சென்னை வெள்ள நிவாரண இசை நிகழ்ச்சி
நான் சென்னையில் இருந்து பதினைந்து வருடம் முன்பு அமெரிக்காவிற்கு வந்தேன். இங்கு வந்ததில் இருந்து தாயகம் நினைவு மேலோங்கி இருந்தது. விஜய் டிவி அல்லது ஜெயா டிவி பார்த்து அதில் பாடும் பாடகர்கள் திறமை கண்டு வியந்துள்ளேன். ஏதோ ஒரு வெளியூருக்கு வந்து தமிழ் மக்கள் அதிகம் இல்லாத இடத்தில் இருக்கிறோம் என நினைத்திருந்தேன். ஆனால் அந்த ஏக்கத்தைத் தகர்த்தெரிந்தது மினசோட்டா பல வருடங்களாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் ஒரு இசைக்குழுவான ஃபிரெண்ட்ஸ் கரியோக்கி.
அவர்கள் சென்னை வெள்ள நிவாரணத்திற்காக நிதி திரட்ட சமீபத்தில் பாட்டுக் கச்சேரி ஒன்றை நடத்தினர். அதில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியிலிருந்து திரைப்பாடல்கள் பாடப்பட்டன. விஜய் டிவி சூப்பர் சிங்கர் விஜய்கிருஷ்ணன் பங்கேற்றார். அவரைத் தவிர மற்ற எல்லாக் கலைஞர்களும் மினசோட்டாவை சேர்ந்தவர்கள். பனிப்பூக்களுக்காகக் கட்டுரை எழுதவேண்டும் என்பதற்காகச் சென்ற நான் அவர்களின் இசைத் திறமை கண்டு அதன் ரசிகனாக மாறி விட்டேன்.
ராகங்கள் பதினாறு என்ற MSV பாட்டுடன் ஆரம்பமானது நிகழ்ச்சி. விஜய்கிருஷ்ணன் அந்தப் பாடலை மிகச் சிறப்பாகப் பாடினார். வெங்கட் மற்றும் பாரதி அவர்கள் “மதுர முரளி ஹ்ருதய ரவளி” என்ற தெலுங்குப் பாடலைப் பாடினார். பிறகு சிறுமி ஹ்ரிதி “வான் மேகம்” பாடலைச் சுவையாகப் பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார். நிர்மல் மற்றும் ஷானு பாடிய “ஆகாய கங்கை” பாடலை மேடையில் கேட்கும்பொழுது நம் வீட்டிலமர்ந்து ரெகார்டிங்க் தியேட்டரில் பலவித தொழில் நுட்பங்களுடன் பதிவு செய்யப்பட்ட இசைத்தட்டுக்களில் கேட்பது போன்ற உணர்வு ஏற்படும் அளவு அருமையாக இருந்தது.
சம்யு அவர்கள் பாடிய “என்னை என்ன செய்தாய் வேங்குழலே” கர்நாடக இசை நம் இசைத்தாகத்தைத் தீர்க்கும் அளவு குளிர்ச்சியாய் இருந்தது. தன்வி அவளுடைய மழலை குரலில் பாடிய “அழகு” பாடல் உன்னிகிருஷ்ணன் மகளுக்கு ஈடு கொடுத்தது. வித்யா சுரேஷ் அவர்கள் இந்த நிகழ்ச்சி நடத்த உதவி செய்தது மட்டும் இல்லாமல் விஜயுடன் சேர்ந்து “நீ ஒரு காதல் சங்கீதம்” பாடலைப் பாடி அசத்தினார். ETV இறுதி சுற்றில் வந்த பிரியா கஞ்சன் பல தெலுங்குப் பாடல்களைப் பாடி பாராட்டைப் பெற்றார்.
சென்னை வெள்ள நிவாரண இசை நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியின் நோக்கம் நமக்கு இசை விருந்து அளிப்பதன் மூலம் நிதி திரட்டி வெள்ளைத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவி செய்வதும் ஆகும். இது குறித்துப் பேசுகையில், இந்தக் குழுவின் தலைவரான ஷங்கர் அவர்களும், அறிவிப்பாளர் செந்தில் அவர்களும் இதுவரை ஆயிரம் டாலர்கள் வரை திரட்டியுள்ளதாகக் கூறினர். அவர்கள் இசைச் சேவை மற்றும் மக்கள் சேவையைப் பாராட்டி அது மேலும் தொடர பனிப்பூக்களின் சார்பின் வாழ்த்துகிறோம்.
-பிரபு