடாது பெய்த மழையில் ரோடு முழுக்கத் தண்ணீர் ஓடிக்
கொண்டிருந்தது. அந்தத் தண்ணீர் கிட்டத்தட்ட வீலை முழுவதுமாக மூழ்கடிக்கும்
உயரத்திற்கு வந்து விட இதற்கு மேல் வண்டி ஓடாது என்ற நிலையை அடைந்து விட்டது. பகல்
நேரமாக இருப்பினும் கார்மேகங்கள் சூழ்ந்து அடர்த்தியான மழையினாலும் இருட்டாகி இரவு
நேரம் போலக் காட்சியளித்தது. ஓடாத மோட்டார் சைக்கிளை அதே இடத்தில் விட்டு விட்டு, குப்பத்தை நோக்கி நடக்கலானான் கணேஷ். வேகமாக ஓடிக் கொண்டிருந்த தண்ணீருக்கு ஈடு கொடுத்து அவனால் நடக்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாகத் தண்ணீர் கடல் இருக்கும் திசையில் ஓடிக் கொண்டிருக்க அதே திசையில் இருக்கும் மீனவக் குப்பத்திற்குச் சென்று கொண்டிருக்கும் கணேஷைத் தண்ணீரின் சக்தி சற்று வேகமாகக் கொண்டு சேர்த்தது.

தண்ணீர் இழுத்துச் செல்லும் வேகத்தில் அவனது
செருப்புக் காணாமற் போயிற்று. ஈரமான ட்ராக் சூட் உட்புறம் தோலில் படுகையில் ஊசி
குத்தியது போன்ற ஒரு குளிரை உணர்ந்தான் கணேஷ். மழைத்தண்ணீர் ட்ரெய்னேஜ் வழியாக
விரைவாகச் சென்றுவிட வேண்டுமென்பதற்காக ஓரிரு இடங்களில் பாதாள சாக்கடைக்கான மூடிகளைத்
திறந்து வைத்திருந்தார்கள். வேகமாக ஓடும் தண்ணீர் அந்த இடங்களில் ஒரு பெரிய
சுழற்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்ததால் அங்கு பள்ளம் இருக்கிறது என்று பார்க்க
முடிந்தது. ஆனால் நீரின் அளவு அதிகரித்தாலோ அல்லது ஓடும் வேகம் குறைந்தாலோ அங்கு
சுழி இருக்கிறதென்ற தெரியாமற் போவதற்கான சந்தர்ப்பம் அதிகம். அது போன்ற நிலையில்
அதில் யாராவது மாட்டிக் கொண்டால் உயிர் போவது நிச்சயம். ஆனால் அதனை
மூடவேண்டுமெனில் தண்ணீர் முழுவதும் வடிய வேண்டிய வேண்டும். என்ன செய்வது என்று
நினைத்துக் கொண்டே சென்று கொண்டிருந்தான் கணேஷ்.

ஒரு வழியாகக் குப்பத்தின் தொடக்கத்திற்கு வந்து
விட்டான். லைட் ஹவுஸை ஒட்டிய இடம். தண்ணீர் அதிகம் வந்து விட்டால் லைட் ஹவுஸில்
ஏறிச் சென்று உள்ளே இருப்பதுதான் மிகவும் பாதுகாப்பான செயல். ஆனால் எல்லோருக்கும்
அந்த எண்ணம் வந்திருக்குமா? வீட்டிலுள்ள பொருட்களைக் காப்பாற்ற வேண்டுமென்று எடுக்கச் சென்று மாட்டிக் கொண்டிருப்பார்களோ? லைட் ஹவுஸ் வரை வருவதற்குள் தண்ணீருக்குள் அடித்துச் செல்லப்பட்டுக் கடலில் கலந்திருப்பார்களோ… குழந்தைகளையும் வயதானவர்களையும் நினைத்தால் இன்னும் பகீரென்றது கணேஷுக்கு. சுற்று முற்றும் பார்த்தால் தண்ணீர் தவிர அங்கிருந்த இன்னொரு அசையும் பொருள் அவன் மட்டுமே. தூரத்தில் பிரம்மாண்டமான அந்தக் கடலின் மீது விழும் பேய் மழை பார்ப்பதற்கு ஒரு பெரிய கலக்கத்தையும் அச்சத்தையும் உண்டு பண்ணியது. இருட்டுக்கு நன்றாகப் பழகியிருந்த கண்களை வைத்துச் சுற்று முற்றும் தேட ஆரம்பித்தான்.

ஓரிரு அடி தூரத்தில் ஏதோ மிதந்து வருவது தென்பட்டது.
என்னவென்று அருகில் வர வர விளங்கத் தொடங்கியது. சற்று முன்னரே உயிரைவிட்ட ஒரு
மாட்டில் இறந்த உடல். நாற்றம் குடலைப் பிறட்ட, அவன் காலைத் தொட்டபடி நகர்ந்து கொண்டிருந்தது. தட்டுத் தடுமாறி குடிசைகள் இருந்த இடத்தை நெருங்க, நிலைமையில் விவரம் புரிய ஆரம்பித்தது. குடிசைகள் எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை, சற்றுத் தொலைவில் தண்ணீரில் மிதந்தபடி வந்து கொண்டிருந்த ஒரு மனித உடல். கணேஷ் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டான்.

சற்றுத் தொலைவில் சில மனிதர்கள் பேசும் குரல் கேட்க, மெதுவாக நடந்து அத்திசை நோக்கிச் சென்றான். அருகில் செல்லச் செல்ல அவனைப் போலவே உதவி செய்ய வந்திருப்பவர்கள் என்றும், அவர்களும் தங்களைச் சுற்றி உதவி தேவைப்படும் மனிதர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர் என்றும் புரிந்தது. இருட்டில் அவர்கள் யாரென்று தெரியவில்லை, ஆனால் பலர், வெவ்வேறு வயதினர், பெரும்பாலும் ஆண்கள் ஆனால் சில பெண்களும் இருக்கின்றனர் என்பது விளங்கியது.

“யாராவது இருக்கேளா, இருந்தா சத்த குரல் கொடுங்கோ, உங்கள கூட்டிண்டு போக வந்திருக்கோம்”

பரிச்சயமான குரல் என்று பட்டது கணேஷுக்கு. தொடர்ந்து
அந்தக் குரல் இன்னும் பாதிக்கப்பட்டவர்களைத் தேடுவதில் தீவிரமாக ஈடுபட்டுக்
கொண்டிருக்க, சட்டென்று புரிந்தது அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் யாரென்று….

“அப்பா………………………………… ? – அப்பா, இஸ் தட் யூ?”

”கணேஷ்…………………………..”

“அப்பா, நீங்க எங்க இங்க வந்தேள், ஆஃபிஸ் போகலயா?”

“நீ எங்க இங்க வந்த, மொதல்ல கெட் அவுட் ஆஃப் ஹியர்… இட்ஸ் டேஞ்சரஸ் அவுட் ஹியர்….”

“அப்பா, எல்லா விஷயத்திலயும் நீங்க கிரேட்னு இன்னிக்கு எல்லாருக்கும் புரியும்”

“கணேஷ், லெட்ஸ் ஸ்டாப் திங்கிங்க் அபட் அஸ் அண்ட் ஃபோகஸ் ஹியர்”…

பலரை அழித்த சென்னை வெள்ளம், லட்சக்கணக்கானவர்களின் பரோபகாரச் சிந்தனையையும், மனித நேயத்தையும் படம் போட்டுக் காட்டியது. இந்திய ராணுவம் கூறிய “பாதிக்கப்பட்டவர்களைவிட உதவ வந்தவர்களில் எண்ணிக்கையே அதிகம்” என்ற கூற்று மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல…

வெ. மதுசூதனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad