பனிக்கட்டிக் கண்காட்சி (ICE CASTLES)
வீட்டின் முன்புறத்தில் செலுத்து வழியில் படிந்திருக்கும் பனிக்குவியலை அகற்றுபவர்களுக்கு பனிக்காலம் ஒரு பெரிய தண்டனைக் காலமாகவே படும். எப்போது இந்தப் பனிப்பொழிவு நிற்கும் எனக் காத்திருப்பார்கள்.
ஆனால் பிரெண்ட் கிரிஸ்டென்ஸனுக்கு (Brent Christensen) பனிப்பொழிவு ஒரு வரப்பிரசாதமாகப் படுகின்றது. ‘சிலை என்றால் அது சிலை; வெறும் கல்லென்றால் அது கல் தான்’ எனும் வழக்குக்கு ஏற்றாற் போல், நமக்கெல்லாம் சுமையாகத் தோன்றும் பனிக்குவியல் பிரெண்டுக்கு பணக் குவியலாகக் காட்சியளித்துள்ளது.
பொதுவாக பனிக்காலம் என்பது மந்தமான, சோம்பலூட்டும் காலம். வெளியுலக நடவடிக்கைகள் சுருங்கிப் போக வீட்டுக்குள் போர்வைப் போர்த்தி அமரவே தோன்றும்.
அது போன்ற ஒரு பனிக்காலத்தில், வீட்டுக்குள் அடம் பிடித்த தன் குழந்தைகளுக்கு பொழுது போக, வெளியே அழைத்துச் சென்று பனிக் குவியலைச் சேகரித்து வீடு கட்டுவோம் என விளையாட்டாய்த் துவங்கி ஒரு கட்டத்துக்குப் பிறகு அதில் ஈர்ப்பு ஏற்பட சிரத்தையுடன் ஆறடி கொண்ட ஒரு வீட்டைஉருவாக்கினார்கள். அன்றிரவு அவர்கள் வீட்டின் முன் இதைக் காண ஒரு பெருங்கூட்டம் கூடியது. இதனால் உந்தப்பட்ட பிரெண்ட் மேலும் சில கட்டிடங்களைப் பனிக்கட்டியால் உருவாக்கினார். முதல் ஆண்டு இவற்றை மரப் பலகை, சட்டங்கள் உதவியுடன் செய்ததினால் பனி உருகத் தொடங்கிய பின் வீட்டின் முன்புறம் மரத்துகள் சிந்தி ஒரே களேபரம்.
அடுத்த ஆண்டுக்குள் உருகும் பனிக்கட்டிகளை (icicles), நீர்த்தெளிப்பான்( water sprayer) கொண்டு ஒன்றுடன் ஒன்று ஒட்ட வைக்கும் கலையைக் கற்றுத் தேர்ந்தார். அந்த ஆண்டு அவர் உருவாக்கிய பனிகோட்டையைக் காண ஊரே அவர் வீட்டின் முன் திரண்டது.
பின்னர், ஓய்வகத் தொழிலதிபர் ஒருவர் வாய்ப்பளிக்க பிரெண்ட்டின் திறமை வெளியுலகுக்குத் தெரியத் துவங்கியது.
தற்போது, பிரெண்ட் பல மாநிலங்களில், குளிர்காலத்தில், பனிக்கட்டிகள் கொண்டு பிரும்மாண்டமான கட்டிட அமைப்புகளை உருவாக்கி வருகிறார். தன் வீட்டுக்கு முன் முதன் முதலாக உருவாக்கிய போது குழந்தைகள் இட்ட பெயரான ‘ஐஸ் கேசில்ஸ்’ (Ice Castles) என்பதையே தன் நிறுவனப் பெயராகவும் மாற்றிக் கொண்டார்.
நம் மாநிலத்தில், புளுமிங்டன் நகரில், மால் ஆப் அமெரிக்கா எதிரில் இவரது கண்காட்சி பிப்ரவரி இருபதாம் தேதி வரை நடைபெறுகிறது. திறந்தவெளியில் நடைபெறும் இக்கண்காட்சியைக் காணச் சிறுவர், சிறுமியர் மற்றும் முதியோர் எனப் பெருங் கூட்டம்.
இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை செயின்ட் பால் நகரில் நடக்கும் குளிர்கால கொண்டாட்டங்களில் பனிச்சிலை கண்காட்சியை பார்த்திருப்பீர்கள். அதில் உள்ள சிலைகள் பெரிய பனிக்கட்டிகளை நுணுக்கமாகச் செதுக்கி உருவாக்கபட்டவை. ஆனால் ‘ஐஸ் கேசில்ஸ்’ கட்டிடங்கள் சிறிய பனித் துண்டுகளை ஒட்ட வைத்து கட்டப்பட்டது.
பெருந்தூண்கள், அரசவை முற்றம், அலங்கார வளைவுகள், குகைகள், பெருஞ் சுவர்கள் எனப் பிரம்மாண்ட அமைப்புகள். பதினைந்தடி உயர சுவர்கள், நான்கு மூலைகளிலும் இருபதடி உயர கோபுரங்கள் என அனைத்தும் ஆச்சரியப் படுத்துகிறது. கயிறு கொண்டு பிணைத்தது போல் பனிக் கட்டிகள் இவற்றைப் பிணைத்திருப்பது கட்டிடக்கலையின் அதிசயம். இரவு நேரங்களில் வர்ண விளக்குகளின் ஜொலிப்பில் இதைக் காண்பது காணக் கிடைக்கா காட்சி. நிறம் மாறும் வர்ண விளக்குகள், இசை என அந்த இடமே சொர்க்கலோகமாக மாறி விடுகின்றது. அரசக் கோட்டை என்றால் அரசி இல்லாமலா? ஆடம்பரமான உடைகளுடன் ‘பனிக்கட்டி அரசி’ ஒருவரும் கோட்டையில் தென்படுகிறார், அவ்வப்போது மாளிகை விருந்தினர்களுடன் உரையாடுகிறார் அரசி. நினைவுப் பரிசாக, நாம் அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொள்ளலாம்.
சில நாட்களில் சிறுவர்களுக்கான இசை, நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
இக்கண்காட்சியின் இன்னொரு சிறப்பம்சமாக வீட்டில் குழந்தைகள் செய்யக் கூடிய வகையில், பனிக்கட்டி லாந்தர்களுக்கான செய்முறையும், தேவையான பொருட்களும் விற்கப்படுகின்றன. சிறு பலூன்கள், விளக்குகள் கொண்டு செய்யக் கூடிய இந்த வண்ண பனிக்கட்டி லாந்தர் விளக்குகள், வித்தியாசமான முறையில் நம் வீட்டு முன்புறத்தையோ, பின்தளத்தையோ அலங்கரிக்க உதவும்.
குளிர்காலங்களில் குழந்தைகளுக்கு அவர்கள் எடையை விட அதிக எடை கொண்ட மேலங்கி, கையுறை, காலுறை, தொப்பி இவைகளை அணிவித்து, நாமும் அவைகளை அணிந்துக் கொண்டு வெளியில் கிளம்புவது சற்றுக் கடினம் தான். ஆனால் இக்கண்காட்சி அது போன்ற சிரமங்களை புறந்தள்ளி புதுமையான விருந்தளித்து குழந்தைகள் மனதையும், நம் மனதையும் மகிழ்விக்கும்.
இம்முறை தவறினாலும், அடுத்த முறை தவறாது கண்டு களியுங்கள். மறக்காமல் போதுமான அளவு குளிர் தாங்கும் உடைகளை அணிந்துச் செல்லுங்கள் !!
– ரவிக்குமார்
Very nice..