பூந்தோட்டம் பராமரித்தல்: களிமண்
மினசோட்டா மாநிலத்தில் பலவகையான மண்வகைகள் காணப்படுகின்றன. ஆறு, ஏரிகள் அதிகமுள்ள மினசோட்டாவில் தாவரவகைகள் எமது வடமேற்கில் இருந்து தென்கிழக்கு வரை வெவ்வேறாக காணப்படுகின்றன. இவை ஒருபுறம் பிரதேச வெட்ப தட்ப நீடிப்புக்களைப் பொறுத்து அமைந்தாலும் வீட்டுத் தோட்டங்களையும், விவசாயங்களையும் பொறுத்தளவில் அவை மண்ணின் தன்மையைக் கொண்டும் அமையும் எனலாம்.
பண்டைக் காலத்தில் தமிழர் வாழ் ஊர்களில் நீர் நிலைக்கருகாமையில் கிண்டியெடுக்கப்படும் களிமண்ணானது வீடுகட்ட செங்கட்டிகளையும், கூரை வேய ஓடுகளையும், உணவைச் சமைத்துக்கொள்ளவும், நீரைச் சேகரித்துக் கொள்ளவும் உதவியாக இருந்தது. இதே களிமண்ணானது மினசோட்டாவில் 12,000 ஏரிகளுக்கு அருகாமையிலும் காணப்படுகிறது. அழகிய மட்பாண்டங்கள் செய்ய உதவும் அதே களி மண்ணானது தோட்டத்தில் தாவரங்கள் வளர்வதற்கு காரணமாயிருந்தாலும், அதன் நீர் தேக்கும் தன்மை வேர்கள் ,பாழடையவும் காரணியாகி விடுகிறது. இது பொதுவாக வீட்டுத் தோட்டம் போட முனைபவர்களுக்கு முட்டுக்கட்டையாகிறது.
களிமண்ணைச் செயற்கை மூலகச் சேர்ப்பினால் மாற்றியமைத்தல்
சுண்ணாம்புக் கல் (Lime) தாதுப் பொருள் சேர்த்தல்
நல்ல செடிகொடிகள் வர மண்ணின் அமில மூல (Acid/Base)( இரசாயன வித்தியாசங்களை நாம் தெரிந்து கொள்வது பயனுள்ள விடயம். பொதுவாக களிமண் சார்ந்த தரை அமிலத்தன்மையுடையதாகவே இருக்கும். அமிலத்தன்மையில் பெரி வகைப் பழச்செடிகள் ப்ளுபெரி, ராஸ்பெரி, மற்றும் அசேலியா, லைலாக், ஹைடிராஞ்சியா போன்றவை இயல்பாக வளரும்.
ஆயினும் கோடைக்காலத்தில் கத்தரிக்காய, மிளகாய், தக்காளிச் செடிகள், மற்றும் அழகிய வர்ணப் பூங்கண்டுகள் வளர்க்க நினைத்தால் இம்மண் உதவாது. எனவே கணிமண் தரையை மாற்றியமைக்க பல கைமுறைகளையும் விவசாயிகள் செய்துக் கொள்வர்.
மண்ணின் அமிலத்தன்மையைச் சீராக்க சுண்ணாம்புக்கல் தாதுப் பொருளாகிய Dolomites சேர்த்துக் கொள்வது இம்மாநில வழக்கம். நீர் வடிகால் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டுமானால் செயற்கைத் தாதுப்பொருட்களாகிய ஜிப்சம் உப்பு, ஆற்று மணல், சிறு கூழான்கற்கள் (Perlite) , சிப்பிகள் (Osyter shell) , எரிந்த மரச் சாம்பல்கள் (Wood Ashes) போன்றவற்றைப் பாவித்துக் கொள்ளலாம்.
இயற்கை முறையைக் கைப்பிடிக்க விரும்பினால் எரு, மற்றும் மக்கிய இலைகுழை (Compost), இலைதழை சருகுகள், மர அரிவு சீவல்கள் (saw dust), பாசி (Peat Moss) போன்றவற்றை மண்ணில் சேர்த்துப் படிப்படியாக களிமண் தன்மையை மாற்றியமைத்து வீட்டுத் தோட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.
தொகுப்பு – யோகி