செங்கை ஆழியான்
1941 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒரு சராசரிக் குடும்பத்தில் கந்தையா, அன்னபூரணி தம்பதிகளுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்து “குணராசா” என்ற பெயர் சூடப்பட்ட இவர் கல்வியிலும் இலக்கியத்திலும் பல்வேறு அரச பணிகளிலும் செய்த பல சாதனைகளைக் கணக்கிடுவது கடினம். பலருக்கு கதாசிரியராக, அரச அதிகாரியாக, நாவலாசிரியராக, இன்னும் பல வடிவங்களில் தெரிந்த குணராசா, எழுதிச் சிவந்த கைகளுக்குச் சொந்தக்காரனாதலால் தனக்குத் தானே “ செங்கை ஆழியான்” எனப் புனை பெயரைச் சூட்டிக்கொண்டு எண்ணிலடங்காத பல இலக்கியங்களைப் படைத்தார்.
எனக்குத் தெரிந்த என் ஆசான் குணராசாவை நான் ஒரு புவியியல் ஆசிரியராக, சரித்திரக் கதை சொல்லியாக, பல்கலைக்கழக பதிவாளராக, உதவி அரசாங்க அதிபராக, மாநகரசபை ஆணையாளராக, பல்கலைக் கழக விரிவுரையாளராக, பல வடிவங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் இலக்கியப் படைப்பாளியாக அவர்; செங்கை ஆழியானாக வகித்துக் கொண்ட அவதாரம்தான் அவரை ஈழத்து இலக்கிய உலகில் கிரீடம் சூட்டி அழகு பார்த்தது. ஈழத் தமிழர்களின் இலக்கிய வரலாற்றின் ஒரு பக்கத்தை செங்கை ஆழியான் எனும் உன்னதமான படைப்பாளியின் படைப்புக்களைக் கொண்டே மதிப்பீடு செய்ய வேண்டும்.
1964 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தைவிட்டு பட்டதாரியாக வெளியேறி 1971 வரை ஆசிரியத் தொழிலில் பணியாற்றினார். 1971 இல் ஓய்வுபெறும் வரை உயர் நிர்வாக சேவை அதிகாரியாகப் பல பதவிகள் வகித்தார். பதவிகள் எல்லாம் இவரைத் தேடி வந்தன. அவர் வகித்த பதவிகள் இவரால் பெருமை பெற்றன. முதலில் அரசாங்கச் செயலாளராக கிண்ணியாவிலும் பின்னர் செட்டிகுளத்திலும் கடமையாற்றினார். அதன் பின்னர் உதவி அரசாங்க அதிபராகத் துணுக்காய், பாண்டியன்குளம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் பணியாற்றி, கிளிநொச்சியின் மேலதிக அரசாங்க அதிபராகவும் பிரதிக் காணி ஆணையாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.
அதன்பின் “கிளிநொச்சி” மாவட்டம் தனி மாவட்டமாக உருவாகியபோது, அம் மாவட்டத்தின் நிர்வாகத்தினை முதன் முதல் ஒழுங்குபடுத்திய மூன்று நிர்வாக சேவை அதிகாரிகளில் செங்கையாழியானும் ஒருவராகச் செயற்பட்டார். 1972 – 1992 வரை இவர் தனது நிர்வாகப் பணிகளை, கிளிநொச்சி, துணுக்காய், மன்னர், செட்டிகுளம்,பாண்டியன் குளம் என வன்னிப் பிரதேசங்களிலேயே ஆற்றியுள்ளார். அவர் கூறுவதுபோல இப்பிரதேசங்களின் வாழ்வியற் கோலங்களை அவர் அவற்றின் பலத்தோடும் பலவீனத்தோடும் தரிசித்து இலக்கிய வடிவங்களுள் சிறைப்படுத்திக் கொள்ள இந்த அனுபவம் உதவியது. இந்த அனுபவத்தின் பயனாகவே இவரால் அரிய பொக்கிசமான “காட்டாறு” நாவலை எழுதி சாகித்திய விருதும் பெற முடிந்தது.
1992 ஆம் ஆண்டு முதன் முறையாகத் தனது சொந்த மாவட்டமான யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்று, யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் என்ற பெரும் பணியில் அமர்ந்து கொண்டார். இதன் பின்னர் 1997 தொடக்கம் 2000 வரை ஏறக்குறைய மூன்றாண்டுகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான பதிவாளராகப் பதவி வகித்தார். பின்னர் மீண்டும் நல்லூரின் பிரதேச செயலாளராகப் பதவியேற்று, 2001 இல் ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்ற பின்பும் அவரது நிர்வாகப் பணி ஓயவில்லை. ஓய்வுபெற்ற பின்னர் இரண்டாண்டுகள் சங்கானை, தெல்லிப்பளை ஆகிய பிரதேசங்களின் பிரதேச செயலாளராகக் கடமையாற்றினார்.
அதன் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணத்தின் வடபிராந்திய ஆணையாளராகப் பதவி வகித்தார். அவ்வேளை அவரை யாழ்ப்பாண மாநகர சபையின் மாநகர ஆணையாளராக மாகாண சபை நியமித்தது. ஓராண்டிற்கு மேல் யாழ்ப்பாண மாநகர ஆணையாளராகப் பணிபுரிந்துள்ளார். அண்மையில் இறக்கும் போதுகூட உலக வங்கியினால் நிதி உதவப்பட்டு, வடக்கு கிழக்கு மாகாணத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் சமூக நிலைப்பாட்டிற்கான அணித் தலைவராகக் கடமையாற்றி வந்தார்.
கிராமத்து மனிதர்களையும், அவர்களின் வாழ்க்கையையும், வியர்வை, பனை ஓலை வேலி, சகதி, தேனீர், அத்தி இலைகள் என்று அவர் வர்ணனை இல்லாமலே இயல்பாக கதை சொல்வதில் ஒரு சக்கரவர்த்தியாகவே வாழ்ந்தார். அவரது கதைகளை வாசிக்கும் ஒருவருக்கு அந்தக் கிராமமும், கதையின் கதாபாத்திரங்களும் கண் முன்னே நிழலாடுவார்கள். செய்திகளைக் கூட மேலோட்டமாகப் படித்து விட்டு நகர்ந்துவிடலாம். ஆனால் செங்கை ஆழியானின் எழுத்து என்றால் அதை முழுமையாக வாசிக்காமல் கடந்துபோக முடியாது. அந்தளவுக்கு செங்கை ஆழியானின் எழுத்துக்களும், அவர் கதை சொன்ன பாங்கும் வசீகரமாக இருக்கும்.
1980 களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் “அர்ச்சுனா” என்றொரு சிறுவர் இதழ் வெளிவரத் தொடங்கியிருந்தது. அதில் ஹம்சா குட்டிக்கு அப்பா சொன்னகதைகள் என்று தொடராக வந்த சிறுவர் கதைகளைச் செங்கை ஆழியான் எழுதி இருந்தார். சமகாலத்தில்; பிரளயம், காட்டாறு, கனவுகள் கற்பனைகள், ஆசைகள், கங்கைக் கரையோரம், அலைகடல் தான் ஓயாதோ, முற்றத்து ஒற்றைப் பனை, யானை, மழையில் நனைந்து; வெயிலில் காய்ந்து, மழைக்காலம், மண்ணின் தாகம், ஜன்மபூமி, யாககுண்டம், ஆறுகால் மடம், கிடுகுவேலி, ஓ அந்த அழகிய பழைய உலகம், காற்றில் கலக்கும் பெரு மூச்சுகள், ஒரு மைய வட்டங்கள், மரணங்கள் மலிந்த பூமி, வானும் கனல் சொரியும், ஆச்சி பயணம் போகிறாள், கொத்தியின் காதல், போரே நீ போ போன்ற சமூக நாவல்களும் அக்கினிக் குஞ்சு யாழ்ப்பாணத்து இராத்திரிகள், சித்திரா பௌர்ணமி இதயமே அமைதி கொள், இரவு நேரப் பயணிகள், கூடில்லாத நத்தைகளும் ஓடில்லாத ஆமைகளும், சாம்பவி போன்ற சிறுகதைகளும் இணையற்றவை. முற்றத்து ஒற்றைப் பனை என்ற கதையில் வழிந்தோடும் மிக இயல்பான எழுத்து நடை. சரளமான பேச்சுத் தமிழ். கூடவே இழைந்தோடும் நகைச்சுவை. எந்த ஒரு வாசகனுக்கும் ஒரே மூச்சில் வாசித்து முடித்து விடத் தோன்றும் சலிப்புத் தட்டாத கதை சொல்லும் ஆற்றல் என எல்லா நளினங்களும் இயல்பாகப் பெற்ற எங்கள் கதை ஆசான் அவர்.
ஆச்சி பயணம் போகிறாள் என்ற கதையில் யாழ்ப்பாணத்தில் தன் கிராமம் தாண்டாத ஒரு கிழவி கதிர்காமம் நோக்கிப் பயணிக்கிறாள். கிராமியம் கடந்த நகர வாழ்வியலும், புதிய உலகம் அவளுக்கு ஏற்படுத்தும் மன உணர்வுமே ஒரு நகைச்சுவை நாவலாக அமைந்திருக்கின்றது. யானை – ஈழத்துக்காட்டுப் பகுதியில் வெறிபிடித்த ஒரு யானையிடம் தன் காதலியை இழந்தவன் தன் வஞ்சம் தீர்க்கப் புறப்பட்ட கதை. ஓ அந்த அழகிய பழைய உலகம் என்ற கதையில் ஓய்வு பெற்ற ஒரு பொறியிலாளர் நகரவாழ்க்கையை வெறுத்துத் தன் கிராமத்திற்கு வரும் போது நாகரிகம் தன் கிராமத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்னும் கதையைச் சொல்லியிருந்தார். “கிடுகுவேலி”யில் புலம் பெயர்ந்து வெளிநாட்டுக்குப் போகும் போது நம் கிடுகுவேலிப் பாரம்பரியம் சொந்த நாட்டில் எவ்வாறு சிதைகின்றது என்பதைக் காட்டுகின்றது. நடந்தாய் வாழி வழுக்கியாறு – வழுக்கியாறுப் பிரதேசத்தில் தொலைந்த தம் மாட்டைத் தேடுபவர்களின் கதை. கங்கைக் கரையோரம் – பேராதனை வளாகச் சூழலில் மையம் கொள்ளும் காதல் கதை.
கொத்தியின் காதல் என்ற உருவகக் கதையில் கொத்தி என்ற பெண் பேய்க்கும் சுடலைமாடன் என்ற ஆண் பேய்க்கும் வரும் காதல், சாதி வெறி பிடித்த எறிமாடன் என்ற இன்னொரு பேயால் கலைகிறது. எமது சமூகத்தில் சாதிப்பேய் எப்படித் தலைவிரித்தாடுகிறது என்பதைக்காட்டும் கதை. இது சிரித்திரன் பத்திரிகையில் தொடராக வந்து மாணிக்கம் பிரசுரமாக வெளிவந்தது. கடல்கோட்டை – ஒல்லாந்தர் காலத்தில் ஊர்காவற்துறை கடற்கோட்டையைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட அருமையான வரலாற்று நவீனம். தீம் தரிகிட தித்தோம் – 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களம் சட்டம் கொண்டுவந்தபோது மலர்ந்த கற்பனைக் காதற் கதை. இதில் புதுமை என்னவென்றால் தனிச் சிங்களச் சட்டவிவாதம் நடந்தபோது எடுக்கப்பட்ட குறிப்புக்களும் விவாதமும் காட்டப்பட்டிருக்கும் களம் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க , இன்னொரு பக்கம் தமிழ்ப் பையனுக்கும் சிங்களப் பெண்ணுக்குமான காதல் களத்தை மிகவும் அழகாகக் காட்டியிருப்பார். நாவல் முடியும் போது இனக்கலவரம் ஆரம்பிக்க அவர்களின் காதலும் இனவெறியில் எரிந்துபோகும்.
இவர் எழுதிய “வாடைக் காற்று” என்ற நாவல் பின்னர் திரைப்படமாகவும் வெளியிடப்பட்டது. அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்/ஆய்வாளன் என்பதால் இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப் பிரதேச வாழ்வியலையும், அவர்கள் மீன் பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப் படைப்பாகவும் திகழ்கின்றது. மற்றையப் படைப்பாளிகளிடம் இருந்து தனிக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றையப் படைப்புக்களிலும் அவதானிக்கலாம். வாடைக்காற்று திரைப்படமான போது கமலாலயம் மூவிஸ் சார்பில் ஏ.சிவதாசன், பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினர்.
செங்கை ஆழியானின் இலக்கியச் செயற்பாடுகளில் அவரது ஆவணப்படுத்தல் முயற்சிகள் மிக முக்கியமானவை. குறிப்பாக மட்டக்களப்பில் ஏற்பட்ட சூறாவளியைப் பற்றி அவர் எழுதிய 12 மணி நேரம் என்கிற நூலும், 1977 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதக் கலவரத்தின் முதல்நாள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச வன்முறைகள் பற்றி அவர் எழுதிய 24 மணி நேரம் என்கிற நூலும் முக்கியமான ஆவணங்கள். இவ்வகையான ஆவணப்படுத்தல்கள், வரலாற்று ஆய்வுகளின் முக்கியம் அதிகமானதாக இன்று உணரப்படுகையில் இந்த இரண்டு நூல்களையும் செங்கை ஆழியான், நீல வண்ணன் என்ற இன்னொரு புனைபெயரில் 40 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியிருக்கின்றார் என்பது இன்னமும் ஆச்சரியமளிக்கின்றது. அவரது இலக்கியச் செயற்பாடுகளில் ஈழத்துச் சிறுகதை வரலாறு மிகமுக்கியமாது. மறுமலர்ச்சி சிறுகதைகள், ஈழகேசரிச் சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள் என்கிற பத்துக்கு மேற்பட்ட தொகுப்புநூல்களை அவர் உருவாக்கியிருக்கின்றார்.
மாணவர் சமூகத்திற்கு அவரின் ஆக்கங்கள் அதிகளவுக்கு உசாத்துணை நூல்களாக உதவிக் கொண்டிருக்கின்றன. தமிழ்மொழி மூலம் கற்கும் மாணவர்களின் வரலாற்றுப் பாட நூல்களில் தமிழ் மக்களின் வரலாறு தொடர்பான விபரங்கள் உரியளவிற்கு இடம் பெற்றிருக்கவில்லையெனவும் ஐரோப்பியர் வருகைக்கு முன்னரான யாழ்ப்பாண இராச்சியம் பற்றி ஓரிரு பத்திகளுடன் வரலாற்றுப் பாட நூலில் தமிழர் விவகாரம் நிறைவடைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் தெரிவிக்கப்படும் நிலையில் செங்கை ஆழியானின் நந்திக்கடல், கந்தவேள் கோட்டம், காதல் கோட்டை, குவேனி, நல்லைநகர் நூல், ஈழத்தவர் வரலாறு, யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு, தமிழர் தேசம் போன்ற நூல்கள் எதிர்காலத் தலைமுறையினர் கற்று அறிந்து கொள்வதற்கான அரிய தகவல்களின் பெட்டகமாக காணப்படுகின்றன. இவர் எழுதிய “ பூமியின் கதை” என்ற புவியல் புத்தகம் இன்றுவரை பல பல்கலைக் கழகங்களின் பாடநூலாக உள்ளத்தில் இருந்தே இதனை அறியலாம்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்திருந்த செங்கை ஆழியான் அவர்கள் ஜனரஞ்சக தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருந்தார். ஈழத்தில் பிறந்ததாலோ என்னவோ இவரது இலக்கிய வாழ்வு ஒரு வட்டத்தை விட்டு வெளிவராமலே அடங்கிப் போயிற்று. வரலாற்று நாவல்கள், நகைச்சுவை நாவல்கள், சாதிய நாவல்கள், புலம் பெயர் நாவல்கள், அரசியல் நாவல்கள், தமிழ் தேசிய இன நாவல்கள், போர்க்கால நாவல்கள் என 34 நாவல்களை எழுதி சாகித்திய ரத்னா, சாகித்திய விருது உட்பட பல விருதுகளை வென்று வாழ்ந்தபோது கடந்த 2016, பெப்ரவரி 28 அன்று மீண்டும் மீள முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். மண்ணுலகை விட்டு விண்ணுலகு சென்றாலும் நம் வாசிப்பில் என்றும் வாழ்வார் எங்கள் ஆசான்.
தொகுப்பு – தியா