\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நாப்பதுக்கு மேலே…

Filed in இலக்கியம், கதை by on March 28, 2016 0 Comments

naarpathukku_mele_620x413ஃபீஸுக்குள் நுழையும் போதே சிண்டியின் வாசம் – அவள் போடும் பெர்ஃப்யூம் வாசம் – முகத்தில் அடித்தது. என்ன இன்னைக்கு, அதுக்குள்ள வந்துட்டாளா என்று யோசித்துக் கொண்டே தனது கியூபுக்கு நடந்தான் சபா. அவன் நினைத்தது சரிதான். தூரத்திலிருந்தே கேட்ட குழைவுச் சிரிப்பு சிண்டி வந்துவிட்டிருந்தாள் என்று சொல்லியது. தனது கியூபில் பையை வைக்கும் போது, கண் தானாக எதிரேயிருந்த சிண்டியின் கியூபுக்குப் போனது. வெண்ணையின் வழவழப்பில், பெரிதாய், விம்மிப் புடைத்து, ரோஜா நிறத்தில், அவ்வளவு ஃப்ரெஷ்ஷாய், என்னை இப்பவே எடுத்துக் கொள் என்பது போல … நாக்கில் எச்சில் ஊறியது சபாவுக்கு ..’சாலாவுக்குத் தெரிந்தால் கொன்னுடுவா’ மனசு சொன்னாலும் கண் கேட்கவில்லை.. கோட்டைக் கழட்டக் கூட மறந்து வைத்த கண் வாங்காமல் அவன் பார்த்துக் கொண்டிருந்ததை சிண்டி கவனித்து விட்டாள். ஃபோனை வைத்து விட்டு ‘ஏன் அப்படிப் பாக்கற எடுத்துக்க வேண்டியது தானே’ என்று ரோஜா நிற கப் கேக்குகள் அடுக்கியிருந்த பாக்ஸை நீட்டினாள்.

‘ஹாப்பி வாலண்டைன்ஸ் டே .. அப்படியே நானும் ஒண்ணு எடுத்துக்கிறேன்’ என்று சொல்லி ஒரு முழு கப் கேக்கை வாயில் திணித்துக்கொண்டு ‘ம்ம்..ம்ம்ம்.. வாவ்..’ என்று கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் சேர்த்து வைத்துக் காட்டி அனுபவித்தாள்  . ‘அறுபத்திரெண்டு வயசான உனக்கெல்லாம் சக்கரை நோய் வராதாடி’ என மனதுக்குள் நொந்துக் கொண்டான் சபா.

பா – சபாரத்தினம், நாற்பத்தி நான்கு வயதானவன். நடுத்தரவயது இந்திய ஆண்களுக்கு இருக்கும் மத்தியப் பிரதேசத்தை விட, குடும்ப வளத்தைக் காண்பிக்கும் வகையில் மூணு நாலு இன்ச்சுகள் சுற்றளவு அதிகம். மனைவி சாலா – விசாலாட்சி, எட்டு வயது மகள் அபிராமி என்று மிகச் சின்ன குடும்பம். எல்லாமே நல்லாத்தான் போய்க் கொண்டிருந்தது – நான்கு மாதங்களுக்கு முன்பு சாலா அந்தக் கேள்வியைக் கேட்கும் வரை.

‘ஏன் இவ்வளவு தண்ணீ குடிச்சுகிட்டேயிருக்கீங்க?’

‘தாகமெடுத்துது குடிச்சேன்..இன்னொரு டம்ளர் குடு’

‘நேத்து நைட் கூட நிறைய மூச்சு வாங்குச்சு உங்களுக்கு ..’

‘அதச் சொல்றியா .. கள்ளி, கவனுச்சிட்டியா? நேத்து நல்ல மூட்லே இருந்தேன்.. நீ வேற கமகமன்னு செண்ட் போட்டிருந்தியா .. அதான்’

‘கர்மம் .. எந்நேரமும் அதே நெனப்பு. கராஜ்லேருந்து வாட்டர் சாஃப்ட்னர் சால்ட் பேகைத் தூக்கிட்டு வரதுக்குள்ள நாக்குத் தள்ளிப் போச்சே உங்களுக்கு அதச் சொன்னேன்..’

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல .. எவனோ கடுப்பிலே ஈரமா இருந்த பாக்கெட்ட என் தலையிலே கட்டிட்டான்.. அதான் வெயிட் கூடிப் போயிருக்கும் போல .. நீ போய் தண்ணீ கொண்டா..’

‘கடுப்பிலே வெயிட் கூடின மாதிரி தெரில .. உங்க இடுப்பில தான் கூடிப் போயிருக்கு..’

‘ஏன்.. என் அப்பர் டார்ஸோ மஸில்ஸைப் பாத்துத் தானே என்னைக் கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்ட’

‘அமெரிக்கால சோத்துக்கு வழியில்லாம இருந்தப்ப எடுத்த ஃபோட்டோவ அனுப்பி வெச்சுட்டு .. டார்ஸோவாம் டார்ஸோ. வியாழக்கிழமை டாக்டர்ட்ட போறோம்.. அவ்ளோதான்.. தண்ணியைப் புடிங்க’

ரைக் கொயர் நோட்டு போலிருந்த ‘நியு பேஷண்ட்’ இன்டேக் ஃபார்மைக் கொடுத்தார்கள் ஆஸ்பத்திரியில். தாய் வழித் தாத்தாவுக்கு ஒத்தைத் தலைவலி இருந்ததா என்பது உட்பட டாக்டர்கள் மறந்து போய் விடாமலிருக்க உலகத்திலிருக்கும் அத்தனை விதமான நோய்களையும் எழுதி, பக்கத்தில் இரண்டு கட்டங்கள் போட்டு இது உங்களுக்கு இருக்கா என்று கேட்டிருந்தார்கள். முதலிரண்டைப் படித்துப் பார்த்து டிக் அடித்தவன் பிறகு இயந்திரத்தனமாக ‘நோ’ என்பதில் டிக் அடித்துக்கொண்டு வந்தான். ‘தினசரி, காரியங்களைச் செய்ய மூளையைப் பயன்படுத்துகிறீர்களா’ என்றதற்கும் ‘நோ’வில் டிக் அடித்துவிட, ‘கரெக்ட்டாத் தானே போட்டிருக்கீங்க.. மாத்தாதீங்க ‘ என்றாள் சாலா.

‘சாபரட்னம் ..’ ஆறடியில் பிளாண்ட் ஒருத்தி வந்து ‘டிட் ஐ சே இட் ரைட்.. ஐ அம் எரிகா’ என்று சிரித்தாள்.

‘நீ வேணா இங்கயே வெயிட் பண்ணேன் சாலா ..’

‘கொன்னுடுவேன் .. நடங்க’ என்று எரிகாவுக்கும் சபாவுக்கும் நடுவில் நடந்தாள்.

அவள் பங்குக்கு ஏதேதோ கேள்வி கேட்டு எல்லாவற்றையும் ஒற்றை விரலில் டைப்படித்தாள் எரிகா. வலது புஜத்தில் பிளட் பிரஷர் பார்ப்பதற்காகப் பட்டை கட்டிவிட்டு மணிக்கட்டை அழுந்தப் பிடித்து, பல்ஸ் பார்த்துக் கொண்டே அவனை ஓரக் கண்ணால் பார்த்த போது, நம்ப மனசில நினைச்சதைக் கண்டுபிடிச்சிட்டாளோ என்று பயந்தான் சபா.

‘117 பை 76 .. பர்ஃபெக்ட்… உடம்ப நல்லா வெச்சிருக்கே’ என்று பேச்சுக்காகச் சொல்லி வைத்தாள் எரிகா.

‘நான் அப்பவே சொல்லல?’ என்ற ரீதியில் சாலாவைப் பார்த்தான்.

‘இன்னும் கொஞ்ச நேரத்தில டாக்டர் கிறிஸ்டி வருவாங்க’ என்று சொல்லிச் சென்றாள் எரிகா.

என்ன இன்னைக்கு அதிர்ஷ்டம் மேல அதிர்ஷ்டமாயிருக்கு என்று நினைத்துக்கொண்டு ‘அவளும் என்னை அங்கங்கே தொட்டுப் பார்த்தா முறைக்கக் கூடாது சரியா?’ என்று சாலாவிடம் சொல்லி முடிப்பதற்குள்

‘ஹாய் .. ஐ அம் கிறிஸ்டி ஃபிரெட்ரிக் ..எப்படி இருக்கீங்க..’ வெள்ளையாகிப் போன தாடியுடன் ஆறடியில் கைகுலுக்கினார் ஆஜானுபாகுவான டாக்டர்.

நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள் சாலா.

‘மேலோட்டமாப் பார்த்தா நார்மலா தான் தெரியுது.. சொல்லுங்க என்ன உடம்புக்கு’

மைக்குகாகக் காத்திருந்த அரசியல்வாதியைப் போலத் தொண்டையைக் கனைத்துக் கொண்டு தொடங்கினாள் சாலா.

‘கொஞ்ச நாளாவே ரொம்ப டல்லாயிருக்காரு டாக்டர்.. புஸ்ஸூ புஸ்ஸூன்னு நிறைய மூச்சு வாங்குறாரு.. வேர்த்துக் கொட்டுது. கோக்கும் பெப்ஸியும் ஏஜன்சி எடுத்த மாதிரி குடிச்சுத் தள்றாரு… ஷுகர் இருக்குமோன்னு சந்தேகமாயிருக்கு’

எரிகா மாதிரியே பல்ஸ் பார்த்தவாறு .. ‘வேற ஏதாவது சிம்டம்ஸ்?’

‘நைட்டானா சரியாத் தூங்கறதில்ல …. காலைத் தூக்கித் தூக்கி என் மேல போடறாரு.. நைட்டெல்லாம் என்னையும் தூங்க விடாம  ஒரே தொந்தரவு..’

‘எக்சலண்ட் அப்சர்வேஷன்’

என்னடி நடக்குது இங்க.. நீ வெக்கமில்லாம பெட்ரூம் விஷயத்தையெல்லாம் சொல்ற..இந்தத் தாடிக்காரனும் எக்சலண்ட்ங்கிறான்..

‘டயபடிக் நெர்வ்ஸ்னு சொல்லுவாங்க .. காலெல்லாம் நரம்புக்குள்ள பூச்சி ஓடற மாதிரி இருக்கும்.. சிம்டம்ஸ் பார்த்தா கன்ஃபர்ம்ட் டயபடிஸ்னு தெரியுது.. எதுக்கும், போகும் போது பிளட் சாம்பிள் குடுத்துட்டுப் போயிடுங்க.. ரிசல்ட் வந்ததும் கூப்பிடறேன்..’

லேபில் சாம்பிள் என்று சொல்லி இரண்டு பேருக்குத் தானம் செய்யுமளவுக்கு ரத்தம் எடுத்துக் கொண்டார்கள்.

இரண்டு நாள் கழித்து ஃபோன் வந்தது.

‘9.2 ஏ1சி. நல்லதுக்கில்ல.. ஒடம்பக் குறைச்சுடுங்க’ – ‘நகத்தை வெட்டிடுங்க’ ரீதியில் சொன்ன டாக்டர் கிறிஸ்டியை நாலு சாத்து சாத்த வேண்டும் போலிருந்தது.

நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி ஒரு பேப்பரை எடுத்து, குட்டி குட்டியாகச் சதுரங்களும், இரண்டு பீன்ஸ் விதைகளும் வரைந்து குளுகோஸ், இன்சுலின், கிட்னி என  ஒன்பதாம் வகுப்பு ரெகார்ட் நோட்புக் போல பாகங்களைக் குறிப்பிட்டு, ஏதேதோ நீளமாகப் பேசிவிட்டு உங்க வொய்ஃப் சொன்ன மாதிரி உங்களுக்கு ஹைபர்க்ளைசீமியா – அதாவது டயபடிஸ் என்றார் கிறிஸ்டி.

டயபடிஸா? கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது சபாவுக்கு. டிமன்ஷியா, டிப்ரஷன்னு வயித்தோட சம்பந்தப்படாத நோயாச் சொல்லக் கூடாதா? இப்படிச் சாப்பாட்டிலே கையை வெச்சிட்டியே சண்டாளா!

கிறிஸ்டி கொடுத்த சீட்டை ஃபார்மஸியில் கொடுத்த போது கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னார்கள். கிட்டத்தட்ட ரெண்டுக்கு ரெண்டு சதுரஅடி அளவிலிருந்த அட்டைப்பெட்டி முழுதும் மருந்து, மாத்திரைகளை நிரப்பி , ‘காரை வாசலுக்கு கொண்டு வர்றீங்களா .. நானே வெச்சிடறேன்.. எங்ககிட்ட பெரிய கார்ட் இல்லை’ என்றான் சீன சிப்பந்தி  

அந்த வீக்எண்டு எங்கோ வெளியே போய்விட்டு வந்த சாலா இரண்டு கைகளிலும் கலர் கலராகப் பைகளுடன் வந்தாள். பாஸ்கட்பால் ப்ளேயர் போடும் முண்டா பனியன், தொளதொளவென்ற ஷார்ட்ஸ்,  பச்சைக் கலர் ஷூ என எல்லாவற்றையும் முகத்திலடிக்காத குறையாகக் கொடுத்து விட்டு ‘நாளையிலேருந்து காலங்கார்த்தால ஜாக்கிங் போறீங்க’ என்று சொல்லிவிட்டுப் போனாள். அன்று மதியம் மூணே முக்கால் மணி சுமாருக்குத் தூக்கம் கண்ணைச் சொருகியபோது காலிங் பெல் சத்தம் கேட்டது.

‘செகண்ட் விண்ட்லேருந்து வர்றோம் .. ஃபிட்னஸ் பைக் கொண்டு வந்திருக்கேன்.. வாக் அவுட் பேஸ்மன்ட் தானே .. பின்னாடி வழியா கொண்டாந்திடவா?’ என்றான்.

‘தப்பான அட்ரஸுக்கு வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன் ..’

‘சரியான அட்ரஸுக்குத் தான் வந்திருக்காங்க..  ப்ளீஸ் ப்ரிங் இட் இன்’ எனச் சொல்லியபடி படியிறங்கி வந்தாள் சகதர்மிணி.

‘ஸ்பிரிங் வந்துடுச்சு … வெளிலே ஒரே மழைன்னு நீங்க பல்லைக் காட்டக் கூடாதுல்ல.. அதான்’.

அவனது சரித்திரத்திலேயே இல்லாத வகையில் காலையில் நான்கு மணிக்கு வாக்கிங் போனதில் பழைய வோல்ட்ஸ்மொபைல் காரில் அந்த ஏரியாவுக்குப் பேப்பர் போடும் பையன் கையசைத்து ‘ஹாய்’ சொல்லிவிட்டுப் போவது வழக்கமானது. பின்னர் ஒருமுறை பக்கத்துத் தெருவில் ‘இந்தக் கோட்டைத் தாண்டி காலை எடுத்து வெச்சிடுவே’ என்று நேருக்கு நேர் மல்லுக்கு நின்ற ஜெர்மன்  ஷப்பர்டிடமிருந்து காப்பாற்றி ‘க்ளோஸ் பட்டி’யாகிவிட்டான்.

சில மாதங்கள் கழித்து உறவுக்காரரை, வீட்டுக் கல்யாணத்துக்கு அழைப்பது போல டாக்டர் கிறிஸ்டியிடமிருந்து அழைப்பு வர, சுற்றம் சூழ கிளம்பிச் சென்றனர் திரு. சபாவும், திருமதி சாலாவும்.

கொஞ்சம் கூட சேஞ்ச் தெரில எனச் சொல்லிவிட்டு அவரது வழக்கமான பீன்ஸ் விதைகளும், சிறிய சதுரங்களும் வரைந்து பாகம் குறித்துவிட்டு பழைய மாத்திரைகளை நிறுத்திடுங்க.. நான் வேற ப்ரைஸ்க்ரைப் பண்றேன் எனக் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் சொன்னார் கிறிஸ்டி.

ரெண்டுக்கு ரெண்டு பெட்டியைத் தூக்கிப்போய் ரிட்டர்ன் எடுத்துக்கொள்ளச் சொல்லி பார்மஸியில் கெஞ்சி, போராடிப் பார்த்தான் சபா. தார்மீகக் காரணம் காட்டி மறுத்துவிட்டு, மூணுக்கு மூணு அளவு புது மருந்துப் பெட்டியில் பத்து பெர்செண்ட் டிஸ்கவுண்ட் தந்தார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து வாக்கிங் முடித்து வரும் போது வாசலில் பெரிய பெட்டியில் பழுப்பு, சிவப்பு வண்ணங்களில் நாலைந்து பெரிய புட்டிகள் இருந்தன.

‘இந்தக் கோலப்பொடி எல்லாம் வாங்கி என்ன பண்ணப்போற? .. இங்க தான் ஒம்பது மாசம் ஸ்னோ இருக்கே?’

‘ஜோக்காக்கும்.. இதல்லாம் நீங்க குடிக்கிறதுக்கு. இதோ இது இமாலயா மலையோரத்துல வளர்ந்த செடியிலேருந்து எடுத்த வெந்தயத்தை அரைச்சு செஞ்சது.. இந்த சுகர் நிவாரண் கேரளாவில தயாரிச்சது.. முழுக்க முழுக்க பிஞ்சு பாகற்காயை வெயில்ல காய வெச்சு பொடி பண்ணது.. அவ்வளவும் நேச்சுரல். தெனமும் காலையிலே காப்பி குடிக்கிறதுக்கு பதில் இதிலே ஒரு கரண்டி பொடியைப் போட்டு நாலு காலன் தண்ணி ஊத்தி சுண்டக் காய்ச்சி நாள் முழுக்கக் குடிச்சா சுகர் குட்பை சொல்லிடுமாம்’

அதுக்கு நானே உனக்கு குட்பை சொல்லிடலாம் போலிருக்கு.

என்றுமில்லாத அதிசயமாய்ச் சிக்கன் பிரியாணி செய்திருந்தாள் ஒரு நாள். ‘என்ன இருந்தாலும் சிக்கன் பிரியாணி செய்யறதிலே உன்னை அடிச்சுக்க ஆளேயில்ல சாலு.. வேற கரண்டி இல்லையா என்ன? இத்தனூண்டு டேபிள் ஸ்பூன்லே அள்ளிப் போட்டினா எவ்ளோ நேரம் போட்டுகிட்டே இருப்பே..’

‘ஆளப் பாரு ஆள.. மொத்தமே இந்த ஒரு கரண்டி தான்’ உங்களுக்கு.. நீ வாடி அபி நாம ரூமுக்கு போய் சாப்பிடலாம் .. இங்க சாப்பிட்டா நமக்கு வயத்து வலி தான் வரும்..’ அஞ்சு லிட்டர் குக்கர் முழுதுமிருந்த பிரியாணியைத் தூக்கிக் கொண்டு நடந்தாள்.

இன்னொரு நாள் ‘உங்க பெரிப்பா லெச்சுமணருக்கு இன்னிக்கு தெவசமாம். உங்கம்மா பணியாரம் செஞ்சு கும்பிடச் சொன்னாங்க.. ‘ ஒரு ஓரத்தில் விரலுக்கு அகப்படாத அளவுக்கு பணியாரத்தைக் கிள்ளி வைத்து விட்டு, ‘சோஃபாவில உக்காந்து சாப்பிடுங்க .. அவ பக்கத்திலே உக்காந்தீங்கன்னா உனக்கு வேண்டாமா அபின்னு சொல்லிச் சொல்லி அவ பங்கையும் திருடிச் சாப்ட்டுடுவீங்க..’ ஏறக்குறைய பக்கத்து வீட்லே போய் பாருப்பான்னு கௌரவமாக விரட்டியடிக்கப்படும் நிலைக்கு ஆளாகிப் போனான் சபா.

‘ஏன் சாலு.. இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?’ தளபதி மம்முட்டி ஸ்டைலில் செண்டிமென்ட் காட்டிப் பார்த்தான்.

‘தெரிஞ்சுது.. நாலு மாசம் முன்னாடி வரைக்கும், செட்டிநாட்டுப் பாரம்பரியம்னு சொல்லி மலை மலையா பணியாரத்தைக் கொட்டி உள்ளே அனுப்பினீங்களே .. அப்போ தெரிஞ்சுது.. ஓவரா’ என ரஜினி ஸ்டைலில் பேசினாள் சாலா.

‘எனக்கு மேங்கோ மூஸ் சேவ் பண்ணி வைக்காம காலி பண்ணுவே இல்ல.. நல்லா வேணும் உனக்கு’ எனக் கண்ணாலயே பழிப்புக் காட்டியது அபிப் பிசாசு.

ஆஃபீஸுக்குக் கட்டிக் கொடுக்கும் லஞ்சும், வயதானவர்கள் வேளைக்குத் தகுந்தவாறு மாத்திரைகளைப் பிரித்துப் போட்டுக் கொள்ளும் ‘மெடிசின் ஆர்கனைசர்’ ஒன்றில் கீரைத் தழைகள், அரை ஸ்பூன் ப்ரவுன் ரைஸ், வேக வைத்த கடலை, பச்சைக் கடலை, மஞ்சள் கரு அகற்றிய வெள்ளை முட்டையில் கால் அரைக்கால் பகுதி என்றாகிப் போனது.

போதாக் குறைக்கு டெட்ராய்ட்டில் இருந்த சித்தியின் மகள் வள்ளியம்மை கினுவா சாப்பிடச் சொன்னாள்; சியாட்டிலில் பங்காளி உறவுமுறை ராமனாதனின் மகள் கோதை அவகாடோவும், ஆர்கானிக் ஓட்ஸும் சாப்பிடச் சொன்னாள் என மாறி மாறி வந்திறங்கியது.

டீவியில் ‘டைய..’ என்று யாராவது தொடங்கினாலே ரெகார்டிங் போட்டுவிட்டு ஆபீசிலிருந்து வந்தவுடனே அதைப் போட்டுக் காட்டிவிட்டுத் தான் மறுவேலை. காலையும் மாலையும் டெஸ்ட் பண்ணுகிறேன் பேர்வழி என்று விரல்களில் பொத்தல் போட்டு ஏறக்குறைய டயபடிஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆகிவிட்டாள்.

ஒன்பது மாதங்கள் முடிந்தவுடன் மீண்டும் மடல் அனுப்பியிருந்தார் கிறிஸ்டி.

வழக்கமான ரத்த தானம் கொடுத்துவிட்டு டாக்டரைப் பார்க்கச் சென்றான்.

‘ஹெவியான ஐட்டம்ஸ் வெச்சிருந்தா என் கிட்ட குடுத்துட்டு ஸ்கேல்ல ஏறுங்க’ என்றாள் எரிகாவுக்கு பதிலாக வந்திருந்த வயதான நர்ஸ்.

‘நான் கட்டியிருக்க பெல்ட் பக்கிள் தான் ஹெவியா இருக்கு.. அதைக் கழட்டி உன்கிட்ட குடுத்துட்டா பேண்ட் லொடக்குனு அவுந்து விழுந்துடும் .. பரவால்லயா’ என நினைத்தவாறு எடை மெஷினில் ஏறி நின்றான்.

‘வாவ் .. போன தடவைக்கு 17 பவுண்ட் கொறஞ்சிருக்கு .. என்ன சீக்ரெட்னு சொன்னா நானும் ஃபாலோ பண்ணுவேன்’ என்றாள்.

‘எங்க வீட்ல சாலான்னு ஒரு மிஷின் இருக்கு அதை வேணா ஒரு ஆறு மாசம் கடனா எடுத்துக்கோ..’ நினைத்தான் .. சொல்லவில்லை.

‘ஹவ் டு யு ஃபீல் சபா .. ஏ1சி நார்மலுக்கு வந்துடிச்சி.. தட்ஸ் ஸோ வொண்டர்ஃபுல்’ – மெடிக்கல் மிராக்கிள் நிகழ்த்திய மகிழ்ச்சி கிறிஸ்டிக்கு.

‘அப்போ நான் பழயபடி சாப்பிடலாமா டாக்டர்?’

‘நோ.. நோ.. நோ.. டயபடீஸை வியாதின்னு சொல்றதை விட லைஃப் ஸ்டைல் அட்ஜெஸ்ட்மெண்டுன்னு சொல்லலாம் .. மாத்திரைங்கள விடாமச் சாப்பிடுங்க.. அப்புறம், பிளட்ல கொஞ்சம் சோடியம் லெவல் ஜாஸ்தி தெரியுது.. அதனால இனிமே சாப்பாட்டிலே சால்ட் சேத்துக்காதீங்க .. உப்பு உங்களுக்கு விஷம் மாதிரி .. இதை இக்னோர் பண்ணிட்டம்னா பி.பி. ஜாஸ்தியாகி எண்டோதிலியம் அஃபெக்டாகும். அப்புறம்…’

இதயத்தைக் குறிக்க ஆட்டின் படம், அதைச் சுற்றி டவுண்டவுனில் குறுக்கும் நெடுக்குமாக சாலைகள் வந்து சேர்வது போல நரம்புகள், ஆங்காங்கே ஸ்டாப் லைட் போல ஆர்டெரி ப்ளாக்ஸ் என வரைந்தவாறு வாயில் நுழையாத வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே போனார் கிறிஸ்டி. சத்யஜித் ரே படநாயகன் போல் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான் சபா.

    மர்மயோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad