எழில் அரசி எஸ்தர் பெற்றுத் தந்த விடுதலை
திருவிவிலியம் பழைய ஏற்பாடு எஸ்தர் ஆகமத்தில பார்த்தீங்கனா இந்தியா என்று தொடங்கும்.
என்ன வியப்பாயிருக்கா?
ஆமாங்க… 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரைக்கும் 127 மாநிலங்களையும் சூசான் என்ற தலைநகரிலிருந்து அகஸ்வேர் என்ற பாரசிக மன்னன் மிகுதியான செல்வச் செழிப்போடு ஆண்டுவந்தார்.
அந்தக் காலத்தில அரசியல், அதிகாரம், மதிமயக்கும் அழகு, செல்வச் செழிப்பு இவற்றோடு அடிமைப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்த நிகழ்வைத்தான் இப்ப பார்க்கப்போறோம்.
கிராமத்துல சொல்லுவாங்க “அற்பனுக்கு வாழ்வு வந்தா, அர்த்த ராத்திரியில குடை பிடிப்பானாம்” என்று..
அந்த மாதிரி இந்த அரசனும் தன்னுடைய செல்வச் செழிப்பினையும், பெருமையையும் மத்தவங்களுக்குச் சொல்ல 180 நாட்கள் மற்ற அரசர்களுக்கு விருந்தும் அதன்பின் எல்லா மக்களுக்கும் 7 நாட்கள் விருந்தும் அளித்தார்னா பாருங்க…
ஒருநாள் தன் அதிகாரக் கட்டளைக்குக் கீழ்ப்படியாத அழகியான அரசி வஸ்தியை விலக்கி வைத்தார். கோபத்துல நாட்டில உள்ள மனைவியர் அனைவரும் அவரவர் கணவருக்குப் பணிந்து இருக்க வேண்டும் என்று சட்டமே போட்டுட்டார்.
ஆனா தனிமை மனிதனை விடவில்லை. அதனால அரசன் அகஸ்வேருக்கு வேறு மணம் முடிக்க ஆசை வந்தது.
உங்களுக்கே தெரியும், அந்தக் காலத்துல அரசன் மணம் முடிக்க, அழகும் இளமையும் கொண்ட கன்னிப் பெண்கள் அனைவரையும் மன்னர் முன்பாக நிறுத்துவார்கள். அவர்களில் மன்னரின் கண்களில் இனியவளாய்க் காணப்படுகின்ற இளம் பெண்ணே அரசி ஆவாள்.
அந்த நேரத்தில சூசான் அரண்மனையில் மொர்த்க்காய் என்னும் பெயர்கொண்ட புலம் பெயர்ந்த யூத அகதி ஒருவர் இருந்தார். இவருடைய முதாதையர்கள் பாபிலோன் மன்னன் நெபுகத்னேசரால் சிறைப்பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள். அதன் பிறகு வெவ்வேறு பகுதிகளில் அடிமைகளாக, அகதிகளாக வாழ்ந்து வந்தார்கள்.
மொர்தக்காய் தன்னுடைய சிற்றப்பா மகள் எஸ்தர் என்பவரை எடுத்து வளர்த்து வந்தார்.
எஸ்தர் தாய் தந்தையை இழந்தவர்; எழில்மிகு தோற்றம் கொண்ட பேரழகான இளம் பெண். எஸ்தர் என்பதற்கு, தன் அடையாளத்தை மறைத்தவர் என்று பொருள்.
மன்னரின் ஆணை அறிவிக்கப்பட்டபொழுது, எஸ்தரோடு சேர்த்து இளம் பெண்கள் பலர் சூசான் அரண்மனைக்குள் ஒப்படைக்கப்பட்டனர்.
மொர்தக்காய் தம் இனத்தையோ வழி மரபையோ யாரிடம் சொல்லக் கூடாது என்று சொன்னதால் எஸ்தர் தான் ஒரு யூத குலத்தவர் என்பதை வெளிப்படுத்தவில்லை.
எஸ்தர் மன்னருக்கு முன்னே வந்தபொழுது, பெண்கள் அனைவரிலும் பேரழகியான எஸ்தரையே மன்னர் மிகுதியாய் விரும்பினார். எனவே மகுடம் அணிவித்து எஸ்தரை அரசி ஆக்கினார்.
அவ்வப்போது யாரும் கவனிக்காத நேரத்தில் தன்னுடைய வளர்ப்புத் தந்தையைச் சந்தித்து அவருடைய அன்பான வார்த்தைகளைக் கேட்டு வந்தார்.
ஒருநாள் மொர்தக்காய் அரசவையருகில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது பிகதான், தென்ருசு, என்ற இரண்டுபேர் கோபமாக மன்னர் அகஸ்வோரைத் தாக்கத் திட்டமிடுவதைக் கேட்டு அதை அரசி எஸ்தரிடம் கூற, அவர் மொர்தக்காயின் பெயரால் அதனை மன்னரிடம் அறிவித்தார். இந்தச் சதித் திட்டத்தின் உண்மை நிலை கண்டறிந்து சதி செய்த இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இந்நிகழ்ச்சி மன்னர் முன்னிலையில் குறிப்பேட்டில் எழுதி வைக்கப்பட்டது.
நாட்கள் உருண்டன …….
மன்னர் அகஸ்வேர் தன் உதவியாளனின் மகன் ஆமானை உயர்த்தி அவனுடன் இருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மேலான பதவியில் அமர்த்தினார். அதுதான் அரசன் செய்த முதல் தவறு.
அதன் பின் அனைவரும் தலை வணங்கி ஆமானுக்கு மரியாதை செய்தனர்.
ஆனால் மொர்தக்காய் மட்டும் யூதருக்கு விரோதமான நல்ல எண்ணமில்லாத ஆமானுக்குத் தலை வணங்கவில்லை.
ஆமானுக்குக் கண்ணு சிவக்க பயங்கரக் கோபம். இது போதாதுன்னு மொர்தக்காய் யூத அகதி என்பது அப்போது ஆமானுக்குத் தெரிய வந்தது. கோபம் தலைக்கு ஏறியது.
அதிகாரம், ஆணவம் கூடவே திடீர் செல்வச் செழிப்பு வந்தவர்களுக்கு சின்ன ஏமாற்றம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது ஒன்று.
நம்ப ஊர்ல சொல்லுவாங்களே “கோபக்காரனுக்குப் புத்தி மட்டு” என்று, அப்படிதாங்க ஆமானுக்கு மொர்தக்காயை மட்டும் அழிக்க விருப்பமில்லை. நாட்டில உள்ள எல்லா யூதர்களையும் அழிக்க நினைத்தான்.
முடிவு எடுக்க நாமெல்லாம் குலுக்குச்சீட்டுப் போட்டுப் பார்ப்போமே அதேபோல…..
யூதரைக் கொன்று ஒழிப்பதற்கான நாளை முடிவு செய்ய ஆமான் சீட்டுப் போட்டுப் பார்த்தான். அதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளுக்குச் சீட்டு விழுந்தது.
இதுக்கெல்லாமா சீட்டுப் போட்டுப் பார்ப்பாங்க, என்ன கொடுமை பாருங்க…….
மன்னன் அகஸ்வேரிடம் யூதர்களை அழிப்பதற்கான உள்நோக்கத்தை மறைத்து உத்தரவு வாங்கணுமில்லையா….
அதற்காக ஆமான், அகஸ்வேரிடம் போய் “உம் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநிலங்களின் மக்களிடையே சில மாறுபட்ட மக்கள் பரவி இருக்காங்க. அவர்களுடைய நியமங்கள் மத்தவங்களுடைய நியமங்களிலும் மாறுபட்டவை; அவர்கள் மன்னரின் நியமங்களின் படியும் செய்வதில்லை. அவர்களை அப்படியே விட்டால் மன்னருக்கு நல்லதில்லை. நான் சொல்லுறது மன்னருக்குச் சரின்னுபட்டா அவர்களை அழிக்கும்படிக் கட்டளையிட வேண்டும். இந்த வேலையைச் செய்வோருக்குக் பரிசாக் கொடுக்க 400 “டன்” வெள்ளியை நிறுத்து மன்னரின் கருவூலத்தில் சேர்ப்பேன் ” என்று கூறினான்.
ஏற்கனவே செல்வச் செழிப்பில் மயங்கி, மக்களுடைய உண்மை நிலை மறந்த மன்னன் அகஸ்வேர் எதைப்பத்தியும் கவலைப்படாமல் தம் கணையாழியைக் கழற்றி, யூதரின் பகைவனாம் ஆமானிடம் கொடுத்து “உனக்கு எது சரின்னுபடுதோ அதைச் செய்” என்றார்.
இது போதுமே, “குறிப்பிட்ட ஒரே நாளில், சிறுவர் முதல் பெரியோர் வரை, குழந்தைகளும் பெண்களும் உட்பட யூதர் அனைவரும் கொல்லப்பட்டு, அவர்களுடைய உடைமைகள் கொள்ளையிடப்பட வேண்டும்” என்ற மடல்கள்அரச கணையாழியால் முத்திரையிடப்பட்டு நாடு முழுவதும் குறுநில மன்னர்களுக்கு அனுப்பப்பட்டது.
சூசான் நகரே கலங்கிற்று ……..
இதைக் கேள்விப்பட்ட மொர்தக்காய் மனங்கசிந்து அழுதார். யூதர்கள் எல்லாரும் கண்ணீரும், அழுகையுமாக உண்ணாது உறங்காது வாடினர். .
மொர்தக்காய், தனது வளர்ப்பு மகளான அரசி எஸ்தருக்கு இந்தக் கொடுமையான அரசாணை பற்றி தெரியப்படுத்தினார்.
இதைக் கேள்விப்பட்ட அரசி எஸ்தர் மிகவும் கவலைப்பட்டு, மன்னர் அகஸ்வேர் முன் சென்று நின்றார்.
மன்னரால் அழைப்புப் பெறாத எவரும் மன்னரின் உள் முற்றத்திற்குச் சென்றால் கொல்லப்படுவர் என்பதும், யாருக்கு மன்னர் தம் பொற்செங்கோலை நீட்டுகிறாரோ அவரே பிழைப்பார் என்பதும் அரச நியமம். இருந்தாலும் மக்கள் நலமே முக்கியம் என்பதில் உறுதியாக அரசி எஸ்தர் மன்னர் முன் சென்றார்.
மன்னர் தம் கைகளில் இருந்த பொற்செங்கோலை எஸ்தரிடம் நீட்ட, எஸ்தர் அருகில் சென்று செங்கோலின் நுனியைத் தொட்டார்.
மன்னர் அவரை நோக்கி, “எஸ்தர் அரசியே! உனக்கு என்ன வேண்டும்? உன் அரசின் பாதியேயாகிலும் அது உனக்களிக்கப்படும்” என்றார்.
அதற்கு எஸ்தர், “மன்னர் விரும்பினால் இன்று நான் வைத்திருக்கும் விருந்திற்குத் தாங்களும் ஆமானும், வருகை தர வேண்டும்” என்றார்.
இதற்கிடையில் அதிகார மமதையிலிருந்த தனக்கு மரியாதை செய்யாத மொர்தக்காயை தன் மனைவி மற்றும் நண்பர்களின் ஆலோசனைப்படி ஐம்பது அடித் தூக்கு மரத்தில் தூக்கிலிடத் தேவையான ஏற்பாடு செய்யச் சொன்னான்.
அன்றிரவு மன்னருக்குத் தூக்கம் வரவில்லை. எனவே அவர் தம் ஆட்சியின் குறிப்புகள் அடங்கிய ஏட்டைத் தம்மிடம் கொண்டு வந்து வாசிக்குமாறு பணித்தார். அதில் மன்னர் அகஸ்வேரைக் கொல்ல வகை தேடிய சதிகாரர்களை பற்றி மொர்தக்காய் அறிவித்ததாக அதில் எழுதப்பட்டிருந்தது.
இதற்காக மொர்தக்காய்க்கு எந்த மரியாதையும் செய்யப்படவில்லை என்றறிந்தார்.
அப்போது அங்கு வந்த ஆமானிடம், “என்னுடைய உயிர்காத்த யூதராகிய மொர்தக்காய்க்கு மன்னர் அணிகின்ற ஆடைகளும் அமர்கின்ற புரவியும், தலையில் சூடும் மகுடமும் அணிவித்து மரியாதை செய்ய வேண்டும்” என்றார்.
இதுதான் சத்தியத்தின் வெற்றி என்பதோ…….!
ஆமான் இதை எதிர் பார்க்கவில்லை. கூனிக் குறுகிப் போனான்.
மன்னரும் ஆமானும் அரசி எஸ்தர் வைத்த விருந்துக்குச் சென்றனர்.
மன்னர் விருந்தில் எஸ்தரிடம் “எஸ்தர் அரசியே உன் விண்ணப்பம் என்ன? நீ வேண்டுவது என் அரசின் பாதியே ஆனாலும் அது உனக்குக் கொடுக்கப்படும்” என்றார்.
ஆனால் அரசி எஸ்தரோ அரசை, செல்வத்தைக் கேட்கவில்லை.
அதற்கு மாறாக ” என் மக்களும் நானும் கொலையுண்டு அழிந்து ஒழிந்து போகும்படி விலை பேசப்பட்டிருக்கிறோம்; நாங்கள் அடிமைகளாய் விற்கப்பட்டிருந்தால் கூட நான் மௌனமாய் இருந்திருப்பேன்” என்றார்.
மன்னர் அகஸ்வேர் அரசி எஸ்தரை நோக்கி, ” இப்படிச் செய்தவன் எவன்? அவன் எங்கே?” என்று கேட்டார்.
அதற்கு எஸ்தர் “எதிரியும் வஞ்சகனுமாகிய மனிதன் இந்த ஆமானே; இவனே அந்தத் தீயவன்! ” என்றார்.
அச்சமயம் மன்னரின் உதவியாளர் மன்னரிடம் “அரசே… அதோ! ஆமானின் வீட்டெதிரே மன்னருக்கு நல்லது செய்த மொர்தக்காயைத் தூக்கிலிட ஆமான் நாட்டிய ஐம்பது முழத் தூக்குமரம்! “என்றார்.
அதற்கு மிகுந்த கோபத்தோடு, மன்னர் “அதிலேயே ஆமானைத் தூக்கிலிடுங்கள்! “என்றார்.
ஆமானிடமிருந்து கழற்றப்பெற்ற தம் கணையாழியை மன்னர் எடுத்து மொர்தக்காய்க்கு அளித்தார்.
மீண்டும் அரசி எஸ்தர் மன்னரிடம் அழுது மன்றாடி நாட்டில் உள்ள அனைத்து யூதர்களும் அழிந்து போகுமாறு வஞ்சனையாய்த் திட்டமிட்ட ஆமான் எழுதிய மடல்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பும்படிக் கட்டளையிடுமாறு வேண்டினார்.
அதேபோல மன்னர் அகஸ்வேர் பெயரால் யூத மக்களைக் காக்க மடல் எழுதப் பெற்று, அரச கணையாழி முத்திரையிடப்பெற்று நாடுமுழுவதும் மடல்கள் அனுப்பப்பட்டன.
யூதர்கள் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்றனர்.
பேரழகியான போதும், நாட்டில் பாதி அளவு தனக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும் மனிதம் மட்டுமே முக்கியம் என்றுணர்த்தினார் எழில் அரசி எஸ்தர்.
- ஹனிபால் பெஞ்சமின்.
மிக மிக அருமை ஹனிபால் !