போக்கிமான் –கோ
* டிவிட்டர், ஃபேஸ்புக் பயனார்களின் எண்ணிக்கை முறியடிப்பு
* ஏரிக்கரையில் பிணம் மிதப்பதைக் கண்ட சிறுமி
* மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவர்கள்
* ஒரே மாதத்தில் 120% வளர்ச்சியடைந்த நிறுவனப் பங்கு
இதையெல்லாம் சில நாட்களாக ஆங்காங்கே கேட்டிருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள்.
‘பாக்கெட் மான்ஸ்டர்ஸ்’ – ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சதோஷி தஜிரி (Sadoshi Tajiri) என்ற ஜப்பானியரின் மூளைக்குள் உருவான கற்பனை அரக்கர்கள் இன்று உலகின் சில பகுதிகளில் கோடிக்கணக்கானவர்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிறு வயதில் சின்னச் சின்னப் பூச்சிகளைப் பிடித்து விளையாடியவர் சதோஷி தஜிரி. பதினைந்து வயதில் கவனம் முழுக்க ஒளி உரு விளையாட்டுக்கள் (video games) பக்கம் திரும்பியது. தன் இஷ்டத்துக்கு விளையாடித் தள்ளினார். பின்னர் தானாகவே தனக்குப் பிடித்த விளையாட்டுகளை உருவாக்கினால் என்ன என்று யோசிக்கத் தொடங்கி, தனது மனதில் உருவான கற்பனைகளை சேகா (SEGA) எனும் நிறுவனத்துக்கு விற்றார். அப்போதிருந்த கேம்ஸ்களை விமர்சித்து, அந்த விளையாட்டுகளுக்கான குறுக்கு வழிகளையும் எழுத சொந்தமாக ‘கேம் ஃப்ரீக்’ (Game Freak) எனும் நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நேரத்தில் கென் சுகிமோரி (Ken Sugimori) என்பவரது நட்பு கிடைத்தது. தஜிரியின் எண்ண வேகத்தைக் கட்டுப்படுத்தி, சீராக்கியவர் இவர் தான். 90களின் துவக்கத்தில் பிரபலமடையத் துவங்கியிருந்த ‘கேம் பாய்’ (Gameboy) எனும் கையடக்க ஒளி உரு விளையாட்டுக் (handheld video game) கருவி மூலம் அதே போன்ற கருவி வைத்திருக்கும் ஒருவரோடு இணைந்து விளையாடும் முறையைக் கண்ணுற்ற தஜிரி தானும் அது போல் மற்றவரோடு இணைந்து விளையாடும் விளையாட்டை உருவாக்க எண்ணினார். அப்போது ‘கேம் பாய்’ நிறுவனமான நின்டெண்டோ (Nitendo) சற்றே தொய்வடையத் துவங்கியிருந்தது. தஜிரி, நின்டெண்டோ நிர்வாகிகளை அணுகித் தனது யோசனைகளைச் சொல்லிய போது அவரின் அதிவேகக் கருத்துகளைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் நிராகரித்து விட்டனர். பின்னர், சுகிமோரி நின்டெண்டோவினரிடம் தஜிரியின் கருத்துகளைக் கோர்வையாகச் சொல்லி விளக்கிய போது, அவர்களுக்கு வாய்ப்பளித்தது நின்டெண்டோ.
இந்த நேரத்தில் தஜிரி சிறு வயதில் பூச்சிகளின் மீது கொண்டிருந்த நாட்டத்தைப் பயன்படுத்தி இருவரும் சில கற்பனை உருவங்களை வடித்தனர். சதோஷியின் கற்பனைக்கு உருவம் கொடுத்து வரைந்தவர் சுகிமோரி. அப்படி உருவானது தான் ‘ஆர்கியஸ்’ (archeus) எனும் வினோத உயிரினம். பின்னர் இவ்வுயிரினத்துக்குப் பயிற்சியளித்து, வளர்க்கும் கதாபாத்திரமாக சதோஷி, சுகிமோரி எனும் சிறுவர் பாத்திரங்களை உண்டாக்கினர். கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் உழைத்து 1996ல் பாக்கெட் மான்ஸ்டர்ஸ் ரெட் எனும் விளையாட்டை நின்டெண்டோ நிறுவனத்துக்காக உருவாக்கி வெளியிட்டனர். முதன் முதலில் ஜப்பானின் விளையாட்டுச் சந்தையில் மட்டும் அறிமுகமான இது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. கேம் பாய் கருவி மதிப்பிழந்து வந்த நேரமது. அந்த நேரத்தில் தனது ‘கேம் ஃப்ரீக்’ நிறுவனத்தின் மூலம் ‘பாக்கெட் மான்ஸ்டர்ஸ்’ விளையாட்டைப் பிரபலப்படுத்தினார் தஜிரி. வியாபாரம் மெதுவாக வேகம் பிடிப்பதை உணர்ந்த நின்டெண்டோ இதை விரிவுப்படுத்த எண்ணி இருவருடனும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். தொடர்ந்து சார்மண்டர், சார்மிலன், பல்பாசர், பிக்காச்சு, ரடாடா போன்ற கற்பனை உயிரினங்களை உருவாக்கிப் புதுப்புது பதிப்புகளாக வெளியிடத் தொடங்கினர். மெதுவாக, ஜப்பானைத் தாண்டி இவ்விளையாட்டு பிரபலமடைந்து அமெரிக்காவில் நுழைய முயன்ற போது புதுச் சிக்கல் எழுந்தது. ‘மான்ஸ்டர்ஸ் இன் த பாக்கெட்’ (Monsters in the pocket) எனும் புத்தகம் வந்திருந்த சமயம் அது. ‘பாக்கெட் மான்ஸ்டர்ஸ்’ எனும் பெயர் காப்புரிமைச் சிக்கலை உண்டாக்கியது. இச்சிக்கலைத் தீர்க்க பாக்கெட் மான்ஸ்டர்ஸ் ஐ சுருக்கி உருவாக்கப்பட்டது தான் ‘போக்கிமான்’ எனும் மந்திரச் சொல்.(‘POcKEt MONsters’).
அமெரிக்காவில் அறிமுகப்படுத்த இந்த உயிரினங்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் ஆங்கிலப் பெயர்கள் சூட்டப்பட்டன. அப்படி தஜிரிக்குச் சூட்டப்பட்ட பெயர் ‘ஆஷ் கெட்சம்’ (Ash Ketchum). ஆனாலும் சுகிமோரி வரைந்த உயிரினங்கள் புதுமையாக இருந்ததால் அவற்றின் உருவங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டன. மளமளவென்று பிரபலமாகிய இந்த உயிரினங்களைக் கொண்டு மங்கா (Manga comics) எனும் வரைகதை, அனிமே (Anime) எனப்படும் அசைபடங்கள், முழுநீளத் திரைப்படங்கள், விளையாட்டு நுணுக்கங்களையும் குறுக்கு வழிகளையும் விளக்கும் புத்தகங்கள், பொம்மைகள் என்று வளர்ந்து வருவாயை அள்ளியது நின்டெண்டோ, கேம் ஃபிரீக் நிறுவனங்கள்.
தொண்ணூறுகளில் நீங்கள் சிறு பிள்ளையாகவோ, அல்லது சிறு பிள்ளைகளின் பெற்றோராகவோ இருந்திருந்தால் போக்கிமான் விளையாட்டுக்களைப் பற்றிக் கண்டிப்பாக அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு போக்கிமான் கதாபாத்திரமும் ஒவ்வொரு வகையான சிறப்புத் திறன் கொண்டவை. இவற்றைக் கைப்பற்றி, பயிற்சியளித்து உங்கள் படை பலத்தை அதிகரித்துக் கொள்ளலாம். பின்பு எதிராளிகளின் படையோடு உங்கள் போக்கிமான் வீரர்களை மோதவிட்டு விளையாடலாம். விளையாடுபவர்கள் இதை ஒரு வீரவிளையாட்டாகக் (sport) கருதும் வகையில், சதோஷி இதை வடிவமைத்தது இவ்விளையாட்டின் சிறப்பம்சம். மோதலின் முடிவில் எந்தப் போக்கிமானும் இறப்பதில்லை. தோற்றுப் போன போக்கிமானுக்கு மேலும் பயிற்சியளித்துக் களமிறக்க முடியும் என்பதால் வன்முறைத் தூண்டுதலுக்கு இடமளிக்காமலிருந்தது போக்கிமான் உலகம்.
கேம்பாய், நின்டெண்டோ, நின்டெண்டோ டி.எஸ்(DS)., நின்டெண்டோ வீ (wii) எனப் பல ‘கேமிங் கன்சோல்’ வடிவிலும் போக்கிமான் பிரபலமடைந்தது. இவர்களுக்கான வசதியோ, வயதோ இல்லாதவர்கள் இக்கதாப்பாத்திரங்கள் அச்சடிக்கப்பட்ட ‘கார்டு’ களைப் பரிமாற்றம் செய்து விளையாட போக்கிமான் கார்டுகள் (Pokemon cards) பலரைப் பைத்தியமாக அலையவிட்ட காலங்களும் உண்டு.
தொடர் வண்டிகள், பேருந்துகள், விமானங்கள் என ஜப்பானில் எங்குத் திரும்பினாலும் போக்கிமான் படங்கள் தான் கண்ணில் பட்டன. ஏறக்குறைய ஜப்பான் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகிப் போனது போக்கிமான் உயிரினங்கள்.
இப்படி 1996ல் தொடங்கிக் கோடிக்கணக்கான சிறார்களை ஈர்த்துக் கட்டிப்போட்ட இந்த ஒளி உரு விளையாட்டு பல பரிமாணங்களையும், தலைமுறையினரையும் கடந்து வந்தது. சமீப காலங்களில் சிறுவர்கள் இருந்த இடத்தில் உட்கார்ந்தபடியே இணையத் தொடர்பின் மூலம் உலகின் மற்றொரு மூலையில் இருப்பவருடன் விளையாடுவது அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல பிரச்சனைகளை எழுப்புகின்றன என்ற கருத்துப் பரவி வந்தது.
கைபேசிச் செயலிகளின் அசுர வளர்ச்சியால் துவண்டிருந்த நின்டெண்டோ நிறுவனம், கூகிளின் அங்கமான நியாண்டிக் (Niantic) நிறுவனத்தோடு இணைந்து ‘தி போக்கிமான் கம்பெனி’ என்ற அமைப்பை உருவாக்கி ‘மிகை யதார்த்த’ தோற்றத்தின் மூலம் ஒளி உரு விளையாட்டு உலகில், சமீபத்தில் பெரும்புரட்சியை ஏற்படுத்தி உள்ளனர். தங்களது இருபதாவது ஆண்டின் சிறப்பு வெளியீடாக நியண்டிக் போக்கிமான் நிறுவனம் கடந்த ஜூலை 6ம் தேதியன்று வெளியிட்டது தான் ‘போக்கிமான்-கோ’ (Pokemon Go) ஆப்’.
மெய் நிகர் தோற்றத்தின் (Virtual Reality – VR) வளர்ச்சியே மிகையதார்த்த தோற்றம் (Augmented Reality – AR). சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜிடிஏ வைஸ் சிட்டி (Vice City), இங்க்ரெஸ் (Ingress) போன்ற VR வகை விளையாட்டுகள் ஐஃபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் ஆப்பாக வெளிவந்தது. அதை விளையாடுபவர்கள், ஏதோவொரு நகரில் திருடர்களைத் தேடி அலைவார்கள். போக்கிமான்-கோ இதன் அடுத்த நிலைக்குச் சென்றது. ஒருவர் இயல்பாகப் புழங்கும் இடங்களில் தங்களைச் சுற்றி மறைந்திருக்கும் போக்கிமானை தேடிப் பிடிக்கும் AR வகையைச் சார்ந்தது இது
போக்கிமான்-கோவை கைபேசியில் நிறுவிய பின்பு, கைபேசியின் கேமரா வழியே தேடினால், உங்களைச் சுற்றி இருக்கும் இடங்களில் போக்கிமான் உயிரினங்களைக் காணலாம். மேலும் கைபேசியின் ‘ஜிபிஎஸ்’ (GPS) வழியே, நீங்கள் நடந்து போகும் வழிகளில் இந்தக் கதாபாத்திரங்களை உலவ விட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாகத் தெருக்கள் , பூங்கா, கடைகள் என்று எல்லா இடங்களிலும் நடந்து செல்லும் பலர் தங்களது கைப்பேசிகளில் மூழ்கியபடிச் செல்வதைக் கண்டிருப்பீர்கள். எதையோ தொலைத்துவிட்ட பதைபதைப்பில் இங்குமங்கும் அலைந்து தேடுவதைப் பார்த்திருப்பீர்கள். இவர்கள் அனைவரும் போக்கிமான் கதாபாத்திரங்களைத் தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
சிறுவர்கள் மட்டுமல்லாது நடுத்தர வயதினரும் இந்தத் தேடுதல் வேட்டையில் (Scavenger hunt) இறங்கியுள்ளனர். தங்களது சிறுவயது நாட்களை இது நினைவூட்டுவதாகக் கூறி மகிழ்கின்றனர் இவர்கள்.
“எப்பொழுதும் வீட்டிலேயே அமர்ந்திருக்கும் என் மகன் வெளியிலிறங்கி நடக்கத் துவங்கியுள்ளான்”
“எதற்கெடுத்தாலும் எரிச்சலடையும் என் பதின்ம வயதுப் பிள்ளைகளிடம் ஒரு மாற்றம் தெரிகிறது.”
“பல வருடங்களாகப் பக்கத்து வீட்டிலிருந்தும் அறிமுகமில்லாத பலரின் நல்ல நட்பு கிடைத்துள்ளது.”
“என் வாழ்நாளில் நான் பார்த்தறியாக் காலை ஆறுமணிப் பொழுதைக் கண்டுகொண்டேன்.”
“எங்கள் தேவாலயத்தில் நிறையப் போக்கிமான் உள்ளன. உள்ளே வாருங்கள்.”
“எங்கள் கடைக்குள் நீங்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு போக்கிமானுக்கும், நீங்கள் வாங்கும் பொருளில் 10% தள்ளுபடி அளிக்கப்படும்.”
“போக்கிமானைத் தேடிச் சென்ற சிறுமி ஏரியில் பிணம் மிதப்பதைக் கண்டுபிடித்தார். “
“போக்கிமான் கோ விளையாட்டுச் சுவாரஸ்யத்தில் மாடியிலிருந்து விழுந்த சிறுவன்.”
“மனைவியின் பிரசவம் நடக்கையில் அந்த அறையில் 3 போக்கிமானைக் கைப்பற்றிய கணவர்”
“சாலையைக் கடக்க முயன்ற போது விபத்தில் காயமடைந்த சிறுவர்கள். “
இவையெல்லாம் போக்கிமானின் பயனாளர்களைப் பற்றிச் சமீபத்தில் வெளியான செய்திகள்.
எந்தவிதப் புதுக் கண்டுபிடிப்புகளுக்கும் எழும் அபாயச் சிக்கல்கள் போக்கிமான்-கோ விலும் எழுந்தன.
இவ்வித அபாயங்களைக் களைய போக்கி ஸ்டாப் (Pokestop), போக்கி ஜிம் (Pokegym) போன்றவற்றை உருவாக்கியுள்ளது நியாண்டிக் நிறுவனம். நகரின் சில பகுதிகளில் (பூங்கா, விளையாட்டு மைதானம் போன்றவை) போக்கி ஸ்டாப்களாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஸ்டாப்களைச் சுற்றி இருக்கும் இடங்களில் நிறையப் போக்கிமானை உலவ விடுகின்றனர். மேலும் இந்த இடங்களில் போக்கி முட்டைகள் (Poke Eggs), போக்கி காசுகள் (Poke coins), போக்கி பந்துகள் (Poke balls) போன்றவையும் கிடைக்கக் கூடும். போக்கி ஜிம் என்பது நமது போக்கிமானைப் பயிற்றுவிக்கும் இடம். இவ்விடங்களில் பல விதப் பயிற்சி உபகரணங்கள், உத்திகளைக் கண்டறியலாம்.
மினியாபொலிஸ் சுற்று வட்டாரத்தில் சென்டினியல் ஏரிப் பூங்கா (Centennial Lake park), வேலி ஃபேர் (Valleyfair), மினசோட்டா உயிரியல் பூங்கா (MN Zoo), சில நூலகங்கள் போன்ற இடங்களில் அதிகப் போக்கிமானை காண முடிகிறதாம். தங்களது வியாபார இடங்களைப் போக்கி-ஸ்டாப்பாக மாற்றும்படி பல விண்ணப்பங்கள் குவிகின்றன நியாண்டிக் நிறுவனத்துக்கு.
இவ்விளையாட்டின் அடிப்படை அம்சங்களை இலவசமாகப் பதிவிறக்கிக் கொள்ளலாம் எனினும், மற்ற உபகரணங்களை வாங்கக் கட்டணங்கள் உண்டு. இக்கட்டணத்தை ஆப்பிள் அல்லது கூகிள் (செயலியைப் பொருத்து), நியாண்டிக் போக்கிமான் கம்பெனி, நின்டெண்டோ என மூன்று நிறுவனங்களும் பங்கிட்டுக் கொள்கின்றன. உலகின் பிறபகுதிகளிலும் வெளியான பின்பு இந்நிறுவனங்களின் வளர்ச்சி பன்மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருங்கால ஒளி உரு விளையாட்டுச் சந்தைக்குப் போக்கிமான்-கோ அடிகோலியுள்ளது எனலாம்.
1996 முதல் இதுவரையில் மொத்தமாக அறுநூறுக்கும் அதிகமான போக்கிமான் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 150 கதாபாத்திரங்கள் தான் போக்கிமான் கோ – வின் முதல் பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளன. மெதுவே ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என இடைவெளி விட்டு அடுத்தடுத்தப் படைப்புகளை வெளியிட முடிவு செய்துள்ளது நியாண்டிக் நிறுவனம். எனவே அடுத்த இரண்டாண்டுகளுக்கு இந்த விளையாட்டின் தாக்கம் நீடித்திருக்கும் என்பது உறுதி. போக்கிமான் உலகத்தில் ‘Gotta catch them all’ என்ற சொற்றோடர் பிரசித்திப் பெற்றது. அனைத்து போக்கிமான் பயிற்சியாளர்களும் அதை மனதில் நிறுத்தி உத்வேகத்துடன் தேடி வருகிறார்கள்.
தம்மைச் சுற்றியிருக்கும் இயற்கை வளங்களையும், வனப்புகளையும் தாண்டி ஏதோவொரு செயற்கைப் பொருளில் மகிழ்ச்சியைத் தேடுவது மனித சுபாவம். சில நாட்களிலோ, மாதங்களிலோ, ஆண்டுகளிலோ அப்பொருள் சலிப்பூட்டி விட, மனம் புதியதை நாடிச் செல்லும். அந்த வகையில் போக்கிமான்-கோ வின் ஆயுட்காலம் எதுவரை என்பதைக் காலம் தான் சொல்லும்.
– ரவிக்குமார்