லிட்டில் மெக்காங்க்
தென்கிழக்காசிய நாடுகளான சீனா, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, வியாட்நாம், லாவோஸ் ஆகியவற்றின் இடையே ஓடுவது, மெக்காங்க் ஆறு. இந்த நாடுகளுக்கிடையான வணிக மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களில், இந்த ஆறு முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் வசித்து, வணிகம் புரியும் இடமான, செயிண்ட் பால் நகரில் உள்ள யூனிவர்சிட்டி அவின்யூவில், மெக்காங்க் ஆற்றின் பெயரில் வருடம் தோறும் ‘Little Mekong Night Market’ என இரவுச் சந்தை நடத்துகிறார்கள். இந்த ஆண்டு, ஜூலை 23ஆம் தேதியும், 24 தேதியும் இச்சந்தை நடைபெற்றது.
இந்த நிகழ்வின் நோக்கம், மினியாபோலிஸ், செயிண்ட் பால் நகரங்களைச் சார்ந்த பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, அதன் மூலம் தென்கிழக்காசிய மக்களின் கலாச்சார அம்சங்களை எடுத்துக் கூறவும், இவர்களது வணிக வளர்ச்சியைக் கூட்டுவதற்கும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்துவதே. கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்த நிகழ்வை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், இந்த நிகழ்வு அதிகக் கவனத்தைப் பெற்று, பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.
யூனிவர்சிட்டி அவின்யூவில் மெக்குபின் (Mackubin) சாலையில் இருந்து கல்டியர் (Galtier) சாலை வரை ஆசிய நாட்டு உணவு விடுதிகளும், பல சரக்கு வணிக வளாகங்களும் பெருமளவில் உள்ளன. இந்தப் பகுதியை லிட்டில் மெகாங்க் என்றழைக்கிறார்கள். இவற்றைப் பற்றி அறிந்திராத, நகரின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, ஒர் அறிமுகமாகவும், அவர்களை இப்பகுதிக்கு வரச் செய்யும் நோக்கிலும், இந்த நிகழ்வு ஒரு விழாவாக AEDA (Asian Economic Development Association) என்ற அமைப்பினரால் நடத்தப்படுகிறது.
AEDA அமைப்பு, 2006ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டது. அந்த ஆண்டு நகர ரயில் பாதையை நீட்டிக்கும் திட்டத்தில் ‘க்ரீன் லைன்’ துவங்கப்பட்டது. க்ரீன் லைன், யூனிவர்சிட்டி அவின்யூ வழியாக மினியாபோலிஸ் டௌன்டவுன், செயிண்ட் பால் டௌன்டவுனையும் இணைக்கும் ரயில் பாதை. அச்சமயம், இத்திட்டத்தால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட, அவர்களது நலன் காக்க உருவாக்கப்பட்டது தான் – ஏசியன் எகனாமிக் டெவலப்மெண்ட் அசோசியஷன் என்ற இந்த அமைப்பு. இந்த அமைப்பு, இங்கிருக்கும் தென்கிழக்காசிய நாட்டுச் சிறு வியாபாரிகளுக்கும், அரசு மற்றும் பிற அமைப்புகளுக்கும் ஓர் இணைப்புப்பாலமாகச் செயல்பட்டு வருகிறது.
இரவுச் சந்தைகள், ஆசிய நாடுகளில் பிரசித்தி பெற்றவை. அதை இங்குக் காட்சிப் படுத்தும் விதமாக, ஜூலை 23 ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த இரவுச் சந்தை, இரவு 12 மணி வரை நடந்தது. 24 ஆம் தேதி, இரவு பத்து மணி வரை நடந்தது. இச்சந்தையில் தென்கிழக்காசிய நாடுகளின் உணவுகள், கலைப்பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்டன. இது தவிர, மூன்று மேடைகளில், கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. இதில் ஆசிய மக்களுடன், அமெரிக்க மற்ற பிற நாட்டு மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். AEDA அமைப்பு, இந்த நிகழ்ச்சிக்காக உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து. காவல்துறை துணையுடன் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
வாரயிறுதியில் வித்தியாசமான உணவு வகைகளைச் சுவை பார்க்கவும், நேரடியாகத் தென்கிழக்காசிய நாட்டுக் கலை வடிவங்களைக் கண்டு களித்து, அந்தக் கலைஞர்களுடன் கலந்துரையாடவும், நல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது, இந்த நிகழ்வின் வெற்றியாகக் கூறலாம்.
Little Mekong
– சரவணகுமரன்.