வழிகாட்டும் வள்ளுவம்
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
வாழ்க்கையின் தத்துவத்தை இக்குறள் மிக அழகாக எடுத்துக் கூறுகிறது. மனித நேயம் என்றால் என்ன என்பதனை மிக உணர்வு பூர்வமாக இக்கட்டுரை வடிவமைத்துள்ளது. என்னுள் ஏற்பட்ட மனமாற்றத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
என்னைக் கவர்ந்த கட்டுரை: ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்வு:
ஒரு மாணவர் கல்லூரி வகுப்பறை நோக்கி நடந்து வருகின்றார்! திடீரென மழைத் துளிகள் விழ ஆரம்பித்தன. வலுத்த மழைத் துளிகளில் மாணவர் நனைந்து விட்டார்! மாணவரின் சட்டை முழுவதும் நனைந்து விட்டது. நனைந்த சட்டையை வகுப்பறையில் உலர்த்தப் போட்டு, வகுப்பறையில் பாடத்தை உற்று கவனித்தார். இதைக் கவனித்த கல்லூரி முதல்வர் பீட்டர்பெக் துரை, அந்த மாணவரைக் கண்டித்தார்! வகுப்பறையில் சட்டையின்றி அமர்வது அநாகரீகம்! மாணவருக்கு எட்டணா அபராதம் விதித்தார். மாணவர் கண் கலங்கி நின்றார். எட்டணா இருந்தால் ஒரு புதிய சட்டை வாங்கி விடுவேன். மாற்றுச் சட்டை இல்லாத காரணத்தால் தான் இப்படி நிகழ்ந்தது என்றார். உடனே முதல்வர் பீட்டர்பெக் துரை மாணவருக்குப் புதிய சட்டை வாங்கிக் கொடுத்தார். எட்டணா அபராதத்தையும் அவரே கட்டி விட்டார். இந்த நிகழ்வு நடந்த சில ஆண்டுகளுக்குள் வறுமை வாய்ப்பட்ட அந்த மாணவர் படித்தார், உயர்ந்தார்!
லண்டன் பிரிவு கவுன்சிலர் என்ற உயர்ந்த நிலைக்கு வந்தார்! லண்டன் மாநகரம் சென்ற போது தனக்கு உதவிய ஆசிரியர் பீட்டர்பெக் துரையை நேரில் சந்தித்தார்! லண்டன் பிரிவு கவுன்சிலராய் உயர்ந்துள்ள தன் மாணவர் நிலைகண்டு ஆனந்தப்பட்டுக் கட்டித்தழுவிப் பெருமைப்பட்டதோடு விருந்து நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்பாடு செய்தார்!
பீட்டர்பெக் துரை அந்த நிகழ்ச்சியில், மழையில் நனைந்து சட்டையின்றி இருந்த இந்த மாணவரின் இப்போதைய நிலை கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்து உரையாற்றினார்! இந்த மாணவர் தம் கைப்பெட்டியில் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருந்த தன் ஆசிரியர் வாங்கிக் கொடுத்த பழைய சட்டையை அனைவருக்கும் காட்டி உரையாற்றினார்.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
என்ற குறளுக்கு இலக்கணமாய்த் தன் ஆசிரியர் செய்த உதவியை மறவாத அந்த மாணவர் ஆங்கில உரை கேட்டு ஆங்கிலேயர்களே மயங்கி நின்றனர்! அவர் தாம் சில்வர்டங்க் ரைட் ஹானரபல் சீனிவாச சாஸ்திரிகள்.
அற்புதமான ஆங்கில உச்சரிப்பால் மயங்கி வெள்ளையர்கள் “சில்வர்டங்க் சீனிவாச சாஸ்திரிகள்” என்று அவரைப் பாராட்டினர். எனவே, நன்றி மறவாத குணம் எப்போதும் நம்மிடம் இருக்க வேண்டும்!.
– ஹேமலதா செங்குட்டுவன்,