உச்சி தனை முகர்ந்தால்
வழக்கம் போல் அந்த அதிகாலை நேரம் விடிந்தது. ஒவ்வொரு நாளும் இதே தான் என்ற ஒரு அலுப்புடன் எழுந்தான் தேனப்பன். வாசலில் செல்வி கோலம் போட்டு கொண்டு இருந்தாள். உள்ளே கோபி ஒருக்களித்து திரும்பி படுத்தான். பழக்கமான உடல் வழக்கமான வேலைகள் செய்தது. ஆனால் மனம் அன்று ஒரு நிலையில் இல்லை. தேதியைக் கிழிக்கும் பொழுது இன்று காலையில் சீனுவை ரயில் நிலையம் சென்று கூட்டி வர வேண்டும். மூன்று நாட்கள் கும்பகோணம், சிதம்பரம், பட்டீஸ்வரம் செல்ல வேண்டி இருக்கும் என்ற சிந்தனை சோர்வைக் கூட்டியது.
ஒவ்வொரு முறையும் ஒரு நாள் மட்டுமே வரும் சீனு இந்த வாட்டி மூன்று நாள் தங்கி சுற்றுப் பயணம். இன்னும் ஒரு மணி நேரத்தில் பெங்களூரில் இருந்து ரயில் வண்டி வந்து விடும். அவர்களைச் சென்று அழைத்து வர வேண்டும் என்று நினைத்தபடி கிளம்பினான். குளித்து முடித்து முருகன் படம் முன்பு வந்து திருநீறு எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டான்.
வழக்கம் போல வெள்ளை சீருடை அணிந்து கொண்டான்.
வாசலில் கோலம் போட்ட பின் அங்கே திண்ணையில் அமர்ந்து படித்து கொண்டு இருந்தாள் செல்வி.
“செல்வி தம்பியை பார்த்துக்கோ. நான் போய் சீனுவைக் கூப்பிட்டுட்டு அவங்கள எல்லாரையும் ஹோட்டல்ல விட்டுட்டு அப்புறம் வரேன். நீ அதுக்குள்ள தம்பியை எழுப்பி கிளப்பி விடு”.
“சரி அப்பா. நான் இட்லி வெக்க போறேன். சட்னி அரைச்சுடறேன் . வரும்போது கொஞ்சம் இலை மட்டும் வாங்கி வரீங்களா சீனு மாமா வீட்டுக்கும் சேர்த்து பார்த்து இட்லி சட்னி வெச்சிடறேன்.”
“ஹ்ம்ம் சீனு இந்த வாட்டி இங்க சாப்பிட மாட்டான்னு நெனைக்கறேன். நீ நம்ம மூணு பேருக்கும் மட்டும் இட்லி வை போதும். அவங்க தங்க இருக்கிற ஹோடெல்ல ஏதோ அங்கேயே பிரட் மாதிரி எல்லாம் கிடைக்குது போல. அவங்க அங்க சாப்பிடறதா சொல்லிட்டாங்க. நான் அவங்கள விட்டுட்டு திருப்பி வந்து இட்லி சாப்டுட்டு உங்கள விட்டுட்டு அப்புறம் அவங்கள போய் கூப்பிட்டுட்டு போகணும். அவங்க நிறைய கோயிலுக்குப் போறதா இருக்காங்க. ராத்திரி நான் அவங்கள ரூம்ல விட்டுட்டு திரும்பி வர நேரம் ஆகும். நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு படிச்சுட்டு இருங்க. பயமா இருந்தா பக்கத்து வீட்டு அத்தையைக் கூப்பிட்டுக்கோ. நான் ராத்திரி எட்டு மணிக்குள்ள வந்துடுவேன்”.
அப்பாவின் முகம் வாட்டமாக இருக்கிறதோ என்று செல்விக்கு தோன்றியது. இருந்தாலும் கேள்வி கேட்காமல் அமைதியாக சரி என்று உரைத்து விட்டு மீண்டும் படிக்கத் தொடங்கினாள்.
ரயில் வண்டி நிலையம் நேரெதிர் முன்பு வழக்கம் போல தன்னுடைய வண்டியை நிறுத்தி விட்டு இறங்கினான். வெளியில் சக ஊழியர்கள் வண்டிக்கு முன்பு இறங்கி நின்று பேசியபடி இருந்தார்கள். அந்த காலை வேளையில் மயிலாதுறை ரயில் நிலையம் மிக இளம் சூட்டுடன் இருந்தது. சித்திரை வெயில் முடிந்து விட்டாலும் அதன் தாக்கம் இன்னும் அந்தச் சூட்டில் தெரிந்தது.
பெங்களூர் வண்டி வந்து நின்ன சத்தம் கேட்டது. கூட இருந்த அத்தனை வண்டி ஓட்டுனர்களும் தயாராக முன் வந்து நின்று கொண்டனர்.
“என்ன தேனப்பன் வரலையா?”
“இல்லை இன்னிக்கு சீனு வரான் ரெண்டு நாள் அவனோட தான் வேலை”.
“ஓ. எங்க கூப்பிட்டு போற?”
“வைத்தீஸ்வரன் கோயில்”. அப்புறம் சாயங்காலம் சிதம்பரம் நடராஜர் கோயில். நாளைக்கு பட்டீஸ்வரம் கோயில் அப்புறம் கும்பகோணம் இப்படி சுற்று வட்டாரக் கோயில்கள். மூணு நாள் கழிச்சு திருப்பி பெங்களூர் ரயில் பிடிச்சு போறான்.மூணு நாளைக்கு அவனோட தான் தினம் சவாரி.
“ஜமாய் ஜமாய் . சீனு வந்தா உனக்கு காசு மூணு நாளில ஒரு மாச அளவுக்கு வந்திடும்.”
உண்மை தான் சீனு பணத்தில் குறை வைத்ததில்லை. அதனால் மட்டும் அல்லாது, அவனுடனான நட்பு அவனை வேற்று மனிதனாக நினைக்க வைக்காது.
சீனு தேனப்பனின் பள்ளி தோழன். இருவரும் 12 வகுப்பு வரை மயிலாடுதுறையில் தான் படித்தார்கள். பெரிய படிப்பு படிக்க வேண்டும். பெரிய நிலையில் வர வேண்டும் என்ற தாகம் இருவருக்கும் இருந்தது. தேனப்பனின் குடும்ப சூழ்நிலை சுமூகமாக இல்லை. அதனால் அவன் 12ம் வகுப்பிற்கு பிறகு தந்தையுடன் சேர்ந்து ஏதோ வேலை செய்யத் தொடங்கினான்.
சீனு கல்லூரி படிப்பிற்காக தஞ்சை சென்று விட்டான். ஒவ்வொரு முறையும் விடுமுறை பொழுது சந்திப்பார்கள். இருவருக்கும் இடையில் இருந்த நட்பு மட்டும் அதே இளமையாகவே இருந்தது. தேனப்பனின் உலக அறிவே சீனுவின் பார்வையில் தான்.
சீனுவின் வாழ்க்கை தரம் படிப் படியாக உயர்ந்தது. படிப்பு முடித்த பின் சீனு அமெரிக்கா சென்றான்; திருமணம் செய்து கொண்டான். பின் பெரிய வீடு வாங்கி அமெரிக்காவிலேயே குடியேற்றம் பெற்றுக் கொண்டான்.
சீனுவின் வாழ்க்கையைக் கண்டு தேனப்பன் எப்பொழுதும் பொறாமை கொள்ள வில்லை.
தேனப்பன் படிக்கவில்லை என்றாலும் சொந்தமாக தொழில் செய்து மயிலாடுதுறையிலே இருந்தான். அங்கே வீடு வாங்கினான். நிலம், தோட்டம் பெருக்கிக் கொண்டான். பின்னர் ஒரு வண்டி வாங்கி அதில் வருமானம் ஏற்படுத்திக் கொண்டான்.
சீனு, தேனப்பன் இருவருக்கும் ஒரே ஆண்டில் தான் திருமணம் நடந்தது. இருவருக்கும் ஒரு பெண் அதன் பிறகு பையன் என இரண்டு பிள்ளைகள். ஒவ்வொரு முறையும் சீனுவின் வரவை எதிர்நோக்கி இருப்பான் தேனப்பன். ஆனால் இம்முறை மனம் மிகவும் சோர்ந்தே இருந்தது.
இந்த முறை சீனு மூன்று வருடங்கள் கழித்து வருகிறான். இந்த மூன்று வருடங்கள் தன்னுடைய வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள். துணையான புவனா தீடீரென்று போன வருடம் பிரிந்த சோகம்
போகவில்லை தேனப்பனுக்கு.
அவனுடைய பெண் செல்வி தான் குடும்ப தலை போல் பொறுப்பேற்றாள் . பதிமூன்று வயது ஆன பெண் அவளுக்கு ஒரு தாயின் தேவை அதிகம் தேவைப்படும் நேரம் அதை இழந்து நிற்கும் கொடுமை கண்டு அவள் முகம் நோக்கி பேசவே வெட்கி நின்றான்.
ஆனால் செல்வி மிகவும் புத்திசாலிப் பெண் . தன்னையும், தம்பியையும் மிக அழகாக பார்த்துக் கொண்டாள் . சமையல் வேலைகள் , படிப்பு, வீட்டின் சுத்தம் என அவளே எப்படி இவ்வளவு அழகாக தனியாக செய்கிறாள் என்று மிகவும் ஆச்சர்யப்படும்படி தெளிவாக நடந்து கொண்டாள் .
தேனப்பனுக்கு மட்டும் அது ஏதும் கண்ணில் தெரியவில்லை. தன் மேல் கொண்ட கழிவிரக்கம் அதிகமாக கண்களை மறைத்து விட்டது.
இயற்கையை குறை சொல்வதா இறைவனை குறை சொல்வதா?
ஏதோ ஒரு வாழ்க்கை என இயந்திரம் போல இயங்கி வந்தான். சீனுவை சந்திப்பதற்கு தயங்கிய பெரும் காரணம் இதுவே. நிறைந்து இருந்த சீனுவின் வாழ்வு அவனுக்கு கோபம் அளித்தது.
“என் எனக்கு மட்டும் இப்படி?” என்று மனம் கொந்தளித்தது.
அவன் சிந்தனை கலைக்கும் விதமாக ரயிலில் இருந்து இறங்கி சீனுவின் குடும்பத்தினர் வந்ததைக் கண்டான். சீனு வழக்கம் போலவே இருந்தான். இவனை கண்டதும் ஆரத் தழுவினான்.
சீனுவின் மனைவி கனிவாக ” எப்படி இருக்கிறீர்கள் அண்ணா ? செல்வி , கோபி எப்படி இருக்காங்க?”. என்றாள் .
மெதுவாக நலம் விசாரித்தபடி வண்டியில் அவர்கள் சாமான்களை வண்டியில் ஏற்றினான்.
மயிலாடுதுறையிலிருந்து சுமார் முக்கால் மணி நேரம்போக வேண்டும்.
வண்டியை வளைந்த பாதைகளில் ஒட்டியபடி பொதுவான பேச்சினில் மட்டும் இருந்தான் தேனப்பன்.
“ஊர் மாறவேயில்லை தேனு. வண்டி ஜன்னல் திறந்து காற்று வர வர, ஹப்பா நம்ம ஊரு காற்று சுவாசம் அது ஒரு சுகம் தான்”.
“Dad its so hot in here. Very humid. Can we the driver get the A/C on”.
டிரைவர் என்று சீனுவின் பெண் அழைத்தது சுருக் என்றது தேனப்பனுக்கு. சீனு வேகமாக ஆங்கிலத்தில் அவளை ஏதோ கண்டித்தது புரிந்தது.
“hmph.. Whatever”. என்று அலட்சியமாக உரைத்தாள்.
சீனு மிக சங்கடமாக நெளிந்தபடி பேச்சை மாற்றினான். ஊரைப் பற்றியும், வேலையைப் பற்றியும் விசாரித்தான்.
பின்னிருந்து மீண்டும்,
“Dad my Nintendo is going out of charge. What do I do?”.
“ஹோட்டல்ல போய் சார்ஜ் போட்டுக்கலாம். இப்போ வெளியில வேடிக்கை பாரு “. சீனுவின் பதிலுக்கு அவன் பையன் ஒரு முனகலுடன் பதில் அளித்தான். சீனுவின் மனைவி அவர்களைச் சமாதானப்படுத்த முயற்சித்தாள் . அனால் இருவரும் எதிர்த்து பேசியது போலவே தெரிந்தது தேனப்பனுக்கு.
“அங்கெல்லாம் ரொம்ப குழந்தைகளைத் திட்ட முடியாது தேனு. நாங்க ரெண்டு பெரும் வேலைக்கு போயிடறோம். குழந்தைங்க nanny கூட தான் நிறைய நேரம் இருப்பாங்க. அதனால தமிழ் பெரிசா வராது. பேசினா புரிஞ்சிக்கிறாங்க. அதுவும் பொண்ணு இப்போ teenage ஸ்டார்டிங் அதனால கொஞ்சம் கோபம் ஜாஸ்தி தான். எப்போ பாரு ஏதோ டிரஸ் பத்தி ஷாப்பிங். உனக்குத் தான் புரியுமே செல்வி கூட அதே வயசு தானே . எல்லாம் வயசு தான்.. தானே சரியா போய்டும். என்று அவனே சமாதானம் சொல்லி கொண்டான்.
அவர்களை வைதீஸ்வரன் கோயில் அருகில் இருந்த ஒரு ஹோடேலில் இறக்கி விட்டான் தேனப்பன்.
அங்கு சுத்தம் குறைச்சலாக உள்ளதென்று குழந்தைகள் ஒரே கூத்தடித்தன.
சீனுவும், அவன் மனைவியும் அவர்களோடு படும்பாடு பார்க்க தேனப்பனுக்கு வேடிக்கையாக இருந்தது.
“நான் வீட்டிற்கு போயிட்டு சாப்பிட்டுட்டு வரேன். நீங்க கிளம்பி இருங்க. அப்புறம், எங்கெங்கே போகணுமோ வரிசையா போலாம்”.
சீனு மிகச் சங்கடமாகவே சரி என்றான்.
***
ஆயிற்று மூன்று நாட்கள் ஓடி விட்டது. சீனுவின் குடும்பம் கோயில் சுற்றுலா ஒரே வேடிக்கை கூத்தாக முடிந்தது. சீனுவின் பெண்ணின் ஜாதகப் படி அவள் அந்தக் கோயில்களில் செய்ய வேண்டிய சில பூஜைகளைச் செய்ய வந்திருந்தார்கள். பிள்ளைகள் இருவரும் ரொம்பவே அமெரிக்கா வளர்ப்பில் ஊறி இருந்தார்கள். இங்குள்ள சிறு சிறு விஷயங்கள் அவர்களுக்கு அருவருப்பாக இருந்தது போல நடந்து கொண்டார்கள். பையன் மூன்று நாட்கள் கழிவறை செல்லவே இல்லை. சீனு ரொம்பவும் தவித்து தான் போனான்.
“போன முறை வந்த பொது, அத்தனை விவரம் தெரியல, நாங்க சொன்ன பேச்சு கேட்டாங்க. இப்போ அவங்களும் வளர்ந்துட்டாங்க. நம்ம ஊரு தினுசு புரியல. இதனால தான் நான் ஒரு மூணு வருஷம் ஊருக்கு வர ரொம்பத் தயங்கினேன். “நீ எப்படி தான் உன் பசங்களைத் தனியாக வளர்க்கிறியோ தெரியல. நாங்க ரெண்டு பேர் சேர்ந்தே அவ்ளோ கஷ்டமா இருக்கு. ” என்று சொல்லியபடியே இருந்தான்.
ஒரு பெரிய விஷயம் மண்டையில் தட்டியது போல் உணர்ந்தான் தேனப்பன்.மூன்றாவது நாள் கிளம்பும் பொழுது ஞாயிறு கிழமையாக இருக்கவே செல்வி அவர்களைப் பிடிவாதமாக வீட்டிற்கு அழைத்து வர சொல்ல, சீனு குடும்பத்தினர் மதியம் கிளம்பும் முன் தேனப்பனின் விட்டிற்கு வந்தார்கள். கோபி, சீனுவின் பையனைப் பந்து ஆட அழைத்துச் சென்றான்.
செல்வி அவர்கள் அனைவரிடமும் முகம் மலர்ந்து பேசினாள் .
மூன்று நாட்களாக தன்னை டிரைவர் என்று அழைத்த குழந்தைகள் முன்பு தன் குழந்தைகள் எவ்வளவு உயரமாக தெரிகிறார்கள் என்று உணர்ந்தான் தேனப்பன்.
“இந்தாங்க மாமா வடை , டீ போட்டிருக்கேன். கொண்டு வரேன்.”
அனைவருக்கும் வடை, பலகாரம் என்று அத்தனை சமத்தாக நடந்து கொண்ட செல்வி மீது பெருமை தோன்றியது.
சீனுவின் குடும்பம் கிளம்பிய பொழுது, செல்வியும், கோபியும் கூடவே வந்து ரயில் நிலையம் வரை வந்து வழி அனுப்பினார்கள்.
தேனப்பனுக்கு முதன் முறையாக அன்று மிகவும் மனம் நிறைந்து இருந்தது.
வண்டிக்குத் திரும்பும் பொழுது, செல்வியை ஒரு முறை அணைத்து உச்சிதனில் முத்தம் பதித்த பொழுது உண்மையிலே கர்வம் ஓங்கி வளர்ந்தது.
– லக்ஷ்மி சுப்பு
Nice
Beautiful heart touching story. Nice narration .Very well constructed
Great Lakshmi
Nice and good story
Very nice thought Lakshmi!! Feeling proud of you!