மறதிக்குப் பின் வருவதே மரணம்
விட்டேன்
மௌனமாய் உணர்கிறேன்…
திரும்ப முடியாமல்
படுத்தேயிருப்பதால்
முதுகெல்லாம் புண்கள்
ஒப்புக் கொள்கிறேன்…
பேச்சுக்கள் குறைந்து
மலம் மூத்திரம்
படுக்கையிலேயே
போவதில் எனக்கும்
உடன்பாடு இல்லை…
தெரிந்த குரல்கள்
வந்து பார்த்து, காது பட
“போய்ட்டா நல்லது”
என்று கூறியது கூடச் சரி என்று
தான் தோன்றுகிறது …
பால் ஊற்றும் கடமையில்
வரிசையாக நின்ற
மகன்கள், மகள்களுக்கு
ஆயிரம் வேலைகளாம்..
ஆழ்மனம் உள்
வாங்கிக் கொண்டுதானிருக்கிறது,…..
அதிகாலை ஒன்றில்
எனக்கே தெரியாமல்
நான் மரித்தும் போகிறேன்…
ஊர் வருகிறது
உறவு வருகிறது
எனை எடுப்பதற்கு முன்பே
நிறையப் பேர் போய் விடுகிறார்கள்
வாழ்க்கை முறை அப்படி,
புரிந்து கொள்கிறேன் …
ஏதேதோ சண்டைகளும்
கோபங்களும் கூட
என் இறுதிப் பயணத்தில்
இருக்கிறது …
எப்போதும் போல
கண்டும் காணாமல்
படுத்திருக்கிறேன்…
அத்தனை மண்ணை
ஏதேதோ முறைப்படி
என் மேல் போடுகிறார்கள் …
பொறுத்துக் கொள்கிறேன்…
எல்லாரும் போய் விட்ட பிறகு
என்னைப் போலவே எரிந்து
கொண்டிருந்த
மெழுகுவர்த்தியும் சற்று நேரத்தில்
அணைந்து விடப் போகிறது..
அந்த உண்மையும் புரிகிறது….
எனைத் தூக்கி வருகையில்
என் பேரப் பிள்ளைகள்
என் சவத்திற்கு முன்
ஆடாமல் வந்திருக்கலாம்
அதுதான் புரியவே இல்லை
அழ வைக்க
முயற்சிக்கிறது….
சரி விடுங்கள்…
சீக்கிரத்தில் அழுதழுதே
எனை மறந்து விடுவேன்
உங்களைப் போலவே…
அல்லது
உங்களுக்கும் வரும்
மரணத்தைப் போலவே…
கவிஜி