உண்மையான அன்பே உலகிற்கு விளக்கு – பைபிள் கதைகள்
“உலகில் வெறுப்பது யாரக இருந்தாலும், நேசிப்பது நீங்களாக இருங்கள்”, என்றார் அன்னை தெரசா.
எத்தனை யுகங்கள் கடந்து சென்றாலும் அன்பின் வடிவமாகப் போற்றப்படுவது மாசற்ற தாயன்பே என்பது மிகையல்ல. காரணம்……
வார்த்தைகளே இல்லாத வடிவம்
அளவுகோலே இல்லாத அன்பு
சுயநலமே இல்லாத இதயம்
வெறுப்பைக் காட்டாத முகம்
……………… அதுதான் அம்மா
கிறிஸ்துவ மறையின் புனித நூலாம் திருவிவிலியத்தின் (பைபிள்) பழைய எற்பாட்டில் கூறப்பட்டுள்ள ஒரு நிகழ்வில் நீதியின் தேவன் பொய்மையின் கொடூரத்தை வெளிக் கொணர்ந்து உண்மையான தாயன்பை உயர்த்துகிறார்.
கடவுள்மேல் ஆழமான விசுவாசம் கொண்ட சாலமோன் என்ற மன்னன் மிகப் பெரிய நீதிமான்.
ஒருநாள் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!” என்று கேட்டார்.
அதற்குச் சாலமோன் மன்னன், “ஆண்டவரே, நான் சாதாரணமானவன். இந்த நாட்டில் உள்ள உமக்கு பிரியமான மக்களுக்கு என்னை அரசனாக்கியுள்ளீர். உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை எனக்குத் தந்தருளும்” என்று கேட்டார்.
சாலமோன் இப்படிக் கேட்டது ஆண்டவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
கடவுள் சாலமோன் மன்னனிடம், “சாகா வரத்தையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய்.”
“இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை.”
“அந்த அளவுக்கு ஞானமும், பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன்.”
“இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன்” என்றார்.
பின்பு ஒரு நாள், இரு பெண்கள் சாலமோன் அரசர் முன்னிலையில் வந்து நின்றனர்.
அவர்களுள் ஒருத்தி, “அரசே! இந்தப் பெண்ணும் நானும் ஒரே வீட்டில் குடியிருக்கிறோம். நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தேன்.”
“என் குழந்தை பிறந்து மூன்று நாள் ஆன பின், அவளும் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்த வீட்டில் எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.”
“இவள் இரவில் தூங்கும்போது தன் மகன் மீது புரண்டுவிட்டதால் அவன் இறந்துபோனான்.”
“அவள் இரவில் எழுந்து, நான் தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து, என்னருகில் கிடந்த உயிருள்ள என் மகனை எடுத்துத் தன் நெஞ்சருகில் வைத்துக்கொண்டு, இறந்துவிட்ட தன் மகனை என் நெஞ்சருகில் கிடத்திவிட்டாள்.
“விடியற்காலையில் பிள்ளைக்குப் பால் கொடுக்க நான் எழுந்தபோது, ஐயோ! அது செத்துக் கிடந்தது. சற்று விடிந்தபின் பிள்ளையை உற்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அது நான் பெற்ற பிள்ளை அல்ல என்று” என்றாள்.
இதைக் கேட்ட மற்றவளோ, “இல்லை! உயிரோடிருப்பதே என் பிள்ளை. செத்துப் போனது உன் பிள்ளை” என்றாள்.
முதல் பெண்ணோ, “இல்லை… செத்த பிள்ளைதான் உன்னுடையது. உயிரோடிருக்கும் பிள்ளை என்னுடையது” என்றாள்.
அப்பொழுது சாலமோன் மன்னனுக்கு, “என்ன இது? உயிரோடு இருக்கிற ஒரு குழந்தைக்கு இருவர் சொந்தம் கொண்டாடுகிறார்களே” என்று ஒரே குழப்பம்.….
கடவுள் கொடுத்த ஞானத்தால் சாலமோன் மன்னன், “ஒரு வாளைக் கொண்டு வாருங்கள்” என்றார்.
அவ்வாறே அவர்கள் அரசரிடம் ஒரு வாள் கொண்டு வந்தனர்.
பிறகு அரசர், “உயிரோடிருக்கும் குழந்தையை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை ஒருத்தியிடமும் மறு பாதியை மற்றொருத்தியிடமும் கொடுங்கள்” என்றார்.
உடனே, உயிரோடிருந்த பிள்ளையின் தாய் தன் மகனுக்காக நெஞ்சம் பதறி அரசரிடம், “வேண்டாம் அரசரே! கொல்ல வேண்டாம். உயிரோடிருக்கும் குழந்தையை அவளிடமே கொடுத்து விடுங்கள்” என்று வேண்டினாள்.
மற்றவளோ, “அது எனக்கும் வேண்டாம்; உனக்கும் வேண்டாம்; அதை இரண்டாக வெட்டுங்கள்” என்றாள்.
சாயம் வெளுத்தது….
தன் ஒரு கண் போனாலும் பரவாயில்லை சகமனிதன் பார்வை போகவேண்டும் என்று நினைக்கும் உலகம்….
பொய்யான அன்பு நிலை பெறாது.
உண்மையான மாசற்ற அன்பு குறைபோகாது, எல்லோரையும் வாழவைக்கும்.
சாலமோன்அரசர், “உயிரோடிருக்கும் அந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டாம். முதல் பெண்ணிடமே கொடுங்கள். அவள்தான் அதன் தாய்” என்று முடிவு கூறினார்.
அரசர் அளித்த தீர்ப்பைப் பற்றி இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் கேள்விப்பட்டனர். நீதித் தீர்ப்பு வழங்குவதற்கென நேரத்தால் கடவுள் அருளிய ஞானம் கண்டு வியந்தனர்.
அன்பு என்பது சொற்களில் வழ்வதில்லை.
சொற்களால் விளக்கவும் முடியாது.
அன்பு, செயல்களால் மட்டுமே விளக்கம் பெறுகிறது.
உண்மையான உன்னதமான அன்பு என்றும் நிலைத்திருக்கும்.
அன்பு மட்டுமே உலகின் உயிர் நாடி.
அவற்றில் தாயின் அன்பு என்றும் உயர்வே…….
– ம. பென்சமின் ஹனிபால்