எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 3
ராக் அண்ட் ரோல் (Rock and Roll) நாற்பதுகளில் அமெரிக்காவில் பிரபலமடைந்தவொரு இசை வடிவம். ஜாஸ், ப்ளூஸ் போன்ற ஆப்பிரிக்க இசை வடிவங்களின் நீட்சியே ராக் அண்ட் ரோல். ஜாஸ், ப்ளூஸ் போன்ற இசைகளோடு கண்ட்ரி மியூசிக் (நாட்டார் இசை) கலந்திருப்பதால் ஜாஸில் தொக்கியிருக்கும் சோகம் ராக் அண்ட் ரோல் இசையில் காணப்படுவதில்லை. தொடக்க காலங்களில் ஜாஸ் இசையைப் போன்றே ராக் அண்ட் ரோலிலும் பியானோ, பிராஸ் இசைக் கருவிகளின் ஆக்கிரமிப்பு இருந்தபோதிலும், படிப்படியே எலக்ட்ரிக் கிட்டார், பேஸ் கிட்டார் போன்ற நரம்பிசைக் கருவிகளும், ட்ரம்ஸ், கீபோர்டு போன்ற கருவியொலிகளும் ஏற்றம் பெற்றன. சக் பெர்ரி, பில் ஹெய்லி போன்றவர்கள் இவ்வகை இசையில் பிரசித்தி பெற்று கோலோச்சியவர்கள். குறிப்பாக பில் ஹெய்லியின் அரௌன்ட் த கிளாக் எனும் ஆல்பம் பெரும்புகழ் பெற்று உலகையே ஆட்டுவித்தது. பின்னர் இந்த இசை ராக் எனும் புது வடிவெடுக்க எல்விஸ் பிரஸ்லி முடிசூடா மன்னரானார்.
ராக் அண்ட் ரோல் இசையோடு கூடப் பிரபலமடைந்தது ‘ட்விஸ்ட்’ எனப்படும் நடன வகை. காலை விரித்து வேகமாகச் சுழட்டிக் கொண்டே ஆடும் முறை டிவிஸ்ட். இவ்வகை நடனத்தைத் தமிழ்த் திரையுலகுக்குக் கொண்டு வந்தவர்களில் சந்திரபாபுவும், நாகேஷும் மிக முக்கியமானவர்கள்.
ராக் அண்ட் ரோல் இசை முதன் முதலில் ‘ஆஷா’ எனும் ஹிந்திப் படத்தில் C. ராமச்சந்திரா இசையில், ஆஷா போன்ஸ்லே, கிஷோர் குமார் ஆகியோரின் குரலில் ‘ஈனா மீனா டீக்கா ..’ எனும் பாடல் வழியே அறிமுகமானது. பின்னர் இதுவே அதிசயப்பெண் எனும் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தது.
195 ல் பீம்சிங் இயக்கத்தில் உருவான பதிபக்தி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ராக் ராக் ராக் ‘ என்ற பாடல் ராக் அண்ட் ரோலின் நேரடித் தமிழ் அறிமுகமாக அமைந்தது. மேற்கத்திய நடன அசைவுகளிலும், பாடல்களிலும் அதீதத் தேர்ச்சி பெற்றிருந்த சந்திரபாபு நடனமாடிப் பாடியிருப்பார். இப்பாடலின் இன்னொரு சிறப்பு fusion. மேற்கத்திய ‘ராக் அண்ட் ரோலும்’ பாரம்பரிய கர்நாடக சங்கீதமும் இணைவது தெரியாமல் குழைந்து கலந்திருக்கும்.
https://datab.us/56vqU9lnxF8#chandra
இதே சமயத்தில் வெளிவந்த புதையல் என்ற திரைப்படத்தில் மற்றுமொரு fusion. இந்தப் பாடலில் கர்நாடக சங்கீதத்திற்குப் பதிலாக சென்னைத் தமிழில் ஜனரஞ்சகப் பாடல். இதில் ராக் அண்ட் ரோல் இசைப்பின்னணி ஜனரஞ்சகமாக மாற்றம் பெறுவதைக் கவனியுங்கள். சுகமானதொரு மாற்றம். இந்தப் பாடலை சந்திரபாபுவுடன் இணைந்து பாடியவர் ஏ. எல். ராகவன். மிக அருமையானதொரு குரல் வளமும், ஞானமும் கொண்டவர். டி. எம். எஸ். என்ற மாபெரும் கலைஞரின் குரல் பொதுவாக அனைத்து நாயகர்களுக்கும் பொருந்திவிட ராகவனின் குரலை கதாநாயகர்களுக்குப் பயன்படுத்த அக்காலத் தயாரிப்பாளர்கள் ஏற்கவில்லை. இதன் பலனாக ராகவனின் குரல் காமெடி நடிகர்களுக்கு மட்டுமே பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. ராக் அண்ட் ரோல் இசையை அச்சுப் பிறழாமல் பாடக் கூடிய திறன் கொண்டவர் ராகவன். ஜீன் வின்சென்டின் ‘beep pop a lula’ பாடலை அட்சரம் பிசகாமல் உணர்ச்சியோடு பாடிய, பாடக்கூடிய ஒரே இந்தியப் பாடகர் ஏ.எல். ராகவன் என்றே கூறி விடலாம். ஹிந்தியில் கிஷோர்குமார் ராக்கின் ஒரு பிரிவான ‘yodeling’ முறையைச் சிறப்பாகக் கையாளக்கூடியவர். தமிழில் அவருக்கு இணையாக yodeling செய்யக்கூடிய ஒரே பாடகர் எ.எல். ராகவன் என்றால் அது மிகையில்லை.
https://datab.us/idf8w48auRE#chandra
முழுக்க முழுக்க ராக் அண்ட் ரோல் இசைப் பாணியில் அமைந்த முதற் தமிழ்ப் பாடல் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் வந்த ‘விசுவநாதன் வேலை வேண்டும் ‘ பாடலைச் சொல்லலாம். இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் மிகப் பிரபலமடைந்து, படமும் வெள்ளிவிழா கண்டது. அதுவரை ‘dramatic’ பாணியில் உணர்ச்சி பூர்வமான படங்களைத் தந்த இயக்குனர் ஸ்ரீதர் தனது தோழன் கோபுவுடன் சேர்ந்து, முழு நீள நகைச்சுவைப் படம் எனும் சவாலை மேற்கொண்டார். இசை படத்தை தூக்கி நிறுத்த வேண்டும் என்ற சவால் மெல்லிசை மன்னர்களுக்கு இடப்பட்டது. உலக இசையைத் தமிழ்ப் படத்தில் பயன்படுத்த இது ஒரு பெரிய வாய்ப்பானது இந்த இரட்டையர்களுக்கு.
காதல் சொட்டும் ‘அனுபவம் புதுமை’ பாடலுக்கு ஸ்பேனிஷ் இசையான போலோரோவைக் கையாண்டவர்கள் ‘விசுவநாதன் வேலை வேண்டும் ‘ பாடலுக்கு ராக் அண்ட் ரோல் பின்னணியைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்தப் பாடல் உருவான விதமே அலாதியானது.
குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு திரும்பியிருந்தார் விஸ்வநாதன். பல படங்கள் பாடலுக்காகக் காத்திருந்தன. பாடல்கள் எழுதாததால் கவிஞரின் வருவாய் தடைபட்டுப் போயிருந்தது. ஸ்ரீதர் இருவரையும் அழைத்து வேலையிலிருந்து நீக்கப்படுகிற கதாநாயகன் பாடுவது, அவன் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவனாதலால் இதில் சோகம் கிடையாது, இருந்தாலும் அங்கேயே தங்க ஆசைப்படுகிறான். கவிஞருக்கும், மெல்லிசை மன்னருக்கும் என்ன பாடலை எப்படி அமைப்பது என்று புரியவில்லை. மெட்டுப் போட அமர்ந்து விட்டார்கள் ஆனால் பொறிதட்டவில்லை. விஸ்வநாதன் அங்கிருந்த நாளிதழில் வந்த செய்திகளைப் படித்துக் கொண்டிருந்த பொது அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவரைப் பற்றியதொரு செய்தி வந்திருக்க அந்த பெயர் என்னவோ வித்தியாசமாகத் தோன்ற ‘ஐசனோவர் … ஐசனோவர்ர்ர்ர் ‘ என்று கத்திக் கொண்டிருந்தார். ‘டேய் விஸ்வநாதா வேலை கொடுடா .. சம்பளம் வாங்கணும்.. அதை விட்டுட்டு விளையாடிட்டு இருக்கே ‘ என்று நொந்து கொண்டார் கவிஞர். பக்கத்து அறையிலிருந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீதர், தலையை வெளியே நீட்டி, ‘இப்போ இவர் கத்தினாரே அதுதான் பாட்டுக்கு ட்யூன், நீங்க சொன்னீங்களே அது தான் பாட்டு’ என்று சொல்லிவிட்டார்.
மாமனாராக வரப்போகிற செல்வந்தரிடம் ‘வேலை கொடு’ என்று அதட்டலாக கேட்பது முறையாகாது என்று விஸ்வநாதன் மறுத்து விட வேலை வேண்டும் என்று மாற்றப்பட்டு இந்தப் பாடல் உருவானது. முழுக்க முழுக்க ராக் அண்ட் ரோல் பாணியில் பாடலை உருவாக்க வேண்டுமென்று, கிட்டார் பிலிப்ஸ் உட்பட, பல முன்னணி கிட்டார் கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்ட பாடல் ‘மாடி மேல மாடி கட்டி’ பாடல்.
இந்தப் பாடலில் தமிழ்த் திரைப்பட இசைப் பாதையில் ஒரு மைல்கல் என்றால் மிகையில்லை. மிக அமைதியாக வந்து போகும் கிட்டார் இசைத் துண்டுகள் ஒவ்வொன்றும் R&R இலக்கணத்தை அடியொற்றிய இசை. பியானோ, பிராஸ் இசைக்கருவிகள் அளவோடும் அதே சமயம் அழுத்தத்தோடும் பயன்படுத்தப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சம். ட்ரம்ஸ்ஸின் ரிதம் மிக இனிமையாக பாடலை வழிநடத்திச் செல்ல, பின்னணிப் பாடகர்களின் ‘டூ..டு.டு’ தனி ரிதமாகச் செயல்பட்டிருக்கும். இந்தப் பாடலில் மூலம் பி.பி.எஸ் குரலின் இன்னொரு பரிமாணம் விளங்கும். இந்தப் பாடலை முதலில் ஏசுதாஸ் பாடுவதாக இருந்து பின்னர் பி.பி.எஸ் பாடுவதாக முடிவானதாம்.
1964ல் இருந்த ஒலிப்பதிவு வசதிகளைக் கவனத்தில் கொண்டு பார்க்கும் பொழுது இந்தப் பாடலின் பிரத்யேக இசை ஏற்பாடுகள் (orchestration arrangements) பிரமிப்பை ஏற்படுத்தும். பாடல் முடியும் வரையில் அமைதியாக வழிநடத்திச் செல்லும் பின்னணிக் குரல்களும், கிட்டாரும், ட்ரம்ஸும் பாடல் முடிவடையும் தருவாயில் முழுவீச்சில் ராக்கின் இனிமையில் நம்மை மூழ்கடிக்கும்.
‘கம் செப்டம்பர்’ படத்தின் தழுவலான அன்பே வா படத்தில் இடம்பெற்றவொரு பாடலான ‘நாடோடி ..போக வேணும் ஓடோடி’ என்ற பாடலும் ராக் அண்ட் ரோல் இசையிலக்கணத்தைப் பின்பற்றி வரும் பாடலாகும். அந்தக் காலங்களில் மற்ற சில படங்களில் ஆங்காங்கே ராக் அண்ட் ரோல் இசை வடிவங்கள் தென்பட்டன. வெகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ரம்..பம் .. பம்..’ என்ற பாடலில் ராக் அண்ட் ரோல் வடிவம் வெளிவந்தது. இருந்த போதிலும் ‘மாடி மேலே மாடி’ பாடலின் தாக்கம் தற்கால இளம் பாடகர்களையும் கவர்ந்த அளவுக்கு வேறெந்தத் தமிழ்த்திரை ராக் அண்ட் ரோல் பாடலும் வரவில்லை என்பது சத்தியம்.
https://www.youtube.com/watch?v=swzBXaGeJ-0
– ரவிக்குமார்.
Excellent.