அமெரிக்கத் தேர்தல் – பகுதி 6
(அமெரிக்கத் தேர்தல் – பகுதி 5)
ஒரு வழியாக ஜூன் மாதம் பதினான்காம் தேதியோடு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ப்ரைமரிகள் முடிவடைந்தன. குடியரசுக் கட்சி சார்பில், அனைத்து போட்டியாளர்களும் சில வாரங்களுக்கு முன்னர் விலகிக் கொண்டுவிட டானல்ட் ட்ரம்ப் மட்டுமே எஞ்சியிருந்தார். ஹிலரி கிளிண்டன் கடைசி நேர பலத்த போட்டிக்குப் பின்னர், பெரும்பான்மையான பிரதிநிதிகளின் ஆதரவோடு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் என்ற நிலையை எட்டியுள்ளார்.
தான் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதைத் தன்னந்தனியாக வந்து செய்தியாளர்கள் முன் அறிவித்த பெர்னி சாண்டர்ஸ், இறுதியில் விடைபெறுகையில் லட்சக்கணக்கானோரின் ஆதரவையும் அன்பையும் பெற்றிருந்தார் என்றார் அது மிகையில்லை. பெர்னி தனது விலகலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அவரது ஆதரவாளர்களைத் தங்கள் பக்கம் இழுக்க ட்ரம்பும், கிளிண்டனும் கடுமையாக முயல்கிறார்கள் என்பதும் உண்மை.
பெர்னியின் ஆதரவாளர்கள் பலர் முப்பது வயதுக்கும் குறைவானவர்கள். சிலர் இப்போது தான் வாக்களிக்கும் வயதை எட்டியவர்கள். இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கட்சி மேல் ஆழ்ந்த பற்றிருக்க வாய்ப்புக் குறைவு. சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பின் படி இவர்களில் 11 சதவிகிதத்தினர் ட்ரம்பை ஆதரிக்கப் போவதாகவும், 75 சதவிகிதத்தினர் ஹிலரியை ஆதரிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தனர். எஞ்சிய பதினான்கு சதவிகிதத்தினர் தேர்தல் நெருங்கும் சமயத்தில் முடிவு செய்யப் போவதாகத் தெரிவித்தனர்.
ட்ரம்ப்பும், ஹிலரியும் பெரும்பான்மைப் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்று விட்ட போதிலும் இவர்தான் எங்கள் கட்சியின் வேட்பாளர் என்று அக்கட்சிகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் வரையில் எதுவும் மாறலாம்.
இரு பெரும் கட்சிகளின் வேட்பாளர்கள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட நிலையில் மூன்றாவது அணி அல்லது சுயேச்சை வேட்பாளர்களின் போட்டி வலுப்பெற்றுள்ளது.
அமெரிக்கன் இண்டிபெண்டண்ட் கட்சி, அமெரிக்கன் ஃபிரீடம் கட்சி, அமெரிக்கக் கான்ஸ்டிட்யூஷன் பார்ட்டி, கிரீன் பார்ட்டி எனப் பல பார்ட்டிகள் போட்டியில் இறங்கியுள்ளன. ஒட்டு மொத்தமாக இவை அனைத்தையும் மூன்றாவது அணி எனச் சொல்கிறார்கள். அனால் இக்கட்சிகளுக்குள் கூட்டணி எதுவும் கிடையாது. இவை தவிர நூற்றுக் கணக்கான கட்சி சாரா தனி நபர் வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் பக்கத்து ஊரில் கூட அறிமுகமாகாதவர்கள். பலரின் பெயர்கள் வாக்குச் சீட்டுகளில் கூட இடம்பெற்றிருக்காது. இவர்கள் யாருக்காவது வாக்களிக்க விரும்புகிறவர்கள், தாங்களாகவே இவர்களது பெயரை வாக்குச் சீட்டுகளில் எழுதி வாக்களிக்கலாம். இதன் காரணமாக இவர்களை ரைட்-இன் கேண்டிடேட்ஸ் (write-in candidates) என்று சொல்கிறார்கள்.
இவை ஒரு புறமிருக்கச் சமீபத்தில் அமெரிக்க மண்ணில் நடைபெற்ற சம்பவங்கள் அதிபர் தேர்தலை மேலும் சிக்கலாக்கி, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
மிகுந்த துயரத்தை விட்டுச் சென்ற அர்லாண்டோ துப்பாக்கிச் சூடு, அமெரிக்காவில் ஆங்காங்கே தூவப்பட்ட தீவரவாத விதைகள் இன்னும் அழிக்கப்படாமல் முளை விடுகின்றன என்பதை நிரூபிக்கிறது. அர்லாண்டோ பரபரப்பு அடங்குவதற்குள் லாஸ் வேகாஸில் ட்ரம்பை கொல்ல நடந்த முயற்சி, பல காலமாக அமுங்கியிருந்த அரசியல் வன்முறை மீண்டும் தலை தூக்குகிறதோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.
இந்நிகழ்வுகள் பற்றிய வேட்பாளர்களது கருத்துக்கள் மக்களால் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன என்றே தோன்றுகிறது. இத்தாக்குதல்களுக்கு முன்னர், கிட்டத்தட்ட கிளிண்டனை எட்டிப் பிடிக்கும் அளவில், மிகச் சிறிய வித்தியாசத்தில் பின் தங்கியிருந்த ட்ரம்ப், சென்ற வாரங்களில் சரசரவென்று 7 புள்ளிகள் கீழிறங்கி விட்டார்.
தாக்குதல்களுக்கு அமெரிக்காவில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டம் சீர்படுத்தப்படாதது தான் காரணம், அவை சீரமைக்கப்பட்டுக் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்பது கிளிண்டனின் கருத்து.
வெளி நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வருபவர்களாலேயே இவ்விதத் தாக்குதல்கள், தீவிரவாதச் செயல்கள் நடைபெறுகின்றன. ஆதலால் வெளிநாட்டவர்கள், குறிப்பாக அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வர அனுமதிக்கக் கூடாது அப்படியே அவர்களை அனுமதித்தாலும் அதற்கு முந்தைய பல ஆண்டுகளில் அவர்களின் நடவடிக்கைகள் என்னவாக இருந்தன என்பது பரிசீலிக்கப்படவேண்டும் என்பது ட்ரம்பின் வாதம். அகதிகளாக வீடு, பொருட்களை இழந்து நிற்போரிடம் இது போன்ற ஆய்வுகள் நடத்துவது சாத்தியமற்றது என்ற கிளிண்டனின் கருத்துக்கு, அகதிகளுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்ற ட்ரம்பின் பதிலைப் பலரும் ரசிக்கவில்லை. தன் மீது நடந்த கொலை முயற்சி பற்றி ஊடகங்களில் “நான் சொன்னது போலவே நடந்துள்ளது” என்று சூழ்நிலை கருதாது தன்னைத் தானே பாராட்டிக்கொண்டது பலரை முகஞ்சுளிக்க வைத்தது.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் மனதில் தோன்றுவதைப் பேசுவதால் பலருக்கும் ட்ரம்பைப் பிடிக்கிறது. யாருக்காகவும் வளைந்து போகாதது, மற்றவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்காதது போன்ற குணங்கள் பலரையும் கவர்ந்துள்ளது. அரசியல் சூழ்ச்சி எதுவும் அறியாதவர்; தனது கடும் உழைப்பால் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார்; பல சமயங்களில் வெளிப்படையாகப் பேசுவது அவரது பெருங்குறை என்றாலும் விரைவில் அவற்றைத் திருத்திக் கொள்வார் என நினைக்கிறார்கள்.
தெளிவாகச் சிந்திக்காமல் அவசரப்பட்டுப் பேசுவது, கடுமையான இனவாதக் கொள்கைகள் கொண்டிருப்பது போன்ற காரணங்களால் அவருக்குக் கடுமையான எதிர்ப்பும் நிலவுகிறது.
அதே போல் கிளிண்டன் மீது அதிருப்தி கொண்டவர்கள், அவர் பல சமயங்களில் பொய் சொல்கிறார், பல ஆண்டுகள் அரசியலில் இருப்பதால் அரசியல் தரகர்களின் அசைப்புகளுக்கு ஆடுவார், பில் கிளிண்டனின் தலையீடு இருக்கும் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
தேர்தல் சமயத்தில் நடைபெற்றுள்ள இது போன்ற தீவிரவாதச் செயல்களால், ஊடகங்களின் முழுக் கவனமும் அதில் திரும்பிவிட, வேட்பாளர்களும் அதைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். நாட்டு நடப்பு, வேலை வாய்ப்பு, வீட்டுக் கடன், ஓய்வூதியம், விலை வாசி, போன்ற வெகு ஜனம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி இவர்கள் கண்டு கொள்ளாதது வருத்தம் தான்.
மொத்தத்தில், இவர் தான் அதிபர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் அவரை விட இவர் மேல், இவரை விட அவர் மேல் என்று சமாதானப்படுத்திக் கொள்ளும் இந்திய வாக்காளரின் மனநிலை தான் அமெரிக்க வாக்காளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
– ரவிக்குமார்.