\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சின்ன சபலம்

Filed in இலக்கியம், கதை by on April 25, 2016 0 Comments

Minneapolis_winter_420x279மினியாபோலிஸ் நகர மையப் பகுதியில் இருந்தது அந்த லவ்ரி சந்து. மிகவும் குறுகலான ஒருவழிப் பாதை. தெருவின் ரெண்டு பக்கத்திலும் புராதனமான, பராமரிக்கப்படாத கட்டிடங்கள். காரை பெயர்ந்து சிதிலமடைந்து சிதைந்து போயிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பார்த்ததும் இந்தியாவின் ஹவுசிங் போர்ட் வீடுகள் நினைவுக்கு வந்தன விஸ்வாவுக்கு. இதை ஓரளவுக்கு எதிர்பார்த்துத் தான் தனது ஆடி காரை வீட்டில் வைத்துவிட்டு சாந்தியின் கரோலோவை எடுத்து வந்திருந்தான். ஜி.பி.எஸ். ‘யு ஹேவ் அரைவ்ட் அட் யுவர் டெஸ்டினேஷன்’ என்றாலும் அது வியாபார இடம் போன்ற அறிகுறியே தெரியவில்லை. மிகவும் பிரயத்தனப்பட்டு, பேரலல் பார்க்கிங் செய்துவிட்டு காரை விட்டு இறங்கினான். விர்ரென்று எங்கிருந்தோ ஸ்கேட் போர்டில், அவன் மீது இடிப்பது போல் வந்த ஒருவன் ‘வாட்ச் அவுட் …’ என்று விஸ்வாவின் அம்மாவை வைதுவிட்டுச் சென்றான். அப்படியே கல்லைவிட்டெறிந்து அவன் மண்டையைப் பிளக்க வேண்டும் போலிருந்தது விஸ்வாவுக்கு. பொறுத்துக் கொண்டான். சந்தின் மறுபக்கம் பாதி முழங்கால் வரை ட்ரவுசர் அணிந்து அந்த வெயில் காலத்திலும் தடித்த தொளதொள லெதர் ஜாக்கெட் , தலையில் ஹூட் அணிந்து நடந்து சென்றவனைக் கண்டு ஓடினான். காதிலிருந்த வயரை எடுத்துவிட்டு ‘யோ’ என்றவனிடம் முகவரி கேட்டதற்கு அவன் இரண்டு கட்டிடங்கள் தள்ளியிருந்த கட்டிடத்தைக் காண்பித்தான்.

கட்டிடத்துக்குள் நுழைந்த போது வௌவால்கள் குடியிருக்கும் பழைய கோயிலுக்குள் நுழைந்தது போலிருந்தது. கும்மிருட்டு இல்லையென்றாலும் அங்கே எரிந்து கொண்டிருந்த குண்டு பல்ப் போதிய வெளிச்சம் கொடுக்கவில்லை. கையிலிருந்த செல்ஃபோன் லைட்டை அடித்துப் பார்த்ததில் ‘பவர் காய்ன் லாண்டரி – 109’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருட்டில் துழாவி 109ஐ கண்டுபிடித்துக் கதவைத் தட்டினான். ‘தம் தம் ..’ எனப் பெரிய உருவத்திற்கான காலடிச் சத்தங்களுக்குப் பிறகு துருப்பிடித்துப் போயிருந்த இரும்புக் கதவை ‘ங்கோய்ங்’ எனும் ஒலியோடு நாலங்குலத்துக்குத் திறந்தான் ஒருவன்.

‘என்ன வேணும்?’ தாடி வைத்து ஆறரை அடி உயரத்திலிருந்து கேட்ட பேச்சே இடி போல இறங்கியது ..

‘பவர் காய்ன் லாண்டரி …’

ஏற இறங்கப் பார்த்துவிட்டு ‘யாரு அனுப்பினா ?’ என்றான் தாடிக்காரன்.

பாக்கெட்டில் வைத்திருந்த துண்டுச் சீட்டை எடுத்து நீட்டினான் விஸ்வா. கதவிலிருந்த பாதுகாப்புச் சங்கிலியை விலக்கி கதவைத் திறந்து இரு பக்கமும் எட்டிப் பார்த்தவன் இவனை உள்ளே வருமாறு அலட்சிய சைகை காண்பித்து விட்டு உள்ளே சென்றதும் கதவை டமாரென்று மூடினான்.

உள்ளே லொடலொடத்துப் போயிருந்த நாலு வாஷிங் மெஷின்கள் வினோதச் சத்தங்களுடன் ஓடிக் கொண்டிருந்தன.

‘இங்கே வந்திருக்கியா முன்னாடி?’.

‘இல்லே .. இதான் முதல் தடவை ..’

‘எப்போலேர்ந்து யூஸ் பண்றே?’

‘கொஞ்ச நாளா தான் .’

‘என்ன யூஸ் பண்றே?’

‘ஸ்டஃப் ..’ என்றான் தடுமாறி .

‘நிஜத்தைச் சொல்லு ,, உனக்குத்தானா?’

‘இல்லை .. ‘ என்று முடிக்குமுன்னரே சட்டைக் காலரைப் பிடித்துக் கதவை நோக்கித் தரதரவென இழுத்துச் சென்றான்

‘உண்மையைச் சொல்லிடறேன் .. உண்மையைச் சொல்லிடறேன் .. என் கேர்ள் ஃப்ரெண்டுக்கு …’

‘என்ன .. …. க்கு பொய் சொன்னே?’ என்று கேட்டு இழுப்பதை நிறுத்தினான்.

‘..’

‘பேரென்ன?’

‘அலியா..’

‘நம்பர் இருக்கா? கூப்பிடறியா?’

‘இல்லை நான் ஒரு பிரச்சினையிலே மாட்டிக்கிட்டு இருக்கேன்..’

இப்போது வார்த்தைக்கு வார்த்தை அந்தத் தவறான பிரயோகம் வரத் துவங்கியது அவனிடமிருந்து .. அந்த வார்த்தைகள் உட்பட அவன் பேசிய கிட்டத்தட்ட நாற்பது வார்த்தைகளில் ‘நார்க் நாய்கள் கிட்டருந்து வரியா?’ என்ற நான்கு சொற்கள் தான் தேறியது.

உடம்பெல்லாம் உதற பொலபொலவென்று கண்ணீர் வந்து விட்டது விஸ்வாவுக்கு. தாடிக்காரனின் காலைப் பிடித்துக் கொண்டு அழுதான். கொத்தாகக் காலரைப் பிடித்துத் தூக்கி நிறுத்தியவன் ‘…. சொல்லு. யாரு நீ?’ என்றான். காதில் ரத்தம் வழிந்தது. நான்கைந்து நாட்களுக்கு முன் நடந்ததைச் சொல்லத் துவங்கினான்.

—- ******

சென்ற மாதத்தில் விஸ்வாவின் பள்ளித் தோழி சுப்பி (சுப்புலக்ஷ்மி) ஃபோன் செய்திருந்தாள். ராச்செஸ்டர் மேயோ கிளினிக்கில் வருடாந்திர செக்கப்புக்கு மலேசியாவிலிருந்து வரும் தனது கணவனின் சித்தப்பாவைப் பார்க்க மினசோட்டா வருவதாகவும் அப்படியே விஸ்வாவை வந்து பார்க்க நினைப்பதாகவும் சொன்னாள். சொன்னபடியே சென்ற புதன்கிழமை தன் கணவன் ஜகத்துடன் வந்திறங்கினாள் சுப்பி.

வழக்கம் போலவே வளவளவென்று பேசித் தள்ளினாள் சுப்பி. எங்கெங்கு போக வேண்டும் என்று விரிவான லிஸ்ட் வைத்திருந்தாள். சாந்திக்கும் சுப்பியை வெகுவாகப் பிடித்துப் போனது. இருவரும் ஜோடி போட்டுக் கொண்டு மாலையானால் ஷாப்பிங் போய் வருவது வாடிக்கையானது. அப்படி அவர்கள் கிளம்பிச் சென்ற ஒரு நாள் விஸ்வா இவனிடம் என்ன பேசுவது என்று நினைத்து, ‘கொஞ்சம் போல வைன் சாப்பிடறீங்களா ஜகத்?’ என்று கேட்க ‘வேணாம் பந்து….’ என்று பெங்காலி சேர்த்து சொன்னவன் ‘ஹாட் ஏதாவது இருக்கா?’ என்று கேட்க அதிர்ந்து போனான் விஸ்வா.

இரண்டு ரவுண்டுகள் முடிந்தவுடன் ‘பட்டாயா போகணும் பந்து.. டெக்ல தம்மடிக்கலாமா? என்று கேட்டு அதிரிச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தான். சுப்பி முதல் நாள் பொதுவாக ‘அவன் பிஞ்சிலேயே பழுத்தவன் .. அவனோட சேர்ந்து நாலஞ்சு நாள்ல கெட்டுப் போயிடாதே ‘ என்று எச்சரிக்கை கொடுத்தது தன் கணவனுக்கு என்று நினைத்திருந்தான். ஆனால் இப்போது அது தனக்களிக்கப்பட்ட எச்சரிக்கை என்று புரிந்து மகிழ்ச்சியானான். ஏதேதோ பேசி அன்று இரவு இருவரும் ‘ஸ்ட்ரிப் பாருக்குப்’ போவதென முடிவெடுத்தார்கள். படத்துக்குப் போவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிய போது, ‘ஓவரா தண்ணியேத்திக்கிட்டு எங்கேயாவது முட்டி வைக்காதே .. காரோட்ட முடியலேன்னா கூப்பிட்டுத் தொலை’ என்று சாந்தி எச்சரித்தாள்.

sirusabalam_620x443உள்ளே போகும் வரை பரபரப்பாக இருந்தவன் ஐந்து நிமிடங்களில் … ‘ஒண்ணும் சரியில்லையே பந்து .. வேற எடம் இல்லையா மினியாபோலிஸ்ல .. ஆஸ்டினுக்கு வந்து பாரு .. சும்மா அசந்துடுவே. மார்ல கேண்டில் கொளுத்தி வெச்சு ஆடுவாங்க பந்து .. பிரமாதமா இருக்கும்.. இங்க என்னடான்னா … பாலிவுட் டான்சே பெட்டர்னு தோணுது.. இருக்கிறதிலேயே அந்த ஃபிலிப்பினோ ஒண்ணு தான் கொஞ்சம் சுமாரா ஆடுது .. மத்ததெல்லாம் வேஸ்டு …. தாஸ்புர்ல ரெகார்ட் டான்ஸ் பாக்கற மாதிரி இருக்கு’ என்று புலம்ப ஆரம்பித்தான்.

‘கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ பாஸ் … அடுத்த தடவை வேறொரு எடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன் .. நீ சொல்ற அளவுக்கெல்லாம் இருக்குமான்னு தெரியல .. ஆனா இதை விட பெட்டரா இருக்கும் .. இன்னிக்கு வந்ததுக்கு ரெண்டு டான்ஸ் பாத்துட்டுப் போலாம் ..’ என்று அவன் கையில் சில ஒற்றை ரூபாய் தாட்களைத் திணித்து முன் வரிசைக்கு அழைத்துச் சென்றான் விஸ்வா.

முன் வரிசையில் சாந்தமாகச் சில வயதானவர்கள் உட்கார்ந்துகொண்டு ஹோமம் வளர்க்கும் போது அவ்வப்போது நெய் ஊற்றுவதைப் போலத் தங்களுக்கு முன் கத்தையாகப் பணத்தை வைத்துக்கொண்டு சிரத்தையுடன் ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். இரண்டு பேர் தள்ளி உட்கார்ந்திருந்த மொட்டைத் தலையன் ஒருவன் அங்கு ஆடியவளிடம் ஏதேதோ வம்பளந்து கத்திக் கொண்டிருந்தான். ஆனால் இருபது டாலர் நோட்டுக்களாக வீசிக் கொண்டிருந்தான் அவன். சற்று நேரத்தில் போலிசார் இருவர் அமைதியாக பாருக்குள் வலம் வந்தனர் …

‘என்ன பந்து போலிசெல்லாம் வராங்க’ என்று டென்ஷனானான் ஜகத்.

‘ஒண்ணுமில்ல பாஸ் வெளில சும்மா போரடிச்சிருக்கும்.. ஓசில வந்து பாத்துட்டுப் போயிடுவாங்க …’

அவன் சொல்லி முடிப்பதற்குள் டமாரென்ற ஒலியோடு துப்பாக்கி ஒலிக்க, சடாரென்று உஷாரான போலீஸ்காரர்கள் தங்களது துப்பாக்கியை உருவி எதோ ஒரு மூலையைப் பார்த்துச் சுட, பாட்டு நின்று மக்கள் அல்லோலப்பட்டு ஓடத் துவங்கினார்கள். அது வரை உடையில்லாமல் மேடையில் ஆடிக் கொண்டிருந்தவள் கழட்டிப் போட்டிருந்த உடைகளை எடுத்துக் கொண்டு மேடையிலிருந்து குதித்தாள். மக்கள் முட்டி மோதி வெளியே ஓடத் தொடங்கினார்கள். போலீஸ்காரர்கள் இருவரும் தங்களது சட்டை மைக்கில் எதோ பேசிக்கொண்டே சுட, அந்த மூலையிலிருந்து யாரோ ஒருவன் சுடுவது கேட்டது.

யார் எங்கே சுடுகிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை. அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் ஓடி முட்டி மோதினர். சற்று நொடிகள் முன்பு வரை சல்லாபக் கூடமாக இருந்த இடம் போர்க்களமாக மாறிவிட்டிருந்தது. அதற்குள் வாசலில் ஏகப்பட்ட போலிசார் குவிந்து விட்டிருந்தனர்.

குபுகுபுவெனப் பாய்ந்து வந்த போலிசார் சிலர் அந்த மூலையில் மறைந்து ஓடியவனைத் தேடிச் சென்றனர். சிலர் வாசலில் நின்று உள்ளே இருந்தவர்களை இழுத்து வெளியே நிறுத்தினர். துப்பாக்கிச் சுடுவது நின்று விட்டிருந்தாலும் அமளிகள் ஓயவில்லை … பாருக்கு உள்ளே வரும்போது கவுண்டரில் கொடுத்துவிட்டு வந்த செல்ஃபோனை வாங்க சிலர் முண்டியடித்தனர். முன் வரிசையில் அமர்ந்து இருபது டாலர் நோட்டுக்களை வீசிய மொட்டைத் தலையன் தனது ஃபோனை வாங்க முண்டியடிக்கையில் விஸ்வா மீது பலமாக மோதிவிட்டான்.. அவனது முரட்டு மோதலால் நிலை குலைந்து விழப் போனவனைத் தாங்கிப் பிடித்து .. ‘சாரி ப்ரதர் ..’ என்று சொல்லிவிட்டு நெரிசலில் மறைந்தான்.. அங்கிருந்த போலீசார் கூட்டத்தைக் கட்டுப்படுத்த எல்லாரும் வெளியே வந்த பிறகு தங்களது நம்பரைச் சொல்லி ஃபோனைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்ல கூட்டம் சற்றே அமைதியானது. வெளியே நின்றிருந்த போலீசாரைச் சூழ்ந்து கொண்டு தங்களது எண்களைச் சொல்லி ஃபோனை வாங்கிக் கொள்ள முயல எந்த ஒழுங்குமின்றி ஒரு சிலரை மட்டும் இடுப்பில், பேண்ட் பாக்கெட்டில் துப்பாக்கி ஏதாவது இருக்கிறதா என்று சோதனையிட்டனர் அவர்கள். இதனிடையில் உள்ளேயிருந்து ஒருவனை விலங்கிட்டு அழைத்து வந்தனர் சில போலீசார்.

பலமுறை தனது எண்ணை உரக்கக் கத்தியும் விஸ்வாவின் ஃபோன் கடைசியாகத் தான் வந்து சேர்ந்தது. ஒருவழியாக அங்கிருந்து நகர்ந்தனர் விஸ்வாவும், ஜகத்தும். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் போலீஸ் கார்களின் சுழல் விளக்கு வெளிச்சம் தான் தெரிந்தது. அவர்கள் தங்களது காரைத் திறந்து உள்ளே ஏறும் பொழுது அவர்களைக் கடந்து சென்ற மொட்டைத் தலையன், ‘நைஸ் கார் மேன் ‘ என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

வீட்டிற்குச் சென்றதும் முதல் வேலையாகப் போட்டிருந்த உடைகளைக் கழட்டி லாண்டரி பாஸ்கட்டில் போட்டான் விஸ்வா. பாரில் மேலே உரசிய பெண்களின் வாசனை உடம்பிலிருந்து மறைய அந்த அர்த்த ராத்திரியிலும் குளித்துவிட்டு வந்து படுத்தான்.

மறுநாள் மாலை யாரோ ஒருவன் விஸ்வாவுக்கு ஃபோன் செய்தான்.

‘நேத்து கேர்ள்ஸ் வித் ரோசஸ்க்கு நீ வந்திருந்த இல்லையா?’

சொரேரென்றது விஸ்வாவுக்கு..

‘யார் நீங்க?’

‘நான் கேக்கறதுக்கு ஆமாம் இல்லைன்னு மட்டும் பதில் சொல்லு. வெளிய இருக்கியா இப்போ?’

‘’இல்ல..’

‘வீட்ல இருக்கியா?’

‘ஆமாம்’

‘பக்கத்தில யாராவது இருக்காங்களா?’

‘ஆமாம்.’

‘முகத்தில எந்த மாற்றமும் இல்லாம ஃபோனை எடுத்துகிட்டு யாருமில்லாத இடத்துக்குப் போ;

‘ஏன்?’

‘சொன்னைதைச் செய்யறியா?’

‘சரி’

‘வெளியே வந்துட்டியா?’

‘ஆமாம்..’

‘நீ பேசறது யாருக்கும் கேக்காது இல்ல?’

‘ஆமாம் கேக்காது.’

‘சரி நல்லது .. இன்னும் அரை மணி நேரத்தில பாக்கெட்டை எடுத்துகிட்டு உன் வீட்டுக்குப் பின்னாடி இருக்க வாரன் லேக்குக்கு வா.’

‘நான் ஏன்.. என்ன வேணும் உனக்கு.’

‘என்னோட பொருள் .. உன்கிட்ட இருக்கு .. அதைப் பத்திரமாக் கொடுத்துட்டா உனக்கு நல்லது’

‘உன்னோட பொருளா? என்ன விளையாடறியா? யார் நீ?’

‘ஆமாம் .. என் பொருள் … அன்னைக்கு நீ போட்டுகிட்டிருந்த நேவி ப்ளு ஸ்வெட் ஷர்ட்.. அதிலே இருக்கும் பாரு‘

‘என் ஸ்வெட் ஷர்ட்லயா.. நீ என்ன மடையனா? என் ஸ்வெட் ஷர்ட்ல எப்படி உன் பொருள் வரும்?’

‘அளவா பேசினா உனக்கு நல்லது…’

‘என்ன பொருள் அது?’

‘கோக் .. ‘

‘மடையனா நீ? கோக் கேன் என் ஸ்வெட் ஷர்ட்ல இருந்தா எனக்குத் தெரியாதா?’

‘….. கேள்வி கேக்கறதை நிறுத்தறியா? ‘ திட்டினான் .. ‘சின்னப் புள்ளைங்க குடிக்கிற … கோக் இல்லை . கொகேய்ன்.. போய் ஸ்வெட் ஷர்ட்ல பாரு .. சின்ன ஜிப்லாக் கவர்ல லைட் பிங்க் கலர்ல பவுடர் இருக்கும் எடுத்துட்டு இன்னும் அரை மணி நேரத்தில வந்துடு.. நீ வந்தவுடனே நானே வந்து வாங்கிக்கிறேன்.’

அதிர்ந்தான் விஸ்வா .. ‘என்னோட ஸ்வெட் ஷர்ட்ல எப்படி ..?’

‘நான் தான் வெச்சேன்… அன்னைக்குப் பாத்தல்ல? போலிஸ் …….. ஒவ்வொரு கருப்பனையும் தனியா நிக்க வெச்சு செக் பண்ணானுங்க .. அதான் உன் பையிலே வெச்சுட்டேன்.. வெளில வந்து வாங்கிக்கலாம்னு பாத்தா அங்கேயும் …….. போலிஸ்காரனுங்க. நீ உன் போன் நம்பரைச் சொன்னதை வெச்சு உன்னைப் புடிச்சேன் .. இல்லைன்னா ……………. என் வாழ்கையே முடிஞ்சிருக்கும்.’

காரணமில்லாமல் எக்கச்சக்கமாகக் கெட்ட வார்த்தைகளைச் சேர்த்துப் பேசினான்.

‘….’

‘ஹலோ? லைன்லே இருக்கியா… எடுத்து வெச்சுக்கோ.. நான் இன்னும் அஞ்சு நிமிஷத்திலே ஃபோன் பண்ணி எங்க காரை பார்க் பண்ணனும்னு சொல்றேன்..’ கட் செய்துவிட்டான்.

அவசர அவசரமாக பெட்ரூமுக்கு ஓடினான் விஸ்வா. லாண்டரி பாஸ்கெட் காலியாக இருந்தது.

‘சாந்தி .. ஏய் சாந்தி. என் ஸ்வெட் ஷர்ட் தோய்க்கப் போட்டிருந்தேனே பாத்தியா?’

‘எல்லாத்தையும் காலையிலேயே வாஷர்ல போட்டுட்டேனே.. ஸ்வெட்டர் இருந்துதான்னு கவனிக்கலை.’

உடம்பெல்லாம் சில்லிட்டுப் போனது விஸ்வாவுக்கு.. கடகடவென்று ஓடிச் சென்று வாஷரைத் திறந்து பார்த்தான். ஈரத் துணிகளுக்கு நடுவே அந்த ஸ்வெட்ஷர்ட் தெரிந்தது. அவசர அவசரமாக வெளியே இழுத்து, பாக்கெட்டில் கை விட்டுப் பார்த்தான்.. நாலுக்கு நாலு அளவுள்ள சிப்லாக் பை ஒன்று ஊறிப் போய் இருந்தது. தண்ணிரில் நனைந்ததால் இரு பக்கங்களும் ஒட்டிக்கொண்டு திறக்கவே முடியவில்லை .. பிரயத்தனப்பட்டுத் திறந்து பார்த்ததில் உள்ளே ஒரு மூலையில் சிட்டிகையளவு கொழகொழவெனக் கோபால் பல்பொடி போன்ற ஏதோ ஒன்றை உணரமுடிந்தது. அதிர்ந்து போய் உட்கார்ந்தான் விஸ்வா.

—௦௦

அந்தக் கருப்பனிடம் ஃபோனில் சொன்னபோது காது கிழிந்து போகுமாறு கத்தினான்.. அவன் சொன்ன இடத்துக்கு வரச் சொன்னான். ஸ்ட்ரிப் பாரில் நான்காவது நபராக உட்கார்ந்திருந்த மொட்டைத் தலையன் தான் இதையெல்லாம் செய்தவன் என்று தெரிந்தது.

‘முட்டாளே .. உன்னுடைய …….. தவறால என் பணம் மொத்தமும் தண்ணிலே கரைஞ்சு போச்சே.. ‘

‘சாரி .. ஆனா இதுக்கு நீ தான் காரணம் … என் ஸ்வெட் ஷர்ட்ல உன்னை யாரு வெக்கச் சொன்னது.. ‘

வேகமாக அருகில் நடந்து வந்தவன்.. ‘………. அதையே திரும்பத் திரும்பச் சொல்லிட்டிருந்தே —-இங்கேயே வெட்டிப் பலி போட்டுடுவேன்.. அதோட மதிப்புத் தெரியுமா உனக்கு … என் ரெண்டு மாச வியாபாரம் போச்சு..’

‘இதுல என் தப்பு எதுவும் கிடையாது .. இருந்தாலும் எவ்வளவுன்னு சொல்லு நான் பணம் குடுத்துடறேன்..’

‘போடாங் …….. பணம் குடுக்கிறானாம் …….. பணம். ………… வால்மார்ட்ல கிடைக்கும்னு நினைச்சியா? கொலம்பியால இருந்து கொண்டு வந்தது அது.. பதிமூணாயிரம் டாலர் .. வாங்கிட்டு வந்து குடு…’

‘என்ன விளையாடறியா? இவ்வளூண்டு ஜிப்லாக் பதிமூணாயிரமா? யாரு கிட்ட கதை விடற?’

‘……………… ஒரே அறை விடுவேன்.. நீயே எங்க விலை கம்மியா கிடைக்குதோ அங்கிருந்து வாங்கிக் குடுத்துடு … விட்டுடறேன்..’

‘நானா நான் எங்க போய் வாங்குவேன்.. இதெல்லாம் எனக்குத் தெரியாது.. ஐநூறு டாலர் குடுத்துடறேன் .. எடுத்துக்கிட்டுப் போயிடு..’ குரலில் சற்றுக் கடுமை காட்டினான் விஸ்வா.

‘ஐநூறு டாலர்?’ சத்தமாகச் சிரித்தான் மொட்டைத் தலையன்.. ‘டாய்லெட் கிளீன் பண்ற ப்ளீச்சிங் பவுடர்னு நினைச்சியா… நீ சரிபட்டு வரமாட்ட.. உன்னோட காரை நாங்க எடுத்துட்டு போறோம்.. நீ என் பொருளைக் குடுத்துட்டு எடுத்துட்டுப் போ ..’ அப்போது தான் கவனித்தான் விஸ்வா .. அவனது ஆடி காரைத் திறந்து ஒருவன் உள்ளே அமர்ந்திருந்தான். எப்படி அவன் உள்ளே சென்றான் என்று யோசிப்பதற்குள், மொட்டைத் தலையன் கட்டை விரலை உயர்த்திக் காட்ட அவன் காரின் என்ஜினை ஸ்டார்ட் செய்து நகர்த்தினான்..

‘வேணாம் .. வேணாம் .. நிறுத்து ப்ளீஸ்.. நான் பணம் கொடுத்துடறேன்.. எனக்குக் கொஞ்சம் டைம் கொடு…’

‘பணமா? கோக்கும், க்ராக்கும் உங்க ……. வாங்கிட்டு வந்து கொடுப்பாங்களா அப்போ?’

‘நான் எங்கே போய் வாங்கறது.. எனக்கு இதெல்லாம் தெரியாது ..’ கெஞ்சினான்.

‘நான் அட்ரஸ் கொடுக்கறேன்.. போய் வாங்கிட்டு வந்து கொடுத்துடு. இல்லன்னா அவ்வளவுதான்…’

— ௦௦

கண்ணீர் மல்க விஸ்வா சொன்னதைக் கேட்டு அந்த லாண்டரி தாடிக்காரனுக்கு நம்பிக்கை வந்தது போலிருந்தது.

‘எந்த மோசமான நாதாரி அவன்? இனிமே கவனமா இருந்துக்கோ.. எவ்ளோ வேணும்னு சொன்ன?’

’12 கட்..’

’12 கட்டா? என்ன விலைன்னு தெரியுமா உனக்கு?

‘பதிமூணாயிரம்னு சொன்னாங்க?’

‘எங்க சரக்கு சுத்தமானது .. விலை கொஞ்சம் அதிகம் … பதினெட்டுக்கு மேல போகும்.. உன்னைப் பாக்க பாவமாயிருக்கு .. பதினஞ்சு ஆயிரம் குடுத்துட்டு எடுத்துட்டு போ.. கேஷ் தான் .. வெச்சிருக்கியா? காட்டு பாக்கலாம்.’

பணம் இருப்பதை உறுதி செய்து கொண்டு யாரையோ ஃபோனில் அழைத்தான் அவன் .. அறையின் மூலையிலிருந்து கதவைத் திறந்துகொண்டு வெளியே ஒல்லியாக, முன் பல் உடைந்து பார்க்கவே அருவருப்பாக இருந்தவன் வந்து மூன்று சின்ன ஜிப்லாக்குகளை மேஜையில் போட்டான்.. ‘ஸ்னஃப், கிராக், ஷாட் எது வேணும் சட்டுனு சொல்லு’

‘கிராக் தான் கொடுத்தனுப்பு .. 12 கட்.. ‘ தாடிக்காரன் சொன்னான்.

வந்தவன் இடுப்பில் செருகியிருந்த கண்ணாடித் தகட்டை எடுத்துச் சிறிதளவு பவுடரைக் கொட்டி ஒரு துண்டு பிளேடால் பன்னிரண்டு பகுதிகளைப் பிரித்துச் சிறிய ஜிப்லாக்கில் நிரப்பிக் கொடுத்தான். விஸ்வா கொடுத்த பதினைந்தாயிரம் டாலரை வாங்கிச் சுருட்டி பேண்டைத் தூக்கி காலில் கட்டியிருந்த ரப்பர் பேண்டுகளில் செருகிக்கொண்டு சென்றுவிட்டான்.

–௦௦

மொட்டைத் தலையன் ஃபோன் செய்திருந்தான். நேராக அவன் வரச் சொன்ன இடத்துக்குச் சென்றான் விஸ்வா. அவனைப் பார்த்ததும் அவன் மூஞ்சியில் இந்தக் கருமத்தை விட்டெறிந்து காறித் துப்பவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். பார்க்கிங் லாட்டில் அவனது கார் நின்று கொண்டிருந்தது. காலியாக இருந்த இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு, பேண்ட் பாக்கெட்டில் அந்த ஜிப்லாக் பையை வைத்துக் கொண்டு இறங்கினான். காரிலிருந்து இறங்கக் கூட மாட்டியா அவ்வளவு திமிரா உனக்கு என நினைத்துக் கொண்டு அவனது காரை நோக்கி நடந்தான். அருகே சென்ற போது தான் பின் சீட்டில் போலீஸ் ஒருவன் அவனது கழுத்தில் துப்பாக்கி வைத்து அழுத்திக்கொண்டிருப்பதைக் கவனித்தான். விஸ்வா சுதாரித்துத் திரும்புவதற்குள் எங்கோ பதுங்கியிருந்த இரண்டு போலீசார் பாய்ந்து வந்தனர். ஒருவன் விஸ்வாவைப் பிடித்துக் கீழே தள்ளி, முகத்தைத் தரையில் தேய்த்து, இரண்டு கைகளையும் பின்னுக்கு மடக்கி ‘யு ஆர் அரஸ்டட் ஃபார் ட்ரக் டீலிங்’ என்றான்.

மர்மயோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad