எருக்குக் காத்து ஏமாந்த மஞ்சள் குருவி
அழகிய மஞ்சள் வாப்ளர் குருவி எருக்குச் செடிகளின் அருகே உள்ள குளத்துப் புல்லின் மத்தியில் குடியிருந்தது. இளவேனில் காலத்தில் ஒரு நாள் புதிய துளிர்களில் கட்டுக்கட்டான அரும்புகளை அவதானித்தது. அதன்மீது அழகான வண்ணத்துப் பூச்சிகளும், தேனீக்களும் மொய்ப்பதைப் பார்த்துப் பரவசம் அடைந்தது. ஆகா, இவ்வரும்புகள் மலராகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாகினால் அதை நான் உண்பேன் என்று எண்ணி மகிழ்ந்து கொண்டது. எனவே மஞ்சள் பறவை காலையும் மாலையும் அவற்றைப் பார்த்து வாயூறிய வண்ணம் காத்திருந்தது. ஒரு நாள் எருக்குக் காய்கள் பச்சை நிறமாகமாறி பழுக்கத் தொடங்கின.
மஞ்சள் குருவி தனது நண்பர்கள் எல்லோரையும் விருந்துக்கு வரச்சொல்லி அழைத்தது. மதியபோசனம் சாப்பிட எல்லோரையும் கூட்டி வந்தது. கோடை வெய்யில் ஏறி சூடாகியபோது எருக்குக் காய்கள் வெடித்துப் பஞ்சுகள் பறந்தன. மஞ்சள் குருவியும், அதன் விருந்தினர்களும் ஏமாற்றம் அடைந்தனர். மஞ்சள் வாப்ளர் குருவி மிகவும் வருந்தியது. வந்த விருந்தினர்கள் விலகிச் சென்றனர். இவ்வாறு பயனற்றவற்றைப் பயனுடையன என்று விவரம் தெரியாமல் விரும்பி ஏமாறுதலைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர் பெரியோர்.
பின்குறிப்பு – எருக்கு என்பது ஆங்கிலத்தி்ல் Milkweed எனப்படும் செடி. இது இலங்கை,இந்திய,மலேசியா தொட்டு வட அமெரிக்கவரை காணப்படும்.
- யோகி அருமைநாயகம்.