அமெரிக்கத் தேர்தல் – பகுதி 3
2016, மார்ச் மாதம் அதிபர் தேர்தலில் பல திருப்பங்களைத் தந்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, வளர்ந்த நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவையும் அரசியல் சலசலப்புகள் விட்டு வைக்கவில்லை.
பல மாநிலங்களில் பிரைமரி மற்றும் காகஸ் நடந்து முடிந்துள்ளன. இரண்டு கட்சிகளிலும் யார் அதிபர் தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற ஊகத்துக்கு இதுவரை, எந்தத் தெளிவுமில்லாத நிலை நீடிக்கிறது.
நாம் முன்னர் பார்த்தபடி ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சி சார்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரதிநிகளைக் கொண்டுள்ளன. அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் எவர் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமான பிரதிநிதிகளின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெறுகிறாரோ அவரே அக்கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அந்தக் குறிப்பிட்ட நபரைத் தேர்ந்தெடுக்கும் முறை தான் காகஸ் மற்றும் பிரைமரிகள்.
மார்ச் முதல் தேதி, சூப்பர் டியூஸ்டே, வேட்பாளர்களுக்குத் தெளிவான பாதை வகுக்கும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதைத் தொடர்ந்து சில மாநிலங்களில் நடந்த காகஸ், பிரைமரிகளிலும் கலவையான முடிவுகள் வந்ததால், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் எண்ணிக்கை பலவாறாகப் பிரிந்து, எவரும் பெரும்பான்மை அடைய முடியாத குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, குடியரசுக் கட்சியில், ஜூலை பதினெட்டாம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் மாநாடு வரை இந்த நிலை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் முன்னர் பார்த்தபடி ஜனநாயகக் கட்சியில் மொத்தம் 4,765 பிரதிநிதிகள் உள்ளனர். ஒரு வேட்பாளர் பெரும்பான்மை பெற குறைந்த பட்சம் 2,383 பிரதிநிதிகளின் நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி (மார்ச் 23) ஹிலரி கிளிண்டன் 1,681 பிரதிநிதிகளின் நம்பிக்கையையும், பெர்னி சாண்டர்ஸ் 927 பிரதிநிதிகளின் நம்பிக்கையையும் பெற்றுள்ளனர்.
குடியரசுக் கட்சியில் மொத்தம் 2472 பிரதிநிதிகள். பெரும்பான்மைக்கு 1237 பிரதிநிதிகளின் பலம் தேவை. இதுவரையில் டானல்ட் ட்ரம்ப் 739 பிரதிநிதிகள், டெட் க்ரூஸ் 465 பிரதிநிதிகள், ஜான் காஷிஷ் 143 பிரதிநிதிகள் பெற்றுள்ளனர். சென்ற வாரம் நடந்த பிரைமரிகள் வரை கடுமையான போட்டியாகக் கருதப்பட்ட மார்க்கோ ரூபியோ, தான் மிகவும் நம்பியிருந்த ஃப்ளாரிடா மாநிலத் தோல்வி ஏமாற்றமளித்ததால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்து விட்டார். அதுவரை அவர் பெற்றிருந்த 164 பிரதிநிதிகளின் நம்பிக்கையைப் பெற மற்ற மூவரும் முயன்றாலும் இதைச் சுற்றிலும் பல சிக்கல்கள் உள்ளன.
மார்க்கோ ரூபியோவை நம்பி இவர்கள் அவருக்கு ஆதரவு தந்திருந்தாலும், நாளையோ பின்னரோ ரூபியோ இம்மூவரில் எவரையாவது ஆதரித்தாலும், ரூபியோ பிரதிநிதிகளின் ஆதரவு எளிதில் மற்றவருக்குப் போய்ச் சேர்ந்துவிடாது.
அயோவா, ஜார்ஜியா, ஒக்லஹாமா, மாசசூசெட்ஸ், வட கரோலினா, அர்கன்ஸா, வர்ஜினியா போன்ற மாநிலங்களில் ரூபியோ பெற்ற பிரதிநிதிகள், ஜூலை மாத மாநாடு வரையிலும் வேறு எவருக்கும் தங்களது ஆதரவை மாற்றிக்கொள்ள இயலாது. ஜுலை மாநாட்டில் நடைபெறும் முதல் கட்ட வாக்குப் பதிவில் இவர்கள், ரூபியோவுக்கு (அவர் போட்டியிலிருந்து விலகியிருந்தாலும் கூட) ஆதரவளித்துத்தான் வாக்களிக்க முடியும். இவர்களில் சில மாநில பிரதிநிதிகள் அடுத்த கட்ட வாக்குப்பதிவின் போது தங்களது முடிவுகளை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் சில மாநிலப் பிரதிநிதிகள் இவ்வாறு மாற்ற இயலாது. ஆகவே இவர்களின் வாக்குகள் கடைசி வரையில் ரூபியோவுக்குத்தான் என நிர்ணயிக்கப்பட்டு மற்றவர்களுக்குப் பலனில்லாமல் போகும். விளையாட்டுப் போக்கில் துவக்கத்தில் எவர் வேண்டுமானாலும் போட்டியிட்டுப் பின்னர் விலகிக் கொள்ளலாம் என்ற போக்கினைத் தவிர்க்கவே இம்மாநிலங்கள் கடுமையான நிபந்தனைகளைக் கொண்டுள்ளன.
நியூ ஹாம்ஷையர், டென்னசி, மினசோட்டா, அலபாமா, டெக்சாஸ் போன்ற மாநிலப் பிரதிநிதிகள் ரூபியோ விலகிக் கொண்டதால் மற்றவர்களுக்கு ஆதரவளிக்கக் கூடும். ஆனால் இதற்கு ரூபியோ எழுத்து வடிவில், இவர்களுக்குத் தான் போட்டியிலிருந்து விலகிக் கொண்டதாகத் தெரிவிக்க வேண்டும். திடீரென்று மனம் மாறி, மீண்டும் போட்டியில் இறங்கிவிடக் கூடாது என்பதால் இந்த ஏற்பாடு.
இவற்றையெல்லாம் மீறி, ரூபியோ மீண்டும் போட்டியில் குதிக்கவும் வாய்ப்புள்ளது. குடியரசுக் கட்சியின் விதிமுறைகள் பிரிவு 40 படி, எட்டு மாநிலங்களின் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்ற ஒருவர், கடைசி நேரத்தில் குடியரசுக் கட்சி மாநாட்டின் போது இறுதிச் சுற்று வாக்குகளில் போட்டியிட முடியும். தற்போதைய நிலவரப்படி டானால்ட் டிரம்ப் மட்டுமே எட்டு மாநிலங்களுக்கும் அதிக இடங்களில் வென்றுள்ளார். ஆனால் குடியரசுக் கட்சி இதை இரண்டு மாநிலங்கள் என்று குறைத்தால் ரூபியோ மீண்டும் களத்தில் இறங்கக்கூடும்.
குடியரசுக் கட்சிக்குள் நிலவும் இந்த குழப்ப நிலைக்கு மூன்று முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது.
- எதிர்பார்த்ததற்கும் அதிகமான வேட்பாளர்கள் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியில் இறங்கியது. அதோடு மட்டுமல்லாமல், தங்களுக்குப் போதிய ஆதரவில்லை என்று தெரிந்த பிறகும், சில வேட்பாளர்கள், தக்க சமயத்தில் வெளியேறாமல் போட்டியில் நீடித்தது.
- பல ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் கட்சியின் மூத்த உறுப்பினர்களும், மற்றவர்களும் சேர்ந்து தங்களது வேட்பாளரை முடிவு செய்து முன்னிறுத்துவார்கள். அது போலில்லாமல், ஜனநாயக முறைப்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினருக்கும் தங்களது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் காகஸ், பிரைமரி நடந்ததில் கிடைத்த கலவையான முடிவுகள்.
- மூன்றாவது முக்கிய காரணம், தற்போதைய நிலவரப்படி முன்னிலை வகிக்கும் டானல்ட் டிரம்ப் குறித்து கட்சிக்குள்ளேயே சிலருக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி.
குடியரசுக் கட்சி பழமைவாதக் (conservatism) கொள்கைகளையுடையது. டானல்ட் டிரம்ப் தனது தொழில் முறை அனுபவத்தை வைத்துக் கொண்டு பழமைவாதக் கருத்துகளைப் பின்பற்ற மறுக்கிறார் என்பது இவர்களது குறை. மேலும் அவர் இதுவரையில் அமெரிக்க அரசியலில் எந்தப் பதவியிலும் பங்குவகித்தவரில்லை. அதிரடியாக சில வாக்குறுதிகளை அள்ளி விட்டு, தெளிவின்மையால் வெளிநாட்டு உறவுகளில் பிணக்கு ஏற்படுத்தி விடுவார் என்ற அச்சம் எழுந்துள்ளது. கட்சியின் கொள்கைகளைப் பற்றிக் கவலைப்படாமல், எதிராளிகளை விமர்சிப்பதிலேயே அவர் கவனம் செலுத்துவது பொது மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி எதிர்கட்சியினருக்கு வெற்றி வாய்ப்பை அதிகரித்துவிடும் என்ற கோணமும் அச்சத்திற்குக் காரணம். இது போன்ற பல காரணங்களால் டானல்டின் வேகத்தைக் கட்டுப்படுத்த, குடியரசுக் கட்சி முனைகிறது.
தான் ஏற்பாடு செய்யும் கூட்டங்களை, பேரணிகளை நடத்தவிடாமல் கட்சி தடுப்பதாக டானல்ட் கருதுகிறார். சில இடங்களில் இதை மீறிக் கூட்டம் நடக்கும்போது தேவையற்ற வன்முறைகள் வெடிக்கின்றன. இந்தச் சலசலப்புகளுக்கு அஞ்சப்போவதில்லை என்று தெரிவித்த டானல்ட், அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், இறுதியில் யார் முன்னிலை வகிக்கிறார்களோ அவரைக் கட்சி தங்களது வேட்பாளராக ஏற்றுக் கொண்டு அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தித் தனது பயணத்தைத் தொடர்கிறார்.
குடியரசுக் கட்சி சார்பில் இறுதி வேட்பாளருக்குத் தேவையான 1237 பிரதிநிதிகளின் ஆதரவு எவருக்கும் கிடைக்காது என்பதே பல அரசியல் வல்லுநர்களின் கருத்து. மேலும் கட்சியில் முளைத்துள்ள குழப்பங்களால், மற்ற வேட்பாளர்கள், தங்களது பிரதிநிதிகளைத் தேற்றி டானல்டுக்கு ஆதரவைத் தெரிவிப்பார்களா என்பதும் கேள்விக்குறி.
கட்சி மாநாட்டில் பலப்பரிட்சை (contested convention)
ஜூலை மாதம் கிளீவ்லாண்டில் நடைபெறவுள்ள குடியரசுக் கட்சியின் மாநாடு மிகுந்த பரபரப்புடன் இருக்குமென்பது அரசியல் வல்லுநர்களின் கருத்து. இந்த மாநாட்டில் பிரிதிநிதிகள் அனைவரும் ஒன்று கூடி இறுதி வேட்பாளரைத் தீர்மானிப்பர். முதல் சுற்று வாக்கெடுப்பில் பிரதிநிதிகள் இதுவரை யாருக்கு ஆதரவளித்து வந்தனரோ அவருக்கே தான் வாக்களித்ததாக வேண்டும். உதாரணமாக, ரூபியோவுக்கு ஆதரவளித்து வந்த பிரதிநிதிகள், அவர் போட்டியிலிருந்து விலகி விட்டாலும் கூட, ரூபியோவுக்குத் தான் வாக்களித்ததாக வேண்டும். முதல் சுற்றில் எந்த வேட்பாளருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் இந்தப் பிரதிநிதிகள் யாருக்கு வேண்டுமானாலும் தங்களது ஆதரவை மாற்றிக் கொள்ள முடியும். இவ்வாறு தனி ஒருவருக்கு 1237 வாக்குகள் கிடைக்கும் வரை, வாக்குச் சுற்றுகள் நடைபெறும்.
கட்சி மாநாட்டில் முகவர்களின் சமரசம் (brokered convention)
மாநாட்டில் பல சுற்றுகள் நடத்தி அதன் மூலம் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க, கட்சி தேர்ந்தெடுக்கும் சில முகவர்கள் வேட்பாளர்களிடம் சமரசம் பேசி அவர்களில் ஒருவரை மட்டும் நியமிக்கும் வகையில் மற்றவர்களை விலகிக்கொள்ளச் செய்வார்கள்.
இது போன்று கடைசி நேரத்தில் கட்சி மாநாடுகளில் போட்டி அல்லது சமரசம் நடைபெறுவது அமெரிக்க அரசியலுக்குப் புதிதல்ல. 1952ல் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ட்வைட் ஐசன்ஹோவருக்கும், ராபர்ட் டாஃப்டுக்கும் கிட்டத்தட்ட சமமான ஆதரவு இருந்ததினால் மாநாட்டில் சமரச முறையில் ஐசன்ஹோவர் அதிபர் தேர்தலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976ல் ரானல்ட் ரீகன் மற்றும் ஜெரால்ட் ஃபோர்ட் இருவருக்குமிடையே சமரசம் ஏற்பட்டு ஃபோர்ட் வேட்பாளரானார்.
கறுப்புக் குதிரை வேட்பாளர் (Black Horse compromise candidate).
வேட்பாளர்களில் முன்னணியில் இருக்கும் இருவருக்கிடையே கடுமையான போட்டி நிலவும் பட்சத்தில், மிகவும் பின்தங்கியிருந்த மூன்றாவது வேட்பாளர், இறுதியில் அதிபர் வேட்பாளாரான சுவாரசியங்களும் நடந்துள்ளன. 1920ல் குடியரசுக் கட்சியின் வாரன் ஹார்டிங் இம்முறையில் அதிபராக நிறுத்தப்பட்டார். 1924ல், ஜனநாயகக் கட்சி மாநாட்டில், வரலாறு கண்டிராத வகையில் 103 சுற்றுக்கள் வாக்கெடுப்பு நடந்த பின்னரும் போட்டியாளர்களில் எவரும் அறுதிப் பெரும்பான்மை பெறாததால், மூன்றாவது வேட்பாளரான ஜான் டேவிஸ் அதிபர் தேர்தலுக்கு நிறுத்தப்பட்டார்.
இம்முறைப்படி, தற்போதைய நிலையில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களில் பின்தங்கியிருக்கும் ஜான் காஷிஷ், அதிபர் வேட்பாளராவதற்கும் வாய்ப்புள்ளது.
ஜனநாயகக் கட்சியில் ஹிலரி கணிசமான முன்னிலை பெற்றிருப்பதால் பெரும்பான்மை ஆதரவை எட்டி விடுவாரென்ற நம்பப்படுகிறது.
மெய்யாலுமா?
அமெரிக்காவில் 1920ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 19வது திருத்தத்தில் தான் பெண்கள் வாக்களிக்கும் உரிமை அமலுக்கு வந்தது.
முதன் முதலில் நியுசிலாந்து நாடு தான், 1893ம் ஆண்டு, பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. இந்தியா 1950ல், நாட்டின் முதல் தேர்தலிலிருந்தே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது.
2011ல் தான் சவுதி அரேபியப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது.
- ரவிக்குமார்