சிகாகோ பொங்கல் விழா 2016 கொண்டாட்டம்
வருடாவருடம் பொங்கல் விழாவைக் கொண்டாடி வரும் சிகாகோத் தமிழ்ச்சங்கம், இவ்வாண்டும் ஏறத்தாழ ஆயிரம் தமிழன்பர்களுடன் கொண்டாடினார்கள். பொங்கல் விழாவானது.சனவரி மாதம் 23ம் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தொடங்கியது. சிகாகோ தமிழ்ச்சங்கம் வட அமெரிக்கத் தமிழ்மக்களின் முன்னோடிகளில் ஒன்று என்றே நாம் கூறலாம். இச்சங்கம் 46 வருடம் பழைமை வாய்ந்தது. இந்தச் சங்கம் தமிழ்க் கலாச்சார நிகழ்ச்சிகள், பல்கலைக்கழகத் தொடர்புகள், மற்றும் தமிழ் மொழிப்பாட சாலைகள் போன்ற சேவைகளை அளித்து வளர்ந்து வருகிறது. இம்முறை பொங்கல் விழா பார்ட்லெட் இலிநொய் என்னும் சிகாகோ வடமேற்கு பார்லெட்/நேப்பர்வில் வட்டாரத்திலுள்ள பார்ட்லெட் உயர்நிலைப்பாடசாலை அரங்கில் நடைபெற்றது.
பொங்கல் விழாவிற்கு மாலை நாலுமணியில் இருந்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். அரங்க வரவேற்புப் பகுதியில் நிகழ்ச்சி பற்றிய தகவல் தருமிடம் அழகிய இளம் தமிழ்யுவதி, கரும்பு செந்நிற மெருகூட்டப்பட்ட பானை அடுக்குகள் பின்னணியில் வரவேற்றார். மேலும் முன்கூட்டி வந்தவர்களில் பெண்களுக்கு நறுமணம் தரும் மல்லிகைச் சரங்களும் தரப்பட்டன. பக்கத்தில் தேநீர், சிற்றுண்டிப் பலகாரங்களும் வட்டார உணவகத்தினரால் விற்கப்பட்டது.
அரங்கத்தினுள்ளே மக்கள் மெதுவாக நுழைந்தவாறேயிருந்தாலும்\ அறிவிக்கப்பட்ட நேரத்திற்குப் பொங்கல் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்து சங்கத் தலைவர் திரு சாக்ரடீஸ் பொன்னுசாமியவர்கள் வரவேற்புரையுடன் நிகழ்வுகளை அறிமுகப்படுத்தினார்.
இந்த விழா பாரிய ஒழுகங்கமைப்பும், திடமான நிர்வாகத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது ஆரம்பத்திலிருந்தே தெரிந்தது, கவிஞர்கள் முத்து வேலு, இராஜேஷ் சுந்தர்ராஜன் கவிச்சரங்களைத் தொடுத்தனர்,. மேலும் நினைவாஞ்சலியும், மற்றும் கலாநிதி ஃபிரான்ஸிஸ் சவரிமுத்து அவர்கள் தமிழ் வரலாற்றைப் பற்றியும் சொற்பொழிவு செய்தனர். பொங்கல் விழாவும் நாட்டுப்புறக் கலைகளும் என்ற உட்பொருளை மையமாக வைத்தே பிரதான மேடை நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டிருந்தன.
தமிழர் பாரம்பரியக் கதைசொல்லும் வித்தையான வில்லுப்பாட்டுடன் அனுபவமுள்ள தமிழ் மகளிர் பொங்கல், அதன் ஆரம்பம் பற்றிய வரலாற்றுத் தகவல்களைத் தந்தார்கள். இந்த வில்லுப்பாட்டு வழக்கம் போன்ற கதையாகயில்லாமல் தமிழ்க்கலாச்சாரக் கட்டறிவுத் தொகுப்பாக இருந்தது. தைப்பொங்கல் உழவர், கால்நடைகள் சார்ந்த அறுவடைக் கொண்டாட்டம் கிமு 400ம் ஆண்டிற்கு முதலே கைப்பற்றியிருக்கலாம், தொல்காப்பியத்தில் வரும் மருதம், வயல், மணிமேகலா விழா, இந்திரன் விழா வென பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் பற்றியும் வில்லுப்பாட்டின் மூலம் தந்தனர் அந்தப் பெண்மணிகள்.
பொதுவாக மேடையில் பங்குபெற்ற குறுநாடகம்,நகைச்சுவை மற்றும் பிரதான நடனக்குழுக்கள் யாவரும் தமது கலைகளில் பயிற்சி பெற்றவர்கள், இதை ஒன்று கூடித் தயாரித்தவர்கள் அனுபவசாலிகள் என்பது மேடை நிகழ்வுகளில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
வெளியில் வெண்பனியெனினும் அரங்கத்தினுள்ளே இதமான வெப்பம் தரும் களிப்புக்காட்சிகளே நடந்தேறின. மேடையெங்கும் அகல்விளக்குகள் மெருகூட்டும் செழிப்பான செம்மஞ்சள் , மஞ்சள், மண்ணிறம், இளம் பச்சை,மயில் நீலம், குங்குமச்சிவப்பென வகை வகையான ஜொலிக்கும் ஆடைகளும், ஆபரணங்களும் நடனக்குழுவினரிடையே காணப்பட்டது.
பொங்கல் விழாவானது கிராமியத்திற்கும், அதனை உயிர்ப்பிக்கும் ஊர்க் கலைக்களுக்கும் பிரதமையைத் தந்திருந்தது. பொங்கல் விழாவின் தயாரிப்பு நுணுக்கம் நிச்சயமாக வருகை தந்தவர்களைக் கவரும் வகையிலேயே அமைந்திருந்தன. நடனங்கள் யாவுமே கச்சிதமாக பிரபல கிராமியப் பாட்டுக்கள் மற்றும் ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த சினிமாப் பாட்டுக்கள் இசையமைப்புக்களுடன் நடைபெற, ஆங்காங்கே துரித ஆட்டங்களும் கலந்து காணப்பட்டன.
அரங்கை அவ்வப்போது வெவ்வேறு நிகழ்ச்சி நேரங்களில் சுற்றிப்பார்வையிட்ட போது, பெரும்பாலான கண்கள் யாவும் மேடையிலேயே பதிந்திருந்ததையும், குதூகலித்துக் கூச்சல் போட்டு இளையவர்கள் சந்தோசத்துடன் கரகோஷங்கள் செய்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
வட அமெரிக்காவில் வாழும் இளைய தலைமுறையினரையும், அதே சமயம் தமிழ்த் தாயகங்களில் பிறந்து நகரில் வாழ்ந்தவரையும், ஊரில் வாழ்ந்தவரும், சினிமாவுடன் சிந்திப்பவர்களையும் களிப்பூட்டும் வகையில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டிருந்தது விழாவின் சிறப்பான அம்சமாகும். மேலும் தமிழ்க் கலாச்சார நிகழ்ச்சிகளை பார்வையாளர்களின் தன்மையை அறிந்து தயாரிப்பதில் சிகாகோ சங்கம் அனுபவசாலிகள் என்பது இவ்விடம் சொல்லவே தேவையில்லை.
இம்முறை நாட்டுப்புறக் கலைகள் என்ற தலைப்பில் செங்காந்தல் நாட்டியக்குழுவினரின் நிகழ்ச்சியும், அறுவடை அரங்கேற்றம் என்ற உட் பொருளில் மீரா ஜெயகிருஷ்ணனின் தயாரிப்பும் அருமையாக இருந்தன.
மயிலாட்டம்,ஒயிலாட்டம்.சிலம்பாட்டம்,பொம்மலாட்டம்.கோலாட்டம்,கும்மி,கரகாட்டம், மாடு,குதிரையாட்டம் என்று பலவகையான கண்களிற்கும், செவிகளிற்கும் கிராமத்தை எண்ணி ஏங்கும் மனதிற்கும் விருந்து படைத்தனர் மேற்கூறிய பிரதான இரு நடனக் குழுவினர்.
கிராமியப் பொங்கல் நடனப்பகுதியில் மதுரையில் பிறந்து வளர்ந்த தயாரிப்பாளர் மீரா ஜெயகிருஷ்ணன் 35 நடனக் கலைஞர்களுடன் மேடையேறிய அறுவடை அரங்கேற்றம் பிரமாதமாக இருந்தது. இந்த நிகழ்ச்சி பலவகை கிராமிய நடனங்களையும் முன்வைத்து பரிமளித்தது.
அறுவடை அரங்கேற்றத் தயாரிப்பாளர் மீராவுடன் இராப்போசன இடைவேளையின் போது சிறிதளவு உரையாட முடிந்தது. மீரா அவர்கள் , நடனக் கலையையும், ஓவியக் கலையையும் குழைத்து அற்புதமாகக் கதை சொல்பவர் என அறிந்து கொண்டேன்.
அறுவடை மேடையமைப்பு பார்வையிடுவோரை நாட்டுப்புறம் அறுவடைகால நிகழ்வுகளிற்கு கொண்டு சென்றது. ஒரு புறம் வேளாண்மைக்காரர் வீட்டு முகப்பு அமைத்திருந்தனர். இந்த அமைப்பில் சிவப்பு ஒடு விவரமாக வரையப்பட்டிருந்தது, தாள்பாரம், ஊர்வீட்டின் முற்பகுதி மரத்தூண்கள், வாசல் படி, மற்றும் திண்ணை போன்ற அமைப்புக்கள் அழகாக தமிழ்க் கிராமப் புறத்தை விவரித்தன.
மேலும் மூன்று கட்டை செங்கருப்பு,நாவல் கரும்புத்தடிகளும் பச்சைக்குருத்துக் கரும்பிலைகளும் அதன் மத்தியில் பொங்கல் பானையும் அருமையாக அறுவடைப் பொங்கலை விவரித்தது. சிறப்பாக மேடையலங்காரங்கள் பார்வையாளர் பகுதியிலிருந்துப் பார்த்தாலும், பின் அரங்கில் இருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரிந்தன.
அறுவடை அரிவாள் தொடக்கம், மாட்டுப் பொங்கல் யாவற்றிக்கும் மேடையலங்காரத்திற்கென செய்யப்பட்ட பொருட்கள் யாவுமே மிகவும் நேரமெடுத்து, கிராமிய அழகியல் அமைப்பு நூணுக்கங்களை அவதானித்து அழகாகச் செய்துள்ளனர் என்பது தெரிந்தது. அறுவடை நாற்றுக்கள், அறுவடை பிரம்புக் கூடைகள், மரத்திலான ஏர், மற்றும் மேடையில் சிறிய அலங்காரத் தேர், மேடையலங்காரங்களாக இருக்கட்டும், மற்றும் உடுபுடவை நிறத் தெரிவுகளாக இருக்கட்டும் மீரா இவையாவற்றையுமே ஓவியமாக அமைத்துக் கதை சொல்லியுள்ளார்.
ஆண்களும் சரி, பெண்களும் சரி ஏன் குழந்தைகளாவும் இருக்கட்டுமே கிராமியச் சொற்பனம் தரும் வகையில் ஆடினார்கள்,பாடினார்கள் ஆடை ஆபரணம் அணிந்திருந்தார்கள். மீரா இந்த அரங்கேற்றத்திற்கு நடனக்காரர்களை சிறுபிள்ளைகளில் இருந்து, அழகிய யுவன்,யுவதிகளில் இருந்து பாட்டா, பாட்டிவரை ஒவ்வொருவரையும் சரியாகத் தேர்ந்தெடுத்து அமைத்திருந்தார்.
ஒயிலாட்டம் பிரகாசமான சிவப்புச் சரிகை, கூந்தல் முட்டும் பூச்சரங்கள் கொள்ளைக் கிராமத்து அழகு. மேளம்,பறை அருமையான நகைச்சுவையான குதிரையாட்டம்சூழ அழகிய தேர் மேடையில் சுற்றி வந்தது மேடையில் தேரின் உள்ளே சாமியைத் தேடிய சபை மக்கள் யாவரும் சற்று எதிரிப்பார்க்காத வியப்பூட்டும் வகையில் அன்பே உண்மையான மகத்துவம் என்று இயம்பினார்கள் நடனக் கலைஞர்கள்.
தமிழ்த் தலைமுறைக் கிராமியப் பாடல்களில் இருந்து மெட்டான சினிமாப்பாட்டுக்களுடன், அமெரிக்க ஆங்கில மெட்டுப் பாடல்களையும் தொடுத்து, மீழ தமிழ்க் கிராமியக் கலாச்சாரத்திற்கு அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அழகிய தமிழ் யுவனை பாட்டா பாட்டி கிராம வீட்டிற்கு அழைத்துச் சென்றது பிரமாதமாகவும், மக்கள் நிஜமாகவே ஏற்றுக்கொள்ளக் கூடிய கலாச்சாரச் சங்கமங்களையும் தெளிவாக விவரித்தது.
இடையில் பிரதம விருந்தினர் பிரபல நடிகர்,இயக்குநர் பாக்கியராஜ் அவரது பாரியார் பூர்ணிமா பாக்கியராஜ் அவர்களும் அரங்கத்தின் முன்வரிசைக்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து நடந்த நடனப் போட்டிகள் சிகாகோ தமிழ்க் கலைஞர்களின் திறனை வெளிக்கொண்டு வந்தது. பரதம் தொடக்கம், டப்பாங்குத்து வரை யாவையும் மேடைக்கு வந்தன மக்கள் கரகோஷத்தைப் பெற்றன. குறிப்பாக நடனப்போட்டியில் முதலிடம் பெற்ற நாட்டியக்குழு டிவான்ஸ் அகடெமி அதிவேகமான கிழக்கிசை,மேற்கிசை என்றில்லாமல் அருமையாக ஆடினார்கள். விஸ்வரூபம் படத்தில் வரும் உன்னைக் காணாது என்ற பாட்டில் ஆரம்பித்து ஆட்ட வேகத்தை அதிகரித்து பல நாட்டிய அபினயங்களையும், கால் ஆட்டங்களையும் காட்டுவித்தனர். ஆடுகளம் படத்தின் “ஒத்த சொல்லால” பாட்டில் இருந்து, பயணங்கள் முடிவதில்லை படத்தின் “ஏ ஆத்தோரமா வாரியா” பாட்டு வரை அந்தரங்கத்தையே கலக்கும் கரகோஷத்துடன் ஆடிக்காட்டினார்கள்.
சிகாகோ பொங்கல் விழா 2016
இதைப் போன்று சிகாகோ சூறாவளி உட்பட, பல அழகான நாட்டியக்குழுக்களும் போட்டி போட்டனர். திருமதி பூர்ணிமா அவர்கள் நடனக்குழுக்களில் சிறந்தவர்களைத் தெரிந்தெடுத்து அறிவித்தார். மேலும் திருமதி பூர்ணிமா அவர்களும், திரு பாக்கியராஜ் அவர்களும் சிகாகோ மக்களின் தமிழ் ஆர்வத்தையும், அதற்காக அவர்கள் செய்துள்ள பொங்கல் விழா ஒழுங்குகள் பற்றியும் அருமையாகப் போற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து விவாத மேடை ஆரம்பமாகியது. பொன்னாடை போர்த்தலின் பின்னர் விவாத மேடை நடுவர் பிரபல நடிகர், தமிழ் சினிமா இயக்குநர் பாக்கியராஜ் கைகளின் கட்டவிழ்த்து விடப்பட்டது. பாக்கியராஜ் அவர்கள் வழக்கம் போல யாவரையும் சற்று உற்சாகப் படுத்தும் வகையிலும் அதே சமயம் சிலர் தமது இருக்கைகளில் புழுப்போல நெளியும் வகையிலும் அருமையாகத் தனது பள்ளி அனுபவங்களையும் அவை எவ்வாறு தமது சினிமா வாழ்க்கைக்கு அத்திவாரம் போட்டது என்று கூறி விவாத மேடையை ஆரம்பித்து வைத்தார்.
சிகாகோ தமிழ்ச்சங்கம், மேடையில் பங்கு பெற்ற மக்கள் மற்றும் அரங்கத்தை நிறைத்த தமிழ்மக்கள் யாவரும் சிறப்பாக தமிழ்க் கலாச்சாரத்தை வாழ்ந்து காட்டுகிறார்கள் என்றுதான் நாம் இவ்விடம் கூறவேண்டும். அவர்கள் பணிகள் மென்மேலும் வளர்ந்திட பனிப்பூக்கள் சஞ்சிகையின் வாழ்த்துக்கள உரித்தாகட்டும்.
தொகுப்பு: யோகி
படம்: இராஜேஷ்