பாரிய இழப்பின் பின்னர் பிள்ளைகள் கதி (Survival)?
வடஅமெரிக்காவில் வாழும் வங்கக் கடலோரப் பிரதேசங்களில் பிறந்த விடமாகக் கொண்ட எங்களில் பலரும் கோடை விடுமுறை காலங்களில் இந்தியா,இலங்கை,மலேசியாவென்று சென்று வருகிறோம். அவ்வப்போது பொருளாதாரத் தாழ்மையுடன் அவ்விடம் வீதியோரம் பிச்சையெடுத்தும், தண்ணீர்ப் பாக்கெட், சிற்றுண்டி விற்றும், பசியினால் சிறுதிருட்டுக்களில் ஈடுபட்டும், குப்பை வாளிகளிலும் குப்பை மேடுகளிலும் தேடியெடுத்து உண்டும், உயிர்வாழும் பல வீதிப் பிள்ளைகளையும் கண்டிருப்போம்.
அபாயங்களில் கடுமையாக அவஸ்தைப்படுபவர் பிள்ளைகளே
இந்த அருகதைச் சிறுவர், சிறுமிகளில் பலரும் விபச்சாரத்திற்கும், அடிமைக் கூலி வேலைகளுக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பாரதூர நிலைகளையும் நாம் தொலைக் காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் படித்துத் தெரிந்தவாறுள்ளோம். ஆயினும் எவ்வாறு இந்தப் பிள்ளைகள் இந்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள், எவ்வாறு பிழைத்து உயிர் வாழ்கிறார்கள் என்று பெரும்பாலும் நாம் பொருட்படுத்துவது
இல்லை.
ஏற்றுக் கொள்ள யாரும் இல்லாததால் அனாதையாகவும், ஏழ்மையில் கொடிவினைகளால் சில பெற்றார்கள் வயிற்றுப் பிழைப்பிற்குத் தம் வயிற்றில் பிறந்த பிஞ்சு நெஞ்சுகளையே பிச்சை வேலைக்குத் தள்ளியும் உள்ளனர். பெரும்பாலும் ஏழ்மையின் கொடுமையை அனுபவிப்பவர்கள் துரதிஷ்டமான இந்தச் சிறார்களே.
இலங்கையில் டிசம்பர் 26, 2004 இயற்கைக் கடல் கொண்டது அனைவரும் அறிந்ததே. இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களானாலும் சரி, மனிதப் போரானாலும் சரி அவற்றால் அவஸ்தைப் படுவதில் பலர் இளம் பிள்ளைகளே. , வங்காள தேச வெள்ளம், கலவரங்கள், வேலைத்தளக் கட்டிடங்கள் விழுந்து நொறுங்கியது, இந்தியா, ஆஃப்கானிஸ்தான், மத்திய கிழக்கு நாட்டுப் போர்கள், ஆப்பிரிக்காவில் இனக் கலவரங்கள் இவையனைத்திலும் இதே நிலைதான் என அறிகிறோம். இது போன்று பல்வேறு வகைகளிலும் வாழ்வில் மனிதர் எதிர்கொள்ளும் அபாயங்களினால் அனாதைகளாகிய பிள்ளைகள் பல்லாயிரமானவர்கள்.
நீங்கள் உங்கள் பிள்ளைகள் மேற்குறிப்பிட்ட சூழல்களில் எப்படித் தான் பிழைப்பார்கள் என்று எப்போதாவது சிந்தித்தது உண்டா?
உயிர்பிழைக்க உதவும் தற்காப்பு
சரி இவற்றிலிருந்து நமது பிரதான விடயத்தினை அணுகுவோம். வசதிகள் பலவுள்ள வட அமெரிக்காவில் வாழ்வதினால் நாம் நமது வாழ்க்கைதனை ஓரளவு சௌகரியத்தையும் சுமாரான
நிரந்தரத்தையும் உடையது என அன்றாடம் நினைத்துக் கொள்ளலாம். ஆயினும் அண்மையில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றங்களையும்,மனிதரால் உருவாக்கப்படும் இன்னல்களையும் பார்க்கும் போது அபாய சந்தர்ப்பம் எங்கும் உள்ளது என்றே முடிவிற்கே நாம் வரலாம்.
எனவே நாம் எமது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் பராமரிக்கும், காக்கும் பெரியவர்களாகிய நாம் பாரிய இன்னலை எதிர்கொண்டு மீள முடியாது போனால் பிள்ளைகள் தாமாகத் தப்பி வாழ்வார்களா? அப்பேர்ப் பட்ட தருணங்களிற்கு நாம் எவ்வாறு நமது பிள்ளைகள் தப்பிப் பிழைக்க சந்தர்ப்பங்களை அதிகரித்தவாறுள்ளோம் என்று நமக்குள்ளே ஒரு தரம் கேட்டுப் பார்க்க வேண்டும். மேற்கு நாடுகளில் சில காலம் வாழும் பலர் பதில் நாம் காப்புறுதி வாங்கியுள்ளோம் என்றும் பதில் கூறக் கூடும்.
நாம் இவ்விடம் ஆராய்வது காப்புறுதிக் கட்டளைப் பணம் பெறுதல் அல்ல’ குடும்பத்தில் பொறுப்புடைய பெரியவர்கள் அன்றாட வாழ்க்கையில் இருந்து துண்டிக்கப்பட்டால் அதன் பின்னர் உயிர் வாழ்வினைத் தொடரத் தயாராகுதல் என்பதேயாகும்.
பெற்றார்களே …
- உங்கள் பிள்ளைகள் சென்னை வெள்ளம், இந்து சமுத்திர கடல்கோள் (சுனாமி), அமெரிக்கக் கிழக்குக் கடல் புயல் சாண்டி போன்ற பாரிய இயற்கை பேரழிவின் பின்னர் தாமாகச் செயல்படும் வலிமையுள்ளவர்களா?
- அவர்களைப் பராமரிக்கப் பாதுகாக்க நீங்கள் இல்லையேல் அவர்கள் என்ன தான் செய்வார்கள்?
- அவர்கள் தாமாகவே பிழைத்துக் கொள்ள வழிதெரிந்திருப்பார்களா?
சாதாரண நடை வாழ்க்கையில் இப்பேர்பட்டவற்றை பேசவே மனம் வராது. பெற்றாராகிய நாம் எமது பொக்கிஷமாகிய பிள்ளைகள் மேல் உள்ள பாசத்தால் இதுபோன்ற எண்ணங்களை ஒட்டு மொத்தத்தில் நிராகரித்து விடுவோம்.
இது போன்ற ஆழமான சிந்தனையே தேவை இல்லை என்று உள் மனப்பயத்தாலும் சில சமயம் சோம்பல் தனத்தினாலும் அலட்சியமாக மறுத்தும் விடலாம். ஆயினும் அவ்வாறு செய்வதினால் பெற்றோராகிய நாம் வரும் அபாயங்களின் உக்கிரணங்களில் இருந்து எளிதில் விலகிக் கொள்ள முடியாது. அதே சமயம் அது கடவுளின் பொறுப்பு என்று தனியாகச் சாக்குப் போக்குக் கூறிக் கைவிடவும் முடியாது. எமது பிள்ளைகள் எதிர்பார்க்காத சூழல்களைத் தமக்குத் தெரிந்தவற்றில் இருந்து தயார் பண்ண உதவுவது எமது கடமை.
இலத்திரனியல் யுகமும் அதன் மறுபுறமும்
தற்போதைய சிறார்கள் தப்பி உயிர்வாழும் கல்விமுறை குறைந்த அளவே தெரிந்தவர்களாக உள்ளனர். இதற்குக் காரணம் இலத்திரனியல் யுகம் அசலையும், நகலையும் பேதம் அற்றுத் திரைகளில் இணைக்க முயலுவதே எனலாம். இது பல் வேறு வடிவங்களில் இளைய தலைமுறையிடையே கிரகிப்புக் குழப்பங்களை உண்டு பண்ணுகிறது. மேலும் வீட்டினுள்ளேயும் வெளியேயும் அவர்கள் நாட்டம் மின் இலத்திரனியல் கருவிகள் கூடிய கணினி விளையாட்டுக்களிலேயோ இல்லை உடுத்தல், ஃபேஷன், சமூக வலைத் தொடர்பு, போதைவஸ்து, குடி போதையில் இருந்து விலகிக் கொள்ள முனையும் பிரபலமான பருவ வயதுச் சினிமா,தொலைக் காட்சி, மேடை நட்சத்திரங்கள் போன்றவை பற்றியதாகவே உள்ளது. இந்த மின்னிணைய வண்ணத்துப் பூச்சிகளை நீங்கள் அவர்கள் நித மின்வலயத்தின் கவர்ச்சிகளில் இருந்து வெளியேற்றி சற்று வாழ்வில் உயிர் பிழைக்க வைக்கும் தற்பாதுகாப்புப் பாதையைக் காட்டினாலே அது அரைவாசித் தூரம் கடந்ததேயாகும்.
தற்காப்பு என்ற பெயரில் தவிர்க்க வேண்டியது
தற்காப்பு முறைகளைக் கற்றுத் தருவது என்பது பிள்ளைகளைப் பொறுத்து அமையலாம். சிறுவர்,சிறுமிகளுக்கு அவர்களுக்கு இயல்பாக வரும் விளையாட்டாக தற்காப்பு முறைகளை பயிற்றுவித்தால் உற்சாகத்துடன் பயில முனைவர் என்கிறது சான்றோர் வாக்குகளும், நவீன பயிற்சியாளர் அனுபவங்களும்.
பிள்ளைகளுக்குப் பூச்சாண்டி, பயங்காட்டுவது ஒரு போதுமே உதவப் போவதில்லை. உலகமே அழியப் போகின்றது, அம்மா, அப்பா, மாமா, மாமி, பாட்டா, பாட்டி தொலைந்தால் நீங்கள் யாவரும் அனாதையாகப் போகிறீர்கள் நீங்கள் தனித்துப் போவீர்கள் பிள்ளைகளே என்று ஒரு போதும் பயமுறுத்துவதை உடன் தவிர்த்துக் கொள்ளுவது இவ்விடம் அவசியம். இது எமது பிள்ளைகளைப் பயங்கொள்ளிகள் ஆக்கும் பயிற்சியல்ல, மாற்றாக இது துணிவுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் கை முறைகளைக் கற்றுத் தரும் செயலாகும்.
தற்காப்பு உயிர்தப்பும் முறை
உயிர் தப்பும் (Survival skills) வழி முறையென்பது பல தரப்பட்டவை. எனினும் ஒவ்வொரு சந்தர்ப்பம் சூழ்நிலைகளுக்கும் சில பொதுவான படிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம். பன்னிலம் வாழ் பூர்வீகத் தமிழர்கள் பல தற்காப்புக் கைமுறைகளை அறிந்து இருப்பினும் காலப்போக்கில் இவை மறையத் தொடங்கின. சென்ற நூற்றாண்டில் இலங்கை, இந்தியா, மலேசியா வந்த பிரித்தானிய, அமெரிக்க மிசனரிகளும் அவர்கள் கைமுறைகளை அறிமுகப்படுத்தினர். பின்னணியில் ஆசிய மாணவர்கள் சாரணர்கள் (scouts) பயிற்சி மூலமும், பலதரப்பட்ட இராணுவப் பயிற்சி நெறிகள் போன்றனவற்றினாலும் பயன் பெற்றனர். இவ்விடம் தற்பாதுகாப்பு என்பது கராத்தே, குங்ஃபூ, பாக்ஸிங் போன்றவற்றைக் குறிப்பிடுவதல்ல. இது உயிர்த்து உதவி எட்டும் வரை நிலை கொள்ளலாகும்.. இராணுவப் பயிற்சி நெறிகளைத் தவிர சாரணர் சமூக அமையங்களின் தொழிற்பாடுகள் முந்தையது போன்று பெரிதாகப் பின்பற்றப் படுவதாகத் தெரியவில்லை.
குறிப்பாக வட அமெரிக்காவில் ஆண் சாரணர்கள் என்றால் வசதியான பூங்காக்களில் கூடாரம் போட்டு, ஓமம்-தீபோற்சவம் (Bonfire) போட்டு கிட்டார் போன்ற இசைக் கருவிகளுடன் பாடுதல், பெண்சாரணிகள் (Girls Scouts) என்றால் குக்கி வியாபாரம் (Cookies sale) என்றே மாறிவிட்டதெனலாம். சமுகத்திற்கும் உதவி வாழ்க்கை அனுபவங்கள் பெற்றுக் கொள்ளல் என்ற சாரணத்துவம் இப்போது சாமத்தியமான வியாபாரமாகி விட்டது. தற்காப்பு அறிவு தற்காலகமாகத் தரித்து விட்டது எனலாம்.
முக்கியமான தற்காப்புப் பயிற்சி
இது பெரியவர்களும், சிறுவர், சிறுமிகளும் ஒன்று கூடி நேரமெடுத்து வாழ்க்கைத் தற்காப்பு முறைகளைப் பயின்று கொள்ளச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளுவதே. பிள்ளைகளுக்கு அவர்கள் எவ்வாறு இயற்கைக் கால நிலைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம், எவ்வாறு படகைத் துடுப்புடன் செலுத்தலாம், நதியில், ஏரியில், குளத்தில், கடலில் நீந்தலாம், மீன் பிடிக்கலாம், வேட்டையாடலாம், எவ்வாறு பொறி போட்டு உணவைப் பிடித்துக் கொள்ளலாம், மின் இணைப்பு அற்ற உபகரணங்களைப் பாவிப்பது எப்படி என்று அறிந்து கொள்ளுதல், எவ்வாறு நெருப்பை உண்டாக்குதல், தானியங்களை அரைத்தல், தற்கால விறகடுப்பில் உணவு தயாரித்தல், உணவு சேமித்தல், குளிரில் தப்புதல், செடி கொடி வளர்த்தல், இயற்கை மூலிகை மருந்துகள் போன்றவற்றை அறிந்து கொள்ளல் போன்றவற்றையே தற்காப்புக் கல்வி எனலாம்.
இதற்குப் பலவகையான தொலைக் காட்சிப் படங்களும், புத்தகங்களும் தற்போது நாம் பெற்றுக் கொள்ளலாம். இந்த அறிவு மடல்களை வாங்கி, வீட்டில் புத்தக அலுமாரியில் வைக்காது பிள்ளைகளுடன் இருந்து வாசித்து, சேர்ந்து பயிலுதலே முக்கியம்.
ஆபத்தில் ஆடம்பர நடைமுறைபேணல் தவிர்க்கவேண்டும்
தற்காப்பு என்பது அத்தியாவசியமாக உயிர்த்திருத்தலைப் பேணுதல் என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம். இதைப் பிள்ளைகளுக்கும் உறுதியாக அறிய வைத்தல் அவசியம். நவீன செயற்கை வியாபார மயத்தினால் இளஞ்சிவப்பு (Pink) என்பது பெண், நீலம் என்றால் ஆண் என்றும், ஆண்கள் ஆடை ஆபரணங்கள், பெண்கள் அணிகள் என்றெல்லாம் வேறுபடுத்தியவாறே போய்க் கொண்டிருக்கிறோம். ஆபத்தின் போது எந்த உடைகள் ஆணோ, பெண்ணோ மாறிப் பாவிக்கலாம் என்று அறிந்த கொள்வது அவசியம். இதே போன்று, இந்தப் பண்டங்கள் மற்றும் பணிகள் பெண்களுக்கு மாத்திரமானவை, இவை ஆண்களுக்கானவை என்ற பாரிய பேதங்கள் அத்தியாவசியச் சூழலில் சாதகம் தரும் ஒன்றல்ல.
பாதிக்கப்பட்டபோது பிள்ளைப் பராமரிப்புப் பொறுப்பை ஏற்றல்
கட்டுப்பாடான, மிகவும் தற்பாதுகாப்புப் பயின்ற பிள்ளைகள் கூட அன்பான பெரியவர் பராமரிப்பு, வழி சொல்லிக் கொடுத்தல், பாதுகாப்பு ஆகியவையின்றி அபாயத்திற்கு உட்படலாம். எனவே உங்களுக்கு ஏதாவது நடந்தால் யார் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற விடயத்தை நிதானமாகச் சிந்தித்து முன் கூட்டியே அறிந்து வைத்துக் கொள்வது முக்கியம்.
தமிழர்கள் கூட்டுக் குடும்பச் சூழலில் இது போன்ற பிள்ளைகள் பராமரிப்பு விடயம் தாமாகவே உற்றார்கள் உறவினர் ஊரில் பார்த்துக் கொள்வர். ஆயினும் நாடு விட்டு நாடு வந்து வாழும் மக்களிடையே, பிரதானமாகப் பிள்ளைகள் புகுந்த நாட்டுப் பிரசைகளானால் தமிழ்ச் சம்பிரதாயங்கள் படி இவற்றைச் செய்து கொள்ள முடியாது. இதனால் முன் கூட்டியே இது பற்றி ஆராய்ந்து, சில சமயம் சட்டபூர்வமாகவும் ஆவணங்கள் இயற்றி பிள்ளைகளுக்காக வைத்துக் கொள்ளுதல் அவசியம். இப்பேர்ப்பட்ட பொறுப்பானது தற்காலத்தில் உற்றார், உறவினர்கள் கூட பொருளாதாரப் பளுக்களினாலோ மற்றைய தமது வாழ்க்கைச் சூழல்களாலோ தயங்கலாம். சில சமயம் முகம் முறிக்காது ஆம் என்று கூறினும் நடைமுறையில் பிள்ளைகளைப் பொறுப்பெடுக்க முடியாதவர்களாகவும் இருக்கலாம். இதை முடிந்த அளவு சிந்தித்துப் பெற்றார் முடிவெடுத்துக் கொள்வதையே இந்தத் தற்காப்புக் கட்டுரை வலியுறுத்தும்.
பிள்ளைகளைப் பொறுப்பெடுக்க நீங்கள் மற்ற பெரியவர்களை நாடும்போதும் அவர்கள் வெவ்வேறு பாரிய, அந்தரமான, அபாயச் சூழல்களில் எவ்வாறு ஏற்கனவே இயங்கியுள்ளனர், அவர்கள் குணாதியங்கள் யாவை, சூழ்நிலையறிந்து செயற்படக்கூடியவரா என்றும் அறிந்து கொள்வது அவசியம். இதற்கான அறிகுறிகள் உங்களுக்குத் திடமாகத் தெரியாவிடின் நீங்கள் நேரமெடுத்து தகுந்தவரைத் தேர்ந்தெடுத்தல் நலம்.
அவ்வாறு நீங்கள் தெரிவு செய்து கொண்டால், அவர்கள் குடும்பமும் உங்கள் குடும்பமும் வேளா வேளை சந்தித்து, நேரம் செலவழித்துப் பலவித வகையிலும் பிள்ளைகளுக்குத் திடமான நிலைதனை உருவாக்கிக் கொள்ளுதல் அவசியம்.
அபாயங்களைப் பொறுத்து உங்கள் பிள்ளைகளை ஒரு குறிப்பான இடத்தில் பதுங்கியிருக்கவோ இல்லை, ஏற்கனவே குடும்பமாக அறியப்பட்ட பாதுகாப்பான இடத்தை அணுகுவதற்கான வழியையும், அவ்விடம் பெரியவர்கள் வந்து பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வார்கள் போன்றவற்றையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
உதாரணமாக பாலர்களுக்கு 2-6 வயது வரையான குழந்தைகளுக்கு, தமது தாயைக் காணாவிட்டால் இன்னொரு பிள்ளையின் தாயாரிடம் போய்ச் சேரக் கற்றுக் கொடுத்தல் ஒரு தற்பாதுகாப்பு முறையாகும்.
பிள்ளைகளுக்கு அபாயங்களின் முன்னரே அவர்கள் வயதிற்கும், கிரகிப்புக்கும் ஏற்ப பொதுவான, இலகுவான வழிமுறைகளை மனப்பாடமாக்க வைத்தலும் பிள்ளைகள் பிழைப்புக்கு வழிவகை செய்யும்.
நகர வாழ்க்கை நகல் வாழ்க்கை, அயலூர் வாழ்க்கை அசல் வாழ்க்கை என்று ஒரு காலத்தில் கிராமத்தார் சிந்தித்தனர். இன்று கிராமம், நகரம் என்றில்லாமல் கேளிக்கைத் தொழிநுட்பகங்களும், பல இலகு வசதிகளும் எங்கும் பரவியுள்ளன. இது எம்மில் பலருக்கு போலி நிரந்தர நிலையைத் தந்துள்ளது. எனினும் கடல்கோளும், நூற்றாண்டு வெள்ளங்களும், சூறாவளிக் காற்றும் எமக்கு நமது வாழ்வு நிலை வசதிகள் நிரந்தமற்றவை என்று சுட்டிக் காட்டுகின்றன. எனவே உயிர்காப்பு முறைகளை நாமும் எமது வாரிசுகளும் அறிதல் அவசியம்.
தற்காப்புத் தயார் நிலை
தற்பாதுகாப்புப் பயிலல், அதே சமயம் அபாயத்தில் இருந்து பிழைத்துக் கொள்ளுதல் என்பது ஒரு இலகுவான விடயம் அல்ல. பிள்ளைகளுக்குப் பெரிய அதிர்ச்சியில்லாமல், தாமகவே தொழிற்படக் கற்றுக் கொள்ளுதல் அத்தியாவசியமான ஒன்று. தொழிநுட்ப வளர்ச்சி, இயந்திர வாழ்க்கை, பல வித மின்னியல் வேடிக்கை வியாபாரங்கள்,களிக் கூத்துக்கள் போன்றவற்றால் நம்மில் பலரும் வாழ்க்கையின் வாரிசுகளைத் தயார் பண்ணுவதில் சற்றுத் தாமதமாகிறோம்.
ஆயினும் சாரணர்கள் வழிமுறையில் கூறுவது போல எதற்கும் ஆயத்தமாக இருப்பதே உயிர் பிழைப்பதற்கான ஒரே வழி. அதையே நாமும் எமது பிள்ளைகளுக்குப் படிப்படியாகக் கற்றுத் தருவோம்.
- யோகி அருமைநாயகம்.