\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஆத்ம சாந்தி

Filed in இலக்கியம், கதை by on February 28, 2016 0 Comments

aathmasaanthi_620x490காஷ்மீர், அதற்கு இரண்டு தலை நகரங்கள். குளிர் காலத்தில் ஜம்மு மற்றும் வெயில் காலத்தில் ஸ்ரீநகர். அந்த ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியைச் சுற்றிப் பார்த்து விட்டுத் தன் அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் செல்வம். பசி வயிற்றைக் கிள்ளியது. தால் ஏரிக்கு அருகிலிருந்த கடையில் சப்பாத்தியும், பன்னீர் சாமனும் வேண்டுமென்று சொல்லி விட்டு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். நண்பன் சங்கரும், அவனும் குளிர்கால ஆடை ஏற்றுமதி வியாபாரம் செய்கிறார்கள். இன்று சங்கர் வியாபார விஷயமாக வேறு நண்பரைக் காண அழைத்தான், செல்வம் இன்று ஒரு நாள் நீயே பார், நான் தால் ஏரிக்குப் போகிறேன் என்று சொல்லி விட்டு வந்து விட்டான்.

சூடாக வந்த சப்பாத்தியையும், பன்னீர்ச் சாமனையும் சாப்பிட்டு விட்டுப் பணம் செலுத்தி நடந்து சென்றான். இது வெயில் காலமாதலால் பனிப் பொழிவில்லை ஆனாலும் குளிரத்தான் செய்தது. ஒரு வாடகை வண்டியைப் (டாக்ஸி) பிடித்து, அவன் தங்கியிருந்த விடுதி வந்து சேர்ந்தான். சங்கர் வருவதற்குச் சிறிது நேரமாகும் அதனால் விடுதிக்கு வெளியில் சிறிது தூரம் தான் நடந்திருப்பான், அவன் காலில் ஏதோ இடறியது. அது ஒரு சிறிய பொட்டலம், அதன் விலாசம் தமிழ்நாடு என்றிருக்கவே அதைச் சற்றுத் தயக்கத்துடன் கையில் எடுத்தான் செல்வம். பொட்டலத்தின் பெறுநர் முகவரி திரு.தியாகராஜன் என்று சென்னை விலாசம் எழுதியிருந்தது, அனுப்புநர் சந்தோஷ் என்றும் இராணுவ அதிகாரிகளின் குடியிருப்புப் பகுதியினை விலாசமாகக் குறிப்பிட்டிருந்தது, தபால் தலை ஏதும் ஒட்டப்படவில்லை. எப்படியோ தவறுதலாக இங்கே விழுந்து விட்டது போலும், நாளைக் காலை இதை உரியவர்களிடம் கொடுத்துவிடுவோம் என்றெண்ணிக் கொண்டான்.

பின்னர் சங்கர் வந்தவுடன் அறைக்குச் சென்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு, தங்களுடைய வியாபார விஷயங்கள் பேசி முடித்த பின் மேஜையின் மீது செல்வம் வைத்திருந்த பொட்டலத்தை எடுத்த சங்கர் சட்டென்று பிரித்து விட்டான். அது தன்னுடையதல்ல என்று செல்வம் சொல்வதற்குள், அதிலிருந்து கடிதமும், குழந்தையின் புகைப்படமும் கீழே விழுந்தது.

அந்த கடிதத்தையும், புகைப்படத்தையும் எடுத்த சங்கர், தன்னுடையதல்ல என்று செல்வம் கூறியும் படிக்கத் தொடங்கினான். அது ஒரு மகன் தன் தந்தையிடம் காதல் திருமணம் செய்து கொண்டதற்கு மன்னிப்புக் கோரும் கடிதம், மேலும் தன் மனைவியையும், குழந்தையையும் ஏற்றுக் கொள்ளமாறு எழுதப்பட்டிருந்தது. என்னடா, சங்கர் அடுத்தவங்க கடிதம்னு சொல்லியும் படிக்கற என்றான் செல்வம். சாரிடா, நீ தான் ஏதோ விளையாட்டா பண்றேன்னு நினைச்சுட்டேன் என்றான் சங்கர். மேலும், சரிடா, காலையில் சேர்த்து விடலாம். கோவிச்சுக்காத, வேண்டுமென்றால் அந்த அதிகாரியிடமும் மன்னிப்புக் கேட்கிறேன் போதுமா என்றான்.

சரி , சரி என்று சிரித்த வண்ணம் தொலைக் காட்சியில் எதையாவது பார்க்கலாம் என்றவாறே, விசைப் பலகையை அழுத்தினான் செல்வம். அதில் தலைப்புச் செய்திகளில், இன்று ஜம்முவின் இந்திய எல்லைப் பகுதியில் நடந்த திடீர்த் தீவிரவாதத் தாக்குதலை இந்திய இராணுவப் படை முறியடித்தது. ஆனால் இந்தத் தாக்குதலின் போது நமது இராணுவப் படையைச் சேர்ந்த இருவர்  நம் தாய்நாட்டுக்காகத் தம் இன்னுயிரை நீத்தனர். அவர்கள் இராணுவத் தலைவர்கள் திரு.சந்தோஷ் மற்றும் திரு.காத்தமுத்து ஆவார்கள். அவர்களுடைய குடும்பத்தாருக்கு… …….. ….. . என்று ஒரு பெண் செய்தி வாசித்துக் கொண்டிருந்ததாள்.

செல்வம் அந்த பொட்டலம் எப்படித் தொலைக்கப் பட்டிருக்கும் என்று ஊகித்துக் கொண்டான். ஏனோ செல்வத்தினால் அன்றிரவு உறங்க முடியவில்லை, சங்கர் எப்பொழுதோ உறங்கி விட்டான். அடுத்த நாள் காலை, செய்திகளில் இராணுவத் தலைவர் சந்தோஷின் பெற்றோர் மருமகளையும், புகைப்படத்தில் பார்த்த அதே குழந்தையையும் ஆதரவாக பற்றிக் கொண்டு நின்றிருந்தனர். செல்வம் சந்தோஷின் ஆத்மா சாந்தியடைந்ததாக எண்ணிக்கொண்டான்.

  • ரஞ்ஜனி கார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad