\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஐடாஸ்கா & பெமிட்ஜி – ஒரு பார்வை

bemidji-09-620-x-365

காவிரி பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் காவிரி குறித்த ஒரு நினைவு. கர்நாடகத்தவருக்கு, காவிரி, அவர்கள் வீட்டுப் பெண்; குல தெய்வம். அதைப் பெங்களூரில் இருக்கும் போதும் கண்டிருக்கிறேன். கர்நாடகத்தைச் சுற்றி வரும்போதும் கண்டிருக்கிறேன். கன்னடப் படங்களில் நல்ல பெண் கதாபாத்திரங்களுக்குத் தான் காவிரி என்று பெயர் வைப்பார்கள். குடகு மலையில் காவிரி ஆரம்பிக்கும் இடமான தலை காவிரி என்னும் இடத்தில் கோவில் கட்டிக் கும்பிடுகிறார்கள். தவறே இல்லை, இயற்கை தானே நம்மை வாழ வைக்கும் தெய்வம்!!

நதிகள், மனிதர்களின் வாழ்வில் இப்படிப் பல வகையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. கவிஞர் வாலியின் தயவில் தமிழர்கள் பலர் அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி ஆறு (Mississippi river) பற்றி அறிந்திருப்பார்கள். அமெரிக்காவின் பத்து மாநிலங்களின் வழியே ஓடும் இந்த ஆறு, தலையெடுப்பது நமது மினசோட்டா மாநிலத்தில் தான். உலகின் நீளமான ஆறுகளில் நான்காவது இடத்தில் உள்ள மிஸ்ஸிஸிப்பி ஆறு, 2340 மைல்கள் தொலைவு ஓடி இறுதியில் கலப்பது, மெக்ஸிகோ வளைகுடாவில்.

இத்தகைய பெருமை வாய்ந்த மிஸ்ஸிஸிப்பி, தனது ஓட்டத்தைத் தொடங்குவது, மினசோட்டாவில் உள்ள ஐடாஸ்கா ஏரியில். ஐடாஸ்கா ஏரி (Itasca lake), மினியாபோலிஸில் இருந்து வடதிசையில், 200 மைல்கள் தொலைவில் உள்ளது. காரில் ஒரு அழுத்து அழுத்தினோமானால், மூன்றரை மணி நேரத்தில் சென்று வந்துவிடலாம். ஒருநாளில் அல்லது ஒரு வாரயிறுதியில் சென்று வர ஏற்ற இடம்.

மிஸ்ஸிஸிப்பி உருவாகும் இடமென்பதால், ஒரு கோவிலோ தேவாலயமோ இருக்கும் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. எண்ணெய் , சோப்பு, ஷாம்பு விற்கும் கடைகள் ஒன்றும் இல்லை. அதைப் போட்டுக் கொண்டு தண்ணீரைக் கழிவுப்படுத்தும் மனிதர்களும் அங்கில்லை. ச்சே , என்ன ஊருப்பா இது!!

நுழையும் இடத்தில் பெரிய பார்க்கிங்கும், ஒரு தகவல் மையமும், சிறு உணவகமும் உள்ளன. சிறிது தூரம் உள்ளே நடந்தோமானால் ஐடாஸ்கா ஏரி நம் கண்ணில் படுகிறது. மினசோட்டாவில் இருக்கும் சில ஏரிகளைப் போல இது பெரிதொன்றுமில்லை. மிஸ்ஸிஸிப்பி ஆரம்பிக்கும் இடத்தில் இது இருக்கிறதென்பதே இதற்குச் சிறப்பு.

ஏரியில் ஓரத்தில் சிறு பாறைகளால் அமைந்த தடுப்பு, ஏரியின் கரையாக இருக்க, அதைத் தாண்டி மெதுவாகத் தண்ணீர் ஓடும் இடத்தை மிஸ்ஸிஸிப்பியின் முதல் அடியாகக் கைக்காட்டுகிறார்கள். அச்சிறு பாறைகளில் ஏறாதீர்கள், வழுக்கும் என்று எச்சரிக்கையை மீறி, சிறியோர், பெரியோர் அனைவரும் அதைக் கடக்கிறார்கள். வழுக்கி விழுந்தால், முழங்கால் வரை நனையும், அவ்வளவுதானே! என்று நினைப்பதால் இருக்கலாம். தவிர, மிஸ்ஸிஸிப்பியை அது உருவாகும் இடத்திலேயே கடந்ததாகச் சொல்லிக்கொள்ளலாம் அல்லவா!! அந்தப் பிரமாண்ட ஆற்றின் தொடக்கம், எளிமையாகத்தான் இருக்கிறது. எந்தவொரு எழுச்சியின் தொடக்கமும், சிறு பொறியாகத்தானே இருக்கும். இந்த விதி, நதிக்கும் பொருந்தும் போல!!

எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இங்குச் செவ்விந்திய குழுக்கள் காட்டு விலங்குகளை வேட்டையாடி உணவாக உண்டு இப்பகுதிகளில் வாழ்ந்திருக்கிறார்கள். 1832இல் மிஸ்ஸிஸிப்பியின் தொடக்கத்தைத் தேடி வந்த ஆய்வாளர்கள், இவ்விடத்தைக் கண்டு, இதற்கு ஐடாஸ்கா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். லத்தீன் மொழியில் ‘உண்மை’ மற்றும் ‘தலை’ என்ற இரு சொற்களில் இருந்து உருவான வார்த்தை தான் – ஐடாஸ்கா. இதுதான் உண்மையான தலையா? என்ற கேள்விகளும், சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை. ஆனாலும், பெரும்பான்மையாக, அதிகாரபூர்வமாக ஒத்துக்கொள்ளப்பட்ட நதியின் தொடக்கம் இதுவே.

1891 ஆம் ஆண்டு, இப்பகுதியின் இயற்கை வளங்களைக் காக்கும் நோக்கில் இது மினசோட்டாவின் முதல் ஸ்டேட் பார்க்காக (Minnesota State Park) உருவாக்கப்பட்டது. மொத்த அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், இது இரண்டாவது ஸ்டேட் பார்க். முதலாவதாக உருவாக்கப்பட்ட ஸ்டேட் பார்க் – நயாகரா அருவி பூங்கா. ஒவ்வொரு ஆண்டும், தோராயமாக ஐந்து லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு ஐடாஸ்கா பார்க் வந்து செல்கிறார்கள்.

இந்த ஏரியின் கரை, நதியின் தொடக்கம் என்றில்லாமல், ஐடாஸ்கா ஸ்டேட் பார்க்கில் இயற்கைவிரும்பிகள் சுற்றிப் பார்க்க வேறு இடங்களும் உண்டு. சுற்றிலும் இருக்கும் வனப்பகுதிகளில் சுற்றி திரியலாம். ஏரிக்கரையோரத்தில் கேபின் அல்லது கூடாரம் அமைத்து தங்கி ஓர் இரவைக் கழிக்கலாம். அருகிலேயே இருக்கும் பெமிட்ஜி நகருக்கு சென்றால், அங்கிருக்கும் பெமிட்ஜி ஏரி (Bemidji lake), பால் பன்யன் & நீல காளை சிலைகள் (Paul Bunyan and Babe the Blue ox) ஆகியவற்றையும் பார்த்துவிட்டு வரலாம்.

Bemidji Itasca

பெமிட்ஜி ஏரிக்கரையில் அமைந்திருக்கும் சதுப்பு நில பகுதிகளையும், அங்கிருக்கும் சில சிறப்புச் செடிவகைகளையும் காணும் வகையில், மரப்பலகையிலான பாதை ஒன்று “Bog Board Walk” என்ற பெயரில் இங்கு உள்ளது. பெரியோர்கள் மட்டுமின்றி, சிறுவர்களையும் கவரும் வகையில் இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. செல்லும் வழியெங்கும் கதை சொல்லும் விதமாய், செடிவகைகளைக் குறிப்பிடும் பெயர் பலகைகள் பார்வையாளர்களைக் கவர்ந்து தகவல் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. நாம் சிறுவயதில் தாவரவியல் பாடத்தில் ஆச்சரியத்துடன் படித்த பிட்சர் (Pitcher) என்னும் ஜாடிச்செடியை இங்குக் காணலாம். (பூச்சிகளைக் கவர்ந்திழுத்து உண்ணுமே, அந்தச் செடி தான்!!). இந்த நகரில் அமைந்துள்ள மிருகக்காட்சிசாலையும் சிறுவர்களைக் கவரும்.

பயனுள்ள வகையில் ஒரு வாரயிறுதியை செலவிடுவதற்கு, ஐடாஸ்கா-பெமிட்ஜி பகுதி மினசோட்டாவாசிகளுக்கு ஏற்ற இடம். தற்சமயம், செப்டம்பர் இறுதி & அக்டோபர் முதல் வார சமயங்களில், இலையுதிர் கால வர்ணஜாலத்தில் இன்னும் மின்னிக்கொண்டிருக்கும். தவறவிடாதீர்கள்!!

.

    சரவணக்குமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad