இன்னும் எத்தனை அமுதாக்கள்!!!
தினமும் பயணிக்கும் அதே சாலையாக இருந்தாலும் என்னுடைய ஒவ்வொரு நாளும் இந்தச் சாலையின் வழியாகப் பார்க்கப்படும் போது புதிதாக தான் காட்சியளிக்கிறது. எட்டு வருடங்களாக இதே சென்னை குடும்ப நல நீதிமன்ற வளாகம் தான் என் பணியிடம். ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று அல்லது நான்கு விவாகரத்து வழக்குகள். இவழக்குகளில் குடும்ப நல ஆலோசகராகப் பணியாற்றுவதில் இருக்கும் உண்மையான சிரமம் அவ்வழக்குக்காக வரும் பெண்களின் கண்ணீர் கதைகளைக் கேட்கும் போதும், அவர்களின் நியாயமான எந்த முடிவிற்கும் துணை நிற்க வேண்டிய பெற்றோர்களே இந்தச் சமூகத்திற்குப் பயந்துகொண்டு அவர்களின் இந்த அவல நிலையைப் பொறுத்துக்கொண்டு போகும்படி சொல்வதைக் கேட்கும்போதும் தான் இருக்கிறது.
இன்று ஆலோசனைக்காக வந்திருக்கும் அமுதா தன் இரண்டு வயது மகளையும், ஆறுமாத மகனையும் தன் அக்கா வீட்டில் விட்டு வந்திருப்பதாகக் கூறினாள். உடன் வந்திருப்பது தன் தந்தையென்று அறிமுப்படுத்தினாள்
அமுதா தன் நிலையைக் கூற முயல்வதற்கு முன் அவள் தந்தை மணிகண்டன் ஆரம்பித்தார்.
“எனக்கு மூணு பொண்ணுங்கம்மா, இதுதான் ரெண்டாவது. மூணு பேரையும் நல்லா படிக்க வெச்சிருக்கேன். பெரிய பொண்ணக் கட்டிக் கொடுத்து ஏழு வருசமாச்சு, அமுதாவ கட்டிக் கொடுத்து மூணு வருசமாச்சு. கல்யாணத்துக்கு முன்னால வேலைக்கு போயிட்டு இருந்துச்சி,
கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க வீட்டுல வேணாம்னு சொல்லிடாங்க. வேலைக்குப் போயிட்டு இருந்த காலத்துல நல்லா சுட்டியா இருக்கும், காலைல ஏழு மணிக்கு போச்சுனா நைட்டு பத்து மணி கூட ஆயிடும். ஐ.டி ல வேல பாத்துச்சி. வேலைக்கு போயி ரெண்டு வருசம் ஆனதுக்கப்புறம் மாப்புள பாக்க ஆரம்பிச்சோம். ஆறு மாசத்துக்கப்பறம் என் பெரிய பொண்ணு ஒரு நாள் என்கிட்ட வந்து அமுதா தன் கூட வேல செய்யுற பையன விரும்புறதாவும், அந்த பையன ஒரு நாள் தானே சந்திச்சி பேசுனதாவும் சொல்லுச்சி. எனக்கு அப்போலாம் அவ்வளவா வெவரம் பத்தாதுமா, தாம்தூம்னு குதிச்சேன்,
சொந்த பந்தம்லாம் காறித் துப்பும்னு கத்துனேன். அமுதாவும், என் பெரிய பொண்ணும் அந்தப் பையனப்பத்தி எவ்வளவோ நல்ல விதமா சொல்லியும் நான் ஏத்துக்கல. புள்ள எவ்வளவோ போராடிப் பாத்துச்சு, என் கோபத்துக்கு முன்னாலயும், சாதி வெறிக்கு முன்னாலயும் அதுனால ஒன்னும் பண்ண முடியல. அவசர அவசரமா மாப்புள்ள பாத்தோம். இது இல்லைனா பரவாயில்லப்பா என் கம்பனியில எனக்கு விசா எடுத்து தந்திருக்காங்க, ஒரு வருசம் அமெரிக்காவுல போயி வேல பாத்துட்டு வந்து நீங்க சொல்லுற பையனையே கல்யாணம் பண்ணிக்குறேன்னு அழுதுச்சு. அதுக்கும் நான் ஒத்துக்கல. அப்போ எனக்கு பெருசா தெருஞ்சதேல்லாம் என் சாதியும், என் சாதி சொந்தங்க எனக்கு கொடுக்குற மரியாதையும் தான்.
என் பொண்ணோட எந்த ஆசைக்கும் நான் மதிப்பு கொடுக்கல.என் சொந்தத்துலையே ஒரு மாப்புள்ளையப் பாத்து கட்டிவேச்சேன். கல்யாணம் பண்ண நாள்ல இருந்தே பிரச்சன தாம்மா. சரியா வேலைக்குப் போகமாட்டான், வீட்டுக்கு காசு குடுக்குறதில்ல, பல நாள் நைட்டு வீட்டுக்கே வரதில்ல. இப்படி பல பிரச்சன. அதுக்கு கல்யாணம் பண்ணிவெச்ச ஆறு மாசத்துலையே என் தப்பு எனக்கு புரிஞ்சிடுச்சிம்மா, ஆனா என்ன பண்றது சட்டுனு எந்த முடிவும் எடுக்க முடியாத நிலம. அதுக்குள்ளே வயித்துல புள்ள, சரி புள்ள பொறந்தா பொறுப்பு வந்துடும்னு ஆறுதல் சொல்லி வச்சோம் ஆனா அவன் திருந்துன பாடில்ல. இது வீட்டுக்கு வந்துடுச்சுனா கடைசி பொண்ணு வாழ்க்க என்ன ஆகுமோன்னு பயந்து பயந்தே இந்தப் பொண்ண அங்க விட்டுவெச்சென். அடுத்த ஒரு வருசத்துல இன்னொரு புள்ள, அதுக்குள்ள அவனுக்கு இன்னொரு குடும்பம் இருக்குறது எங்களுக்கெல்லாம் தெரியவந்துச்சு. எங்க எல்லார் தலையிலயும் இடி விழுந்த மாதிரி இருந்துச்சி. இந்த சேதிய கேட்டு மனசு தாங்காத என் பொண்டாட்டிக்கு மூளையில இருக்குற நரம்பு வெடிச்சு நிலைமையே மோசமாப் போச்சி. பெரிய ஆப்ரேசன்லாம் பண்ணி இப்பத்தான் தேறிக்குகிட்டு வரா. இதுக்கு மேல எங்களால எதையும் தாங்க முடியாது. யாரு பஞ்சாயத்து பண்ணாலும் என்ன சமாதானம் சொன்னாலும் நாங்க இழந்ததுக்கு ஈடுக்கட்ட முடியாது. பெரிய பாவம் பண்ணிடேம்மா. சாதி, சாதின்னு பாத்த எனக்கு இன்னிக்கு ஒதவுறத்துக்கு ஒரு பய வரல. சாதிக்காக என் புள்ள வாழ்க்கையப் பலி கொடுத்தது தான் மிச்சம்.”
கண்களில் நீர் ததும்ப பெருமூச்சு விட்டபடி, “என் மனசுல இருந்தத எல்லாம் யார்கிட்டயாவது முழுசாச் சொல்லணும் போல இருந்துச்சிம்மா. சொல்லிட்டேன், நீங்க தான் எப்படியாவது எல்லாத்தையும் சீக்கிரமா முடிச்சி தரனும் “ என்று சொல்லி முடித்தார்.
கனத்த மனசோடு அவருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல், “என் கைல எதுவும் இல்லைங்க அய்யா எல்லாம் உங்க வக்கீலும் அவங்க வக்கீலும் தான் முடிவு பண்ணனும், ஆனா உங்க பக்கம் கேசு ஸ்ட்ராங்கா இருக்கு அதனால சீக்கிரம் முடிஞ்சுடும் கவலைப்படாம தைரியமாப் போங்க. அமுதா படிச்ச பொண்ணு, நிச்சயம் அவளுக்குச் சீக்கிரமே ஒரு நல்ல வேல கிடைக்கும். அப்புறம் எல்லாம் சரியாகி வரும்” என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தேன்.
இது ஒரு அமுதாவின் கதையல்ல. படித்து நகரத்தில் வாழும் அமுதாவிற்கே இந்த நிலை என்றால் கிராமங்களில் வாழும் ஆயிரம் ஆயிரம் அமுதாக்களின் கதை தான் என்ன?
பெண்களுக்கெதிரான பிரச்சினைகளுக்கு நம் நாட்டில் என்றுமே பஞ்சமிருந்ததில்லை. சாதி, மதம், மூடநம்பிக்கை, ஆணாதிக்கம், வரதட்சணை, பாலியல் இச்சைகள், குடும்ப தகராறு, ஊரு கலவரம் என்று இன்னும் பல வகைகளில் எண்ணற்ற சகோதரிகள் தினம் தினம் பலியாடுகள் ஆகிக்கொண்டு தான் இருக்கிறார்கள். நாடுகள் அளவிலும், ஊர்கள் அளவிலும், கிராமங்கள் அளவிலும் எந்த பிளவாக இருந்தாலும் முதலில் பாதிக்கபடுவதும், இழப்பிற்குள்ளாவதும் பெண்களே!
2012ல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் சராசரியாக மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை பெண்களுக்கு எதிரான ஒரு வன்முறை நடத்தப்படுதிறதாம். 2012ல் மட்டும் 244,270 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 8,233 வரதட்சனை சாவுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கௌரவ கொலைகள், ஒரு பெண் அவள் இனத்திற்கும் அவள் குடும்பத்திற்கும் களங்கம் ஏற்படுத்திவிட்டாள் என்ற காரணத்திற்காக மட்டும் கணவனாலும், குடும்பத்தினராலும் தாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 151,878, கற்பழிப்புகள் 24,923, வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 2,563.
இன்னும் நம் கண்களுக்கு வராத கொடுமைகள் ஆயிரமாயிரம் உண்டு. 2011ல் வெளியிடப்பட்ட ஒரு ஆவணத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பிலாத நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தைப் பெற்றிருக்கிறது (ஒரு நிமிடம் இத்தருணத்தில் நம் பெண் குழந்தைகள் கண் முன்னே வந்து போவதை நன்கு அறிவேன்).
நம் நாட்டின் வளர்ச்சிக்காக எத்தனை எத்தனையோ செயல்பாடுகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன. அவை அனைத்தும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டாலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் ஒழிக்கப்படாமல் அடையும் வளர்ச்சியானது உடலின் ஒரு பகுதி மட்டும் வளர்ச்சியடைந்து மற்ற பகுதிகள் வளர்ச்சியடையாமல் காணப்படும் ஆரோக்கியமற்ற நிலையையே உண்டாக்கும். இன்றே பெண்களுக்கெதிரான சாதிய சடங்குகளாலும், மற்றும் பல அநீதிகளால் ஏற்படும் வன்முறைகளையும் ஒழிக்க உறுதி எடுப்போம், புதிய, ஆரோக்கியமான பாரதத்தையும் உலகையும் படைப்போம்!!!
— — சுகன் பிரபா